புதிய விடியல்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2013
00:00

காலை மணி 5:00. தென்றல் முகத்தை வருட, குயில் சப்தமும், பறவைகளின் சிறகுகள் பறப்பதினால் உண்டாகும் ஓசைகளும், மனதிற்கு அமைதியை தர, ரம்மியமான சூழலை ரசித்தவாறே, தன் நடைப் பயிற்சியை முடித்து, வீட்டினுள் நுழைந்தார் கணேசன்.
ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்தாள் சரோஜா. குளித்து முடித்ததன் அடையாளமாக, கூந்தல் நுனி முடிச்சிடப்பட்டு, நெற்றியில் பெரிய குங்குமம் துலங்கியது.
""என்ன சரோ, காபி கூட போடாம, என்ன யோசனை செய்துகிட்டு இருக்க?'' கேட்டுக் கொண்டே வந்த கணேசன் திடுக்கிட்டார். சரோஜா அழுது கொண்டிருந்தாள்.
""என்னம்மா... என்ன ஆச்சு?''
""எல்லாம்... அந்த பக்கத்து வீட்டு அம்மாவாலதாங்க. கொஞ்ச நேரம் முன்ன, வழக்கம் போல, வாசல் தெளித்து, கோலம் போட, வெளியிலே போனேங்க... அப்ப அந்தம்மா வீட்டுல, அவங்க மருமக நின்னுகிட்டு இருந்தா... "என்னம்மா, இது எத்தனாவது மாசம்?'ன்னு கேட்டேன். "ஒன்பது மாசம் முடியுது ஆன்ட்டி'ன்னு அந்த பொண்ணு சொன்னா. அதுக்குள்ள உள்ளிருந்து அவ அம்மா வந்து, "கண்டவங்க கிட்ட உனக்கு காலங்காத்தாலே என்னப் பேச்சு? ஏதாவது கொள்ளிக் கண்ணுப்பட்டு, ஒன்னு கிடக்க ஒன்னு ஆகப்போகுது'ன்னு, ஒரு அதட்டல் போட்டாங்க. "போம்மா, உனக்கு வேற வேலை இல்லை'ன்னு, சொல்லிகிட்டே அந்தப் பொண்ணு உள்ளே போயிடுச்சு,'' விசும்பினாள் சரோஜா.
""ஏதோ, விவரம் கெட்டத்தனமா அந்த அம்மா பேசினதுக்கு, நீ எதுக்கு அழறே... வா வா, எழுந்து வந்து காபி போடு.''
கண்களை துடைத்துக் கொண்டு, எழுந்து உள்ளே போன சரோஜாவை பார்த்து, பெருமூச்சு விட்டார் கணேசன். ""எப்படி இருந்தவ, இப்படி தளர்ந்து போயிட்டா?''
கணேசன் - சரோஜா தம்பதியர், சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள். ஆறு மாதங்கள் முன் தான், சென்னை செங்குன்றம் அருகில் உள்ள, புது குடியிருப்பில் வீடு வாங்கி வந்து குடியேறினர்.
கணவன் - மனைவி இரண்டு பேர்தான். கணேசனுக்கு, 55 வயது. சரோஜாவிற்கு, 50 வயது. அவர்கள் வந்த இந்த ஆறு மாதத்தில், அவர்கள் வீட்டிற்கு சொந்தக்காரர், நண்பர் என்று யாரும் வந்ததில்லை. சரோஜா வீட்டை விட்டு எங்கும் செல்வதில்லை. வீட்டை சுற்றி இருக்கும் தோட்டத்தில், காலார நடப்பதோடு சரி.
அந்த பகுதி, சற்றே உயர் மத்திய தர மக்கள் வசிக்கும் பகுதி. கணேசன், அங்கிருப்பவர்களின் வீடுகளில், கரன்ட் பில், போன் பில் கட்டுவது, ரேஷன் பொருட்கள் வாங்கி கொடுப்பது, வங்கி சென்று வருவது, காய்கறி வாங்கி தருவது, யார் வீட்டிலாவது எலக்ட்ரிக் ரிப்பேர், குழாய் தண்ணீர் பிரச்னை எது இருந்தாலும், அதை சரி செய்து கொடுப்பது ஆகியவற்றை செய்து வந்தார்.
