நண்பர் ஒருவர் கடந்த வாரம் என்னை சந்திக்க வந்தார்.
சம்பிரதாய பேச்சுகளுக்குப் பின், அதிர்ச்சியும், வேதனையும் தரும் விஷயம் ஒன்றைக் கூறினார்: மும்பையில் இருந்து சென்னைக்கு ஏ.சி., முதல் வகுப்பில் வந்து கொண்டிருந்தேன். மேலும், இருவர் என் கேபினில் என்னுடன் பயணம் செய்தனர். டிக்கெட் பரிசோதகர் வந்த போது, அவர்களின் டிக்கெட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் டிக்கெட்டில் கட்டணமாக, குறைவான கட்டணம் இருந்தது கண்டு மிகவும் அதிர்ச்சியாகி விட்டது. ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அவர்களிடம், "உங்களுக்கு எப்படி குறைந்த கட்டணத்தில் டிக்கெட் கிடைத்தது?' என, மீண்டும் மீண்டும் கேட்டும், அவர்கள் பதிலே சொல்லாமல் வேறு விஷயங்களை பேசியபடியே வந்தனர்.
இரவில் தூங்கும் நேரம், அவர்கள் படுக்கையைப் போடும் போது, ஏதோ பேப்பர் ஒன்று கீழே விழுந்தது. அது ஒரு சர்டிபிகேட்டின் போட்டோ காப்பி... பயணம் செய்யும் நபர், காது கேட்க முடியாத நிரந்தரக் குறையுள்ளவர் என அந்த சர்டிபிகேட் கூறியது. எனக்கு பெரிய, "ஷாக்!' சர்டிபிகேட் வைத்திருப்பவருக்கு காது கேட்காத குறையே இல்லை என்பதை, எங்களுடைய உரையாடலை மீண்டும் கவனத்தில் கொண்டு வந்த போது கணிக்க முடிந்தது!
இந்த சர்டிபிகேட் விவகாரம் குறித்து விசாரிக்க, டிக்கெட் பரிசோதகரை அணுகினேன். அவர் கூறிய விஷயங்கள் அதிர்ச்சி தரத்தக்கதாக இருந்தது. உடல் ஊனமுற்றவர்கள், தம் ஊனத்திற்கான சான்றை, அரசு மருத்துவரிடம் பெற வேண்டும். அப்படி சான்று வைத்துள்ளவர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் டிக்கெட் அளிக்கிறது ரயில்வே. இந்த சலுகையை, பலர் முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர்.
வெளியே தெரிகிற கை - கால் முடம், பார்வை இன்மை போன்ற ஊனங்களுக்காக இவர்களால் மருத்துவச் சான்றிதழ் பெற முடியாது என்பதால், காது கேட்காமைக்கான சான்றிதழை இதற்காக உள்ள மருத்துவரை,"கவனித்து' பெற்று விடுகின்றனர்.
ஊனமுற்றவர்கள் தமக்கு துணையாக ஒருவரை இலவசமாக அழைத்துச் செல்லலாம் என்ற சலுகையும் இருப்பதால், அச்சலுகையையும், "செமத்தியாக' பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இது மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு ரயில்வேயில் இலவச முதல் வகுப்பு பாஸ் உள்ளது. இதைப் பயன்படுத்தி, இந்தியாவின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும், எத்தனை முறையும் சென்று வரலாம்! துணைக்கு உடன் ஒருவரையும் அழைத்துச் செல்லலாம். இந்த சலுகையையும் பலர் முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர். 100 ரூபாய் கட்டணம் என்றால், 25 ரூபாய் வாங்கிக் கொண்டு, பல தியாகிகள், ரயில்வேயின் சலுகையை, "மிஸ்யூஸ்' செய்கின்றனர் என, பலவித மோசடிகள் குறித்து அந்தப் பரிசோதகர் கூறினார்...' என்றார் நண்பர்.
