திருவள்ளுவரும், உள்ளூர் தாதாவும்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2013
00:00

""இந்த வருடம் ஆண்டு விழாவுல, அண்ணன் கருணாகரனை சிறப்பிக்கணும் பெரியவரே,'' என்றான், அந்த அடியாள். அவனோடு ஆட்டோவில், இன்னும் சிலரும் வந்திருந்தனர். எல்லாருமே அடிதடி பேர்வழிகள்.
அவர்களை அறிவார் பார்த்தசாரதி. அதே தெருவில், அவர்கள் சிறு வயதிலிருந்தே அலம்பல் பண்ணித் திரிந்தவர்கள். சிறுவர்களாய் இருந்தபோது, பார்த்தசாரதியை பார்த்தால் மட்டும், "வாத்யார்டா' என்று ஒதுங்கிப் போவர். போகப் போக, அந்த பயம் விட்டு போய், எல்லாரையும் போல அவரையும் கலாய்த்தனர்.
சில நேரம் பொறுமையாலும், சில நேரம் கடுமையான பார்வையாலும், அவர்களை விரட்டிக் கொண்டிருந்தார். இடையில் கொஞ்ச காலம் காணாமல் இருந்து, மீண்டும் ஏரியாவில் வலுவாகத் தலை தூக்கியிருக்கின்றனர். அதற்கு காரணம் கருணாகரன்.
""திருக்குறள் மன்றத்துக்கும், உங்கள் அண்ணனுக்கும் என்ன சம்பந்தம்? தவிர, எங்கள் விழாவில் அரசியல்வாதிகள் யாரையும் அழைக்கிறதும் இல்லை. இது, படிச்சவங்க, பண்புள்ளவங்க கலந்துக்கிற விழா,'' என்றார் பார்த்தசாரதி.
""ரொம்ப பேசுற பெரிசு. இந்த முறை அண்ணனை கூப்பிடாம, எப்படி விழா நடத்திடறேன்னு பார்க்கறேன்,'' என்று, பயமுறுத்திவிட்டு சென்றனர்.
நடந்த விஷயத்தை, திருக்குறள் மன்ற உறுப்பினர்களிடம் கூறினார் பார்த்தசாரதி.
""அவங்களை சும்மாவா விட்டீங்க. உடனே போலீஸ்ல சொல்லியிருக்கலாமே!''
"இப்ப மட்டும் என்ன கெட்டுப் போச்சு. இன்ஸ்பெக்டர் தெரிஞ்சவர் தான். ஒரு போன் போட்டால், அவங்களை வந்து அள்ளிக்கிட்டு போய்டுவாங்க' என்றெல்லாம் உறுப்பினர்கள் ஆவேசப்பட்டனர்.
யோசித்தார் பார்த்தசாரதி. ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றபின், எஞ்சிய நாட்களை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று, தீர்மானித்து, தனக்கு மிகப் பிரியமான திருக்குறளை கையில் எடுத்தார். நண்பர்கள் சிலருடன் மன்றத்தை துவக்கினார். மன்றத்தின் சார்பில், வாரந்தோறும் வகுப்பு நடத்துவது, மாதம் ஒரு முறை பேராசிரியர்கள், பிரபலங்களை அழைத்து, குறள் குறித்து பேச வைப்பது, ஆண்டு நிறைவில் விமரிசையாக விழா நடத்துவது என்று, கைக் காசைப் போட்டும், நன்கொடைகள் வசூலித்தும் நடத்திக் கொண்டிருந்தார்.
கட்டுக்கோப்பாக இயங்கியது மன்றம். நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தன.
ஆரம்ப காலங்களில், மன்றம் நடத்த நிறைய எதிர்ப்பு.
"என்ன... மன்றம் நடத்தி, பெரிய ஆளாயிடலாம்ன்னு நினைப்பா. நடத்திடுவியா நீ. ரிடையராய்ட்டா எங்காவது ஓட்டல்ல கணக்கெழுதப் போக வேண்டியது தானே. மன்றம் ஆரம்பிச்சு ஆள் சேர்க்கற...' என்று, போனில் பேர் சொல்லாத அனாமத்து கால்கள் வரும்.