வீட்டிலேயே ஒரு இடத்தை ஒதுக்கி, வேலைக்கு போகும் பெண்கள் இருக்கும் வீடுகளுக்கு மாவரைத்து கொடுப்பது, வேண்டிய காய்கறிகளை நறுக்கி, கவரில், "பேக்' செய்து தருவது, துணிகளை இஸ்திரி செய்து தருவது, வற்றல், வடாம் போட்டுத் தருவது, மிளகாய் பொடி, சாம்பார் பொடி, ரசப்பொடி அரைத்து தருவது, ஊறுகாய் போட்டு கொடுப்பது என செய்கிறார். உதவிக்கு சிலரையும், சம்பளம் கொடுத்து வைத்திருந்தார். இதற்காக, ஒரு குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிப்பதால், இந்த ஆறு மாதத்தில், அந்த வட்டாரத்தில் பிரபலமாகி விட்டார்.
அவர் மத்திய அரசாங்கத்தில் வேலை பார்த்து, விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது மட்டும் தான் அவர்களை பற்றி, அவர்களுக்கு வீடு வாங்கிக் கொடுத்த புரோக்கர் மூலம், அங்கிருப்பவர்களுக்கு தெரியும். மற்றபடி யாரும், வீண் பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் கிடையாது.
ஆனால், வந்ததிலிருந்து, பக்கத்து வீட்டுக்காரி காஞ்சனாவிற்கு, சரோஜாவை கண்டால், சற்று இளக்காரம் தான். அவர்களுக்கு குழந்தை கிடையாது என்பதுதான் இதற்கு காரணம்.
ஒரு நாள் எதிர் வீட்டு மாமி, அவர்கள் வீட்டு வாசலில் நின்றவாறே சரோஜாவிடம், "மாமி... உங்க வீட்டுல முருங்கை மரம் காய்ச்சுதுன்னா ரெண்டு காய் கொடுங்க. எங்க வீட்டு மாமாவுக்கு ரொம்ப பிடிக்கும்...' எனக் கூற,
"அது என்னமோ, எல்லா மரமும் காய்க்கறது. ஆனா, இந்த முருங்கை மரம் மட்டும் இன்னும் காய்க்கலை...' என, யதார்த்தமாக பதிலளித்தாள் சரோஜா.
உடனே காஞ்சனா, "அது மலட்டு மரமா இருக்கும். செருப்பாலே ரெண்டு அடி அடிச்சா, தானா காய்க்கும்...' உரத்த குரலில் சொல்ல, சரோஜாவின் முகம் கறுத்துப் போனது. ஒன்றும் பேசாமல் உள்ளே போய் விட்டாள். எதிர்வீட்டு மாமிக்கே, ஏன்டா கேட்டோம் என்று தோன்றியது.
""ஏங்க... எனக்கு வீட்டில ரொம்ப போரடிக்குது, எவ்வளவு நேரம் தான் புத்தகம் படிக்கிறது, "டிவி' பார்க்கறது? ஏதாவது உருப்படியா பண்ணனும்ன்னு தோணுது. உங்களுக்கு ஏதாவது ஐடியா தோணினா சொல்லுங்க.''
""நானும் இதை பற்றி தான் உன்கிட்ட பேசலாம்ன்னு இருந்தேன். நீயே கேட்டுட்ட... இன்னிக்கு காலைல வாக்கிங் போயிருந்தப்போ, நம்ம ராகவன் சார் சொன்னார்... "நம்ம சுற்று வட்டாரத்துல, எங்கேயும் குழந்தைகள் காப்பகம் இல்லை. வீட்டுல பெரியவர்கள் இருந்தாலும், சிலரால குழந்தையை பார்த்துக்க, உடல் நிலை ஒத்துழைக்கிற தில்லை...'ன்னு. நம்ம வீடு பெரிசா, நம்ம தேவைக்கு அதிகமா தானே இருக்கு. நாமே ஏன் ரெண்டு பேரை உதவிக்கு வைச்சு, குழந்தைகளை பார்த்துக்க கூடாது? உனக்கும், ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்,'' என்றார்.
""இது சரியா வருமா?''
""கண்டிப்பா சரியா வரும். இன்னொரு வேலையையும், நீ பண்ணலாம். வீட்டுல உடல்நிலை சரியில்லாம இருக்குற பெரியவங்களுக்கும், பி.பி., பார்க்கறது, "இன்சுலின்' ஊசி தானே போட்டுக்க முடியாதவர்களுக்கு, அதை போடறது, போன்ற வேலைகளையும் நீ செய்யலாம். பொழுதும் போகும். இங்கே இருக்கிறவங்களுக்கு, நம்மாலே ஒரு உபகாரமும் கிடைக்கும்.''
