காலங்கள் பல கடந்து நடந்துவரும் ஜல்லிக்கட்டு, இந்த வருடமும், உற்சாகமாக நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அடுத்து வரும் நாட்களில், ஜல்லிக்கட்டு போட்டிகள், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆரம்பித்து, சிவகங்கை மாவட்டம் சிராவயல் வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
காளைகளும், வீரர்களும், களம் காண தயாராகி விட்டனர்.
இந்த சூழ்நிலையில், மாடு பிடி வீரர்கள், ஒரு காளைமாட்டின் சிலையை தினமும் வணங்கிவிட்டே பயிற்சியில் ஈடுபடுகின்றனர். வருடம் முழுவதும் வழிபாடு செய்கின்றனர் என்று கேள்விப்பட்ட போது, உடனே அந்த சிலையைக் காணும் ஆர்வம் ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டிற்கு பெயர் பெற்ற அலங்காநல்லூரில் இருந்து, பாலமேடு வழியாக, 7 கி.மீ., பயணம் செய்தால், பொந்துகம்பட்டி என்ற கிராமம் உங்களை வரவேற்கும்.
அந்த கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு எதிராக கம்பீரமாக காணப்படுகிறது, அந்த காளையின் உருவச்சிலை. சிலையாக இருக்கும் காளையைப்பற்றி கேட்டதும், அந்த கிராமத்தினர் உருகிப் போகின்றனர்.
"அது காளையில்லிங்க... எங்க காவல் தெய்வமுங்க...' என்று ஆரம்பிக்கின்றனர்.
"எங்க ஊரு காளையான இது, எந்த ஊருக்கு போனாலும், ஜெயிக்காம வராது. ஊர் பெருமையை நிலைநாட்டிவிட்டு தான் திரும்பும். பொந்துகம்பட்டி கிராம காளையை அவிழ்த்து விடுறாங்கன்னாலே, வாடிவாசல் பக்கம், ஒரு பய நிக்கமாட்டானுக. மீறி பிடிக்க வந்தவனுங்கள பந்தாடி, பறக்கவிட்டு விடும். இத்தனைக்கும், ஓடுற காளையில்ல, நின்னு விளையாடுற, "நின்னுகுத்தி' காளையாக்கும்.
"ஜல்லிக்கட்டு நேரத்துல மட்டும் தான், அப்படி ஒரு ஆக்ரோஷம் காட்டும். மத்தபடி, பரம சாது. ஊர் ஜனங்களோட அப்படி ஒரு உறவு கொண் டாடும். நாங்களும் எங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு, அதுக்கு பிடிச்சத சாப்பிட கொடுத்து, கவனிச்சுப்போம்.
"மார்கழி மாதம் வந்துட்டாலே, எங்க காளைக்கு தனி மவுசு வந்துடும். "என்னா... ஜல்லிக்கட்டுக்கு ரெடியாயிட்டாகளாக்கும்...' என்று கேட்டபடி, பக்கத்து கிராமத்துல இருந்தெல்லாம் வந்து பார்த்துட்டு போவாங்க.
"எங்க காளைக்கு, ரோஷமும் ஜாஸ்தி, வீரமும் ஜாஸ்தி. ஆனா, கொஞ்சமும் கொலைவெறி கிடையாது. ஒரு தவ்வு, ரெண்டு தவ்வுல, தன்னோட மிதிலை பிடிச்ச பயலுகள, தூர எறிஞ்சுடும். கீழே கிடந்தவனை நினைச்சா, வயத்துல முட்டி, குடலை வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனா, அப்படி செய்யாம, ஒரு பார்வை, "இனியாவது உஷாரா விளையாடு'ங்ற... மாதிரி பார்த்துட்டு கம்பீரமா யாரிடமும் பிடிபடாமல் நடக்கும்.
"அப்பேர்பட்ட எங்க பொந்துகம்பட்டி காளை, திடீர்ன்னு இறந்து போச்சு... ரொம்ப காலமா பித்து பிடிச்ச மாதிரி எங்க கிராமத்துக்காரங்க இருந்தாங்க. நம்ம காளை, நம்மோடயே இருக்கிற மாதிரி ஏதாவது செய்யணும்ன்னு, ஊர்க்காரங்க எல்லாம், ஒண்ணு கூடி யோசிச்சு, இறந்த காளையின் வடிவில் சிலை வைக்க முடிவு செய்தோம். நினைச்சதை விட, சிலை ரொம்ப நல்லா வந்துருச்சு. இப்ப தெய்வமாக இருந்து, எங்களையும், ஊரையும் காப்பாத்திட்டு இருக்கு.
"நாள்தோறும் காளைக்கு வழிபாடு உண்டு. ஜல்லிக்கட்டு சமயத்துல, விசேஷ வழிபாடு உண்டு. பல ஊரை சேர்ந்த மாடுபிடி வீரர்களும் வந்து, நம்ம காளையிடம் ஆசீர்வாதம் வாங்கிட்டு போவாங்க. "சுருக்கமா சொல்வதானால், ஜல்லிக்கட்டுங்ற வார்த்தை இருக்கிற வரை, எங்க பொந்துகம்பட்டி காளையும் வாழும், எங்களையும் வாழவைக்குமுங்க...' என்றனர்.
***
எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.