எதையும் பொருட்படுத்தாமல், கடமையாற்றி கொண்டிருந்தார் பார்த்தசாரதி. இந்த பத்து வருடத்தில், மன்றம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சாதித்திருக்கிறது.
மன்றத்தின் செயல் குறித்து, பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி, "டிவி'க்களில் கூட பேட்டி கண்டிருக்கின்றனர்.
பார்த்தசாரதி என்பதை விட, "திருக்குறள் சாரதி' என்றே, அவரை அழைத்தனர் மக்கள். சுமூகமாக போய்க் கொண்டிருந்த மன்ற நிகழ்ச்சிக்கு, இப்போது இரண்டு, வருடங்களாகத்தான், கருணாகரன் அண்ட் கோவின் நச்சரிப்பால் தொந்தரவு ஏற்பட்டுள்ளது.
கருணாகரன் பிழைப்பு தேடி வந்தவன். பிளாட்பாரங்களில் படுத்துக் கிடந்தவன். ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் கிடந்தவன். பார்த்தசாரதியே, அவனுக்கு பல சமயம் சாப்பாடு வாங்கி கொடுத்து உதவியிருக்கிறார். ஒரு இடத்திலும் வேலைக்கு சிபாரிசித்தார். அவன், அங்கு நீடிக்கவில்லை.
கொஞ்ச காலம் காணாமல் போயிருந்தவன், திடீரென்று ஒரு நாள் ரவுடியாக ஏரியாவில் வலம் வரத் துவங்கினான். கத்தியும், கையுமாக அலைந்தான். கடைக்காரர்களை மிரட்டி, மாமூல் வாங்கினான். அவனது அடாவடித்தனம் படிப்படியாக வளர்ந்து, கட்டை பஞ்சாயத்து, ஆள் கடத்தல்களில் இறங்கி, பல கேஸ்களில் ஜெயிலுக்கு போய் வந்து... என்று, அவனை பற்றிய செய்திகள் ஏரியாவில் வழிந்து கொண்டே இருக்கும். சமீபத்தில், பெரிய அளவில் கூட்டத்தை திரட்டிக்கொண்டு போய், அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து, கட்சியில் பதவியும் பெற்று விட்டான்.
சொல்ல வேண்டுமா... ஏரியாவில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அவன் தலைமையில் தான் என்பது வாய்வழி சுற்றறிக்கையாய் வலம் வந்து கொண்டிருந்தது.
இந்த பக்கம் வர மாட்டான் என்று தான் நினைத்திருந்தார். சென்ற வருடம் ஆள் அனுப்பியிருந்தான். பக்குவமாக சொல்லி அனுப்பி விட்டார். இந்த வருடம், கொஞ்சம் அழுத்தமாகவே ஆட்கள் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறான்.
""யோசிக்க என்ன இருக்கு சாரதி. அவன் ஒண்ணாம் நம்பர் போக்கிரி. அவன் மிரட்டலுக்கு பயந்து கூப்பிட்டால், இதுவரை கட்டிக் காப்பாத்தின மன்றத்துக்கு, நல்ல பேர் போய்டும். அப்புறம், தனித்துவம் இல்லாமல், பத்தோடு பதினொன்னா மாறிடும்.''
"விழா அன்றைக்கு கலாட்டா பண்ணுவான்னு கவலையா? விடுங்க. போலீஸ் பாதுகாப்பு கேட்போம்' என்றெல்லாம் அபிப்ராயங்கள் வந்து விழுந்தன.
நீண்ட யோசனைக்கு பின், ""விழாத் தலைமைக்கு கருணாகரனைக் கூப்பிடுவோம்,'' என்றார் பார்த்தசாரதி.
"உனக்கென்ன பைத்தியமா?' என்றவர்கள், அவரது உறுதியான பதிலைக் கேட்டு அமைதியாயினர்.
கருணாகரனுக்குத் தகவலும் அனுப்பியாகி விட்டது. "விழா தலைமை அணணன் தான்!' என்ற செய்தியை, அவனது ஆட்கள் கொண்டாடி, பறையடித்தனர். கருணாகரனுக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகம் தான், "எப்படி சம்மதித்தனர்?' என்று.
