அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2013
00:00

அன்பு சகோதரிக்கு —
நான் 20 வயது பெண். திருமணமாகி, மூன்று வருட மாகிறது. திருமணத்துக்கு முன், ஒருவரை உயிருக்குயிராக விரும்பினேன். ஆனால், ஒருதலையாக! இந்த விஷயம் அவருக்கே தெரியாது. பெற் றோர் வற்புறுத்தலால் எனக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடாகியது. விருப்பமில்லாமல் திருமணம் முடிந்தது.
ஆரம்பத்திலிருந்தே எனக்கு, "எதன்' மீதும் நாட்டமில்லை; மனம் எதிலும் ஒட்டவில்லை. நான் விரும்பிய வாழ்க்கை கிட்டவில்லை என்ற காரணத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ எனக்கு, "அந்த' விஷயத்தில் சிறிதும் விருப்பம் ஏற்படவில்லை. என் கணவரின் மன திருப்திக்காக இணங்குகிறேன் என்றாலும் கூட, எனக்கு தானாக அந்த விருப்பம் ஒருநாள் கூட ஏற்பட்டது இல்லை.
இன்னும் பழைய கதையை நினைக்கிறது பைத்தியக்காரத்தனம் என்று எனக்கே தெரிகிறது. இப்படி கடமைக்காக ஒரு வாழ்க்கை வாழ்வதை விட, சாவது மேல் என சில சமயம் தோன்றுகிறது.
"அந்த' விஷயத்தைப் பற்றி நினைத்தாலே பிடிக்க வில்லை. இன்னும் சொல்லப் போனால், இரவு நேரம் ஏன் தான் வருகிறதோ என சில சமயம் தோன்றும். இரவு நேரம் வந்தாலே அழுகை வரும். எத்தனையோ இரவு கள் அழுது கொண்டே கழித்திருக்கிறேன்.
விருப்பமில்லாமல் வாழ்வதற்கு எனக்கு இஷ்டமில்லை. என் கணவருக்கு, அவரை மனதார நேசிக்கக் கூடிய மனைவியாக என்னால் இருக்க முடியவில்லை. இப்படி ஒரு மனைவி அவருக்கு தேவையா? என் சுயநலத்துக்காக இல்லை யென்றாலும், அவருக்காகவாவது நான் தற்கொலை செய்து கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. அவராவது ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து வாழ வேண்டும். இப்படி ஒரு மனைவியாக இருக்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது.
நான் முன்பு விரும்பியவரை மறக்க முடியாதது தான் இதற்கு காரணமா அல்லது வேறு என்ன காரணம் என்றே எனக்கு புரியவில்லை. இனிமேல் அவரை நினைத்துக் கொண்டிருப்பது முட்டாள் தனம் என்று எனக்கே தெரிகிறது. எவ்வளவு முயன்றும் இந்த மூன்று வருடமாகியும், "அந்த' விஷயத்தில் இன்னும் ஈடுபாடு வரவில்லை. வாழ்வதா, சாவதா? எனக்கு ஒரு வழி கூறுங்கள்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென் றால், இப்போது எனக்கு, "அட்வைஸ்' பண்ணுவதே நான் யாரை விரும்பினேனோ அவரே தான். என் திருமணத்திற்குப் பின், சந்தர்ப்ப சூழ்நிலையால் அவருக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அன்றிலிருந்து இன்று வரை எனக்கு அறிவுரை கூறுவது அவர்தான்.
எப்பவோ சாகணும்ன்னு முடிவெடுத்தவள், அவருடைய, "அட்வைசை கேட்டு' மனசை மாத்திக்கிட்டேன். அவர் என் நெருங்கிய உறவினர்; ஆதலால், எல்லாரிடமும் பேசுவது போல் அவரிடமும் சகஜமாக பேசுவதுதான் இப்போது எனக்குள்ள மன ஆறுதல்.
அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த விஷயம் தெரிந்து, முதலில் சந்தோஷப்பட்டவள் நான்தான்.
அவர் சொன்னதைக் கேட்டு, நான் எவ்வளவோ திருந்தி இருக்கிறேன். என்றாலும், "அந்த' விஷயத்தில் மட்டும் என்னை மாற்றிக் கொள்ள முடியவே இல்லை. அதை நினைக்கவே பிடிக்கவில்லை.
ஏதோ திருமணம் பண்ணி வைத்து விட்டனரே என்று வாழ்கிறேன். என் கணவரைப் பார்த்து எனக்கு ஒருநாள் கூட ஆசை வந்ததே இல்லை. நான் என்ன செய்வது? ப்ளீஸ்... எனக்கு ஒரு வழி கூறுங்கள்.
இப்படிக்கு,
அன்பு மகள்.


அன்பு சகோதரிக்கு—
உன் கடிதம் கிடைத்தது. விஷயம் அறிந்தேன்.