""யோசிச்சு சொல்றேன். இப்போதைக்கு குழந்தைகளை வேணா பார்த்துக்கறேன். வெளியில் அடுத்தவங்க வீட்டுக்கு போறதெல்லாம், இப்போ முடியாது. பின்னால பார்க்கறேன்,'' என்றாள்.
ஒருநாள் தோட்டத்தில், மாங்காய் பறித்துக் கொண்டிருந்தாள் சரோஜா. பக்கத்து வீட்டு காஞ்சனா, "குழந்தையை பற்றி தெரியாதவங்கள்ளாம், குழந்தையை பார்த்துக்கப் போறாங்களாம். நல்லா விளங்கிடும்...' என்று, ஜாடையாக கூற, சரோஜா கூனி குறுகிப் போனாள்.
ஆனால், இவர்கள் மேல் நம்பிக்கை வைத்து, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், தங்கள் குழந்தைகளை விட்டு போக, ஒரு வாரத்தில் பத்து குழந்தைகள் சேர்ந்து விட்டன.
சில தாய்மார்கள், குழந்தைகளுக்கு வேண்டிய உணவு, பால் எல்லாம் கொடுத்து விட்டுப்போக, மற்றவர்கள், சரோஜாவிடமே அந்த பொறுப்பையும் விட்டுவிட்டனர். அந்த பகுதியில், சரோஜாவின் மதிப்பு கூடியது.
ஒருநாள், பக்கத்து தெருவில் இருக்கும் லதா, ""ஆன்ட்டி... எங்க கம்பெனியில், ஆடிட்டிங் நடக்குது. நான் சீக்கிரமா போகணும். குழந்தைக்கு நீங்களே ஆகாரம் ரெடி பண்ணிடுங்க. வர லேட்டானா கூட, கொஞ்சம் பார்த்துக்குங்க ப்ளீஸ்,'' என்று கூறினாள்.
அப்போது தான், காஞ்சனாவின் கணவரும், மகனும், எங்கேயோ வெளியூர் போவதற்கு தயாராகி, காரில் ஏறினர்.
""காஞ்சனா, தீபாவை நல்லா பாத்துக்கோ. எப்படியும் டெலிவரிக்கு ஒரு வாரம் ஆகும். நாங்க நாளன்னிக்கு வந்துடுவோம். ஏதாவதுன்னா உடனே போன் பண்ணு,'' என்றார் காஞ்சனாவின் கணவர்.
காஞ்சனாவின் கணவர், மகன், இருவருமே டாக்டர்கள், அவர்கள் அகில இந்திய டாக்டர்கள் கான்ப்ரன்ஸ்காகத் தான்,பெங்களூரு புறப்பட்டனர்.
அவர்கள் கிளம்ப, "அததுகளுக்கு விவஸ்தையே இல்லாம வெளியில் நிற்கிறதுகள். பயணம் போகும்போது, நல்ல முகமா பார்த்துட்டு கிளம்ப வேண்டாமாக்கும்...' என்று நொடித்தவாரே உள்ளே சென்றாள் காஞ்சனா.
அந்த பெண் லதாவுக்கு புரிந்தது, அவர்கள் சரோஜாவை தான் குத்துகின்றனர் என்பது. சரோஜா ஒன்றும் பேசாமல், குழந்தைகளுடன் உள்ளே சென்று விட்டாள்.
மறுநாள் மதியத்திலிருந்தே, பலத்த மழை துவங்கி விட்டது. யாருக்குத் தெரியும், சென்னையில், திடீரென்று மழை வெளுத்துக் கட்டும் என்று... மழை கொஞ்சம் கூட விடவில்லை. மாலை, 5:00 மணிக்கே கும்மிருட்டாகி விட்டது. அன்று, ஞாயிற்றுக்கிழமை ஆதலால், குழந்தைகள் யாரும் இல்லை.
இரவு உணவுக்காக எளிமையாக சப்பாத்தி, தக்காளி சட்னி செய்து, மூடி வைத்துவிட்டு, சரோஜா ஹாலுக்கு வர, மணி சரியாக, 7:00. திடீரென்று, மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.