விழாவுக்கு ஒரு வாரம் முன், மன்றத்தின் சார்பில் ஒருவர் வந்து, கருணாகரனுக்கு நிகழ்ச்சிகளை விவரித்தார்.
""ஐந்து மணிக்கு விழா தொடக்கம். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து. அடுத்து வரவேற்புரை. பின், மாணவ, மாணவியர் குறள் ஒப்பிக்கும் நிகழ்ச்சி. அச்சிறுவர்களுக்கு பரிசளிப்பு. பின், நீங்கள் பத்து நிமிடம் தலைமை உரை ஆற்றுகிறீர்கள். தொடர்ந்து, மற்ற நிகழ்ச்சிகள் நடக்கும். எட்டரைக்கு விழா முடியும். மன்றத்தின் சார்பில் அழைப்பிதழ், விளம்பர நோட்டீஸ் ரெடியாகும். நீங்கள் தனிப்பட்ட முறையில் போஸ்டர், பேனர், கட்- அவுட் வச்சுக்கலாம். மன்றத்தின் சார்பாக சால்வை போர்த்தி, நினைவுப் பரிசு கொடுத்து கவுரவிப்போம். கூட்டத்திற்கு, மேடையில் வைத்து உங்களை எப்படி அறிமுகப் படுத்தணும்ன்னு நீங்கள், ஒரு தாளில் எழுதி கொடுத்திடுங்க. நாங்கள் அதை அப்படியே வாசிக்கிறோம். தலைமை உரையையும் தயார் செய்துக்குங்க. உங்களைப் பத்திய அறிமுக உரையிலும், தலைமை உரையிலும், அரசியல் இல்லாமல் பார்த்துக்குங்க,'' என்று, சொல்லி போனார்.
கருணாகரன், பத்து சிகரட்டாவது ஊதித் தள்ளியிருப்பான். தலைமை உரையை, ஒரு தமிழாசிரியரை பிடித்து எழுதி வாங்கி விட்டான். குறளின் மேன்மை, வள்ளுவரின் பெருமை, அமைப்பை நடத்துகிறவர்களுக்கு பாராட்டு, பரிசு பெற்ற குழந்தைகளுக்கு சில வார்த்தைகள். இடையில் திருவள்ளுவரையும், தன் தலைவரையும் ஒப்பிட்டு இரண்டு வார்த்தை என்று, பத்து நிமிட பேச்சை கச்சிதமாக எழுதிக் கொடுத்தார்.
தன்னை பற்றிய அறிமுக உரைதான் இடித்தது.
அந்த விழாவில் படித்த பெருந்தலைகள் அதிகம் இருக்கும். அவர்கள் மரியாதையுடன் பார்க்கும்படி, தன்னை பற்றிய அறிமுக உரை இருக்க வேண்டும். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, என்ன செய்திருக்கிறோம் என்று மனதில் ஓட்டிப் பார்த்தான்.
""இதெல்லாம் அவங்களே தயார் செய்து பேசணும் அண்ணே. அவங்களுக்கு பேசத் தெரியாதா. என்னமோ மை வச்சி நம்ம பக்கம் தள்ளி விடறாங்க. நாம என்ன, எழுத படிக்க தெரியாத ஆளா. இப்ப பாருங்க,'' என்று சொல்லி, அறிமுக உரையை கூறத் துவங்கினான் அடியாள்.
""இந்த விழாவுக்கு தலைமை தாங்கியிருக்கும் மதிப்பிற்குரிய வட்டச்செயலர் திருமிகு மாவீரன் கருணாகரன், துடிப்பான இளைஞர். நல்லவர், வல்லவர், சாதனை மன்னன், எதிர்கால விடிவெள்ளி, சரித்திர புருஷன், நாடி வருபவர்களுக்கு கர்ணன், எதிர்ப்பவருக்கு கம்சன், பிசியான நிகழ்ச்சிகளுக்கு நடுவே, நம் அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்து, நம்மை பெருமை படுத்தியுள்ளார். அவருக்கு எங்கள் பாராட்டை தெரிவித்து மகிழ்கிறோம்... எப்படி?''