கடிதத்தில் உன் வயது 20 என்று எழுதியிருக்கிறாய். திருமணமாகி மூன்று வருடங்களாகிறது என்றும் எழுதியிருக்கிறாய். அப்படியானால், 17 வயதிலேயே திருமணமா? அந்த பதினேழு வயதில் நீ யாரையோ பார்த்து, மனதைப் பறி கொடுத்து, பின் அவரை நினைத்து ஏங்கியே - இப்போது கிடைத்துள்ள மணவாழ்வை பிடித்தமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?
கண்ணம்மா... பதினேழு வயது என்பது ஒரு விதமான குழந்தைத்தனமும், வாலிபமும் கலந்து நிற்கும் கன்றுக்குட்டிப் பருவம்... இந்த வயதுப் பெண்களின் மனசுக்குள் ஒரு ஹீரோ இருப்பான்... இவ்வளவு சொல்வானேன்... ஏன், எனக்குள் கூட ஒருவன் இருந்தான். இதை, இப்படிச் சொல்லிக் கொள்வதில் நான் வெட்கப்படவில்லை.
என் வயசுப் பெண்களிடம், "உங்களது பதினேழு வயசில், நீங்கள் யாரையாவது காதலித்திருக் கிறீர்களா' என்று கேட்டு பார்... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், நடிகர் திலகம், பட்டோடி, தர்மேந்திரா, பாலமுரளி கிருஷ்ணா, ஜெயகாந்தன்... அவ்வளவு உயரப் போகாவிட்டாலும், எதிர் வீட்டிலிருக்கும் பையன், மாடியில் குடியிருக்கும் இளைஞன், அத்தை பிள்ளை, மாமா பிள்ளை - சில சமயம் மாமாவே...
அந்த வயசில் அப்பா, அண்ணன், தம்பி தவிர - மூன்றாம் மனிதரிடம் பழகுகிற வாய்ப்பே குறைச்சல். கொஞ்சம் பேசி, ஜோக் அடித்து, வாய் விட்டுச் சிரித்து அல்லது சிரிக்கச் செய்தால் போதும், மனசு, பாவாடை தாவணியை வரிந்து கட்டிக் கொண்டு டூயட் பாடி, ஆடத் தொடங்கி விடும்.
இந்த வயசில், பள்ளிக்கூட வாத்தியார்களின் மீது அநியாயத்துக்கு மையல் கொண்ட பெண்கள் கூட உண்டு.
என் சிநேகிதி ஒருத்தி, ஜெய்சங்கருக்கு கல்யாணம் என்கிற செய்தியை பத்திரிகையில் படித்து விட்டு, தற்கொலை முயற்சி வரைக்கும் கூடப் போய் விட்டாள். நல்ல வேளை - அவள் தன் முடிவுக்கு காரணம் என்று எதையும் எழுதி வைக்கவில்லை. ஆனால், சினேகிதிகளான எங்களுக்குத் தெரியும்.
அப்புறம் இரண்டு மூன்று வருடங்களுக்குப் பின் ஒல்லியாய், உயரமாய், ஒட்டடைக் குச்சிக்கு பேன்ட், ஷர்ட் மாட்டி விட்டாற்போல ஒருவர் மாப்பிள்ளையாய் வந்து சேர்ந்தார். அப்போது கூட அவள், "என் ஜெய் எங்கே, இவர் எங்கே...' என்று முகத்தை மூடிக் கொண்டு அழுதாள் என்றால் பார்த்துக் கொள்ளேன்!
இப்போது அவள் கோயமுத்தூரில் இருக்கிறாள். இரண்டு பெண், ஒரு பிள்ளை... ஒரு பெண் வெளிநாட்டில்... பையனுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பெண் கல்லூரியில்... இப்போதெல்லாம் பழசைப் பற்றிப் பேசினாலே விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.
அது மட்டுமில்லை... இந்த விஷயத்தை தன் கணவரிடமும் சொல்லி இருக்கிறாள் போல... நான் ஒருமுறை கோவை போயிருந்தபோது, என் சினேகிதியின் கணவரே என்னிடம் கிண்டலாகச் சொன்னார்...
"எங்க பொண்ணுக்கு ஜெய்சங்கர் பிள்ளைய வேணுமானாப் பார்க்கலாமா மேடம்? பாவம்... உங்க சினேகிதி, ஜெய்யை கல்யாணம் தான் செஞ்சுக்க முடியலே, குறைஞ்ச பட்சம் சம்பந்தியாவாவது ஆகட்டுமே...' என்றார்.
நாங்கள் அத்தனை பேருமே விழுந்து விழுந்து சிரித்தோம்.
நீ இத்தனை வேதனைப்பட்டு எழுதியிருக்கிறபோது - நான் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் இப்படி எழுதுவது உனக்கு வருத்தமாக இருக்கிறதா? நீ கூட, சில வருடங்களுக்குப் பின் இப்படித்தான் சிரிப்பாய்.
