ஆடம்பரம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2013
00:00

தினசரி உடுத்தும் புடவையாகட்டும், தினுசு தினுசாய் அணியும் நகைகள் ஆகட்டும், வீட்டு உபயோகப் பொருட்களுமே ஆகட்டும்...
இன்று இந்த நிமிடம் சந்தைக்கு வருவதையே, முதல் ஆளாய் வாங்கி வந்து, அடுத்த வீடுகளின் பிரமிப்பான பார்வைக்குள்ளாக்குவதே, தன் மதிப்பை உயர்த்தும், தன் தகுதியை உயர்த்தும் என்ற கொள்கைக்காரிதான் வேதவல்லி.கல்லூரிக்கு ஓட்டிச்செல்லும் டூவீலர், கையில் எடுக்கும் மொபைல் போன், தேர்ந்தெடுத்து அணியும் சட்டை, அதில் தெளித்துக் கொள்ளும் சென்ட்... இப்படி, தான் வாங்குவதிலும், தாயின் கொள்கையே, தன் கொள்கையாய் வைத்திருந்தான் மகன் சதீஷ் பாலாஜி.
இப்படியொரு குடும்பத்தின் தலைவனான சண்முக வேலாயுதம், அரசு அலுவலகத்தில், அதிலும், வருவாய்த் துறையில் வேலை பார்க்கும் போது, அவரது வலதுகை, முதல் தேதி சம்பளம் வாங்க மட்டுமே நீளுமானால், சரிப்பட்டு வருமா?
முப்பது நாட்களும், கிம்பளத்திற்கும் அவரது கை நீண்டால்தானே, அவர் வீடு, அவரை விட்டு வைக்கும்.
சண்முக வேலாயுதம் லஞ்சம் வாங்கத் துவங்கிய கதையின் ஆரம்பம் இதுதான். எளிமை என்ற தமிழ்ச் சொல்லுக்கு, என்ன அர்த்தம் என்று, அவர் மனைவிக்கும் தெரியாது; மகனுக்கும் தெரியாது.
ஆனால், அவர் எளிமையாய் தான் இருந்தார். கைவிரலில் மோதிரமோ, மணிக்கட்டில் தங்கக்கயிறோ, மார்பில் சங்கிலியோ, அவர் அணிவதே இல்லை. ஓட்டல்களில் நுழைவதில்லை. தியேட்டருக்கும் செல்வதில்லை. ஷாப்பிங் போனதில்லை. தனக்கு சட்டைகளும், மிகக் குறைந்த விலையில்தான் எடுத்துக் கொள்வார்.
மனைவி, மக்களின் ஆடம்பரச் செலவுகளைத்தான், அவர் கண்டு கொள்வதே இல்லை. அந்த செலவைச் சரிக்கட்டுவதற்குதானே, சம்பளம் காணாமல், கிம்பளமும் வாங்கத் துவங்கினார்.
ஒரு நாள், ஒரு விவசாயி வீட்டுப் பெண்ணிடம், ஜாதிச் சான்றிதழ் தருவதற்காக ஒரு தொகையைக் கை நீட்டி வாங்கிய போது தான், அந்த பெண்மணியுடன், கிராமவாசியைப் போல வந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரி, கையும், கையூட்டுமாய் சண்முகத்தை பிடித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறையிடம் வசமாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்த சண்முகம், அந்த நிமிடங்களில், அந்த அதிகாரியின் காலில் விழாத குறையாய், கண்ணீர் மல்க, கையெடுத்துக் கும்பிட்டு, கெஞ்சிய போதும், இறுகிய முகம் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை, பலமான தலையசைப்போடு, கையோடு கூட்டிச் சென்றது.
கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொண்டு, அலுவலகத்தை விட்டு சண்முக வேலாயுதம் வெளியேறும் காட்சி, நாளிதழ்களில் வெளியானது.