***
திருமணமான பின், பிள்ளைகளின் அம்மாமார், "என் மகனை பிரித்துக் கொண்டு போய் விட்டாளே...' எனத் தவறாக மருமகள் பற்றி எண்ணுவதும்; மருமகளோ, "நம் அம்மா போல், மாமியார் நடந்து கொள்வதில்லையே...' என புகார் செய்வதும், "அம்மாவா? மனைவியா?' என இருவருக்கும் நடுவே சிக்கி, ஆடவன் உழல்வதும், பல குடும்பங்களிலும், இன்று நடந்து வருவது தான்...
இதோ, ஒரு வாசகரின் கடிதம்:
நேரிடையாகவே விஷயத்திற்கு வருவோமே... தாய்க்கு பரிந்து பேசுவதா? மனைவிக்கு பரிந்து பேசுவதா? ஏன் தான் கல்யாணம் செய்து கொண்டோமோ... என்று தினமும் மனமுருகி அல்லல்படும் என் நண்பரின் பிரச்னை... இதற்கு ஒரு நல்ல தீர்வு கண்டிப்பாக நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்...
என் நண்பர் சொந்தமாக ஒரு தொழில் நடத்தி, திறமையுடன் உழைத்து, தன் 26 வயதில் நல்ல நிலைமையில் இருக்கிறார். அவருக்கு, பெற்றோர் பார்த்து, நிச்சயித்த கல்யாணம் மிகவும் கோலாகலமாக, வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் தான் பிரச்னையே ஆரம்பித்துள்ளது. திருமணம் நடந்த அன்று இரவு சாந்தி முகூர்த்த நேரத்தில், நண்பரின் அம்மா, "இனி, என் மகன் என் மீது எப்போதும் போல் பாசமுடன் இருப் பானா? என் பேச்சைக் கேட்பானா?' என்று அழுது புலம்பியுள்ளார்.
வீட்டின் மூத்த பிள்ளை என் நண்பன் என்பதால் அவன் மீது, அவரது தாயாருக்கு அதிக பாசம் உண்டு. திருமணத்திற்கு பிறகும், எப்போதும் போல் (குளிக்கும் போது டவல் தருவது, சாப்பாடு பரிமாறுவது, துணிமணிகள் எடுத்து தருவது மற்றும் வெளியே செல்லும் போது வாசல் வரை சென்று சகுனம் பார்த்து வழியனுப்புவது...) நடந்து கொள்கிறார்.
நண்பரின் மனைவி ரொம்பவும் அமைதி... "இவரை கல்யாணம் செய்துக்கிட்டதற்கு, நான் ரொம்பவும் புண்ணியம் செய்திருக்கணும்...' என்று என்னிடம் கூறியுள்ளார். என் நண்பரின் தாயார் செய்யும் பிரச்னைகளை, பெரிதாக்காமல், கணவனுக்காக அமைதியாக இருந்து வருகிறார்.
"என் மனைவியிடம் சந்தோஷமாக பேசுவது கூட என் அம்மாவிற்கு பிடிக்கலை...' என்று நண்பர் இப்போது புலம்புகிறார். நண்பரின் மனைவி கருத்தரித்து, பின் சரியான கவனமின்மையால், "அபார்ஷன்' ஆகியுள்ளது. அதற்கு நண்பரின் தாயார், "ராசியில்லாதவள்!' என மனம் கஷ்டப்படும்படி பேசியுள்ளார்.
மீண்டும், நண்பரின் மனைவி கருத்தரித்த பொழுது, "ஆடி மாதம் கருத்தரிப்பது குடும்பத் திற்கு ஆகாது...' என்று பல காரணங்களைக் கூறி, கருவை கலைத்து விடச் சொல்லி கட்டாயப் படுத்தி உள்ளார் நண் பரின் தாயார். நண்பர், ரொம்பவும் சமாளித்து, சமாதானங்களை கூறி, பிரச்னையை சரிகட்டி யுள்ளார்.
தீபாவளி சமயத்தில் பிரச்னை தீவிரமாக வெடித்து உள்ளது. "நீ தலைத் தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு செல்லும்போது, உன் மனைவியை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடு...' என்று மகனிடம் கூறியுள்ளார்.
