"தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா!'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2013
00:00

விருதுநகர் மாவட்டம், ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, சுதந்திர போராட்டத் தியாகி, காலம் சென்ற எஸ்.ஆர். ராமசாமியின் மனைவி வேங்கடம்மாள் வயது 86. அவர்களுடன், பிரத்யேக சந்திப்பு: விருதுநகர் மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில், என் தந்தை வி.ராமசாமி, விவசாயம் செய்து வந்தார். சாத்தூரில், எஸ்.ராமசாமி நாயுடு என்ற பிரமுகரின் அச்சகத்திலும் பணி புரிந்து வந்தார். அப்போது எனக்கு, ஐந்து வயது இருக்கும். சுதந்திர போராட்டத்தில் ஈடுபடும், காங்கிரஸ்காரர்களுக்கு, தேவைப்படும்போது, என் தந்தையும் அவரது சில நெருங்கிய நண்பர்களும், காடுகளில் ரகசியமாக வெடி குண்டுகள் தயாரித்து கொடுப்பர்.
திருநெல்வேலியில் வாஞ்சிநாதனின் கூட்டாளிகளை, அப்பா அடிக்கடி சந்திப்பார். என்னோட தாத்தா - பாட்டி இருவரும், அப்போ பர்மாவில் இருந்தனர். எனக்கு ஏழு வயசு ஆனபோது, என்னை பர்மாவுக்கு அழைத்துச் சென்றனர். விருதுநகரிலிருந்து, சென்னைக்கு ரயில் டிக்கட் ஏழு ரூபாய். அங்கிருந்து, பர்மாவுக்கு கப்பலிலே செல்ல, 13 ரூபாய். மூன்று நாள் பயணம்; கப்பலில் சாப்பாட்டுக்கு தனியாக கட்டணம் தர வேண்டும்.
பர்மாவில் ஆறு ஆண்டுகள் இருந்தேன். அங்கே, பள்ளிக் கூடத்திலே என்னை சேர்க்கவில்லை. ஆனால், எங்கள் சின்னம்மா வீட்டிலேயே நிறைய பாடம் சொல்லிக் கொடுத்தனர். சின்னம்மா கிட்டே, நிறைய குழந்தைகள் பாடம் கற்றுக் கொண்டனர்.
பாரதம், ராமாயணம் எல்லாம் படித்தேன். சென்னையிலிருந்து, "கல்கி' பத்திரிகை அங்கே வரும். கல்கி எழுதும் சுவாரசியமான தொடர்கதைகளை படிப்பேன். பர்மாவில் தான், நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
மீண்டும், என் 14 வயதில் இந்தியாவுக்கு திரும்பினோம். உலகப் போர் ஆரம்பித்தது. நவம்பர் மாதம் 1941ல், நாங்கள் பர்மாவிலிருந்து, சென்னைக்கு வந்த கடைசி கப்பலில் வந்தோம். அதற்கு பின், கப்பல் வரவே இல்லை. பின், நிறைய பேர் வங்காளம் வழியாக, இந்தியாவுக்கு தரை வழியாகவே வந்துள்ளனர்.
நானும், என் கணவரும், ஒரே ஊர்க்காரர்கள் தான். என் அம்மாவோட சித்தப்பா மகன் தான், என் கணவர் எஸ்.ஆர்.ராமசாமி. அவருக்கு அப்போது, 19 வயசு, எனக்கு 14. அவர் நன்றாக பாடுவார். பாரதியார் சுதந்திரத்திற்காக எழுதிய பாடல்களையும் சரி, பாரதியாரின் மற்ற பாடல்களையும் நன்றாகப் பாடுவார். அவர் குடும்பமும், எங்கள் குடும்பத்தை போல, சுதந்திரத்திற்காக உழைத்தவர்கள். நாடகமெல்லாம் நடிப்பார். யோகா பயிற்சி பெற்றவர்.
"வெள்ளையனே வெளியேறு இயக்கம்' நடந்தது. செல்லசாமி என்ற பெரியவர், ஆசிரமம் நடத்தினார். எங்க வீட்டுக்காரர், அங்கேயே இருப்பார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலே, செல்லச்சாமி, வடமலாபுரம் கோபால்சாமி, சின்னையன், துரைசாமி, ஜி.ராமச்சந்திரன் போன்றோரை கைது செய்தனர்.
