அன்புள்ள அம்மாவிற்கு—
நான் 26 வயது பெண். மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவள். தற்போது ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறேன். கூடப்பிறந்தவர்கள் இருந்தும் பயனில்லை. என் ஒரு சகோதரி மட்டும் எனக்கு உதவினாள். நான் ஒன்பதாவது படிக்கும்போது அந்த சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என் மாமா. நானும் மறுப்பு சொல்லவில்லை. அப்போது வெளி உலகமே எனக்கு தெரியாது. வெகுநாள் தொடர்ந்தது பழக்கம்.
தற்போது தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன் நான். கடந்த இரண்டு வருடமாக ஒருவரை மனதார விரும்புகிறேன். முதலில் நட்பாக தொடங்கிய பழக்கம், காதலாக மாறிவிட்டது. மிகவும் நல்லவர் அவர். எனக்கு நிறைய புத்திமதிகள் சொல்லி இருக்கிறார்.
அவருடன் பழகியதில் இருந்து, என் மாமாவை நெருங்கவிடுவதில்லை நான். என் அக்காவிற்கு துரோகம் பண்ணுவதுபோல் தோன்றுகிறது.
நல்ல பிள்ளையாக இப்போதுதான் நடந்து கொண்டிருக்கிறேன். இது மாமாவிற்கு பிடிக்கவில்லை.
"நீ அவனுடன் பழகியதால்தான் என்னை வெறுக்கிறாய்...' என்று தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டார்.
"நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது...' என்றும், "எது எப்படி ஆனாலும் சரி, உன் மனதை மாற்றிக்கொள்...' என்றும் என்னை கட்டாயப்படுத்துகிறார்.
அதில் எனக்கு விருப்பமில்லை. நாங்கள் காதலிப்பது என் காதலர் வீட்டிற்கு இன்னும் தெரியாது; என் வீட்டிலும் தெரியாது. காதலர் வீட்டில் ஒரு பெண்ணால் சிறிய பிரச்னை ஆகிவிட்டது. ஆதலால் எங்கள் விஷயம் பற்றி பேசமுடியாது போயிற்று என்கிறார். இவர், பெற்றோருக்கு தெரியாமல் ஏதாவது செ#தால் அவர்கள் உயிருடன் இருக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். ஆதலால், இவர் பயப்படுகிறார்.
"அந்த பெண்ணின் பிரச்னை நடக்காவிட்டால், நான் பேசியிருப்பேன்...' என்று கூறுகிறார் இவர். அந்த பெண் இவரை லவ் பண்ணினாள். ஆனால், இவர் அவளை விரும்பவில்லை; அது எனக்கும் தெரியும்.
மற்றொரு பிரச்னை, நான் வேறு ஜாதி; காதலர் வேறு ஜாதி. அவர்கள் வீட்டில் கண்டிப்பாக வேறு ஜாதிப் பெண்ணை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறுகிறார். மேலும், நான் வேற யாரையாவது திருமணம் செய்து நன்றாக இருக்க வேண்டுமாம். அவர் திருமணம் செய்ய மாட்டாராம். என்னையே நினைத்துக் கொண்டு இருப்பாராம். சிறு வயதில் செய்த தவறை இவரிடம் கூறாமல் மறைத்து விட்டேன்.
என் அக்காவிற்கும், நாங்கள் நடந்து கொண்ட விஷயம் இன்று வரை தெரியாது. என் மாமா என் மேல் மிகுந்த பாசம் வைத்திருப்பதாகவும், "அவள் முன் மாதிரி இல்லை...' என்றும் கூறியிருக்கிறார். என் அக்காவும் அவர் சொல்வதுதான் நியாயம் என்கிறாள்.
இப்போது என் சகோதரியும் என்னிடம் எதுவும் பேசுவதில்லை. மூன்றாவது ஆள் போல் நடந்து கொள்கிறாள்.
எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. என் தவறை எல்லாம் உணர்ந்து திருந்தியதாக நினைக்கிறேன் நான். ஆனாலும், குழப்பமாக உள்ளது. தானாக முடிவு எடுக்க எனக்கு தெரியாது; முகத்தில் அடித்தாற்போல் பேச தெரியாது. இதனாலயே நான் தவறு செய்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
என் மாமாவிற்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகும். எனக்கு பயமாக இருக்கிறது. என்னால் எதுவும் ஆகக்கூடாது அவருக்கு. என் காதலனுக்கு துரோகம் செய்யவும் நான் விரும்பவில்லை. தாங்கள் தான் எனக்கு ஒரு நல்ல பதிலை தர வேண்டும்.
— உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு—
உன் கடிதம் கிடைத்தது. உன் குழப்பம் அநாவசியமானது. அக்காளின் கணவர், தன் உடற்பசிக்கு உன்னை உபயோகித்துக் கொண்டதாக எழுதியிருக்கிறாய்... அப்போது உனக்கு உலகம் தெரியாது என்றும், இப்போது இரண்டு வருடகாலமாக வேறு ஒருவரைக் காதலிப்பதால், அவருக்கு துரோகம் செய்ய விருப்பமில்லை என்றும் எழுதியிருக்கிறாய்.
என் சந்தேகமெல்லாம் இதுதான்...
1. எப்போது முதல் உனக்கு உலகம் தெரியத் தொடங்கியது? ஒன்பதாவது படிக்கும்போது வேண்டுமானால், "இது தப்பு' என்று தோன்றவில்லை. இப்போது உனக்கு வயசு 26. இரண்டு வருடங்களாக, வேறொரு, "நல்ல' மனிதர் கிடைத்து விட்ட பின், அக்காள் கணவருடன் படுக்கவில்லை.
அப்படியானால், பதினாறு வயதிலிருந்து இருபத்தினாலு வயசு வரையில் நீயும் இந்த அக்கிரமத்துக்கு உடன்பட்டா# தானே? அப்படியானால் ஏன் சம்மதித்தாய்? பயம் என்று மட்டும் கூறி தப்பிக்கலாம் என்று பார்க்காதே... மகா அசடானப் பெண்ணாக இருந்தாலும், முதலில் வேண்டுமானால் பயந்தும், பலாத்காரத்துக்கு வேறு வழியின்றி பணிந்தும் உடன்பட்டிருப்பாள். ஆனால், "இது கூடாது' என்று அவள் நினைத்துவிட்டால், எந்த ஜித்தனாலேயும் அவளை வளைக்க முடியாது. அப்படி வளைந்தாள் என்றால், அவளுக்குள்ளேயும் நெருப்புக் குச்சித் தலையளவுக்காவது ஆசை இருந்திருக்க வேண்டும்.
2. இரண்டு வருடமாய் வேறொருவரைக் காதலிப்பதால்தான், "இது' துரோகம் என்கிறாயா? அப்படியானால் ஒரே வயிற்றில் பிறந்து, ஒரே வீட்டில் வளர்ந்த ரத்தத்தின் ரத்தமான உன் சகோதரிக்கு இதுநாள் வரையில் நீ இழைத்தது துரோகமில்லையா?
3. சரி, இப்படி ஒரு மனிதரை - உனக்கு அறிவுரைகள் எல்லாம் கூறும் நல்லவரை - நீ சந்திக்கவே இல்லை என்றால்... இதே தவறைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பாயா?
4. இவருடன் பழகியதிலிருந்து, நீ அக்கா புருஷனை நெருங்க விடுவதில்லை என்று எழுதியிருக்கிறாய். ஆக, நெருங்க விடாமல் தடுக்கக்கூடிய திறமையும், சாமர்த்தியமும் உனக்கு இருக்கிறது. இல்லை என்று முன்னால் சொன்னதை, பொய் என்று வைத்துக் கொள்ளலாமா.
பொறு... அழாதே! எப்போதுமே நாம், நமது தவறுகளுக்கெல்லாம் அடுத்தவர்தான் காரணம் என்று பழியைத் தூக்கிப் போடக்கூடாது; அது நமது பொறுப்பிலிருந்து கழன்று கொள்ள நாம் பிரயோகிக்கும் வார்த்தை!