மகனோ, "ஏம்மா, அவள் ஏதேனும் தவறாக உன்னிடம் நடந்து கொண்டாளா, வாயும், வயிறுமாய் இருக்கிற இந்த சமயத்தில், இதை கேட்டா அவ இடிந்து போய் விடுவாள்!' என்றதற்கு, "கல்யாணத்தின் போது, அவளது அப்பன் சரிவர கவனிக்கலை. அதுவுமில்லாம ஏதேதோ அநாகரிகமாக பேசியுள்ளான். அவன் என்னிடம் மன்னிப்பு கேட்கிறவரை அவ, அவ அப்பன் வீட்டிலேயே இருக்கட்டும்...' என தாயார் கூறியுள்ளார்.
தீபாவளி சமயத்தில் நான் ஊருக்குச் சென்றிருந்தபோது, என் நண்பர் என்னிடம் அழாத குறைதான்! அவ்வளவு மன வேதனையுடன், தன் சோகங்களை சொன்னார். எனக்கு மனதில் பட்டதை சொன்னேன். "அம்மாவிடம், பாசத்துடன், அவர்கள் சொல்படி நடப்பது நல்லது தான்... ஆனா, உன்னோட நிலையையும், மனைவியோட நிலைமையையும் தெளி வாக, அமைதியாக, உன் தாயாரிடம் சொல்... அவர்களது தவறு உணர்ந்து, கண்டிப்பாக மனம் மாறுவார்கள்!' என்றேன்.
அதற்கு, "சாத்தியமே இல்லை. நான் கொஞ்சம் எதிர்த்து பேசினாலே, "டென்ஷன்' ஆகி, ரத்தக் கொதிப்பு அதிகமாகி, மயக்கம் போட்டுடுவாங்க. அது வேறு பயமாயிருக்கு. பொண்டாட்டிக்கு பரிந்து பேசவா, அம்மாவுக்கு பரிந்து பேசவா! என்னோட நிலைமை யாருக்கும் வரக் கூடாது. இதனால், ஒழுங்காக, "பிசினசும்' செய்ய முடியலை... வெளியே போய்விட்டு, வீட்டிற்கு திரும்பி வரணும் என்றாலே கலக்கமாயிருக்கு. பாவம், என் பொண்டாட்டி வேற ஒருத்தன கல்யாணம் செய்து கொண்டிருந்தால் அவ சந்தோஷமா இருந்திருப்பா...' என்று என்னிடம் புலம்பினார். "தனிக்குடித்தனம் போயிடலாம் என்றாலும், தங்கைகள், தம்பி உள்ளனர். அவர்களது எதிர் காலத்தை நினைத்து, என் நிகழ் காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டியது தான்...' என்று நொந்தபடி கூறினார்.
மணி சார், எப்பவா வது, இந்த மாதிரி பிரச்னையைக் கேட்டிருக் கீங்களா? ஏன் இப்படி பெரியவங்க நடந்து கொள்றாங்க? இப்போ நாம நல்லா இருப்பதற்கு காரணம் பெற்றோர் தான்; மறுக்கவில்லை. அதற்கு காலம் முழுவதும் அவர்களை கண் கலங் காமல் வைத்துக் கவனித்துக் கொண்டால் கூட ஈடா காது அவர்களது கவனிப் பிற்கு!
இருந்தாலும், ஒரு லெவல் வந்ததும் திரு மணம் முடிந்ததும், "இனி அவங்க பார்த்துப்பாங்க...' என்ற பெருந்தன்மையுடன் விலகி இருந்து கவனிப்பது தானே பெற்றோருக்கழகு! பிள்ளைகளிடம் பாசம் இருக்க வேண்டியதுதான்; ஆனால், அதுவே, பிள்ளைகளது மன அமைதியையும், மகிழ்ச்சியையும் பறிபோகும்படி செய்வது போல் இருக்கக் கூடாது அல்லவா?