எங்க வீட்டுக்காரர், ஜி.ஏ.ஆளவந்தார், வி.ஸ்ரீநிவாசன், கே.வி.ராமசாமி, சிங்காரப்பன் போன்றோர் அடுத்தக்கட்ட தலைவர்கள். தந்தி கம்பங்களை சாய்க்கிறது, ஒயர் கம்பிகளை அறுத்து எறிவது போன்ற காரியங்களில் ஈடுபடுவர். போலீசுக்குத் தெரியாமல், தலைமறைவாக காட்டில், ஒளிந்து இருந்தனர்.
பெண்கள், எங்கே, எப்போ மறியல் செய்ய வேண்டும் என்பதை, கடிதம் எழுதி, தூதுவர் மூலமாக, தகவல் அனுப்புவோம்; அது எங்க வேலை.
என் வீட்டுக்காரரையும், அவர் நண்பர்களையும் தேடி ரிசர்வ் போலீசார், எங்கள் ஊருக்கு வந்தனர். பல இடங்கள், வீடுகளில் சோதனை செய்தனர். யாரும், கிடைக்கவில்லை. ஜி.ராமச்சந்திரன் வீட்டில், சோதனை செய்தனர். அவரை ஏற்கனவே கைது செய்திட்டாங்க. அவர் வீட்டை அடித்து நொறுக்கினர்.
அடுத்து நேராக எங்கள் வீட்டுக்கு வந்தனர். நான் வீட்டை பூட்டி விட்டு, எதிரே ஒரு கல்லு மேலே உட்கார்ந்திருந்தேன். "எங்கே ஒளிச்சி வைச்சிருக்கே?' என, சத்தமாக கேட்டனர்.
வீடு பூட்டியிருப்பதை பார்த்து, "கதவை உடையுங்கள்...' என்று, ஒருவர் கத்தினார். "இது என் வீடு தான்... இந்தாங்க சாவி, கதவை உடைக்க வேண்டாம். உள்ளே போய் பாருங்கள்...' என்று சொல்லி, சாவியை கொடுத்தேன்.
அவர்கள் வீட்டையே அதகளம் செய்தனர். போலீஸ் வந்திருந்த விஷயம் தெரிந்து, என் தாய் மாமன் அ.ராமச்சந்திரன் அங்கே வந்தார். "ஆளை தானே பிடிக்கணும்... வீட்டை ஏன் உடைக்கறீங்க?' என்று அவங்களோட, சண்டை பிடித்தார். போலீஸ், அவரையும் விடவில்லை. கீழே விழும் வரை, ரத்தம் சொட்ட சொட்ட அடித்தனர்.
தலைமறைவாக காட்டில் இருக்கும் என் கணவர் மற்றும் ஆளவந்தார் உட்பட நான்கு பேருக்கு, என் அம்மாவும், பாட்டியும் ரகசியமாக சாப்பாடு எடுத்து செல்வர். இவங்களும், மற்ற பெண்களும், "நீங்க நாலு பேரும் சரண்டர் ஆகிடுங்க ளேன்...' என்று, தலைமறைவாக இருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டனர்; உயிருக்கு ஆபத்து வரக் கூடாதே என்ற பயம்!
அன்னிக்கு தேடிட்டு வந்த லோக்கல் போலீஸ்கிட்டே இல்லாமல், சிவகாசியிலே இருக்கும் சூப்பரென்டெண்ட் ஆப் போலீஸ் அதிகாரி கிட்டே, செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு, சரண் அடைந்தனர். பிறகு, அந்த நான்கு பேரையும், சாத்தூர் சப் - ஜெயிலில் அடைத்தனர்.
அவங்களுக்கு மாற்று உடை எடுத்துக் கொண்டு, ஆளவந்தாரின் பாட்டி, நான் மற்றும் இரு பெண்கள் என, மொத்தம் நான்கு பேர், எங்கள் ஊரிலிருந்து, 20 கி.மீ., தூரம், காட்டு வழியாக நடந்து, சாத்தூர் ஜெயிலுக்கு சென்றோம். காலை 4:00 மணிக்கு கிளம்பி, 9:00 மணிக்கு அங்கு போய் சேர்ந்தோம். மாற்று உடை கொடுக்க, தனியாக மனு கொடுக்க வேண்டும். ஆர்டர் போட்டால் தான், உடையை வாங்கிக் கொள்ள முடியும். நாங்கள் சென்ற சமயம், "இப்போ முடியாது' என்று சொல்லி விட்டனர். உடையை கொடுக்க முடியாமல் திரும்பி வந்தோம்.