சண்முகத்தின் குடும்பம், அவமான உணர்ச்சிகளில் வீட்டை விட்டு வெளியேறாமல், நான்கு சுவர்களுக்குள் அழுதது. விசாரிக்க வரும் சொந்த பந்தங்களின் முகங்களைக் கூட ஏறெடுத்துப் பார்க்க வெட்கப்பட்டு, தலை கவிழ்ந்தே தவித்தது. "அந்த மனுஷனுக்கு எந்த ஆசையும் கிடையாது. எல்லாமே எங்களால வந்த வினைதான்...' என்று தாயும், மகனும் தங்களை தாங்களே கூண்டில் நிறுத்திக் கொண்டு, கண்ணீர் விட்டனர்.
சண்முகத்தின் தந்தை சக்திவேல்சாமி, கிராமத்திலிருந்து, தன் மனைவியுடன், ஆவேசமாய் மகன் வீட்டிற்குள் நுழைந்தார்.
வீட்டில், அவர் கண் எதிரில் தென்பட்ட ஆடம்பரப் பொருட்கள் அத்தனையையும், காலால் எட்டி உதைத்தார்.
""தேவையா இதெல்லாம்... இதெல்லாம் வீட்ல இல்லேன்னா செத்தா போயிருவீங்க... அப்படியே செத்துத் தொலஞ்சாலும், ஒருநா மறுநா அழுது கழிச்சுட்டு, நிம்மதியா இருக்கலாமே...
""புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு... நீங்க வாழணுமாக்கும் இந்த வாழ்க்கை, மானங்கெட்ட வாழ்க்கை... தெருவுல நடக்க முடியல. ஒரு டீக்கடையில நிக்க முடியல... காறித் துப்புறாங்க... இவனை பெத்த பாவத்துக்கு, நாங்க ரெண்டு பேரும் கயிறத்தான் போடணும்,'' என்று, காட்டுக் கத்தலாய் கத்தி முடித்து, சோபாவில் தொப்பென்று வந்து விழுந்த மாமனாரை, பயத்துடன் பார்த்த மருமகள், அதே பயத்துடன் மாமியாரையும் பார்த்துத் தலை கவிழ்ந்தாள்.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொல வென வழிந்த வண்ணமாய் இருந்தது.
""இப்ப அழுது என்ன பயன்... வேலையத் தொலைச்சிட்டு வேலூருக்கு போயிட்டான்ல... இனி, துரை ஜாமின்ல வெளிய வந்து, வாய்தாவுக்கு அலைஞ்சு, வழக்கு நடத்தி அப்புறமில்ல பாக்கணும்?
""தேவையா இது? கண்டதெல்லாம் வாங்கி, அவனைக் கையேந்த விட்டது நீதானே... சம்பளமே போதுமய்யா... சமாளிக்கலாம்... நீ கிம்பளம்ன்னு ஒரு பைசாக்கூட வாங்கக் கூடாதுன்னு ஒரு கண்டிஷன் போட்டு, அவனை ஆபீசுக்கு அனுப்பி வச்சிருந்தேன்னா, இன்னிக்கு அவன் ஜெயில்ல இருப்பானா?''
மாமனாரின் அதட்டலான கேள்விக்கு, மருமகளால் பதில் சொல்ல முடியவில்லை.
""மன்னிச்சிருங்க மாமா... நான் ரொம்ப ஆடம்பரமாத்தான் இருந்துட்டேன். என்னோட செலவுக்கு அவர் சம்பளம் காணாமதான், லஞ்சம் வாங்கவும் பழகீட்டாரு... சிக்கனமா செலவு பண்ணனும்ன்னு, பல தடவை சொல்லத்தான் செய்தார். நான் கேட்கல, கோபப்பட்டு சண்டைதான் போடுவேன். என்னை திருத்த முடியாமதான், அவர் கடைசியில...'' என, அதற்குமேல் பேச முடியாமல் அழுத மருமகளை, வெறுப்போடு பார்த்தார் சக்திவேல்சாமி.
அந்த நேரத்தில் தானா, அவர் சம்பந்தி ஐயப்பனும் நுழைய வேண்டும்?
""மன்னிச்சிருங்க மாப்ளை... அவ மேல தப்பில்ல, அவள அப்படி வளத்துவிட்ட நான் தான் குற்றவாளி. உங்க தண்டனை எதுவா இருந்தாலும், எனக்குக் கொடுங்க.''
தன் காலடியில் வந்து உட்கார்ந்த தன் சம்பந்தி ஐயப்பனை பார்த்து, தலையில் அடித்துக் கொண்டார் சக்திவேல்சாமி.