— என எழுதியுள்ளார்!
மாமியார்களே... ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்... நீங்களும் எழுதுங்களேன் எனக்கு.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எந்த ஒரு மாமியாரும் ஒரு அம்மா போல் நடந்து கொள்வதில்லை என்பது முற்றிலும் உண்மை.
நமக்கு முந்தைய தலைமுறையில் மருமகள்கள் மாமியார் கொடுமைகளை அனுசரித்து போனார்கள்.
அனால் இந்த தலைமுறை பெண்களிடம் அவ்வாறு எதிர் பார்க்க முடியாது.
பெண்கள் என்பவர்கள் எப்போதும் சுயநலமானவர்கள் தான்.
ஒருவரை சார்ந்து இருப்பதால் தான் பெண்கள் அவ்வாறு இருக்க வேண்டியதாகிறது.
மகளாக,சகோதரியாக,மனைவியாக,தாயாக,பாட்டியாக ஒரு ஆணை சார்ந்து இருப்பதால் தான் பெண்கள் அவ்வாறு இருக்க வேண்டியதாகிறது.எப்படி யோசித்தாலும் இதற்கு அடிப்படை பணம் தான்.
இதற்கு தீர்வு தனிக்குடித்தனம் தான். முதலில் கசப்பாக இருந்தாலும் போக போக நிம்மதியை கொடுக்கும்.
இந்த உலகில் உண்மையான அன்பு,பாசம்,காதல் என்பது மிகவும் குறைவு.அனைத்துமே பணத்தை அடிப்படையாக கொண்டு உள்ளது. குடும்பத்தில் பரம்பரை சொத்து, சேமிப்பு எதுவும் இல்லாமல் ஒரே மகனாக இருக்கும் ஒரு ஆணின் துயரம் இந்த உலகிலேயே மிக கொடுமையானது.பொருளாதார ரீதியாக அவனை சார்ந்து தான் அந்த குடும்பம் இருக்கும்.அவன் அம்மாவும்,அப்பாவும்,சகோதரிகளும் சுயநலத்தின் உச்சமாக இருப்பார்கள். இது இன்றைய உலக நடைமுறை. பெண்கள் மட்டும் சரியாக இல்லாவிட்டால் அந்த குடும்பம் நிம்மதியாக வாழ முடியாது. துணிந்து ஒரு முடிவை எடுத்தால் மட்டுமே இது போன்ற ஆண்களின் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். இதில் பாவம் புண்ணியம் என்று எதுவும் இல்லை. மகனுக்காக, சகோதரனுக்காக உயிரை விட்டவர்கள் என்று இந்த உலகில் ஒருவர் கூட இல்லை. நான் சொல்லியது கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் உளவியல் ரீதியாக இது தான் உண்மை.
இது போல் பிரச்சினைகளுக்கு காரணம் சமுதாயமும், பெற்றோரும் தான் எந்த ஒரு பிள்ளையும் தான் பிறப்பதற்கு முன்பு பெற்றோர்களை தேர்ந்எடுப்பது கிடயாது, இது இயற்கைஇன் கட்டயாம், பெற்றோர்களின் சந்தொசத்திர்காகவும்,பாதுகாபிர்கும்,முன்னேற்ததிர்க்காகவும்,சமுதாயம்திற்காகவும் கட்டாயம் தேவை. பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து கல்யாணம் பண்ணி வைப்பது பெற்றோர்களின் கடமை. பிள்ளைகளும் பெற்றோர்களை அன்பாக கவநிப்பது முக்கியமான கடமை. ஒரு தாய் மகனுக்கு கல்யாணம் செய்த பிறகு அவர்கள் வாழ்கையில் தலை இடுவது மிகவும் வருந்ததக்கது, இதை பாசம் என்று கூற முடியாது. நல்ல Matured Parents இதில் விவரமாக நடந்துகொள்வர். பாசம் என்று கூறி பிள்ளைகளின் சந்தோசம் கிடுகின்டனர் . கல்யாணத்தின் பிறகு மகன்,பிரிந்து இருப்பது இருவரிடத்திலும் அன்பு கூடும்,மருமகளை மிஹவும் நேசிப்பார், இது தான் உண்மை. பெற்றோர்கள் தங்கள் அறிவு முதிர்சிஐ பயன் படுத்த வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்களை கவனிப்பது தலயாய கடமையாஹா நினைக்க வேண்டும்.....
