சுவாமி விவேகானந்தர், தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும், அவரைத் தரிசிக்கவும், அவருடன் பேசவும், ஆசி பெறவும் பெரிய நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை ஒரு சேர ஆவலுடன் அவரை எதிர்பார்த்தவாறு இருந்தனர்.
தம்முடைய ஊருக்கு அவர் எப்போது வரப் போகிறாரோ என்று ஒவ்வொருவரும் காத்திருந்தனர். செங்கல்பட்டுக்கு முன்பாக, அப்போது ஒரு சிறிய குக்கிராமம் இருந்தது. அந்தக் குக்கிராமத்து மக்கள் விவேகானந்தரை தரிசிக்க, ஆவலுடன் இருந்தனர். ஆகையால், அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அருகில் உள்ள ஒரு சின்ன ஸ்டேஷனை அடைந்து ரயில் வருவதற்காகக் காத்திருந்தனர். ஆனால், அங்கே சென்றவுடன் தான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.
சுவாமிஜி வரும் ரயில் இன்னும் பத்து நிமிடங்களில் வந்து விடும். ஆனால், யாரும் சுவாமிஜியைத் தரிசிக்க முடியாது. காரணம், அந்தக் குக்கிராம ஸ்டேஷனில் ரயில் நிற்காது. அது மெயின் ஜங்ஷனில்தான் நிற்கும் என்ற தகவலே அது.
அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்தில் உள்ள செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு உடனடியாகக் கிளம்பிச் செல்லவும் முடியாது. என்ன செய்யலாம்? அவர்கள் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இங்கே ரயிலை நிறுத்தும்படி மன்றாடினர்.
"அது வரம்பு மீறிய செயல். அவ்வாறு செய்யத் தனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை' என்று அவர் மறுத்து விட்டார்.
இந்த நேரத்தில் வெகு தூரத்தில் ரயில் வரக்கூடிய ஓசை கேட்டது. இனியும் இந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் கெஞ்சுவதில் அர்த்தமில்லை. என்று கருதிய மக்கள் விறுவிறுவென தண்ட வாளத்தில் குதித்து விட்டனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாகத் தண்டவாளத்தில் தலை வைத்துப்படுத்து விட்டனர். ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது.
ஸ்டேஷன் மாஸ்டருக்கு நிலைமையின் விபரீதம் புரிந்து விட்டது. இனிதான் சும்மா இருப்பதில் அர்த்தமில்லை என்று கருதிய அவர், மிக வேகமாக அவர்களைக் கடந்து ஓடிச் சென்று சிவப்புக் கொடியை ஆட்டினார். ரயில் மெல்ல மெல்ல வேகம் குறைந்து நின்று போயிற்று.
ரயில் நின்றவுடன் மக்களின் கூட்டம் சுவாமிஜி இருக்கும் பெட்டியைச் சூழ்ந்து கொண்டது. சிலர் காலில் விழுந்தனர்; சிலர் கைகளைப் பிடித்துக் கொண்டனர்; சிலர் உணர்ச்சி வசப்பட்டு அழுதனர்; செய்தி சுவாமிஜியை எட்டியவுடன், மக்கள் தம் மேல் கொண்டிருந்த பேரபிமானத்தைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தார்.
எல்லாருக்கும் ஆசி வழங்கினார். மகான் ஒருவரின் தரிசனத்துக்காக ஓடும் ரயிலை நிறுத்தத் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து கொண்ட மக்களின் செயல், தமிழ்நாட்டில் ஆன்மிக வாழ்வில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.