கருணாகரன் குறுக்கிட்டு, ""சிச்சீ... இதெல்லாம் கட்சி கூட்டங்களுக்கு தான் சரி வரும். ஆனால், இலக்கிய கூட்டத்துக்கு எடுபடாது. மெத்த படிச்ச மேதாவிங்க. நமட்டுச் சிரிப்பு சிரிப்பானுங்க. அசிங்கமாயிரும்டா. இந்த மன்னன், கர்ணனெல்லாம் விட்டுட்டு, வேற மாதிரி எழுதணும்.''
இரண்டு, மூன்று முறை மாற்றி, திருத்தி எழுதியும் திருப்தி வரவில்லை.
""வேற... வேற...'' என்றான்.
எரிச்சலுற்ற கையாள், ""இதுக்கும் மேல என்னத்தைண்ணே எழுதறது. வேணும்ன்னா, நாம செய்த பத்துக் கொலை, எட்டுக் கொள்ளை, பதினோரு மோசடிகளைத் தான் சொல்லணும்,'' என்று, அவசரப்பட்டு சொல்லி, நாக்கை கடித்துக் கொண்டான்.
கருணாகரனுக்கு, நகக் கண்ணில் ஊசி ஏற்றினார் போலிருந்தது.
விழா கமிட்டி கூடி, நிகழ்ச்சிகள் குறித்து பேசிக் கொண்டிருந்த போது ஒருவன் வந்தான். ""இந்த கடிதத்தை கருணாகரன் கொடுக்க சொன்னாரு,'' என்று கொடுத்து விட்டு போனான்.
ஆச்சரியத்துடன் வாங்கி பிரித்துப் படித்தார் பார்த்தசாரதி. அவர் ஆச்சரியம் மேலும் அதிகரித்ததை, அவர் முகக் குறிப்பில் இருந்து அறிய முடிந்தது.
எல்லார் பார்வையும் அந்த கடிதத்தை நோக்கியது.
படித்தார்.
"மதிப்பிற்குரியீர், வணக்கம். என்னை பற்றிய அறிமுக உரையை எழுதும் பொறுப்பை என்னிடமே கொடுத்தது ஏன் என்பதை தெரிந்து கொண்டேன். என்னிடம் சொல்லிக் கொள்ளும்படி, நல்ல விஷயம் ஏதும் இருக்கிறதா, நல்ல காரியம் ஏதாவது செய்திருக்கிறேனா, கற்றவர் சபையில் நிற்க, எனக்கு தகுதி இருக்கிறதா, என்றெல்லாம் யோசிக்க வைத்து விட்டீர்கள். அந்த சுயபரிசோதனையில் தோற்று விட்டேன். எல்லாரும் பாராட்டும்படி சில நல்ல செயல்களை செய்துவிட்டு, எதிர்காலத்தில் தங்கள் விழாவில் பங்கேற்கிறேன். நன்றி...' என்று இருந்தது.
""சாரதி, நல்ல சாதுர்யம் செய்தே... அவனை எப்படி, "அவாய்ட்' பண்றதுன்னு தலைய பிய்ச்சிக் கிட்டோம். நேரடியாக சொன்னால், அவன் பகைக்கு ஆளாவோம். சொன்னதுபோல, அவன் ஆட்கள் அடிச்சு நொறுக்கி விடுவர். அவன் வந்தாலும் சரியிருக்காது என்று சங்கடப்பட்டு கிட்டிருந்தோம். அவன் தானாகவே விலகறாப்ல செய்துட்டே, சபாஷ்,'' என்றார் ஒரு உறுப்பினர்.
