ஊர்வலம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2013
00:00

தேசிய நெடுஞ்சாலை.
வள்ளியூர் அருகே இடதுபுறம் பிரிந்து, ஒரு தார்சாலை ஓடியது. சாலையின் முடிவில் திருவெற்றியூர் எனும் சின்ன கிராமம். கிராமங்களின் இலக்கணம் அத்தனையும் அங்கே இருந்தது. மோசமான புழுதி பறக்கும் சாலை, காரை பெயர்ந்த வீடுகள், கொஞ்சம் கால்நடைகள், கோவில், மசூதி, சர்ச், வழிபட கொஞ்சம் மனிதர்கள், ஒழுங்கற்ற ஐந்து தெருக்கள், ஊர்க்கோடியில் மரபெஞ்சுடன ஒரு டீக்கடை என எல்லாம் இருந்தன. இருள் விலகும் அதிகாலையில், கிராமத்தின் அமைதியைக் கிழித்துக் கொண்டு, இரண்டு காவலர் வேன்கள் வந்தன. அதிலிருந்து தபதபவென இறங்கிய காவலர்கள், அடிக்கொருவராய் கிராமத்தை சூழ்ந்து நின்றனர்.
காதர்பாய் எழுந்து, கலர் லுங்கியும், முழங்கால் தொடும் ஜிப்பாவும் அணிந்தார். தலையில் நைலான் தொப்பியும், மேலே தலைப்பாகையும் அணிந்தார். செருப்பணிந்து வீட்டை விட்டு இறங்க... காவலர் படை, கண்ணில் பட்டது. "என்ன இது அதிசயமாய்!' உள்ளுக்குள் லேசாக பயம் எட்டிப் பார்த்தது. வெளிக்காட்டாமல் நடையை எட்டிப் போட்டார்.
ராமசாமி வீடு வந்ததும் வாசல் அருகே நின்று, ""ஏய் ராமசாமி...'' எனக் குரல் கொடுத்தார்.
""இதோ வந்துடுறேன்...'' ராமசாமியின் பதில் உள்ளிருந்து கேட்டது. இஸ்லாமிய கோலத்தில், ஒருவர் ராமசாமியை அழைப்பதை, காவலர் பட்டாளம் கவனித்துக் கொண்டிருந்தது.
அறுபத்தைந்து வயது ராமசாமியும், 60 வயதாகும் காதரும் பால்ய நண்பர்கள். ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே படித்து, ஆளுக்கொரு துறையில் இருந்தாலும், இருவரின் சிநேகிதம் கூடிக் கொண்டு தான் இருந்தது. அதிகாலை நாலரைக்கே எழுந்து, ராமசாமியை அழைத்து போய், வரப்போரம் ஒதுங்கி, காலைக்கடன்கள் கழித்துவிட்டு, முனிஸ்வரன் கடையில் டீ குடித்துவிட்டு, காதர், பள்ளிவாசல் போவதும், ராமசாமி, பால்பண்ணைக்குப் போவதும், 40 வருட வாடிக்கை.
இரு சமூகங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் பனிப்போரை அறியாமல், ராமசாமிக்காக காத்திருந்தார் காதர்.
அரைக்கை பனியனும், கலர் லுங்கியுமாய் வந்த ராமசாமி, ""என்னய்யா இவ்வளவு கூட்டம் இங்கே?'' என்றார், காவலர்களைப் பார்த்துக் கொண்டே.
""அதுதான் தெரியல... வா விசாரிக்கலாம்.''
""யாருக்கிட்டே கேட்கலாம்?''
""டீ கடைல கேட்டிருவோம்...''
இருவரும் நடந்து ஊருக்கு ஓரமாய் ஒதுங்கி, இயற்கை உபாதையை கழித்துவிட்டு, ஊருக்குள் இருந்த ஒரேயொரு டீ கடைக்கு வந்தனர்.
""ஏய் முனி... ரெண்டு டீ போடு. ஆமா... என்ன இவ்வளவு போலீஸ் நிக்குது?'' விசாரித்தார் ராமசாமி.