இந்த உணர்ச்சிக்குப் பெயர் - கன்றுக்குட்டிக் காதல் என்றே சொல்வர். கொஞ்ச நாள் இந்த அலைக்கழிப்பு இருக்கும்; போகப் போக சரியாகி விடும்.
இது ஒரு புறம் இருக்கட்டும். சாதாரணமாய் ஒரு சமயம் இல்லாவிட்டாலும், இன்னொரு சமயம், கணவனிடம் அன்பாய், ஆசையாய், அணைப்புக்குள் அடங்குவதே பெண்ணின் இயல்பு. மேலும், அவர் நல்லவராக, கண்ணியமானவராக இருக்கும் போது இந்த விருப்பம் இருக்க வேண்டும்.
நீயோ, வெறும் மரக்கட்டையாக இருப்பதாக எழுதி இருக்கிறாய்... எப்போதுமே இந்த எண்ணம் இல்லை என்கிறாய். இரவையே வெறுக்கிறாய், இது தான் கொஞ்சம் உறுத்துகிறது.
நீ ஏன் ஒரு லேடி டாக்டரை, பார்க்கக் கூடாது? உன்னுடைய உடம்பில், உறவுக்கு ஏற்ற அளவுக்கு வளர்ச்சிகள் தோன்றி விட்டதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இப்படியொரு நிலை வரக் கூடாது என்பதற்காகத் தான், "பெண்ணுக்கு திருமண வயது 21' என்று நிர்ணயித்திருக்கின்றனர். சாதாரணமாய், 18 வயதில் பெண்ணுக்குள் மாற்றங்கள் ஏற்படத் துவங்கி விடும்.
இன்னொரு விஷயம்... மிகுந்த நல்லவரே ஆனாலும், ஏற்கனவே நீ காதலித்த மனிதரிடம் இது பற்றி பேசவோ, அடிக்கடி சந்திப்பதோ தேவையில்லை என்றுதான் சொல்வேன். அவரை பற்றிய நினைப்பு மனசில் இருக்கும் வரை, இந்த எண்ணமே உன் அந்தரங்க வாழ்க்கைக்கு எதிரியாக இருக்கும்!
கணவரிடம் அன்பை வளர்த்துக் கொள்ள முயற்சி செய். உன், "அவரை' விடவும் அழகானவர், அன்பானவர் உலகிலேயே இல்லை என்று நினை; தற்கொலை எண்ணத்தைத் தூக்கிப் போடு!
முதல் நாள் தயக்கம் மறுநாள் நெருக்கம் முறையே துவங்கும் இணைபவர் இயக்கம்! கவிஞரின் வரியை மெய்யாக்கு!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (41)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
08-பிப்-201323:46:13 IST Report Abuse
GOWSALYA காயத்ரி ,பிருந்தா,அபிராமி,மற்றும் பலருக்கு,நீங்க எழுதியதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் தான்.Gozz சொல்லுமாப்போல எல்லோரும் வேலைவெட்டி இல்லாமல் சுத்திக் கொண்டு இருக்கார்கள்,நாம கொஞ்சம் எல்லோரையும் சீண்டிப் பார்க்கலாமா என்ற எண்ணம் போலும் ராஜுவுக்கு......நானும் முதல் மடலைப் பார்த்ததும் என்னவோ என எண்ணினேன்ஆனால் இது ஒரு கேலியாக எல்லோரின் நேரத்தையும் வீணாக்குவது போல உள்ளது.ஒரு வேலையை செய்துமுடித்த பின்பு,அதைச் செய்யவா வேண்டாமா என்று அட்வைஸ் கேட்பது கேலிக்கூத்து ...............அதைவிட மௌனம் சிறந்தவழி......