""பொட்டப்பிள்ளைய பெத்துட்டாப் போதாது... ஒழுங்கா வளக்கத் தெரியணும்யா... உருப்படியில்லாம வளத்துவிட்டா, அது பிறந்த வீட்டக் கெடுத்தது காணாதுன்னு, புகுந்த வீட்டையும் நாசமாக்கிடும். உம்ம பொண்ணு விஷயத்துல, அது உண்மையாப் போச்சு பாத்தீரா?'' என்ற அவர் கேள்விக்கு, பாவம் ஐயப்பனால் கவிழ்ந்த தலையை, "ஆமாம்...' என்று அசைக்க மட்டுமே முடிந்தது.
""பூம் பூம் மாடு மாதிரி தலையாட்றீரே... உம்ம ஊதாரி மகளால, என் மகன்தானய்யா வேலை இழந்து, மானங்கெட்டு, ஜெயில்ல கிடக்கான். என்னய்யா புள்ள வளத்திருக்கீரு?''
ஏற்கனவே, பயந்து, பணிந்து சரணடைந்து விட்ட சம்பந்தியிடம், மேலும் மேலும் எகிறிக்கொண்டு கைநீட்டிப் பேசிய சக்திவேல்சாமியை, அவரது கோபத்தை, கோபத்துடன் கூடிய கத்தலை, அங்கு நின்று கவனித்துக் கொண்டிருந்த ஐந்தாறு ஆட்களும், வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.
""கைய மடக்குங்கய்யா முதல்ல... எங்க அண்ணன்தான் பெருந்தன்மையா வந்து உங்க காலடியில உட்கார்ந்து, தானேதான் காரணம்ன்னு கண்ணீர் வடிக்குதே... அது காணாதா உமக்கு? அவுகளை அதுக்கப்புறமும் அடிக்கப்போற மாதிரி வாறீகளே... ஏன், என்னத்துக்குங்கேன்?
""நான் சொல்றேன்யா... அவுக மேலயும் தப்பே இல்ல. அவுக கோடீஸ்வரன். தன் பிள்ளைய கஷ்டம் அறியவிடாம வசதியா வளத்திருக்கலாம். அது, அவுக பிள்ளைப்பாசம். தப்பெல்லாம் உங்க மேலதான்,'' என்று சக்திவேல்சாமியை நோக்கி, அவர் மனைவியே சீறிப்பாய்ந்த போதுதான், அந்த இடமே பரபரப்பானது.
சக்திவேல்சாமியும் திகைப்போடும், வியப்போடும் தன் மனைவியைப் பார்த்தார்.
""நீங்க கிலோ கணக்குல நகைக்கும், லட்சக்கணக்குல ரொக்கத்துக்கும் ஆசைப்பட்டுத் தான இந்த அண்ணன் வீட்ல பொண்ணு எடுத்தீக... அந்த வீட்டுப் பொண்ணு எப்படி வளர்ந்திருப்பாங்கிற அறிவு உங்களுக்கில்ல வேணும்?
""என் தம்பி கிராமத்துல விவசாயம் பண்றான்... அவன் கிட்டயும் ஒரு பொண்ணு இருந்தா... உங்க தங்கச்சி, கிராமத்துல ஒரு பெட்டிக்கடை வச்சிருக்கா... அவளும் தான் ஒண்ணப்பெத்து வச்சிருக்கா... நமக்கு அந்த இடமெல்லாம் பிடிச்சதா? நாம நகைக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்டு, இந்தக் கோடீஸ்வர அண்ணன் வீட்டுப் பிள்ளையத்தான எடுத்தோம்?
""அவ தாய் வீட்ல ஆடம்பரமா இருந்த மாதிரித்தான், இங்கேயும் இருக்க நினைப்பா... அவமேல குத்தமில்லைங்க, மீசைக்கும் ஆசை... கூழுக்கும் ஆசைங்கிற கதையா, மருமக அரண்மனையில இருந்தும் வரணும், குடிசை வாழ்க்கையும் வாழணும்ன்னா எப்படிங்க?''
