ஒரு புதிய பகுதி குட்டீஸ்... இவை உலகில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. நமது புராண காலம் முதல் இன்றைய கால கட்டம் வரை ஒற்று-உளவு-சதிகள் நடைபெற்று வருகிறது. இதில், நடந்த உண்மைச் சம்பவங்களை உங்களுக்குத் தருகிறோம் படித்து என்ஜாய் பண்ணுங்க குட்டீஸ்!
விஜயநகரப் பேரரசின் மன்னர் வீரநரசிம்மர் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தார். மன்னரின் மகன் சிறுவன். ஆட்சி நடத்துவதற்கேற்ற வயதாகவில்லை. ஆனால், மன்னர் வீர நரசிம்மரின் தம்பி கிருஷ்ணதேவராயர் இருந்தார். மக்களின் நன்மதிப்பைப் பெற்ற வீரர் கிருஷ்ணதேவராயர்.
அரசர் நரசிம்மர் காலமானால், அடுத்து சிங்காசனமேறி நாட்டையாளப் போவது யார் என்பதைப் பற்றிய சர்ச்சையில் நாட்டு மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
"தம் குழந்தை மகனுக்கே மன்னர் முடிசூட்டுவார்' என்றனர் சிலர்.
"சின்னக்குழந்தையைச் சிங்காசனத்தில் அமர்த்தி என்ன செய்வது? தம்பி கிருஷ்ண தேவராயர் இருக்கும் போது, வீரநரசிம்மர் அப்படியெல்லாம் நாட்டிற்கு நன்மை பயக்காத செயலைச் செய்யமாட்டார்' என்று சிலர் வாதிட்டனர்.
ஆனால், அரசர் வீர நரசிம்மரோ பிள்ளைப் பாசத்தில் புத்திகெட்டுப் போனார்.
"தன் வம்சமே விஜயநகரை ஆள வேண்டும்' என்று ஆசைப்பட்டார். கிருஷ்ணதேவராயர் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது என்பதையும் அவர் அறிவார். ஏனென்றால், மக்களின் மதிப்பை அந்த அளவுக்குப் பெற்றிருந்தார் கிருஷ்ண தேவராயர். ஆகவே, அவனைக் கொன்றால்தான் தன் மகன் வாரிசாக முடியும் என்ற முடிவுக்கு வந்தார் வீரநரசிம்மர். படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும் இயலாத நிலையில் இதைச் சாதிப்பது எப்படி?
அமைச்சர் திம்மரசுவை அழைத்தார். "அப்பாஜி' என்று அழைக்கப்படும் அமைச்சர் திம்மரசு, மன்னரின் அழைப்பைக் கேட்டு விரைந்து வந்தார். தம் அறையில் இருந்த பணியாளர்களை வெளியே போகச் சொன்னார். கதவைத் தாழிட்டு வரும்படி அப்பாஜியைக் கேட்டுக் கொண்டார் நரசிம்மர்.
அதன்படியே செய்து, மன்னரின் அருகே வந்தார் அப்பாஜி.
""அப்பாஜி! என்னுடைய இறுதி ஆசை ஒன்று. அதை நிறைவேற்றுவீர்களா?'' என்று கேட்டார் வீர நரசிம்மர் அடைபட்ட குரலில்.
""சொல்லுங்கள் அரசே...!'' என்றார் திம்மரசு.
""என் மகன் எனக்குப் பின் அரியணையில் அமரவேண்டும். கிருஷ்ணதேவராயர் இருக்கும் வரை என் ஆசை நிறைவேறாது. ஆகவே, கிருஷ்ணதேவராயரைக் கொன்று விடவேண்டும். அவனைக் கொல்வதாக எனக்கு வாக்களிப்பீர்களா அப்பாஜி?''
அமைச்சர் திம்மரசு ஆடிப்போனார். மன்னரின் உள்ளத்திலே இப்படியொரு கொடூர எண்ணமா? அவரால் நம்பவே முடியவில்லை. கிருஷ்ணதேவராயரை தான் கொல்வதா? ஆனால், மன்னரின் இறுதி ஆசை. அதை நிறைவேற்றுவது மந்திரியாகிய தன் கடமையாயிற்றே!
சம்மதித்து, வேதனையோடு வெளியேற முற்பட்டபோது மன்னர் நரசிம்மர் அழைத்தார்.