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
08-பிப்-201307:16:01 IST Report Abuse
காயத்ரி ராஜூ, உங்களுக்குப் பிடித்த வாழ்க்கை அமைப்பது தவறில்லை,அதிலும் குழந்தையுடன் கூடிய கைம்பெண்ணைக் கரம் பிடிக்கத் துடித்தது வரவேற்கத்தக்கது, ஆனால் இன்னொரு பெண்ணை அதுவும் மனைவியாக வந்த மகாலெட்சுமியை வாழாதவளாக உங்கள் குழந்தையுடன் தவிக்க விடுவது எப்படி நியாயம் ஆகும்? அப்பா இல்லாத குழந்தைக்கு அப்பாவாக மாறுவது மிகவும் நல்ல விஷயம் ஆனால் ஒன்றுமறியாத அப்பாவிப்பெண்ணை ஊரறிய மனைவியாக ஏற்று அவருக்கு ஒரு பெண் குழந்தையைக் கொடுத்து விட்டல்ல.. வளரப் போகும் பிஞ்சு பள்ளியில் பிற குழந்தைகள் தந்தையுடன் வரும் போது ஏங்குமே? அன்பிற்கு ஏங்கி வழிதவறும் வாய்ப்புகள் அதிகமே..என்றாவது அதையெல்லாம் சிந்தித்தீர்களா? ஓடிப்போன அப்பா, விவாகரத்து வாங்கின அப்பாக்குப் பிறந்த பெண் என்று சமுதாயம் பழி தூற்றும் போது எந்தத் தவறும் செய்யாத பிஞ்சின் நிலையை எண்ணினீர்களா? மனைவி எவ்வளவு அவஸ்தையுறுவார், கணவர் இல்லாமல் இருக்கும் பெண்களை மொய்க்கும் கழுகுக்கூட்டங்களிடம் இருந்து எப்படி காத்துக் கொள்வார்? நாளை வேறு திருமணம் செய்தார் என்றால் பரவாயில்லை, அப்படி இல்லாத பட்சத்தில் உங்களை நம்பி வந்த மனைவியின் எதிர்காலம்? உங்கள் குழந்தையின் எதிர்காலம்? இவை எல்லாம் கவலை இல்லை, உங்கள் சுய நலமே பெரிது என்றால் என்ன அர்த்தம்? இதையும் மீறி உங்களுக்கு இவர்களைத் தள்ளி வைத்து விட்டு விவாகரத்து தந்து விட்டு அந்தப் பெண்ணை மணமுடிக்க ஆசை இருந்தால் செய்து மகிழ்ச்சியுடன் வாழ முடியுமா? மனசாட்சி அரித்துக் கொல்லாது? அந்தப் பெண் ஏற்கனவே கணவரை இழந்தவர், அவருக்குத் தான் வாழும் வாழ்க்கை இன்னொரு பெண்ணிடமிருந்து தட்டிப் பறித்ததாகத் தோன்றாது? இதில் எங்கிருந்து இருவருக்கும் நிம்மதி கிடைக்கும்..சரி, மணம் செய்து விட்டால் நாளை வேறொரு பெண்ணைப் பார்க்கும் போது ஈர்ப்பும் தெய்வீகக்காதலும் உண்டானால் இந்தப் பெண்ணையும் ஏற்கனவே உள்ள குழந்தை, நீங்கள் கொடுக்கும் குழந்தை இவர்களைத் தவிக்க விட்டு விட்டு அந்தப் பெண்ணின் நினைவில் உளறுவீர்களா? ஏழை விவசாயக்குடும்பத்தில் பிறந்து படித்து நல்ல வேலையில் இருந்து குடியை நிறுத்தி அதே குடிக்கு அடிமையாகி.. உங்களைச் சுயபரிசோதனை செய்து பார்த்தீர்களா? நீங்கள் மன நல மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்வது மன நலத்திற்கு நல்லது.. எத்தனை கோப்பையில் அருந்தினாலும் தேனீரின் சுவை ஒன்று தான்.. நீங்கள் விரும்புவரை விட உங்களை விரும்புவர் எப்போதும் மேல்.. உங்கள் மனைவியிடம் மனதார மன்னிப்பு கேட்டுத் திருந்தி வாழ்ந்தால் அதை விட வேறு சொர்க்கம் உண்டா? நீங்கள் உங்களையும் வருத்தி, குடித்து, பிறரையும் கண்ணீரில் ஆழ்த்தி, அந்தக் கைம்பெண் மனதிலும் ஆசைகளையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி சாதிக்கப் போவது தான் என்ன? உங்களுக்கு அந்தப் பெண் மேல் காதலா? அழகில் மயங்கும் ஈர்ப்பா? என்பதைச் சுயபரிசோதனை செய்வது முக்கியம், அழகு பார்க்கும் கண்களில் இருக்கிறது..இளமை இருக்கும் வரை ஒரு அழகு, பிறகு வேறு அழகு, அதை ரசிக்கக் காதல் கண்கள் வேண்டும்..அதைச் சிந்தித்து தெளிவாக ஒரு முடிவெடுங்கள்.. அதில் பின்வாங்காமல் உறுதியுடன் இருங்கள், சுயநலமான முடிவு என்றால் அந்தப் பெண்ணிடம் பேசி அவர் மனதில் என்ன அபிப்பிராயப்படுகிறார் என்று கேளுங்கள்..இணைய வழி இருக்கிறதா என்று பாருங்கள், ஆனால் மனைவி, குழந்தையை மறந்து விட வேண்டும்..