சிறந்த குருவின் பெருமையை அப்படியே அபிநயித்தார் சுபாஞ்சலி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஜன
2013
00:00

இந்த ஆண்டு நடைபெற்று வரும், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபையின் நாட்டிய நிகழ்ச்சிகளில், நிறைய இளம் கலைஞர்களின் திறமையை கண்டு ரசிக்க முடிந்தது. வாணிமகால் ஓபுல் ரெட்டி கலையரங்கத்தில், இளம் நடனமணி சுபாஞ்சலி பிரசாந்த் ஆடிய விதம், நிகழ்ச்சி துவக்கம் முதல் இறுதி வரை சிறப்பாக இருந்தது.
முதல் காரணம் சுபாஞ்சலிக்கு நாட்டியப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் குருமார்கள், உலகப் புகழ் நாட்டிய தம்பதியர் எம்.வி.நரசிம்மாச்சாரி மற்றும் வசந்த லட்சுமி ஆகியோர் என்பது சிறப்பானது. இப்படிப்பட்ட நல்ல குருமார்கள் பயிற்சி கொடுத்து, இந்நிகழ்ச்சியில் ஆடியபோது, கலாஷேத்திரா பாணியின், அத்தனை அழகும், ஒழுங்கு முறை கச்சித அணுகுமுறையுடன் அபிநயங்கள் என, எல்லா அம்சங்களுமே பூரணமாக பொலிந்து நாட்டியத்தைக் கண்டு ரசிக்க முடிந்தது.
இந்த நிகழ்ச்சியில், பிரதான வர்ணம் உட்பட இடம் பெற்றிருந்த அனேக நடன உருப்படிகளையும் இயற்றிய பெருமை முழுவதுமாக, குரு வசந்த லட்சுமியுடையது. தமிழ் தேன் சொட்டிய வரிகளைக் கேட்டு, உடலும், மனமும் குளிர்ந்தன. ஆண்டாள் நாச்சியார் போன்று சிறந்த பெண் கவியாகவே ஆகிவிட்டார் அவர். இதற்கு தன் பங்கிற்கு இசையமைப்பும், நாட்டிய வடிவமைப்பும் செய்திருந்த நாட்டிய குரு நரசிம்மாச்சாரி, இந்த நிகழ்ச்சியில், தானே பாடி கூடுதல் மெருகு தந்தார்.
சுபாஞ்சலி பார்க்க பொன்னில் வார்த்த சிலை போன்று இருக்கிறார். அன்றலர்ந்த புஷ்பம் போன்று மிருது தன்மை, நளினம், மென்மை, அழகான நயனங்கள் கூடுதல் பலம் இவருக்கு. நிகழ்ச்சியின் துவக்கமே அமர்க்களமாக, சிவ துதியுடன் துவங்கியது. நாட்டிய வடிவமைப்பில், இந்த நிகழ்ச்சியில், நிறைய அதிசய வைக்கும் உத்திகள் இருந்தன.
குறிப்பாக, சிவ முத்திரைகள் மட்டுமே ஆடிவிட்டு ஓடி விடாமல் அகிலம், புவனம், ஆகார்யம் சந்த்ர தாரா இப்படி அனைத்திற்கும் முழு விளக்கங்களை அபிநயங்கள் மூலம் உணர்த்தி ஆடியது மட்டுமின்றி இடையிடையே கச்சிதமாக ஜதிகளையும் ஒருங்கிணைத்து அற்புதமாக செய்தார். சப்தம் எனப்படும் நாட்டிய உருப்படிக்கு, ஏனைய நடன நிகழ்ச்சிகளில், வழக்கமாக இடம் பெறும் உருப்படிகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக, சபரிமலை சுவாமி அய்யப்பன் வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
அவன் பிறப்பு, புலிப்பால் கொண்டு வர கானகம் செல்ல சதி தீட்டுவது, பக்தர்களுக்கு எவ்வாறு அருள் செய்கிறான் என்ற அத்தனை நிகழ்ச்சிகளையும் அழகாக உள்ளடக்கிய பொருள் அமைந்த வரிகளுக்கு, ராக மாலிகையாக காம்போதி, சாவேரி, மோகனம், சுருட்டி இப்படி சிறப்பான ராக மெட்டுகளை அமைத்து, அனுபவித்துப் பாடியது கேட்டு செவிகள் இரண்டும் மதுர மழையில் நனைந்தன.