""அதுவா... விநாயகர் சதுர்த்தி வருதில்ல. அன்னிக்கு நம்ம சாயபுமார்களும் ஊர்வலம் போறாங்களாம். அதனால, ரெண்டு பக்கமும் பிரச்னை வந்திடக் கூடாதுன்னு பாதுகாப்பு போட்டிருக்காங்களாம்,'' என்று கூறினான் முனி என்ற முனிஸ்வரன்.
""என்ன... சாயபுமார்கள் ஊர்வலம் போறாங்களா?''
""ஏம்ப்பா காதர், என்ன ஊர்வலம்?''
""தெரியலியே... இப்ப முனி சொல்லித்தான் எனக்கே தெரியுது.''
""ஆனா... இது ரெண்டு பக்க மக்களுக்கும் நல்லதில்லையே.''
""ஆமா... அதைத்தான் நானும் யோசிக்கிறேன்.''
""சரி... டீயைக் குடி... அப்புறம் பார்க்கலாம்.''
இருவரும் டீ குடித்து, முனியிடம் காசு தந்து, கலைந்தனர்.
""என்ன காதர், ஊர்வலத்தைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?''
""ஆமா... இந்த வாலிபப் புள்ளைங்க, புதுசா ஏதோ ஏற்பாடு செய்றாங்களாம்.''
""வேற ஒருநாள் வச்சுக்கிட்டா என்ன?''
""வைக்கலாம். ஆனா, விநாயகர் சதுர்த்திய மாத்தினா என்னன்னு கேட்கிறாங்கப்பா.''
""அதெப்படி, காலங்காலமா நடக்கிறத எப்படி மாத்துறது?''
""இதுவும் அப்படித்தானே!''
""ஊர்வலம் புதுசு தானே!''
""ஆமா... ஆனா, இந்த பசங்க பிடிவாதமா இருக்கிறாங்களே!''
""யாரும் எதுவும் நடத்தட்டும். பிரச்னை வராம இருந்தா சரிதான்,'' ராமசாமி பொதுவாய் சொன்னார்.
காளி கோவிலின் பின்னே அரசமரத்தடி—
ஊர் மக்கள் கூடி இருந்தனர். நடுவில் இருந்தார் நாட்டாமை வேலு. பார்வையால், "என்ன?' என்றார். துரைசிங்கம் முன் வந்தான்.
""எல்லாருக்கும் வணக்கமுங்க. விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு, நம்ம ஊரு சாயபுமார்களும் ஊர்வலம் வர்றாங்க. அதுக்காக, சென்னையிலிருந்து அவுங்க பக்கத்து ஜனங்கள கூட்டியாறாங்க. நம்ம ஜனங்களுக்கு பாதுகாப்பு வேணுமுங்க. அதுக்காக, வெளியூர்ல இருக்கிற, நம்ம ஜாதி ஜனங்கள கூப்பிட, ஊர் அனுமதி வேணுமுங்கோ.''
""நம்ம சாயபுமார்களால என்ன பிரச்னை வந்திடப் போகுது?''
""நம்மளப் புரியாத ஜனங்க வெளியூர்லயிருந்து வர்றாங்க. இங்க நாம அண்ணன், தம்பியா இருக்கிறது, அவுங்களுக்குத் தெரியாது. எதுனா பிரச்னை வரலாமுங்க.''
""சரி... நம்ம ஜனங்க பாதுகாப்புக்காக, 200 பேரை கூட்டிவர, இந்த பஞ்சாயத்து அனுமதிக்குது. நான் உத்தரவு வாங்கிக்கறேன்,'' தீர்ப்பை அறிவித்து விட்டு எழுந்து சென்றார் நாட்டாமை வேலு.
சென்னை —
இஸ்லாமியர் இளைஞர் இயக்க அலுவலகம்.
நிர்வாகிகள் கூடியிருந்தனர்.
""ஊர்வலத்துக்கு பர்மிஷன் கிடைச்சுதா?''
""ரொம்ப கஷ்டப்பட்டு தான் வாங்க முடிஞ்சது.''