உங்க அம்மாவிற்கு, உங்கள் மேலுள்ள பாசத்தை விட, தன் மற்ற பிள்ளைகளின் வாழ்கை நலமாக அமைய வேண்டும் என்கிற பயம் தான், (I think financially your family deping on you ) அவர்களை இப்படி எல்லாம் கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் நடக்க செய்கிறது. அதற்கு உங்களை வாழ்கையை பகடை காயாக பயன்படுத்துகிறார்கள். அதிகப்படியான சுயநலம், தன் மகனின் வாழ்கையை பற்றியோ அல்லது அவனின் வாரிசை பற்றியோ, அவர்கள் கொஞ்சம் கூட அக்கறை பட செய்யவில்லை. நீங்கள் தைரியமாக, நடுநிலைமையுடன் சில முடிவுகள், கண்டிப்பாக எடுக்க வேண்டும். இல்லவிட்டால், வாழவேண்டிய நீங்களும், உங்களின் மனைவியும், ஏன் உங்களின் குழந்தைகளின் வாழ்கையிலும் காலத்திற்கும் மாறாத வடுக்கள் நிரந்தரமாக இருக்கும். உங்களை ஏணியாக உபயோகித்தவர்கள், யாரும் உங்களை திரும்பிகூட பின்பு பார்க்க மாட்டார்கள். உங்களின் support வேண்டிருப்பதால், நீங்கள் எடுக்கும் நாயமான சில முடிவுகளுக்கு கண்டிப்பாக அவர்கள் கட்டு படுவார்கள். பயம் என்றும், எதிரில் இருபவர்களை மேலும் நம்மை misuse பண்ண தூண்டும். ஏதோ கடவுளின் கிருபையோ அல்லது உங்கள் மனைவின் நல்ல நேரமோ, நீங்கள் கண்முடித்தனமாக உங்களின் அம்மாவிற்கு தலையாட்டாமல், நல்லது எது, கெட்டது எது என சிந்திக்கிறேர்கள். மனைவி மட்டுமே கடைசி வரை உங்களுடன் இருப்பாள். குடும்பத்தின் முதுகெலும்பாகிய அவளுக்கு ஏன் அடிப்படை உரிமைகள் கூட கொடுக்க மறுப்பதேன்?
நிறைய நேரங்களில் இது பெரியவர்களின் நீண்ட காலமாக பொதிந்து இருந்த வெறுப்பின் வெளிபாடு. ஒரு நல்ல ஆலோசகர் (குடும்ப நன்பர் என்றால நல்லது - அல்லது இதனையும் டிராமாவாக மாற்ற முயலுவார்கள்) இதனை எளிதாக மாற்றலாம். இது ஒரு வித பயம். தன அதிகாரம் போய் விடுமோ என்ற பயம். தன ஆதிக்கம் போய் விடுமோ என்ற பயம். அதனை நிலை நிறுத்த, தான் இன்னமும் தலைவி என்று நிருபிக்க நடக்கும் ஒரு செயல். இதனை ஆராய்ந்து பல கட்டுரைகள் உள்ளன. பல வழிமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதனை இது போன்ற மகன்கள் பயன்படுத்தலாம். என் பக்கத்து பிளாட்டில் வசிக்கும் ஒரு வயதான தம்பதியர் அப்படியே. மூன்று குழந்தைகள், அதில் ஒன்று மட்டும் பையன். அந்த மருமகள் படித்தவள், ஒரு வகையில் அப்பாவி. வேலைக்கு சென்று வரும் பெண் வேறு. சற்று பொருளாதார சுதந்திரம் உடையவள். சண்டை நடக்காது (அந்த