""அப்படியே இருங்க. எமர்ஜென்சி லைட் கொண்டு வர்றேன்,'' என சொல்லி முடிப்பதற்குள்,, யாரோ, "வீல்' என்று அலறும் சப்தம் கேட்டது.
""சரோ... என்ன இது, யாரோ கத்தற சப்தம் கேட்குதே!''
""தெரியலீங்க!''
மறுபடியும், சற்று பலமான அலறல் சப்தம்.
""என்னங்க... அந்த பக்கத்து வீட்டு பெண் குரல் போல இருக்கு. வலி வந்திருக்குமோன்னு நினைக்கிறேன்.''
""இரு. நான் போய் பார்த்துட்டு வர்றேன்.''
""சும்மாயிருங்க... அந்த அம்மாவுக்கு ஏற்கனவே நம்மை பிடிக்காது. நீங்க போனா, கரிச்சுக் கொட்டுவாங்க.''
""நீ இரு. நான் போய், பார்த்துட்டு வர்றேன்,'' கணேசன் டார்ச்சை எடுத்து செல்வதற்குள், வாசலில் கதவை தட்டும் சப்தம்.
வராண்டாவில், காஞ்சனா நின்றிருந்தாள். ""சார், செல்போன்ல சுத்தமா சிக்னல் இல்லை. லேண்ட்லைன் போனும், வேலை செய்யலை. தீபாவுக்கு வலி எடுத்துடுச்சு போல இருக்கு. ஆம்புலன்ஸ் வரவழைக்கணும். உங்க வீட்டு போனை கொஞ்சம் உபயோகிச்சுக்கட்டுமா?''
இவர்கள் வீட்டிலும், தொலைபேசி வேலை செய்யவில்லை. பரிதவித்தாள் காஞ்சனா.
""ஏதாவது ஆட்டோவாவது பிடிச்சுக்கிட்டு வாங்க சார்.''
வெளியில், முழங்காலளவு தண்ணீர் ஓடியது. புதியதாக கட்டப்பட்ட குடியிருப்பு பகுதி ஆதலால், மெயின் ரோடு போவதற்குள், குண்டு குழியில் இடறி, தண்ணீரில் தான் விழ நேரிடும்.
""நீங்க வீட்டுக்கு போங்க... இதோ வர்றேன்,'' கணேசன் உள்ளே திரும்புவதற்குள், சரோஜா பறந்தோடி வெளியே போனாள்.
காஞ்சனா வீட்டில் தீபாவை படுக்க வைத்துவிட்டு, சரோஜா பரபரப்பாக இயங்கினாள். பல்ஸ் பார்த்தாள். வயிற்றை அழுத்தி பார்த்தாள்.
""காஞ்சனா, கொஞ்சம் சுடுதண்ணீர் கொண்டு வாங்க. பழைய கந்தை துணிகளும், எடுத்துகிட்டு சீக்கிரம் வாங்க,'' கடகடவென்று உத்தரவு போட்டாள்.
அதற்குள் கணேசன், எமர்ஜென்சி லைட்டை பக்கத்தில் வைத்து விட்டு, சமையலறைக்கு ஓடினார்.
""நீங்க வெளியே உட்காருங்கள். நான் சுடுதண்ணீர் ரெடி பண்றேன்,'' கையும், காலும் ஓடாமல் நின்று கொண்டிருந்த காஞ்சனா, ஹாலுக்கு ஓடினாள்.
""தீபா... கொஞ்சம் வலியை பொறுத்துகிட்டு, நல்லா முக்குமா, இதோ இப்ப பாப்பா பிறந்துடும். கொஞ்சம் கோ-ஆப்ரேட் செய்யுமா,'' என்று இனிமையாக பேசியபடி, தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள் சரோஜா.
அரை மணி நேரம், காஞ்சனாவின் உயிர் அவளிடத்தில் இல்லை. குறுக்கும், நெடுக்குமாக நடந்தாள்; உட்கார்ந்தாள்: கடவுளை கும்பிட்டுக் கொண்டாள்; வேர்த்துக் கொட்டியது.
திடீரென்று, "வீல்' என்று தீபாவின் அலறலுடன், மழலையின் அழுகுரலும் கேட்க, அவர்கள் அருகே ஓடினாள் காஞ்கனா.
தடைப்பட்டிருந்த மின்சாரம் வர, "பளீர்' என விளக்குகள் எரிய, சரோஜாவின் கையில் அழகிய பெண் சிசு. கத்திரிக்கோலால் தொப்புள் கொடியை வெட்டி விட்டு, குழந்தையை குளிப்பாட்டி, காஞ்சனாவின் கையில் கொடுத்து விட்டு, தன் வீட்டை நோக்கி சென்றாள் சரோஜா.