நெருப்புக் குச்சி, "நான் எரிந்து போனதற்கு காரணமே இந்த வத்திப் பெட்டிதான்' என்று கூறினால் நம்மால் ஒப்புக் கொள்ள முடியுமா... அது போலத்தான் இதுவும்!
மாமா விஷயத்தை விட்டு, உன் காதலன் சமாச்சாரத்துக்கு வருவோம். நல்லவர், உனக்கு நிறைய புத்திமதிகள் கூறுபவர் என்கிறாய். அவருக்கு, உன்னைக் காதலிக்கும் போது, தான் வேறு ஜாதி... இந்தக் கல்யாணம் நடக்காது என்று தெரியாதா? ஆக, அவருமே பொறுப்பில்லாமல், ஒரு பெண் கிடைத்தாள் என்று, பொழுதுபோக்காக காதலித்து விட்டு, இப்போது ஜாதியையும், தன்னைக் காதலித்து பிரச்னை உண்டாக்கிய பெண்ணையும் காரணம் காட்டுகிறார்...
"இவங்க எல்லாம் இல்லாம இருந்திருந்தா... நான் எங்க வீட்டுலச் சொல்லி இருப்பேன்...' "நீ கல்யாணம் பண்ணிக்க நான், "எங்கிருந்தாலும் வாழ்க' என்று பாடுகிறேன்...'என்று.
எதற்காக இப்படி ஏதேதோ பொய் காரணங்களைக் கூறி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்? ஒரு கம்பெனியில் வேலை பார்க்கும் நீ - பணிபுரியும் மகளிர்க்கான விடுதியில் தங்க வேண்டியதுதானே அல்லது உன் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டு...
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த பெண்ணின் செயல் தவறா அல்லது தப்பா? தவறு என்றால் திருந்திவிடலம் ஆனால் தப்பு என்றால் வருந்தி ஆகவேண்டும் . பொதுவாக செய்தவர்கள் தவறு என்று உணர்ந்தால் குற்ற உணர்வு ஏற்படும் அவ்வாறு குற்ற உணர்வு அவர்களை வாட்டி வதைக்கும் . அவர்கள் குற்ற உணர்விலிருந்து விடுபட கடவிளிடம் முறையிடுவார்கள் இன்றிலிருந்து நல்லவளாக வாழ்வேன் என்று உறுதிபூண்டுவார்கள் . அன்றிலிருந்து அவர்களின் மனசுமை குறையும் . அல்லது மன நல ஆலோசகரிடம் சென்று அடுத்து வரும் நடைமுறை பிரச்சனைகளை கையாள வழிமுறை கேட்பார்கள். ஏனன்றால் எவ்வளவு அறிவாளியும் தன் பிரச்சினையில் சரியான சிறப்பான முடிவு எடுக்க முடியாது . இந்த பகுதியுள் வரும் அத்தனையும் உண்மை என்று வைத்துக்கொண்டால் இவர் இங்கே அறிவுரை கேட்பது தவுறு இல்லை . அனால் குறைவான சதவிகிதத்தில் நடக்கும் இதுபோன்ற சம்பவன்களை தினமலர் பிரசுரிக்காமல் பாதிக்க பட்டவர்களுக்கு விருபமிருந்தால் தொண்டாக கருதினால் பதில் கடிதம் மூலம் தெரிவிக்கலாம் . அன்பு ஒன்றே அனைத்திற்கும் தீர்வு . உன்னை உண்மையாக வருங்காலத்தில் யாராவது காதலித்தால் அவரிடம் மட்டும் உண்மையை சொல்லி பிறகு அவரை மணந்துகொள் . என்றும் அன்புடன் முத்தாண்டி, பெடோக் சிங்கப்பூர்
திருமணம் என்பதின் எந்த ஒரு அர்த்தமும் உங்களுக்கு தெரியவில்லை. இந்த சூழ்நிளைக்குப்பின் உங்களுக்கு திருமணம் என்பது எந்த ஒரு கூடுதல் பாதுகாப்பையும் கொடுக்காது. நீங்கள் யாரை திருமணம் செய்தாலும் அது அடுத்த முட்டாள்தனமான காரியம்தான். தூய்மையான திருமணம் என்ற பந்தத்தை தயவுசெய்து உங்களுடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். உங்களுக்கு திருமணம் வேண்டாம். இவ்வளவுநாள் உடல் பசிக்கு என்ன செய்து வந்தீர்களோ அதை தவறு என்று நினைத்தால் நிறுத்துங்கள். பணத்தேவைக்கு சம்பாதித்து சாப்பிட்டு உங்கள் கவனைத்தை நல்ல காரியங்களுக்கு மாற்றி இதன் மேலாவது குடும்பத்தில் உள்ள பல பேரால் செய்ய முடியாத நல்லவைகளை செய்யுங்கள். யாராவது ஒரு அனாதையை வளருங்கள், அந்த அனாதைக்கு ஒரு சிறப்பான வாழ்வை அமைத்துக்கொடுங்கள் - உங்களால் முடியும்.