மீண்டும் இந்த வாழ்க்கைக்குப் போகலாம் என்று வந்த பெண்ணையும் கைவிடக் கூடாது..இல்லையா? அந்தக் கைம்பெண்ணை மறங்கள், உங்களுக்கே உங்களுக்காய் இருக்கும் மனைவி, குழந்தையை நேசியுங்கள்..ஏதேனும் ஒன்று தான், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் தவறு..இந்த வாழ்க்கை என்றால் இதில் உள்ள நிறைகள், குறைகளை அனுசரித்து நடக்க வேண்டும், அந்த வாழ்க்கை என்றாலும் அப்படியே..இரட்டை வாழ்க்கை மன நலத்திற்கு நல்லதன்று. இல்லை, நான் பிதற்றிக் கொண்டிருப்பேன் என்றால், இரண்டு பெண்களையும் விட்டு விடுங்கள்..இல்லை, இல்லை, குழந்தைகளுடன் சேர்த்து நாலு பெண்கள், எவர் எதிர்காலத்தையும் பாழாக்காமல் அண்ணாந்து விட்டத்தைப் பார்த்து நீங்கள் செய்த தவறுகளுக்கு உங்களை நீங்களே கேள்விகள் கேட்டு விடை கிடைக்கிறதா என்று பாருங்கள்.. பெண்ணின் மனதையோ உணர்வுகளையோ உடலையோ கெடுப்பது மகாபாவம்..அதற்குப் பிராயச்சித்தம் செய்து நல்ல கணவராகவும் நல்ல தந்தையாகவும் இருக்க வாழ்த்துகிறேன்..உங்களை நம்பி வந்த அப்பாவிப்பெண், மகள் நிலைக்கு வருந்துகிறேன்..வேண்டுகிறேன். உங்கள் மனம் மாறி நல்வாழ்க்கை மலர மனதார வாழ்த்துகிறேன். பெண்ணின் வாழ்க்கையில் விளையாடும் ஆண்கள் இதைப் படித்தாவது திருந்தட்டும் என்றே எழுதி இருக்கிறேன்..காயப்படுத்தும் நோக்கமல்ல..சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்..
Rate this:
Share this comment
Gokul - Bangalore,இந்தியா
08-பிப்-201315:50:04 IST Report Abuse
Gokulகாயத்ரி வெங்கட், கண்டிப்பாக இந்த வாதம் அவரது சுயநலத்தின் முன் எடுபடாது...Brindha என்ற வாசகி சொல்லியது போல் வலியில் சுகம் காணும் பேர்வழி..வார்த்தைக்கு வார்த்தை என்னவள் என்னவள் என்று சைகோ போல மனதிற்குள் பதிய வைத்து உள்ளார்..செல்வ ராகவன் படத்தில் வரும் கதா நாயகன் இவர்...ஒரு வித மன மயக்கத்தில் இருக்கும் நபர்..சுயநலம் மட்டுமே பார்க்கும் ஒரு சுயநலவாதி...இதனை குழப்பங்களுக்கும் இவர் தான் காரணம்...கல்யாணத்திற்கு முன்பே காதலியை கை பிடித்து இருக்கலாமே..அந்த பெண்ணிற்கு (இவர் மனைவிக்கு) ஒரு வேண்டுகோள், உங்கள் வாழ்க்கையை இவரை போன்ற கனவில் மிதக்கும் ஆளை நம்பி கெடுத்து கொள்ளாதீர்கள்..இவரிடம் தகுந்த ஜீவனாம்சம் வகையறாக்களை பெற்று இவரை மறந்து நீங்கள் நிம்மதியாக இருங்கள்.......
Rate this:
Share this comment
BalaSheela - Coimbatore,இந்தியா
09-பிப்-201314:08:20 IST Report Abuse
BalaSheelaதிருமணம் ஆகும் வரை மட்டுமே மனைவி என்பவள் வேறொரு பெண். காதல் திருமணமோ அல்லது arranged திருமணமோ எதுவாயினும் சரி. குடும்பத்துக்குள் வந்த பின்னர் அவளும் தாய் தந்தை சகோதரன் சகோதரி போல மாற்ற முடியாத உறவு என்பதை புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டியது தானே. இப்படி தானே அனைவரும் வாழ்கிறோம் பிறகெதற்கு மனதை போட்டு இவ்வளவு குழப்ப வேண்டும் ? We are not given the opportunity to choose any relation, including parents, siblings, children. Give same treatment to the spouse relationship also (after marriage only, before that use the opportunity to choose), Nobody says, "i dont like this sister or this brother and want a new one, or i dont like my son or daughter instead i like the neighbours children". Then Why? Why? this much wavering mind in this relationship alone? நமக்கு பிடித்த அனைத்தையுமே சொந்தமாக்க முடியுமா ? வாழ்க்கை ரசியுங்கள் நண்பரே . வாழ்க்கையை புரிந்து கொல்லாத உங்களுக்கு என் பரிதாபங்கள்....