நன்றி சொல்லக் கூட வார்த்தை வராமல், கண்ணீர் வழிந்தோட சிலையாக நின்றாள் காஞ்சனா.
அடுத்த நாள் காலையிலேயே வீடு திரும்பினர், காஞ்சனாவின் வீட்டினர். சிறிது நேரத்தில் காஞ்சனாவும், அவள் கணவரும், சரோஜாவின் வீட்டிற்கு வந்தனர். காஞ்சனாவின் கணவர் டாக்டர் விஸ்வநாத், கணேசனின் கைகளை பிடித்து, கண்களில் ஒற்றிக் கொண்டு, ""நன்றி... நன்றி...'' என்று தழுதழுத்தார்.
சரோஜாவின் கால்களில், பொத்தென்று விழுந்தாள் காஞ்சனா.
""அய்யய்யோ என்ன இது... எழுந்திருங்க காஞ்சனா,'' சரோஜா விருட்டென்று அவள் தோள்களை பற்றி தூக்கினாள்.
""என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க, அப்ப தான் நான் எழுந்திருப்பேன்.''
""மன்னிப்புக்கெல்லாம் அவசியமே இல்லை. நீங்க வருத்தப்படாதீங்க.''
""சரோஜா மாமி... என் பொண்டாட்டி ரெண்டு குழந்தை பெத்தவ. அவளே தடுமாறிப் போயிட்டா. நீங்க எப்படி தைரியமா பிரசவம் பார்த்தீங்க?'' என கேட்டார் டாக்டர்.
கணேசன், சரோஜாவை திரும்பிப் பார்க்க, ஆமோதிப்பதாக தலையாட்டினாள் சரோஜா.
""டாக்டர், நாங்க மொதல்ல அண்ணாநகர்ல தான் இருந்தோம். நான் மத்திய அரசாங்க துறையில வேலை பார்த்தேன். இவ ஒரு பிரபல மகப்பேறு மருத்துவமனையில், சீப் நர்சாக இருந்தாள். எங்களுக்கு ரெண்டு ஆம்பளை பசங்க. மூத்த மகன் இன்ஜினியரிங் முடிச்சுட்டு, இன்போசிஸ்ல வேலை பார்த்துட்டு இருந்தான்.
""அடுத்தவன், மெடிசன் கடைசி வருஷம் படிச்சுட்டிருந்தான். ஒரு நாள் காலங்காத்தால பீச்சுக்கு ரன்னிங்குக்கு போனவங்க தான்... சுனாமியில் சிக்கி, அப்படியே போயிட்டாங்க.
""எங்களால இந்த துக்கத்தை தாங்கவே முடியல. பழகிய இடத்துல இருந்தா, அவங்க நினைப்பு எங்களை கொன்னுடும்ன்னு, இந்த புதிய இடத்துக்கு வந்து செட்டிலாயிட்டோம். கொஞ்ச நாள் உறவு, நட்பு என்று யாரையும் பார்க்க விரும்பலை. அவர்களின் பரிதாபப் பார்வை, எங்களுக்கு, வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற மாதிரி இருக்கும். இங்க கூட, எங்களை பற்றி தெரிய வேண்டாம்ன்னு தான் மறைச்சோம். நீங்களும் தயவு செய்து யார் கிட்டயும் சொல்லாதீங்க.
""பொதுவாக, குழந்தைகள் இல்லாதவர்களை, மற்றவர்கள் எதற்காக கொடுமைப் படுத்த வேண்டும். எல்லாம் இறைவனின் விளையாட்டு தான். நாளைக்கு என்ன நடக்க போறதுன்னு யாருக்கும் தெரியாது. இறைவனோட கையில்தான் இருக்கு. நாம இருக்கிற வரை, அடுத்தவங்களுக்கு நம்மால் ஆன உதவியை செய்யணும். அது தான் எங்கள் லட்சியம்.
""இன்னிக்கு, ரெண்டு உயிரை பிழைக்க வைக்க, கடவுள் எங்களை கருவியா மாத்தியிருக்கான். ஒவ்வொருவர் ரூபத்திலேயும் நாங்க எங்க பசங்களை பார்க்கிறோம். அதுதான் எங்களை வாழ வைக்கிறது.''