"மேட்டமலை' என்ற இடத்தில், ஒருவர் மனு எழுதி கொடுப்பார் என்று கேள்விப்பட்டு, அவரைப் பார்த்து, மனு எழுதி வாங்கினோம். அவர், "பழங்கள் எடுத்துக் கொண்டு செல்லலாம்...' என்று கூறினார். வாழை, கொய்யா பழங்கள், உடைகள் எடுத்துக் கொண்டு, மறுபடியும் சென்றோம்.
உடையை மட்டும் வாங்கிக் கொண்டு, "அவர்களிடம் கொடுத்து விடுகிறோம்...' என்று கூறினர். பழங்களுக்குத் தடா.
"அவர்களோடு பேச வேண்டும்...' என்று கேட்டோம்; மறுத்து விட்டனர். "கைதிகள் குளிப்பதற்காக, கிணற்றுக்கு வருவர். அப்போ, தூரத்திலிருந்தே பார்த்துக் கொள்ளலாம்...' என்று கூறினர்.
ஒவ்வொரு கைதிக்கும், ஒரு மண் சட்டி கொடுத்தனர்; அதிலே தான், சிறுநீர் - மலம் எல்லாம் போகணும். காலையில், அந்த சட்டியை எடுத்துக் கொண்டு, கிணறு அருகே உள்ள சாக்கடையில் கொட்டி விட்டு, அதே சட்டியை கழுவி, அதை வைத்தே குளிக்கணும். குளிக்க, வேறு சொம்பு கொடுக்க மாட்டார்கள்.
நாங்கள், குளிக்க வந்தவங்களை, தூரத்திலிருந்து பார்த்தோம். எதுவும் பேச முடியாது; சொல்ல முடியாது. அவங்களும் பேச முடியாது. மூன்று மாதம், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், 20 கி.மீ., நடந்து சென்று, அவங்களை தூரத்திலிருந்து பார்த்து விட்டு, திரும்பி வருவோம்.
"சிவகாசி கோர்ட்டில், மன்னிப்பு கேளுங்கள். உங்களை விடுதலை செய்து வெளியே அனுப்பிவிடுவர்...' என்று, போலீஸ் தரப்பில் கூறினர். அவர்கள் நான்கு பேரில், இரண்டு பேர் ஒத்துகிட்டு, மன்னிப்பு கேட்டனர். அவர்களை வெளியே விட்டு விட்டனர். ஆனால், என் கணவரும், ஆளவந்தாரும் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர். அவர்கள் இரண்டு பேருக்கும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோர்ட் உத்தரவிட்டது. அதுவும், தமிழகத்தில் இருக்கும் சிறையில் போடாமல், கர்நாடக மாநிலம், பெல்லாரி நகரத்தில் இருக்கும் ஜெயிலுக்கு அனுப்பினர்.
பெல்லாரி ஜெயிலில், என் கணவர் தினமும் பாரதியாரின் எழுச்சி மிகு பாடல்களை, இரைந்து பாடுவார். பிறருக்கும் சொல்லிக் கொடுப்பார். சுதந்திரம் பற்றிய நாடகங்கள் போடுவார். தடையை மீறி, பாரதியார் பாடல்களை பாடிய குற்றத்திற்காக, என் கணவருக்கு, நான்கு மாதங்கள், கூடுதலான சிறை தண்டனை கொடுத்தனர். அது மட்டுமல்ல, அவரது, கால் கைகளை சங்கிலியால் கட்டி, கம்பத்திலே கட்டினர். அவர், சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாதபடி, விலங்கும் போட்டனர்.
பெல்லாரி சிறைச்சாலையில், என் கணவர் இருந்த போது, மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. அதே பெல்லாரி சிறைச்சாலையில், ஒரு நாள் மட்டும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சிறையில் வைக்கப்பட்டார். என் கணவரின் முயற்சிகளையும், சுதந்திர தாகத்தையும் பாராட்டினார் நேதாஜி.