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
08-பிப்-201306:46:26 IST Report Abuse
காயத்ரி ராஜூ அவர்களுக்கு, என் வாதங்களையும் கருத்துக்களையும் எழுத வேண்டாம் என்றிருந்தேன்..எழுதாமல் இருக்க முடியவில்லை..சில கேள்விகள், திருமணம் செய்யும் முன் உங்கள் கனவு நாயகியைக் கண்டிருக்கிறீர்கள், விதவைக்கோலம், கையில் செல்லப் பெண்..சரி தான், என்ன செய்திருக்க வேண்டும், உங்களால் அவரில்லாமல் வாழ முடியாது என்று தோன்றும் போது திருமணத்தை நிறுத்தி இருக்க வேண்டும், செய்தீர்களா? காதலிக்கும் தைரியம் இருக்கும் உங்களுக்குப் பிடிக்காத திருமணத்தை நிறுத்தும் தைரியம் ஏன் வரவில்லை? அடுத்ததாக நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும், மனம் விரும்பாத மனைவி, ஆனால் அவளுடன் பிடித்தோ பிடிக்காமலோ இரவுகளைக் கழித்து இன்பங்களைக் களித்து அவரைக் கர்ப்பமாக்கி இருக்கிறீர்கள்..அப்போது இந்த விவாகரத்து யோசனை தோன்றவில்லையா? ஒன்று மணத்திற்கு முன்பு, இல்லையென்றால் மனைவியைக் கர்ப்பமாக்குவதற்கு முன்பு..இரண்டுமில்லை, சரி, இல்லையோர் பிள்ளை என ஏங்குவோர் பலர் இருக்க அழகான குழந்தை கிடைத்தாயிற்று. அதையும் மீறி உங்கள் கண்கவர் காதலியே மனதை நிறைத்திருக்கிறாள், அவளின் வார்த்தைகளுக்காகத் தவம் செய்திருக்கிறீர்கள், உங்களை நம்பி வந்த மனைவி ஒரு பெண், அவருக்கும் ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்புகள் உண்டு, முதலில் திருமணத்தை நிறுத்தி இருந்தால் கூட வேறு நல்ல வரன் அமைந்து அவர் வாழ்வு இனிமையாக இருந்திருக்கும்..உங்களைக் கட்டிக் கொண்ட பாவத்திற்காக உங்கள் உயிரையும் சுமந்து பெற்றெடுத்து தனித்து விடப்பட்டு இருக்கிறார்..இதே நிலையில் உங்கள் சகோதரி இருந்தால் உங்கள் மனம் என்ன பாடுபடும்..பெண் என்றால் இளக்காரமா? எத்தனை கனவுகளுடன் அடியெடுத்து வைத்திருப்பார்கள், சமுதாயத்தின் பார்வைக்கு உங்களுக்கு மனைவி, குழந்தை வேண்டும், ஆனால் நீங்கள் போ என்றால் விவாகரத்து வாங்கிப் போய் விட வேண்டுமா? எந்த ஊர் நியாயம்?
Rate this:
Share this comment
Cancel
Raju - Bengaluru,இந்தியா
07-பிப்-201313:53:54 IST Report Abuse
Raju என்னால் என்னவளை மறக்க முடியாது. கடந்த முன்று ஆண்டுகளை புரட்டி பார்த்த பின், ஒன்றை மட்டும் நிச்சயமாக கூற விரும்புகிறேன். என் ஆழ்மனதில் இருக்கும் அவளால் மட்டுமே/அவள் பற்றிய எண்ணம் தரும் ஆறுதலால் மட்டுமே என் வாழ்வு பயணம் தொடர்ந்து கொண்டுள்ளது. மிகவும் அறிதாக அவளை பார்க்க கிடைக்கும் வாய்ப்புகள், பேசும் சந்தர்பங்கள் மட்டுமே என் வாழ்வின் இதயத்துடிப்புகளாகின்றன. அவள் என்னை தூக்கி எறிந்து விடுவாளோ என்ற பயம் என் மனதில் சில சமயம் இருக்கத்தான் செய்கிறது. அது தான் அவளது உண்மையான விருப்பம் என்றால், என்னவள் விரும்பும் வாழ்விற்கு எந்த சூழலிலும் நான் தடையாக இருக்க மாட்டேன் என நம்புகிறேன். அவளுடன் நான் இருக்கிறேன்/இல்லை என்பதை பற்றி கவலைபடப் போவதில்லை. அதே நேரம் மதிப்பிற்குரிய கண்ணன் அவர்கள் கூறியது போல், நான் அவளை நடுத்தெருவில் விடும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், நான் அவளுடன் சேரவே போவதில்லை, நான் அவளுக்கு