அப்பாஜி வாக்குத்தவறி, ஏமாற்றி விட்டால்? சந்தேகம் முளைத்தது நரசிம்மரின் உள்ளத்தில். ஆகவே, ""அப்பாஜி உங்கள் வார்த்தையில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனாலும், கிருஷ்ணதேவராயரை கொன்று விட்டதன் அடையாளமாக அவனது கண்களைக் கொண்டு வந்து என்னிடம் காட்ட வேண்டும்,'' என்றார் மன்னர்.
""அப்படியே செய்கிறேன் அரசே!'' என்று கூறி வெளியேறினார் திம்மரசு. அப்போது கிருஷ்ணதேவராயர் அரசரைக் காண வந்து கொண்டிருந்தார்.
""அப்பாஜி மன்னரின் உடல் நிலை எப்படியுள்ளது?''என்று கேட்டார் கிருஷ்ணதேவராயர்.
""தேறி வருகிறது. இப்போதுதான் கண்ணயர்ந்தார். ஆகவே, நீங்கள் அங்கு போய் எழுப்ப வேண்டாம்! என்னோடு வாருங்கள்,'' என்று கிருஷ்ணதேவராயரைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனார் அப்பாஜி.
வழியில் கேட்டார், ""கிருஷ்ணா... மன்னர் வீர நரசிம்மருக்காக நீங்கள் உங்கள் உயிரைத் தருவீர்களா?''
""கண்டிப்பாக! அரசரே என் நாடு, என் நாட்டிற்காக நான் சாகத் தயார்!'' என்றார்.
அன்றிரவு இரண்டு ஆத்மாக்கள் தூங்கவில்லை. ஒன்று வீரநரசிம்மர், "திம்மரசு என் ஆசையை நிறை வேற்றுவாரா? கிருஷ்ண தேவராயரின் வாழ்வை முடிப்பாரா?'' அடுத்தவர் திம்மரசு. "கிருஷ்ண தேவராயரைக் கொலை செய்ய வேண்டும்! என்ற கட்டளையும், கிருஷ்ண தேவராயர், "நாட்டுக்காக நான் சாகத் தயார்!' என்றதும் அவர் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.
பொழுது புலரும் நேரம். இன்னும் இருள் விலகாத வேளை.
கிருஷ்ண தேவராயரை அழைத்து வருமாறு ஆள் அனுப்பினார் அப்பாஜி, கிருஷ்ணதேவராயரும் வந்தார்.
""என்னோடு தனியே வாருங்கள். ரகசியம்,'' என்றார் அப்பாஜி.
மவுனமாக மந்திரி திம்மரசுவைப் பின்பற்றினார் கிருஷ்ணதேவராயர். நகருக்கு வெளியே வந்தனர். அங்கு ஒரு குதிரை தயாராக இருந்தது. அதன் மீது ஒரு சிறு மூட்டையும் இருந்தது.
""கிருஷ்ணதேவராயரே, இந்த மூட்டையில் நீங்கள் உங்கள் உருவத்தை மாற்றிக் கொள்வதற்கான சாதனங்களும், உடைகளும் உள்ளன. மாறுவேடம் அணிந்து இக்குதிரையிலேறி இங்கிருந்து போய் விடுங்கள். தப்பிச் செல்லுங்கள்,'' என்றார் திம்மரசு.
திகைத்துப் போனார் கிருஷ்ணதேவராயர். ஆனால், திம்மரசுவின் அறிவாற்றலை மதிப்பவர் கிருஷ்ணதேவராயர்.
""இதன் காரணம் என்ன அப்பாஜி!'' என்று கேட்காமலிருக்க முடியவில்லை அவரால்.
""காரணம் பிறகு சொல்கிறேன். தாமதிக்காமல் கிளம்புங்கள். உங்களை யாரும் தெரிந்து கொள்ளாதபடி நடந்து கொள்ளுங்கள்,'' என்றார்.
""அப்படித் தவறு செய்ய மாட்டேன் அப்பாஜி. என்னை நம்பலாம்,'' என்று கூறித் தலைவணங்கிக் குதிரையில் அமர்ந்த கிருஷ்ணதேவராயர், குதிரையை உதைத்து விரட்டினார்.
கிருஷ்ண தேவராயர் தப்பிச் செல்ல வழி வகுத்துக் கொடுத்த திம்மரசு, ஒரு ஆட்டைக் கொன்று அதன் கண்களை எடுத்துக் கொண்டு மன்னர் வீரநரசிம்மரிடம் போனார்.