குலுங்க குலுங்க, அழுத சரோஜாவை, தோளோடு அணைத்து, கண்களை துடைத்தாள் காஞ்சனா.
அவர்களுக்கான புதிய விடியல் அங்கே ஆரம்பமானது.
***

வி.ஜி. ஜெயஸ்ரீ

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saranya - Chennai,இந்தியா
16-பிப்-201312:01:59 IST Report Abuse
Saranya மனதை தொட்ட கதை. 100ல் ஒரு சதவீதம் எங்கோ ஒருவர் தான் இக்கதையில் வரும் சரோஜா கணேசன் போன்று பரந்த மனப்பான்மையுடன் இருப்பர்.
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
08-பிப்-201307:39:09 IST Report Abuse
காயத்ரி நல்ல கதை, நீளத்தைக் கத்திரித்து இன்னும் சிறப்பாகப் படைத்திருக்கலாமோ என்றே தோன்றியது..வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
05-பிப்-201310:22:56 IST Report Abuse
G.Prabakaran மிக எளிய நடையில் நல்ல வலுவான கதை.
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
04-பிப்-201315:04:25 IST Report Abuse
anandhaprasadh கண்கள் கலங்கி விட்டன...
Rate this:
Share this comment
Cancel
Govindaswamy Nagarajan - Nashville, Tennessee,யூ.எஸ்.ஏ
04-பிப்-201309:44:24 IST Report Abuse
Govindaswamy Nagarajan கண்டாலும் கேட்டாலும் தொட்டாலும் முகர்ந்தாலும் உண்டாலும் சென்றாலும் தூங்கினாலும் மஊச்சுவிட்டாலும் ஒன்றையும் தான் செய்யவில்லை . தன்னை ஒரு கருவியாககொண்டு இறைவனே இயக்குகிறான் என்று யோகியானவர் நினைக்க வேண்டும் . இதுதான் கீதையின் விளக்கம் . நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மன்யேத தத்வ வித் பச்யன் ச்ருன்வன் ச்ப்ருசன் சிக்ரன் அச்ணன் கச்சான் ச்வ்வயன் ச்வாசன் . உண்ணுவதும் நானே உன்னபடுவதும் நானே உன்ன கொடுப்பதும் நானே என்று பகவான் கிருஷ்ணர் சொல்கிறார் . ஆகவே எல்லாம் அவன் செயல் என்று சொல்லுகிறோம் . நாம் செய்யும் எல்லா செயலும் அவர்தான் செய்கிறார் . நாம் ஒரு கருவி . இந்த கதை ஆசிரியருக்கு மிகவும் நன்றி .
Rate this:
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
05-பிப்-201305:36:21 IST Report Abuse
GOWSALYATHANK YOU FOR YOUR TRANSLTION SIR.மிக்க நன்றி ஐயா.......
Rate this:
Share this comment
Cancel
Gayathri - Manama,பஹ்ரைன்
03-பிப்-201312:41:08 IST Report Abuse
Gayathri Nice Story
Rate this:
Share this comment
Cancel
Prahakaran Prabha - mumbai,இந்தியா
03-பிப்-201309:52:29 IST Report Abuse
Prahakaran Prabha வெரி குட் ஸ்டோரி congratulation to the author prabha
Rate this:
Share this comment
Cancel
Govindaswamy Nagarajan - Nashville, Tennessee,யூ.எஸ்.ஏ
03-பிப்-201309:51:43 IST Report Abuse
Govindaswamy Nagarajan This excellent story explains a sloka from Gita: Naiva Kinjith Karomeethi Yuktho Manyaetha Thathva Vith, Bachyan chrunvan spruchan Jikran Achnan kachan swayan chvasan. Translating these in Tamil as: Kandaalum, Kaettaalum, Thottaalum, Mukarnthaalum, Undaalum, Chentraalum, Thunginaalum, Muchuvittaalum Onraiyum Thaan Cheyyavillai Thannai Karuviyaaka Kondu Iraivanae Iyakkukiraan Yena Yogi ninaikkiraan. God does everything by using us as His Intruments. I salute the writer of this excellent story.
Rate this:
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
04-பிப்-201301:47:41 IST Report Abuse
GOWSALYAஐயா கோவிந்தசாமி எழுதும் சுலோகத்தை தமிழில் எழுதியிருக்கலாம் தானே????........மிக நல்ல கதை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.