துன்பம் என்றால். நான் அவளுக்கு எவ்வாறு துன்பம் ஆக முடியும் என்ற யோசனையில் தான் மீண்டும் இங்கு பதிகிறேன். உங்கள் கருத்துகளுக்கு நன்றி. அதே மாதிரி மேலும் என் குடும்பத்திடமும், என்னை கல்யாணம் செய்த பெண்ணுடனும் மற்றும் இந்த சமூகத்திடமும் போலியாக வாழ்ந்து, ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் தான் தேவைப்பட்டால் எல்லோரையும் பிரிந்து விடவும் காத்திருக்கிறேன். குடியை வெறுத்து, எங்கள் குடும்பம் செய்த சாராய வியாபாரத்தை ஏழ்மையிலும் என் 17 வயதில் நிறுத்தினேன் என்று பெருமையுடன் வாழ்ந்தேன். இதோ நான் குடிக்க ஆரம்பித்து 2.5 வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு கருத்து கூறுபவர்கள் அடையாளம் காணும் முட்டாளாக, லூசாக, ஈகோவாக இருப்பதையே விரும்புகிறேன். ஆம் இந்த லூசால் என்னை மணந்த பெண்ணிடம் பேசத் தோன்றவில்லை, பார்க்க பிடிக்கவில்லை, அவர் இருப்பதால் என் விட்டிற்கு போக பிடிக்க வில்லை, வேறு வழின்றி போக நேர்ந்தால், நான் பிறந்து வளர்ந்த வீட்டில் பச்சை தண்ணியோ உணவோ அருந்த பிடிக்கவில்லை, அதற்கு பட்டினியாக இருப்பதே பரவாயில்லை என்றாகிறது. ஆம் எனக்கு பிறந்த குழந்தை, அக்குழந்தைக்காக என்று கூறி என்னுடன் மட்டுமே வாழ்வேன் என்றுறைப்பதால், குழந்தையை விட்டும் விலகுகிறேன். இப்படியாக நிறைய... முற்றி விட்டதாக படுகிறதல்லவா? இருப்பினும் சைக்கோவாக மாட்டேன், என் அருகில் இருப்பவர்கள் பயப்படத் தேவை இல்லை. (மேலும் பல நல்ல உள்ளங்களை வருந்த செய்ததிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.)
Rate this:
Share this comment
Gokul - Bangalore,இந்தியா
08-பிப்-201310:55:32 IST Report Abuse
Gokulமுடிவு செய்த ஒரு விசயத்திற்கு அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் என்ன? யார் யார் வேலை இல்லாமல் இருகிறார்கள் என்று பார்க்கவா? இல்லாத காதலிக்கு பூங்கொத்து கொடுத்து கற்பனையில் வாழ்ந்து விட்டு போக வேண்டியது தானே...சுயநலம் பிரதானம்...மனைவியாவது, குழந்தையாவது தன் இன்பமே முக்கியம், தனக்குள் உள்ள அந்த போதை தரும் எண்ணமே முக்கியம்......
Rate this:
Share this comment
Ganapathy Kannan - Singapore,சிங்கப்பூர்
08-பிப்-201311:21:28 IST Report Abuse
Ganapathy Kannanதம்பி, தாங்கள் ஏன் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கக்கூடாது? அவர் உங்களுக்கு உதவலாம். நீங்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளதாகத் தோன்றுகிறது. ஏழ்மை நிலையிலிருந்து, கற்ற கல்வியினால் நல்ல வேலையில் இருக்கும் உங்களைப் பற்றி உங்கள் வீட்டில் எத்தனையோ கனவுகள் இருக்குமல்லவா. விவசாயக் குடும்பத்தில் இருந்து, கல்வி கற்று உயர்தல் என்பது மிக நல்ல விஷயம். அவ்வாறு உயர்ந்த நீங்கள், அனைத்தையும் மீண்டும் அழிக்க நினைக்கலாமா? வாழ்வின் நெறிமுறைகள் என்பதே நம்மை நன்கு வழி நடத்தத் தான். தாங்கள் எழுதியுள்ள விதம், சொற் கோர்வை அனைத்தும் நல்ல கல்வியாளன் என்று உங்களை சொல்கின்றன. உங்கள் விருப்பங்கள் எதுவாயினும் இருக்கட்டும். தாங்கள் தயவு செய்து ஒரு நல்ல மருத்துவரை அணுகுங்கள். அதன் மூலம் நிச்சயம் பயன் கிட்டலாம். - அன்புடன் கண்ணன்...