""ஏன்?''
""அதே தினத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் இருக்கு.''
""அவங்க தான் வருடா வருடம் நடத்துறாங்களே. நாம இப்பத்தானே புதுசா நடத்தப் போறோம்.''
""அதைச் சொல்லித் தான் வாங்கியிருக்கிறோம்.''
""அவங்க ஊர்வலம் எப்போ?''
""மாலை 3:00 முதல் 4:00 மணி வரை.''
""நமக்கு...''
""மாலை 4:00 முதல் 5:00 மணி வரை.''
""சரி எதுக்கும் இளைஞர் மன்றத்திலேர்ந்து ஒரு, 500 பேரை ரெடி பண்ணுங்க.''
சென்னையில் உள்ள இயக்கத் தலைவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார் காதர்.
""நான் ஊர்லயிருந்து காதர் பேசுறேன்.''
""சொல்லுங்க மாமு, நான் ஜாபிர்.''
""யாரைக் கேட்டு ஊர்வலத்துக்கு முடிவு பண்ணுனீங்க?''
""மன்றப் புள்ளைங்க விருப்பப்பட்டாங்க.''
""ஊர்ல எங்கள கேட்க வேணாமா?''
""நல்ல விஷயம் தானே!''
""நல்ல விஷயம் தான். நம்ம ஊருக்கு நல்ல விஷயமான்னு ஊர்லயிருக்கிற நாங்க தானே சொல்லணும்.''
""என்ன சொல்றீங்க மாமு!''
""தாயா புள்ளயா பழகிக் கிடக்கிற ரெண்டு பக்கச் ஜனங்களும், இந்த ஊர்வலத்தால பிரிஞ்சுடுவாங்களோன்னு பயப்படுறோம்.''
""ஏன் மாமு?''
""ஊர்ல இப்பவே அதிரடிப்படையை கொண்டு வந்து இறக்கியாச்சு, இந்து சகோதரர்கள், அவங்க பாதுகாப்புக்கு பக்கத்து கிராமங்களிலேர்ந்து ஆட்கள கூப்பிட போறாங்க, நீங்க வேற, உங்க மன்றத்துப் பசங்கள திரட்டுறதா கேள்விப்பட்டேன்.''
""ஊர்வலத்துக்குத் தானே!''
""முதல்ல ஊர்வலம். அதுல பிரச்னையாச்சுன்னா கலவரம்.''
""அப்படி எல்லாம் ஒண்ணும் வராது.''
""உன்னால உறுதி தர முடியுமா?''
""அதெப்படி?''
""அப்ப... இது வேணாம்.''
""எது?''
""இந்த ஊர்வலம்!''
""அது நம்மளோட கவுரவ பிரச்னை.''
""ஒரு மண்ணும் இல்லே.''
""ரொம்ப கஷ்டப்பட்டு அனுமதி வாங்கியிருக்கிறோம்.''
""அதை விட கூடுதலா கஷ்டப்பட்டு இதை நிறுத்தணும்.''
""மன்றத்துப் பிள்ளைங்க ஒத்துப்பாங்களான்னு தெரியலியே.''
""அதை அப்புறம் பார்க்கலாம். முதல்ல சென்னையில் உள்ள தலைமை இமாம் கிட்ட பேச ஏற்பாடு செய்.''
""இதோ ஐந்து நிமிடத்தில ஏற்பாடு செய்திடுறேன்.''
ஐந்து நிமிடம் கடந்த பின்...
""மாமு, இமாம் லைனில் இருக்கிறாங்க... பேசுங்க.''
""அஸ்லாமு அலைக்கும்!''
""வஅலைக்கும் முஸ்ஸலாம். என்ன விஷயம்?''
""ஊர்வலத்துல மார்க்கத்து அனுமதியிருக்கா?''
""நம்ம நாட்டில ஒற்றுமையைக் காட்டறதுக்காகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊர்வலம் போறது வழக்கம் தானே... இதை மார்க்க அடிப்படையில் ஏன் பார்க்கணும்?''