தன் மனைவியின் நெற்றியடிக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், திணறி, திண்டாடிப்போன சக்திவேல்சாமி, தன் சம்பந்தியிடம் சற்றுமுன் காட்டிய கோபத்திற்கு, அவரிடமே மன்னிப்பும் கேட்டார்.
""சரி... உங்க மகளைக் கூட்டிட்டுப் போங்க... அவனை ஜாமீன்ல நான் எடுத்து, ஒரு நல்ல லாயரை வச்சு கேஸ் நடத்துறேன். மறுபடியும் வேலை வாங்குற வரைக்கும், உங்க மக உங்க வீட்லயே இருக்கட்டும். கூட்டிட்டுப் போங்க,'' என்று சம்பந்தியை வேண்டிக்கொண்டார் சக்திவேல்சாமி.
அவர், மிகப் பெருந்தன்மையாய், தன் மருமகள் பிறந்த வீட்டிற்கே போய் வழக்கம் போல் வசதியான வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என்று, அனுமதித்த போதும், சிரித்துக் கொண்டே, ""வேண்டாம்... வேண்டவே வேண்டாம்,'' என கண்டிப்பாக, மறுத்துத் தலையசைத்தார் ஐயப்பன்.
""மருமகன் கம்பி எண்றதுக்குக் காரணமே, என் மகளும், அவ ஆடம்பர வாழ்க்கையும்தான். அதனால, அப்படி அவளை வாழ வச்சுப் பாக்கிற தவறை, மறுபடியும் நான் செய்ய விரும்பல...
""கிராமத்துக்கே கூட்டிட்டுப்போயி எளிமையான வாழ்க்கையை அவளுக்கு கத்துக் கொடுங்க. இனிமேலாவது, அவ ஒரு நேர்மையான சர்க்கார் ஊழியனோட மனைவியா இருக்கணும்.
""அவ அப்படி தேவைகள குறைச்சு... ஆடம்பரத்த மறந்து சிக்கனமா, எளிமையா குடும்பம் நடத்துற பயிற்சிய, அவளுக்கு நீங்க கிராமத்துல கொடுங்க.
""அவளை ஆடம்பரமா வளர்த்த தவறுக்கான தண்டனையா, மருமகனை நான் ஜாமின்ல எடுத்து, ஒரு பெரிய லாயர வச்சு கேஸ் நடத்தி, மறுபடியும் அவருக்கு உத்யோகம் வாங்கி தந்து, நேர்மையான சர்க்கார் ஊழியரா, உங்க மகனை மாத்துறது என் பொறுப்பு,'' ஐயப்பன் சிரித்துக்கொண்டே கண்டிப்பாய் கூறினார்.
""அதுவும் சரிதான். வாம்மா நம்ம கிராமத்துக்குப் போகலாம், நீ பிரிட்ஜ்ல வச்சு சாப்பிடுற காய்கறி, பழங்களெல்லாம் எப்படி விளையுதுன்னு வந்து பாரு. விளைய வைக்கவும் நீ பழகிக்கலாம்,'' என்றவர், மருமகளைத் தன் கிராமத்திற்கே கூட்டிச் சென்றார். ***

வே. குருநாதன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meena Ramesh - Mysore,இந்தியா
16-ஜன-201313:16:04 IST Report Abuse
Meena Ramesh நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Meena Ramesh - Mysore,இந்தியா
16-ஜன-201313:14:28 IST Report Abuse
Meena Ramesh நல்ல கதை. ஆனால், anandprasad சொன்னது போலவே நடையில் முயற்சி தேவை. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
15-ஜன-201311:12:49 IST Report Abuse
anandhaprasadh கதையின் கரு நன்றாக உள்ளது.. ஆனால் நடை, அதை முடித்த விதம் தான் வாரமலர் அல்லாமல் சிறுவர் மலரை நினைவு படுத்துகிறது... நல்ல முயற்சி... ஆனால் எழுத்தில் முதிர்ச்சி தேவை... வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
13-ஜன-201301:07:20 IST Report Abuse
GOWSALYA இப்போது ஆடம்பரமா வாழும் அத்தனை பெண்களுக்கும் ,ஏன் ஆண்களுக்கும் தான் படிப்பினையான ஒரு நல்ல கதை குருநாதன் சகோதரரே ....வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.