சையது பாட்சா — மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர், 69 வயதான இந்த, "இளைஞர்' 35 ஆண்டுகளாக, தான் சேகரித்து வைத்துள்ள பழைய, புதிய நாணயங்களை, இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், இலவச கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.
தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கைவினைஞராக பணியாற்றிய இவருக்கு, நாணய சேகரிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. இவரது சேகரிப்பில், 1734 முதல் 1956 வரை வெளியிடப்பட்ட இந்திய நாணயங்கள், சுதந்திரத்திற்கு பின், வெளியிடப்பட்ட நாணயங்கள் அனைத்தும் உள்ளன.
"கடந்த 1808ல், இரண்டு சிங்கங்கள் இருபுறமும் நின்ற கோலத்தில் பொறிக்கப் பட்ட, கிழக்கிந்திய கம்பெனி நாணயம், அரசர் காலத்து அம்மன் கா”, போர்ச்சுகீசிய மன்னர், திருவாங்கூர் ராமவர்ம மகாராஜா, திப்புசுல்தான் போன்றவர்களின் காலத்து நாணயங்களை பாதுகாத்து வருகிறேன்.
"இதுதவிர, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரபலங்களின் உருவங்கள் பொறித்த நாணயங்களும் என்னிடம் உள்ளன. மேலும், முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் சில அபூர்வ நாணயங்களும் உள்ளன. 1969ல், வெளியிடப்பட்ட தாமரை, 1973ல் உணவு உற்பத்தி, 1974ல் திட்டமிட்ட குடும்பம், 1977ல் உணவு அபிவிருத்தி, 1972ல் இந்தியா சுதந்திரம் அடைந்த வெள்ளி விழா ஆண்டு, 1980ல் பெண்கள் வளம், 1982ல் உலக உணவு நாள், 2003ல் இந்திய ரயில்வேயின், 150வது ஆண்டு என, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெளியிடப்பட்ட நாணயங்களை சேகரித்து வைத்திருக்கிறேன்...' என்கிறார் சையது பாட்சா.
நாணயங்கள் மட்டுமில்லாது, தபால் தலைகளையும் சேகரித்து வருகிறார். அதை வைத்து, தென்மாவட்டங்களில், இலவச கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இவரது சேவையை பாராட்டி, தபால் தலை - நாணயங்கள் சேகரிப்பிற்காக, தங்க நட்சத்திர விருது இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. தவிர, இலங்கை கொழும்பு, திறந்த நிலை சர்வதேச பல்கலை கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
"இந்த விருதுக்கு முக்கியம், தேடுதல்தான். என்னிடம், 1909 முதல் சேகரிக்கப்பட்ட, 75 நாடுகளின் நாணயங்கள் உள்ளன. இதில், அபூர்வ நாணயங்களும் உண்டு. குறிப்பாக, 1919ல், ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் நாணயம், 1942ல், ஆறாவது ஜார்ஜ் மன்னன் நாணயம், சவுதி அரேபியா நாட்டின் அரபிக் மொழி எழுத்து பொறிக்கப்பட்ட மத்லா பள்ளிவாசல் உள்ள வெள்ளி நாணயம், 1998ல், இலங்கை சுதந்திர 50வது ஆண்டு விழா நாணயம் போன்றவற்றை பாதுகாத்து வருகிறேன்.
"வெறும் பொழுது போக்கிற்காக நாணய சேகரிப்பில் ஈடுபடவில்லை. மக்கள் தொடர்பு சாதனமாக இருக்கக்கூடிய இந்த நாணயங்கள் மூலம், ஒரு நாட்டின் வரலாற்றை, நிகழ்வுகளை, இளைய தலைமுறையினர் நினைவில் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே, இந்த வயதிலும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
"ஜாதி, மதம், இனம் கடந்து, அனைவரும் இந்தியர் என்ற உணர்வுடன், ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் நாட்டுப் பற்று உடையவராக வாழ்கிறோம். அந்த வகையில், நாணயம், தபால் தலை சேகரிப்பில், என் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், என் மகனை இந்திய ராணுவத்தில் சேர்த்து, நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளேன்...' என்று பெருமிதத்தோடு பேசுகிறார் சையது பாட்சா.
இவரை வாழ்த்த விரும்புபவர்கள்: 98420 59865 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.
***
கே. ராம்குமார்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.