என் கணவருக்கு, நேதாஜியை சந்தித்தது மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த சந்திப்பை, "பெரிய பாக்கியம்' என, என் கணவர் கூறுவார். இரண்டு வருடம், நாலு மாதங்கள் கழித்து, என் கணவர் விடுதலை ஆகி, எங்க கிராமத்திற்கு திரும்பினார்.
ஏற்கனவே, இவர் எட்டாவது வகுப்பு (இ.எஸ்.எல்.சி.,) தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், போலீசார், இவரது சர்டிபிகேட்டை கிழித்து எறிந்து விட்டனர். எனவே, அவர் மீண்டும் பரிட்சை எழுதி, எட்டாவது பாஸ் செய்தார்.
எட்டாவது பாஸ் செய்த பிறகு, வடமலாபுரத்தில், இரண்டு மாதம் ஆசிரியர் பணிக்கான பயிற்சி பெற்றார். பின் ராஜபாளையம் அருகே, கம்மாபட்டி என்ற கிராமத்தில், உள்ள பள்ளியில் ஆசிரியராக பொறுப்பேற்றார். ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் அந்த பள்ளியில், மிகுந்த ஆர்வமாக பணிபுரிந்தார்.
சில மாதங்கள் சென்றவுடன், சிவகாசி அருகே திருத்தங்கல் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு, டிரான்ஸ்பர் கொடுத்தனர். பல ஆண்டுகள் அங்கு ஆசிரியராக, மன நிறைவுடன் பணிபுரிந்தார்.
ஆக., 15, 1947ல், இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியா முழுவதும் மக்கள், பெருமகிழ்ச்சியோடு கொண்டாடினர். ஆலமரத்துப்பட்டியில், 100 ஆண்டுகளுக்கு மேல், பழமையான, பெரிய அரச மரத்தின் உச்சியில், மூவர்ணக் கொடியை ஏற்றி, அனைவரும், "சல்யூட்' அடித்து மகிழ்ந்தனர்.
பள்ளி குழந்தைகளுக்கு, மிட்டாய்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. சிவகாசியில், மூவர்ண கொடியை பிரத்யேகமாக தைத்து வாங்கினர். இப்போதைய கொடியின் நடுவில் உள்ள அசோக சக்கரத்திற்குப் பதிலாக, கைராட்டை இடம் பெற்றிருந்தது.
சுதந்திரப் போராட்டத்தின் போது, சிறைக்குச் சென்ற தியாகிகளுக்கு 1971ல், இந்திய அரசாங்கம் தாமிர பட்டயம் வழங்கி கவுரவித்தது. அப்போது விருதுநகர், மதுரை மாவட்டத்தில் இருந்தது. மதுரை மாவட்ட கலெக்டர், எல்லா சுதந்திர போராட்ட தியாகிகளையும் மதுரைக்கு அழைத்து, விருது மற்றும் தாமிர பட்டயம் வழங்கி கவுரவித்தார். 1973ம் ஆண்டு தியாகிகளுக்கு, மாதம் 200 ருபாய் பென்ஷனும், தியாகி, மற்றும் அவருடன் உதவிக்கு ஒருவர் என, இருவருக்கு, இந்தியா முழுவதும், ரயிலில் இலவசமாக பயணம் செய்யும் வகையில், ரயில்வே பாஸ் வழங்கப்பட்டது.
- இப்படி தன் கணவரின் ”தந்திர போராட்ட தியாகங்களை கூறி முடித்தார் வேங்கடம்மாள்.
எத்தனையோ பேர், எவ்வளவோ கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை, அதன் மதிப்பு அறியாமல் குழித்தோண்டி புதைந்து வருகிறோமோ என்ற அச்சம் எழுகிறது.
***

* காலம் சென்ற சுதந்திர போராட்ட தியாகி, எஸ்.ஆர்.ராமசாமி - வேங்கடம்மாள் தம்பதியினருக்கு, ஐந்து பெண்கள்; மகன்கள் இல்லை. இந்திய நாட்டுக்கு, பெருமை சேர்த்த பெண்களின் பெயர்களையே, தங்கள் மகள்களுக்கு சூட்டினர்.