மருமகள் சண்டை போட மாட்டாள்) ஆனால் அதிகாரம் தூள் பறக்கும். அந்த பெண்ணை இளக்காரமாக பேசுவது போன்று. "இந்த கால பொண்ணுங்களுக்கு ஒன்றுமே தெரியாது" என்று ஆரம்பித்து .. எப்படி அவர் தன மாமியாரிடம் குட்டு வாங்கி, அடுப்பறையில் வெந்தார் என்பது வரை வகை வகையாக சொல்லுவார். ஒரு விதத்தில் இந்த மருமகள் அது மாதிரி கஷ்டப்படவில்லை என்பதில் வருத்தம் தெரியும். நல்ல வேளை அந்த பெண்ணிற்கு மேல் நாட்டில் ப்ராஜக்ட் என்று ஒரு வருடம் கணவருடன் சென்று விட்டார். அந்த பிரிவில் இவர் தன தனிமையை உணர்ந்தார். இரு ஆண்டுகளில் அந்த பையன் பெற்றோரை தனியாக இருக்க விட கூடாது என்று இந்தியா திரும்பி விட்டார். இன்று சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் அவரின் அந்த குறை சொல்லும் வழக்கம் குறைந்து விட்டது. அதன் காரணமாக நான் எண்ணுவது. இதனை பெரிது படுத்த தெரியாத அந்த அப்பாவி பெண், அல்லது தெரிந்தும் புத்திசாலித்தனமான இக்னோர் செய்த அவரின் முதிர்ச்சி. அடுத்து தடுமாறாத பையன். நிறுவனத்தின் மீது. பொருளாதார தேவைகளின் மீது பழி போட்டுவிட்டு பெற்றோரை அவர் காரியங்களால் தனிமை படுத்தப்பட்டால் வரும் கஷ்டங்களை உணர செய்தது. இன்று அவர்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த தியாகம் (அது பிளான் பண்ணி செய்தாரோ, அல்லது தற்செயலோ) இது இரண்டும் அந்த பெற்றோரின் மனதை மாற்றியது.
எல்லோம் அணுகுவதில் இருக்கிறது. அவர்கள் அந்த காலத்தினர். இந்த கால பெண்களின் சுதந்திரம், அவர்களின் வளர்ச்சி, தனித்தன்மை கண்டு ஏற்படும் பொறாமை என்று கூட இருக்கலாம். என் தாயார் இன்றும் என் பெண் குழ்ந்தைகளை பார்த்து சொல்லுவார் - " நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். என் காலத்தில் கல்லூரி போவது என்பதே அபூர்வம். இருட்டுவதற்குள் வீட்டில் இல்லாவிடில் பதறி விடுவார்கள். ஆனால் இன்று சுதந்திரமாக எங்கு வேண்டுமானலும் சென்று வருகிறீர்கள், படிப்பு வேலை என்று நாடு நாடாக பறக்கிறீர்கள். இந்த சுதந்திரத்தை பார்த்தால் உங்கள் மீது பொறாமையாக இருக்கிறது ". விளையாட்டாக சொன்னாலும் அவரின் ஏக்கம் தெரிந்தது / தெரிகிறது. சில மாமியார்களின் இந்த ஏக்கம் தவறாக வெளிப்படலாம். தவறாக அர்த்தம் கொல்லப்படலாம்.
அந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்தால் address செய்தால் சரியாகிவிடும் என்பது என் கருத்து.
