வரதன் என்பவன் குரு ஒருவரைச் சந்தித்தான்.
""குருவே! நான் இறைவனைப் பார்க்க விரும்புகிறேன். அதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.
""மனிதன் என்ற தகுதி இருக்க வேண்டும்!'' என்றார் குரு.
""இறைவனைக் காண பக்தி என்ற தகுதி போதாதா?''
""போதாது! மனிதன் வேறு; பக்தன் வேறு. இறைவன் பக்தனை விரும்புவதில்லை. மனிதனை மட்டுமே விரும்புகிறான்!''
""சரி! நானும் மனிதன் தான்!'' என்றான் வரதன்.
""அதை நீ சொல்லக்கூடாது... உன் நடத்தை சொல்ல வேண்டும். நீ இன்று போய் நாளை வா!''என்றார் குரு.
அதற்கு ஒப்புக்கொண்டு, மறுநாள் வந்து அவரைச் சந்தித்தான் வரதன்.
""குருவே! இன்று அதிகாலை நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். என் ஐந்து சகோதரர்களும் கடவுளை வணங்க வேண்டும் என்ற எண்ண மில்லாமல் அதிகாலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். நானோ விழித்து, குளித்து, சலவை ஆடை உடுத்தி கடவுளை வணங்க கோவிலுக்குச் சென்று விட்டேன். அவர்கள் உறக்கத்தைக் கெடுத்து எழுப்பாமல் விட்டது மனிதாபிமானமுள்ள செயல்தானே. இப்போது நான் பக்தனாகவும் இருக்கிறேன்; மனிதனாகவும் இருக்கிறேன். இப்போது நான் கடவுளைக் காண முடியும் அல்லவா!'' என்று கேட்டான்.
""உன் ஐந்து சகோதரர்களும் என்ன தொழில் செய்கிறார்கள்?'' என்று கேட்டார் குரு.
""மரம் வெட்டுவார்கள்; கல் உடைப்பார்கள்; நிலத்தில் உழுவார்கள்; கிணறு தோண்டுவார்கள்; இப்படிப் பல கடினமான வேலைகளைச் செய்வார்கள்!'' என்றான்.
""உன் தொழில் என்ன?''
""நான் வீட்டுக்குக் கடைக்குட்டி. அதனால் அதிகச் செல்லம். அதனால் எந்த வேலையையும் என்னைச் செய்ய விடமாட்டார்கள். நானும் செய்வதில்லை. ஆனால், ஏனோ கடவுளின் மீது மட்டும் எனக்குப் பற்றுதல் வந்துவிட்டது!'' என்றான்.
குரு அவனை தீர்க்கமாகப் பார்த்தார்.
""உழைத்த களைப்பில் உறங்கும் உன் சகோதரர்களைக் குறை கூறுகிறாய். நீயோ உழைக்காமல் சோம்பேறியாகச் சுற்றித் திரிகிறாய். உன் இறை வணக்கத்தால் உனக்கு எந்தவிதப் பயனும் இல்லை. மனிதனாகவே இருக்கத் தகுதியில்லாத உன் பக்தியை விட, உழைத்த களைப்பில் உறங்கும் உன் சகோதரர்களின் உறக்கம் எவ்வளவோ மேலானது. அதுதான் இறைவனுக்கும் பிடித்தமானது; உன் பக்தியை விட்டுவிட்டு, உழைத்து நீயும் தூங்க முயற்சி செய். அதுவே, மேலான பக்தி!'' என்று முடித்தார் குரு.
அதைக் கேட்டு தலைகுனிந்தான் வரதன். பின்னர் தெளிவடைந்தான்.
பக்தியை விட உழைப்பே உயர்வானது, என்பதை உணர்ந்த வரதன், குருவுக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றான்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.