""அறிமுக உரையை அவங்களை விட்டே எழுதச் சொன்னது, என் கையால் அதை எழுதப் பிடிக்காமல் தான். தன்னைப் பத்தி, "ஆஹா, ஓஹோ'ன்னு நாலுபக்கத்துக்கு எழுதி அனுப்புவான்னுதான் நினைச்சேன். இப்படியொரு கடிதத்தை நானே எதிர்பார்க்கலை. ஒரு ரவுடி, அதிலும் அரசியல்வாதி. எந்த காலத்துல மனசாட்சிக்கு இடம் கொடுத்திருக்காங்க! தன்னைப் பத்தி யோசிச்சு, மனசாட்சிக்கு மதிப்பு கொடுத்து விழாவை புறக்கணிக்கிறான்னா, அது பெரிய விஷயம். நாம அங்கீகரிக்க வேண்டாமா, பாராட்ட வேண்டாமா, கவுரவிக்க வேண்டாமா! நாலு நல்ல காரியம் செய்துவிட்டு வந்து பார்க்கறேன்னு சொல்றானே... அந்த காரியங்கள் செய்ய, வாழ்த்துகளை தெரிவிக்க வேணாமா. அவனை நம்ம பார்வையில் நிறுத்தினா தானே சொன்னதை செய்வான். "அட்லீஸ்ட்' அதற்கு முயற்சியாவது செய்வான். இந்த வாய்ப்பை ஏன் நழுவ விடணும்,'' என்றபடி எழுந்தார் பார்த்தசாரதி.
""ரொம்ப கற்பனை செய்றீங்க சாரதி. அவங்க எல்லாம், ஒரு நொடில திருந்துறவங்க இல்லை. இப்ப ஏதோ சங்கடம், தவிர்த்து விட்டான். அதுவரைக்கும் நல்லதுன்னு விட்டுட்டு, நம்ம வேலையை கவனிப்போம். விலகிப் போற ஓணானை, ஏன் வலிய இழுத்து மடியில் கட்டிக்கணும்,'' என்று சொல்லிக் கொண்டே, அவர் பின்னால் விரைந்தனர்.
பெரியவர் பார்த்தசாரதியும், இன்னும் சிலரும் வருவதைப் பார்த்து, வாசலுக்கு வந்து வரவேற்றான் கருணாகரன். நாற்காலி போடச் சொல்லியும், காபி கொடுக்க சொல்லியும் ஆட்களை ஏவினான்.
""கடிதத்தை படிச்சோம். நேர்மையாக எழுதப்பட்ட கடிதம், எங்கள் மனதை தொட்டுடுச்சு. நிச்சயமாக, இனி வரும் காலத்தில், ஊருக்கு நல்லது செய்வீங்க. மனப்பூர்வமாக நீங்கள் செய்யும் அந்த செயல்கள், கற்றவர் மத்தியிலும், மற்றவர் மத்தியிலும், உங்களுக்கு நல்ல பேர் வாங்கித் தரும். நேர்மையான வழியிலும், அரசியல் செய்ய முடியும்ங்கிற நம்பிக்கையை உங்களுக்கு கொடுக்கும். இது எங்கள் ஆசை மட்டும் இல்லை; நம்பிக்கையும் தான். அந்த அடிப்படையில், இந்த ஆண்டே கூட நீங்க விழா தலைமை ஏற்க விரும்பினால், வாங்க வரவேற்கிறோம்,'' என்றார் பார்த்தசாரதி... மறுத்தான் கருணாகரன்.
""நாலு நல்ல காரியங்களை செய்துட்டு, அடுத்த வருஷம், கூப்பிடலேன்னா கூட வந்து, மேடையில் உட்கார்றேன்,'' என்றான்.
இந்த அதிசயத்தை வேடிக்கை பார்க்க
வந்தது போல, வானத்திலிருந்து சிறு தூறல்கள் சிந்தின.
***

படுதலம் சுகுமாறன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prasadh - Bangalore,இந்தியா
07-பிப்-201310:56:33 IST Report Abuse
Prasadh மிக நல்ல கதை.... பல நாட்களுக்கு பிறகு நல்ல கதை படித்த உணர்வு கிடைத்தது.... மிக்க நன்றி
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
05-பிப்-201305:45:19 IST Report Abuse
GOWSALYA நண்பரே மிக நல்ல கதை....பொறுமையாலும்,படித்தவர்களாலும்,முக்கியமா அன்பாலும் யாரையும் திருத்தலாம் என்பதற்கு ஏற்ற உதாரணக்கதை....வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.