* கணவர் சுதந்திர போராட்ட தியாகி என்பதால், வேங்கடம்மாளுக்கு, குடும்ப பென்ஷனாக, அரசிடமிருந்து, மாதம் 16 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. தன் சொந்த செலவுக்கு என, ஒரு சிறு தொகையை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதி பென்ஷன் பணத்தை, ஐந்து பாகங்களாகப் பிரித்து, ஐந்து பெண்களுக்கும் கொடுத்து விடுகிறார்.
* இரண்டு ஆண்டுகளுக்கு மேல், தன் கணவர், பெல்லாரி ஜெயிலில் இருந்த போது,வேங்கடம்மாள், ஒரு முறை கூட அவரை, அங்கு சென்று பார்க்கவில்லை. நீண்டதொரு பிரிவை, அமைதியாக, கண்ணியமாக ஏற்றுக் கொண்டார்.
* தண்டியில் (தண்டி) காந்திஜி உப்பு சத்தியாக்கிரகத்தை, வெற்றிகரமாக முடித்து விட்டு, தமிழகத்துக்கு விஜயம் செய்த போது, காந்திஜி ராஜபாளையம், சிவகாசி நகரங்களுக்கு வந்து, பொதுக் கூட்டங்களில் பேசினார்.
***

எஸ். ரஜத்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
24-ஜன-201314:34:24 IST Report Abuse
G.Prabakaran இப்படிப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை பள்ளி பாட புத்தகங்களிலும் இடம் பெற செய்தால் தான் சுதந்திரம் அவ்வளவு சுலபமாக பெற வில்லை என இக்கால மாணவர்கள் அறிந்து அவர்கள் தேச பக்தி யும் நாட்டு பற்றும் மிக்கவர்களாக்கும். இக்கட்டுரையை படிக்கின்ற போதும் இந்த கருத்தினை பதிக்கின்ற போதும் கண்ணீர் விட்டவாறே பதித்தேன்.
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
21-ஜன-201304:04:13 IST Report Abuse
Rajesh தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நாம் இன்னும் மேல் நாட்டவர்க்கு அடிமையாகத்தான் இருக்கிறோம். மேல் நாட்டிலோ அவர்களின் இயற்கை வளங்களை பாதுகாக்கிறார்கள்,நாமோ ஏற்றுமதி என்ற பெயரில் நம் நாட்டு வளங்கள் அனைத்தையும் பாழ்செய்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
20-ஜன-201301:02:42 IST Report Abuse
GOWSALYA மிக மிக உண்மையே.....இப்படிச் சித்திரவதைப்பட்டுக் கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரம் இப்போ மறுபடியும் வெள்ளையன் காலில்....?.....அவனிடம் நம்மை ஒப்படைக்கவில்லை,ஆனால்,அவன் நாட்டுப்பாணியில் உடை நடை கலாச்சாரம் எல்லாம் நடக்கிறதே....அதேபோதுமே.....
Rate this:
Share this comment
Sornam Alagarsamy - Chennai,இந்தியா
20-ஜன-201310:43:46 IST Report Abuse
Sornam Alagarsamysir iam so happy to read about My Fatherinlaw late S.R.Ramasamy Naidu and his participation in Indias Freedom struggle. here i wish to thank shri SD Somasundram then Revenue minister in dr MGrs Cabinet for helping all political freedom fighters to get their pensions since all of them were suffering finacially.Smt Indiragandhi has granted this pension. Our family thanks Late SDS and DR MGR for their help. you see the pity congressmen did not help those days. S.A.alagarsamy Chennai...
Rate this:
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
23-ஜன-201302:09:33 IST Report Abuse
GOWSALYAஅழகர்சாமி ஐயா அவர்களே,நீங்க எழுதிய விளக்கத்துக்கு நன்றி,ஆனால்,அதை நம் அழகான தாய்மொழியாம் தமிழில் எழுதியிருக்கலாமே ஐயா?.....அப்போ ,நீங்களும் வெள்ளையனைத் தான் பின்பற்றுகிறீர்கள் ஐயா?இது தமிழ் பத்திரிகைதானே ஐயா? கோபம் கொள்ளாதீர்கள்?..நன்றி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.