பிரதானமாக அமைந்த வர்ணம் கீர்வாணி ராகம், ஆதி தாளத்தில் இருந்தது. நடன குரு வசந்த லட்சுமி இயற்றியது. கண்ணன் சிருங்கார நாயகன் அவனே, இளம் கன்னிகைகளுக்கு காதல் மன்னன் என்ற அடிப்படையில், தமிழ் மணக்க, மழை முகில் வண்ணனை, என்னுயிர் நாதனை பிரிந்திட இனி சகியேன் என்ற பொருளில், தலைவி, தன் தோழியை தூது அனுப்பும் நயமான சம்பவங்களை சஞ்சாரிகளாக சுபாஞ்சலி அனுபவித்து ஆடியது, மனதை மிகவும் கவர்ந்தது.
நாட்டிய குரு நரசிம்மாச்சாரியின் சங்கதி துருவல்களுக்கு, விரிவுகளுக்கு ஆடுவது மிகவும் கடினம். அதை அழகுபடுத்தி அவர் பாடப்பாட அதை விட அழகாக அதை மனதில் உள்வாங்கி கொண்டு, சுபாஞ்சலி, அயராமல், தளராமல் ஆடியது, சபாஷ் போட வைத்தது. இவ்வளவு அழகாக நாட்டிய வடிவமைப்பு செய்ய இப்படிப்பட்ட குருமார்கள் இருக்கும்போது, சுபாஞ்சலிக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்.
நடன வடிவமைப்பு முதல் தரம் என்று கூறியதை நிரூபித்த தொடர்ந்த வள்ளிக் கணவன் பேரை நாடோடிப் பாடலின் வடிவமைப்பும், மெச்சும்படியான கற்பனைகள் சுடர் விட்டன. நிறைவாக மகராஜா சுவாதித் திருநாள் இயற்றிய தனஸ்ரீ தில்லானா, இதுவும் ஏனைய கலைஞர்கள் ஆடிய விதத்தில் இருந்து கற்பனைகள் மாறுபட்டு, மிக உயர்வாக இருந்தது. இந்த தில்லானாவை பாடும்போது, நரசிம்மாச்சாரி படே குலாம் அலிகானாக மாறினார்.
நட்டுவாங்கம் குரு வசந்த லட்சுமியுடையது. பாராட்ட வார்த்தைகள் இல்லை. நடனகுரு நரசிம்மாச்சாரி - வசந்த லட்சுமி நாட்டிய வடிவமைப்பு, மெட்டமைப்பு வெற்றிக்கு வித்திட்டவர்கள். கலையுலகின் சூப்பர் தம்பதியர் இவர்கள். வீணையில் அனந்த நாராயணன் அனுசரணை ததும்ப வாசித்தார். மிருதங்கம் வாசித்த குரு பரத்வாஜ் பிரபல லய மேதை காரைக்குடி மணியின் சீடர். வெளுத்துக் கட்டினார் தன் பங்கை.
புல்லாங்குழலில் முத்துக்குமாரும், உயர்வாக அனுசரணையுடன் வாசித்தது நிகழ்ச்சிக்கு மெருகு தந்து உதவியது. நிகழ்ச்சி பற்றி ஆங்கில முன்னுரை வழங்கிய, ஆரபி வீரராகவனின் குரல் மிகவும் இனிமை. ஆங்கிலம் புரிந்தவர்களுக்கு அவர் விளக்கங்கள் புரிந்திருக்கலாம். கூடவே எளிமையான தமிழிலும் விளக்கி இருந்தால் வரவேற்றிருக்கலாம்.
- மாளவிகா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.