80% விவாகரத்து வழக்குகளின் காரணங்களை தோண்டி தோண்டி பார்த்தால் கடைசியில் இது மாதிரி பிரச்சனையை தான் வேராக வந்து நிற்கும்.. என் சகோதரியின் மாமியார் அவளுக்கு திருமணமான ரெண்டாம் நாள் ஏதேதோ காரணம் சொல்லி ரூம் கதவை திறந்து வைத்துக்கொண்டு படுக்க சொல்லியிருக்கிறார்.. மகன் மனைவியிடம் பேசினால் மகனிடம் இவர் பேசாமல் கோபித்துக்கொளவாராம்.. என்னை கேட்டால் இம்மாதிரி ஆண்கள் கல்யாணத்திற்கே லாயக்கு இல்லை.. கர்ப்பமான மனைவியை வருத்தப்பட வைப்பதன் மூலம் மோசமான அடுத்த தலைமுறையை உருவாக்குகிறோம் என்று இந்த ஆண்களுக்கு புரிவதில்லை.. குழந்தை பிறந்த பின் ஒருவனுக்கு/ஒருத்திக்கு அந்த குழந்தை தான் முதல் முன்னுரிமை குடுக்க வேண்டும், பிறகு மனைவிக்கு(அந்த குழந்தை நல்ல முறையில் வளர ), பிறகு தான் பெற்றோர்களுக்கு.. இதையெல்லாம் புரிந்து கொண்ட ஆண்கள் மட்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் கடைசி வரை அம்மாவிற்கு பிள்ளையாகவே வாழ்ந்து கொள்ளுங்கள்.. யாருக்கும் பாதிப்பு வராது.. ஊர் பெருமைக்கு ஒரு கல்யாணம் பண்ணிக்கொண்டு இப்படி சித்திரவதை பண்ண கூடாது..
கல்யாணம் ஆகும் வரை அம்மாக்கள் அப்படி இருப்பதில்லை. கல்யாணம் ஆன பிறகு தான் மாறி விடுகிறார்கள். இதில் பிள்ளைகளை குறை சொல்ல ஒன்றுமில்லை.. இது பொதுவாக மூன்றாவது மனிதனை நம் குடும்பத்து உறுப்பினராக ஏற்றுக்கொள்ளும் மனோநிலை இல்லாமையும்... நமக்கு நெருக்கமான / நமக்கு உரிமையான ஒருவர் இன்னொருவருக்கு நெருக்கமாகும் பொது வரும் பொறாமையும் (நண்பர்களிடத்தில் கூட இந்த பொறாமை குணம் உண்டு) தான் காரணம்... இது பெற்றவர்களிடத்தில் மிக அதிகமாக இருக்கும்... மனநல மருத்துவரின் ஆலோசனையே இதற்கு சிறந்த தீர்வு.....
அட போங்க சார்... எந்த பையன் தன் அம்மாவை மனநல மருத்துவரிடம் வா என்று கூப்பிடுவான்?? அவ்வளவு சரி தவறு தெரிகிரவனாக இருந்தால் இந்த பிரச்சனையே வராதே.. மனைவியை வேண்டுமானால் கூப்பிட்டு போக தயாராக இருப்பான்.. அதிலும் சிக்கல் இருக்கிறது.. பிறகு அந்த பெண்ணிற்கு பைத்தியக்காரி பட்டம் கட்டிவிடுவார்கள் நம்ம ஊரில் மாமியாரின் உபயத்தில்.....
என்ன தான் தாய் தெய்வம் என்றாலும் ஒரு ஆணுக்கு அவனுக்கே அவனுக்கான வாழ்வின் உயிரின் பிறப்பின் அர்த்தமான வாரிசை உயிரை ஒரு மனைவியால் தான் உருவாக்க பெற்று தர முடியும் .. அதனால் மனைவியே உரிரினும் மேலானவள். எல்லாரையும் விட மேலானவள்.. திருமண சடங்கில் தாலி கட்டும் முன்னர் மாப்பிள்ளை பெண் இருவரையும் எண்ணெய் தேய்த்து தலை முழுக்க செய்வார்கள் .. அது ஏன் என்று யோசித்து பாருங்கள் புரியும்.. ( எல்லா உறவினரையும் ஆன்றோடு {மனதளவில்} தலை முழுகிவிட்டு ஒரு புதிய உறவை ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் பொருள் ..இதை புரிந்து நடந்தால் தான் இனிய திருமண வாழ்வு அமையும்.. எல்லா கணவனும் மனிவியும் அர்த்த நாரீஸ்வரர் போல் வாழவேண்டும்.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.