ஒரு ஊரில் புகழ்பெற்ற குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயதாகி விட்டதால், மரணப் படுக்கையில் கிடந்தார். அவரைச் சுற்றிலும் சீடர்கள் வருத்தத்துடன் நின்றிருந்தனர்.
""இன்று இரவுக்குள் இறந்துவிடுவேன்!'' என்றார் குரு.
சீடர்கள் அழுதனர்.
அவர்களில் மூத்த சீடன், ""குருவைப் பார்த்துக் கொள்ளுங்கள், நான் கடைத்தெருவிற்குப் போய்விட்டு நொடியில் வந்துவிடுகிறேன்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
மற்ற சீடர்களுக்கோ கோபம்.
""குரு மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் கடைத்தெருவில் உனக்கென்ன வேலை?'' என்று கடிந்து கொண்டனர்.
""வேலை இருக்கிறது. குருவுக்கு நாவல்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த இறுதி நேரத்தில், சிறிது பழங்களையாவது இவர் சாப்பிட்டு திருப்திபடட்டுமே என்று எண்ணி அதை வாங்கத் தான் கடைத் தெருவுக்குப் புறப்படுகிறேன்!'' என்றான் மூத்த சீடன்.
மற்ற சீடர்கள் அனுமதி கொடுக்க, மூத்த சீடன் கடைத்தெருவுக்குப் புறப்பட்டுச் சென்றான்.
சிறிது நேரத்தில் நாவல்பழப் பொட்டலத்துடன் திரும்பி வந்தான்.
குருவிடம் கொடுத்தான்.
அவர் வாங்கி ருசித்துச் சாப்பிட்டார்.
சாப்பிட்டு முடிந்ததும் சீடர்களைப் பார்த்தார்.
அப்போது மூத்த சீடன் அவரைப் பார்த்து, ""குருவே! தாங்கள் இன்றே இந்த உலகத்தை விட்டுப் பிரியப்போகிறீர்கள். இந்த சமயத்தில் நாங்கள் நினைவில் வைத்து கால காலத்துக்கும் பின்பற்றக்கூடிய இறுதிக் கருத்து என்ன என்பதைக் கூறுங்கள்!'' என்று கேட்டான்.
குரு உடனே, ""நீ வாங்கி வந்த நாவல்பழங்கள் மிகுந்த சுவையுடையதாக இருந்தன!'' என்று கூறினார்.
அடுத்த நொடி-
அவர் உயிர் பிரிந்தது.
அவர் கூறிய இறுதிக் கருத்தின் பொருளை உணர்ந்த மூத்த சீடன், அதை மற்ற சீடர்களுக்கு விளக்கிக் கூறினான்.
""நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற அல்லது உயிரோடு இருக்கிற அந்த மணித்துளிகள் மிகவும் சுவாரஸ்யமானவை; மிகவும் மகிழ்ச்சிக்குரியவை; அந்த வாழ்க்கையை இன்முகத்துடன் அனுபவியுங்கள். நம்மைக் கடந்துபோன மணித்துளிகளும், இனி வரப்போகும் மணித்துளிகளும் நம்முடையவை அல்ல. ஆகவே, நாம் இருக்கிற நேரமே நம்முடையவை. அதில் வாழுங்கள். அதுவே நிஜம்!'' என்று கூறினார்.
சீடர்கள் கண்ணீரோடு தலையை ஆட்டி தங்கள் குருவுக்குப் பிரியா விடைகொடுத்தனர்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.