இந்த பகுதியில் பதிவு செய்வது இது முதல் முறை .... படிப்பதில் ஆர்வம் இருந்து கருத்து சொல்ல யோசனை இருக்க கூடாது என்பதால் இங்கு வந்தேன் .... வாரமலரில் அந்தரங்க பகுதி பார்க்கவே பயம் இருக்கு ...இந்த வாரம் எப்படி பட்ட கள்ள காதலோ என்று .. இன்றைய இந்த பெண்ணின் தகவலில் ஒன்று புரிகிறது ....சம்பத்தப்பட்ட அந்த இரண்டு ஆண்களும் ரொம்ப விபரமாகவே இருகிறார்கள் .... இந்த பெண்ணு சளைத்தவர் இல்லை தான், சகுந்தலா மேடம் சரியாக சொன்னார்கள் " எப்போதுமே நாம், நமது தவறுகளுக்கெல்லாம் அடுத்தவர்தான் காரணம் என்று பழியைத் தூக்கிப் போடக்கூடாது அது நமது பொறுப்பிலிருந்து கழன்று கொள்ள நாம் பிரயோகிக்கும் வார்த்தை " சாஸ்வதமான வார்த்தை ... பல வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி விஷயங்கள் பேச கூட பயமாக இருக்கும் இப்ப
ரொம்ப சாதாரணம் ..... இதே பகுதியில் ஒரு ராணுவ வீரர் மனைவியிடமும் அவள் தாயாரிடமும் கொண்ட அவரின் வீர தீர செயல்களுக்கு கேள்வி கேட்டிருந்தார் ..... மானங்கெட்ட செயல் ... இதுவும் அது போல் தான் .... அனேக நண்பர்கள் மிக அருமையாக புத்திமதி சொல்கீறிர்கள் .... ஆனால் சம்பந்த பட்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தான் தெரிய வில்லை
பதினான்கு வயதில் ஒன்பதாவது படிக்கையில், இந்தச் சிறுமியை தன் இச்சைக்கு பலியாக்கி உள்ளது அந்த அக்காள் கணவன் என்ற மனித விலங்கு. அது செத்துத் தொலையுமே என்று இப்போது நினைப்பது தேவையே இல்லை. கல்யாணம் செய்ய முடியாத அந்தக் காதலன் தன் பங்குக்கு இப்பெண்ணைக் குழப்பித் திரிகிறான். திருமதி சகுந்தலா அம்மையாரின் பதில் நன்றாக உள்ளது. புரியாத வயதில் இதுபோன்ற பாலியல் தாக்குதல் நடக்கும்போது, அதை எப்படிக் கடந்து வருவது என்பது நம் குழந்தைகளுக்கு நாம் விளக்கிக் கூறுகிறோமா என்றால், நிச்சயம் இல்லை. குழந்தைகளும், சிறுமிகளும் பாலியல் தொந்தரவுக்கு பெரும்பாலும் உள்ளாவது, மிக நெருங்கிய உறவினர்களாலேதான் என்பது தற்போதுதான் ஆய்வுகள் மற்றும் உண்மை நிகழ்வுகளின் வழியாக, பரவலாக அனைவருக்கும் தெரியவருகிறது. பெற்றோர்கள் என்ற முறையில் எவ்வாறு ஒழுக்கங்களை நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோமோ, அதுபோலமே பாலியல் பற்றியும் அவர்களிடம் விளக்கி, எவ்வாறெல்லாம் அவர்கள் சமூகத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அவசியம் புரியவைக்க வேண்டும். பாலுணர்வு அவசியமானது என்பதைச் சொல்லும் அதே வேளையில், அது முறையாகத் தான் பெறப்பட்டு, அனுபவிக்கப் படவேண்டும் என்றும் சொல்லித்தர வேண்டும். திருமணம் என்பதே