""நபி பிறந்த நாளுக்காக ஊர்வலம் போலாமா?''
""நபி பிறந்த நாளை, நபி விரும்புற மாதிரி தான் கொண்டாடணும்.''
""ஆனா, மிலாது விழாவில் ஊர்வலம் ஏற்பாடு பண்றாங்களே!''
""அது நம்ம சமுகத்தோட ஒற்றுமையைக் காட்டறதுக்காக இருக்கலாமில்லையா?''
""அதிலே பிரச்னை வந்திச்சின்னா?''
""என்ன சொல்றீங்க?''
""ஊர்வலத்தினாலே ஒற்றுமையா இருந்த இரண்டு சமூகம் ரெண்டு பட்டா தப்பில்லையா?''
""தப்பு தான்... விளக்கமா சொல்லுங்க.''
""பிரச்னையை உருவாக்குறது நபி வழியில்லை. பிரச்னையை தீர்க்கறது தான் நபி வழி.''
""சரி நம்ம ஒற்றுமையைக் காட்ட வேற வழி இருக்கா?''
""ஏன் இல்ல!''
""அது என்ன வழி?''
""பெருநாள் தொழுகையை, ஈத்கா திடல்ல நடத்துவோம். அதுக்கு ஒரு வழியா போயி, இன்னொரு வழியா திரும்பறது போதும். போகும் போதும் வரும் போதும் இறைவனைப் புகழ்ந்து தக்பீர் சொல்வது. இப்படி செஞ்சா நபிவழியை பின்பற்றியது மாதிரியும் இருக்கும். இயல்பா, ஒற்றுமையை காட்டுற ஊர்வலம் மாதிரியும் அமையும்.''
""ரொம்ப நன்றி. போனை ஜாபிர்கிட்டே தாங்க.''
""இதோ.''
""என்னப்பா கேட்டியா?''
""கேட்டேன் மாமு.''
""உடனே ஊர்வலத்தை கேன்சல் பண்ணு. இங்க ஸ்டேஷன்ல நான் தகவல் சொல்லிக்கிறேன். நாம ஊர்வலத்தை பெருநாள் அன்னிக்கு வச்சுக்கலாம்.''
""சரிங்க மாமு...''
பரபரப்பாய் செயல்பட்டார் காதர். முதலில் காவல் நிலையத்திற்கு சென்று ஊர்வலம் நடத்தப் போவதில்லை என்றார். அவர்கள் நம்பிக்கை கொள்ளாமல், அதிரடிப் படை, விழா முடியும் வரை இருக்கும் என்றனர். ராமசாமியை அழைத்து போய், இந்து சகோதரர்களிடம் பேசினார். அவர்கள் நம்பினாலும், உள்ளுக்குள் லேசான பயம் இருந்தது. பக்கத்து கிராம ஜனங்களை வேண்டாம் என மறுக்கவில்லை.
திருவெற்றியூர் விநாயகர் சதுர்த்தி விழா அஞ்சு கிராம மக்களின் ஊர்வலத்தோடு அமைதியாய் முடிந்தது. முஸ்லீம் ஜமா அத் சார்பில், ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஊர் தலைவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதிரடிப்படைக்கு வேலையின்றி முடிந்தது.
இரண்டு மாதம் சென்ற பின், பெருநாள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இமாமுக்கும், தலைவருக்கும் இந்து சமூகம் சார்பாக ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது. பரஸ்பரம் இனிப்பையும், அன்பையும் பரிமாறிக் கொண்டனர்.
துவக்கப்பள்ளி ஆண்டுவிழா —
மாறுவேடப் போட்டியில் அரவிந்தும், ஸ்டீபனும், ஒரு கிராமத்து டீ கடையை உருவாக்கியிருந்தனர். நீள மர பென்ச் இருந்தது. ""ரெண்டு டீ போடு,'' காதர் வேடத்தில் இருந்த அரவிந்த் சொல்ல, ராமசாமி வேடத்தில் இருந்த ஸ்டீபன் சிரித்துக் கொண்டே வந்து அமர்ந்தான். மேடையில் மட்டுமல்ல, முழு இந்தியாவிலும் இவர்கள் வேண்டும் என பார்வையாளர்கள் பிரார்த்தித்தனர்.