""அரசே, இதோ கிருஷ்ணதேவராயரின் கண்கள்'' என்று ரத்தக் குளத்தில் மிதக்கும் கண்களை மன்னர் முன் நீட்டினார். நரசிம்மரின் நோயினால் வெளுத்திருந்த முகத்தில் ஒரு திருப்தி ஏற்பட்டது.
சதி நிறைவேறிய திருப்தி!
கிருஷ்ண தேவராயர் காணாமல் போன செய்தி மெல்ல மெல்ல ராஜ்யத்தில் பரவி, அடுத்த நாடுகளுக்கும் போயிற்று. பாமினி சுல்தான் அகமது ஷா பெருமகிழ்ச்சி கொண்டான்.
""விஜய நகரை நம் வசப்படுத்திக் கொள்ள ஏற்ற தருணம் இதுவே,'' என்று கொக்கரித்தான்.
""நரசிம்மர் காலமானதும் ஒளிவிடத்திலிருந்து கிருஷ்ணதேவராயர் வெளிப்பட்டு முடிசூட்டிக் கொள்ளுவாரானால், நம் நிலை என்னாவது?'' என்றனர் அகமதுஷாவின் அவைப் பிரபுக்கள்.
""அவன் அனுபவமில்லாதவன். நாம் தாக்குதலைத் திறம்பட நடத்தினால் விஜயநகரம் வீழ்ந்து விடும்,'' என்றார் அகமது ஷா.
பாமினி சுல்தானின் படையெடுப்பு விஜயநகரை எட்டியது. நோயுற்ற மன்னர் நரசிம்மர், ""நாட்டைக் காக்க நான் போர்முனைக்குப் புறப்பட வேண்டும்,'' என்று தம் படுக்கையிலிருந்து எழுந்தார்; பலவீனத்தினால் தள்ளாடித் தடுமாறி விழுந்தார். ஓடி வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார் திம்மரசு. மன்னர் நரசிம்மர் கண்ணீர் பெருகிவழியக் கதறினார்.
""என் மகன் குழந்தை; கிருஷ்ண தேவராயரும் இல்லை, நானோ நோயாளி. இதைச் சாதகமாக்கிக் கொண்டுதான் படை யெடுத்துள்ளார்... பாமினி சுல்தான்,'' என்று கதறினார் மன்னர்.
""ஐயோ, இப்போது கிருஷ்ண தேவராயர் இருந்தால் என் நிலை இப்படியாகுமா? அநியாயமாக அவனைக் கொல்லச் செய்து விட்டேனே. அப்பாஜி, நீங்களாவது என் செயலைத் தடுத்திருக்கக் கூடாதா?'' என்று புலம்பினார்.
"இதுவே தக்க தருணம்!' என்று மனத்துக்குள் கூறிக்கொண்ட திம்மரசு , ""அரசே உங்கள் ஆணையை நிறைவேற்றாத என்னை மன்னியுங்கள். உண்மையில் நான் கிருஷ்ணதேவராயரைக் கொல்லவில்லை!'' என்றார்.
""மன்னிப்பதா! அப்பாஜி! என் சகோதரனைக் கொன்ற பாவத்திலிருந்து என்னைக் காப்பாற்றியவரல்லவா நீங்கள்! கிருஷ்ண தேவராயர் உயிரோடிருக்கிறானா? எங்கிருக்கிறான். உடனே வரவழையுங்கள் என் சகோதரனை!'' என்று பரபரத்தார் நரசிம்மர்.
இப்படியொரு மனமாற்றமும் நிலையும் மாறவே திம்மரசு காத்திருந்தார். கிருஷ்ண தேவராயரை உடனே வரவழைத்தார். வீர நரசிம்மர் கண்கள் குளமாகத் தன் தம்பியிடம் தன்னை மன்னிக்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொண்டார்.
அன்று கிருஷ்ண தேவராயர் தப்பியோடிப் போகத் திம்மரசு திட்டமிட்டு உதவியிராவிடில், விஜயநகர சாம்ராஜ்யத்தின் சரித்திரமே மாறி இருக்கும். மகத்தான மாமன்னரான கிருஷ்ண தேவராயரைப் பாரதம் பார்த்திருக்காது.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.