அந்தமுறை என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்தப் பெண், பதினாலு வயதில், ஒரு மனித மிருகத்தால், பாலுணர்வுக்கு அடிமையாக்கப்பட்டு, அதன் இன்பத்தில் இருந்து விடுபட முடியாமல் இருந்திருக்கிறார். காதல் என்ற திருமண மேடைக்கு செல்லும் சாலை, காதலன் மூலமாக தென்பட்டவுடன், பழைய வழியை விட்டுவிட்டு, திருமணம் நோக்கிச் செல்லலாம் என்று நினைத்திருக்கிறார் இந்தப் பெண். ஆனால் அந்தக் காதலனோ ஒரு ஊர்போய்த் சேராத வண்டி போன்று இருக்கிறான். முடிவு பெரும் குழப்பம். 35 அல்லது 40 வயதில் உள்ள யோசிக்கும் அனுபவம் உள்ள பெண்கள் கூட தகாத வேலைகள் செய்து வருவது கடிதங்களாக, இந்த அன்புடன் அந்தரங்கம் பகுதியில் கொட்டிக் கிடப்பது நாமனைவரும் அறிந்த ஒன்றே. அப்படி இருக்கும்போது, 14 வயதுப் பெண்ணாக இருந்தபோது இவர், முடிவெடுப்பதில் குழம்பியிருப்பதில் சந்தேகமில்லை. அந்தவயதில் இருந்தே, பாலுணர்வுக்கு அடிமையானதும் அறியக்கூடியதாகவே இருக்கிறது. இந்தப் பெண் ஒருவகையில் பரிதாபத்துக்கு உரியவராகவே தென்படுகிறார். அவர் நடவடிக்கையைத் திட்டும் அதே நேரத்தில், அவருடைய சூழ்நிலையும் சற்று கருத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கிறது. இந்த இரண்டு உருப்படாத ஆண்களையும் தலைமுழுகிவிட்டு, மனம்திருந்தி, முறையான திருமணம் புரிந்து, அந்தக் கணவனுக்கு நல்ல மனைவியாக வாழ்ந்து வருவதே, இவருடைய வாழ்க்கைக்கு நல்ல வழி என்பதாகவே தோன்றுகிறது - அன்புடன் கண்ணன்
தகுதி இல்லாத ஒரு பெண்ணுக்கு இந்த நண்பர் பரிதாபப்படுவதாகத் தோன்றுகிறது. இந்தப் பெண்னின் கடிதத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது .புதிய நண்பன் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இல்லாத நிலையில் அவனுக்குத் துரோகம் செய்வது பற்றி இந்தப் பெண் கவலைப்படுவது விசித்திரமாக இருக்கிறது . அக்காவின் கணவனை காமவெறி பிடித்த மிருகமாக இந்தப் பெண் கருதியிருந்தால் அவனுடன் பத்து வருடங்கள் , அதாவது இன்னொருவன் கிடைக்கும் வரை , உறவைத் தொடர்ந்திருக்க வேண்டியதில்லை .மேலும் அவனுடைய உடல்நிலை குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை .புதிய நண்பன் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இல்லாத நிலையில் அக்காவின் கணவரை விட்டு விட வேண்டாம் என்று நினைப்பது தெரிகிறது. இந்தப் பெண்ணின் இந்தப் போக்கினால் அப்பாவி அக்காவிற்கு ஏதேனும் இழப்பு (ஒதுக்கி வைக்கப்படுதல் ,விவாகரத்து போன்றவை ) நேராது என்று நம்புகிறேன்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.