***

எம்.ஏ.ஷாஹூல் ஹமீது ஜலாலீ

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sadhanandan palani - Sharjah,கனடா
22-ஜன-201308:50:12 IST Report Abuse
sadhanandan palani கதையை படிக்கும் போது கண்ணீர் வந்தது என் நண்பர்களை நினைத்து. கடந்த பத்து அல்லது பதினைந்து வருடத்தில் தான் இந்த பிரச்சினை. மாற்றி மாற்றி குறை சொல்லாமல் நம்மை நாமே திருத்திக்கொள்வோம்.
Rate this:
Share this comment
Cancel
Abdul Rahim Khan - Riyadh,சவுதி அரேபியா
21-ஜன-201319:45:03 IST Report Abuse
Abdul Rahim Khan எங்கள் ஊரில் நடைமுறையில் இருந்த இந்த வழக்கம், ஊர் பெரியவர்களின் மறைவுக்கு பின் மற்றும் இளைஞர்களின் தலைஎடுப்பால் மாறிவிட்டது. இன்னும் மனம் ஏங்குகிறது இப்படிப்பட்ட சூழ்நிலை எப்போது திரும்பும் என்று. இறைவா ஒற்றுமைக்கு உதவி செய்வாயாக...
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
20-ஜன-201314:36:33 IST Report Abuse
anandhaprasadh அருமையான கதை நண்பரே... பள்ளிப்பருவத்திலிருந்தே எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் பலர் உண்டு... இன்றுவரை எங்களுக்குள் மத சம்பந்தப்பட்ட விவாதங்களோ, யார் மதம் பெரிது என்ற சர்ச்சைகளோ வந்ததில்லை... எல்லாவற்றுக்கும் மேல் அவர்கள் இந்தியாவை விட்டுக்கொடுத்து நான் பார்த்ததே இல்லை.. அது கார்கில் போராக இருந்தாலும் சரி, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆனாலும் சரி... ஆங்கிலேயர்கள் ஆரம்பித்து வைத்த மதத்தின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சியின் அவலம் இன்று மற்ற அந்நிய சக்திகள் மூலம் தொடர்கிறது... அப்பாவி இந்திய இளைஞர்களை அவர்களின் வறுமையைக காரணம் காட்டி, மூளைச்சலவை செய்து, பணம், பதவி முதலியவை அளித்து இந்தியாவிற்குள் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.... மதத்தலைவர்கள் வழிகாட்டிகளாக இருந்து இந்தப்பிரிவினை சக்திகளின் ஆதிக்கத்தை அறுத்தெறிய வேண்டும்... "இந்தியா ஒன்றே... நான் இந்தியன்.. அப்புறம் தான் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் எல்லாம்...நாங்கள் போகும் பாதைதான் வேறே ஒழிய நாங்கள் போய் சேருமிடம் ஒன்றுதான்... மதங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் எங்கள் மனங்களில் வேறுபாடு இல்லை" என்ற இந்த சிந்தனை அனைவருக்கும் வர ஆண்டவா... அருள்புரி... மத ஒற்றுமையை இந்தக்கதை மூலம் வலியுறுத்திய சகோதரருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி...
Rate this:
Share this comment
Cancel
ramesh - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
20-ஜன-201314:17:04 IST Report Abuse
ramesh அருமையான கதை.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
20-ஜன-201300:51:46 IST Report Abuse
GOWSALYA சகோதரே உங்க கதை பிரமாதம்.ஆனால், ஒருசிறு கேள்வி....இப்படியான ஒற்றுமை,ஜாதிமத ஒழிப்பு நம்நாட்டில் எப்போ வரும்?...நிச்சயம் வருமா?...நான் வாழும் இந்தச் சிறு காலத்துக்குள் இந்த ஒற்றுமையைப் பார்க்கணும்.இறைவன் கருணை.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.