Rate this:
Share this comment
Abirami Sasikumar - Chennai,இந்தியா
08-பிப்-201312:37:50 IST Report Abuse
Abirami Sasikumarராஜூ சகோதரருக்கு, எல்லா தவறையும் நன்றாக தெரிந்து புரிந்தே செய்திருக்கிறீர்கள், செய்து கொண்டிருக்கிறீர்கள். திருந்தி வாழும் வழிக்கான கதவை திறந்து விட்டாலும் அந்த வழி போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள். ஆனால் வழிபோக்கர்களிடம் வழி கேட்கிறீர்கள். எல்லோர் சொல்வதும் விழலுக்கு இறைத்த நீராகிறது. அந்த பெண்தான் என் மனதில் இருந்தாள் என்கிறீர்கள். எல்லோருக்கும் பயந்து இந்த பெண்ணை திருமணம் செய்தேன் என்கிறீர்கள். அப்புறம் குழந்தை மட்டும் எப்படி சார் பெற்று கொண்டீர்கள். அதுவும் எல்லோருக்கும் பயந்தா ???? திருமணம் முடிந்து 4 மாதங்களில் உங்கள் மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்கிறீர்கள். இதிலேயே தெரிகிறது உங்கள் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம் என்று நினைக்கும் சுய நலவாதி நீங்கள். உங்கள் மனைவி என்ன தவறு செய்தார் அவரை ஏன் நீங்கள் தண்டிக்க வேண்டும். அந்த பெண்ணின் குழந்தையை செல்ல மகள் என்கிறீர்கள். யாருக்கோ பிறந்த குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் உயிரை சுமந்த உங்கள் மனைவிக்கு நல்ல கணவனாக அந்த பச்சிளம் குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருக்க தோன்ற வில்லையா உங்களுக்கு???? இப்படி யோசிப்போம். ஒரு வேளை உங்கள் மனைவி உங்களுக்கு ஒரு குழந்தை பெற்ற பின் உங்களிடம் வந்து திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க சென்ற போது பார்த்த உங்கள் நண்பரை தான் பிடித்திருக்கிறது. அவரோடு தான் வாழ விரும்புகிறேன் என்று கூறினால் நான் இந்த பெண் குழந்தை வளர்த்து கொள்கிறேன், நீங்கள் இருவரும் சேர்ந்து வாழுங்கள் என்று இருவரையும் சேர்த்து வைப்பீர்களா என்ன??? ஆணுக்கொரு ஞாயம் பெண்ணுக்கொரு ஞாயமா??? என்ன பதிலை நீங்கள் எல்லோரிடமும் எதிர் பார்க்கிறீர்கள். ஒரு பெண் கணவனை விட்டு பிரிந்த பின் சமூகத்தில் படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல.... கணவனை எனக்கு பிடிக்கவில்லை என்றால் இவள் திமிர் பிடித்தவள், அடங்கி போகாதவள் என்று சமூகம் கூறும். கணவனுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் இவள் நடத்தை சரி இல்லாமல் இருந்திருக்கும் அதான் அவன் விட்டு விட்டு போய் விட்டான் என்று கூறும். தவறே செய்யாத உங்கள் மனைவிக்கு பழி சொல் ஏற்படுத்தி கொடுத்தி விடாதீர்கள். மூன்றரை வருடமாக உங்கள் மனைவிக்காக நீங்க எந்த கடமையும் செய்யவில்லை. உங்கள் குழந்தையை வெறுக்கிறீர்கள். இதெல்லாம் சரி தான் என்று நாங்கள் சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா? இங்கு எல்லோரும் சொல்வது போல உங்கள் மனதில் கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் நல்ல எண்ணமெல்லாம் இல்லை. அவள் கைம்பெண்ணாக இருந்தாலும் சரி கணவனோடு இருந்தாலும் சரி உங்களுக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரே ஒரு காரணம் மட்டும் தான். ஒரு பெண்ணின் சாபமே ஏழு தலைமுறை தாக்குமாம். நீங்கள் குழந்தைகளோடு சேர்த்து 4 பெண்களின் சாபத்தை வாங்குகிறீர்கள். பார்த்து கொள்ளுங்கள். நல்ல வேளை அந்த கைம்பெண் உங்களோடு தான் வாழ்வேன் என்று உங்களை போல முட்டாள்தனமாக சொல்லாமல் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்காமல் இருக்கிறாரே என்றொரு சின்ன நிம்மதி இருக்கிறது. உங்கள் மனைவி உங்களுக்கு சரியான தண்டனை தான் கொடுக்கிறார். வாழ்ந்தால் என்னோடு வாழு இல்லையேல் சாவு என்று.... உங்களை போன்ற ஆட்களை அவ்வளவு சாதரணமாக விட்டு விட கூடாது என்று தெரிந்து வைத்திருக்கிறார். நீங்கள் வருவீர்கள் ஒன்றும் தெரியாத பெண்ணை திருமணம் முடித்து உங்கள் இச்சை தீர்த்து கையில் ஒரு குழந்தையும் கொடுத்துவிட்டு உன்னையும் பிடிக்கவில்லை. இந்த குழந்தை மீதும் வெறுப்பாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு வேறொரு பெண் பின்னால் போவீர்கள். இதையெல்லாம் பொறுத்து கொண்டு உங்கள் மனைவியும் அவர் குடும்பமும் அமைதியாய் போக வேண்டுமா என்ன??? இறைவன் பிரம்படியில் ஓசை கேட்பதில்லை ராஜு. கடைசியில் மகள் தான் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு அழுவாள். மனைவிதான் வீதி வரை வருவாள். மனிதன் சாகும்போது ஒருவர் கண்ணிலும் நீர் வரவில்லை என்றால் மனிதன் மண்ணில் வாழ்ந்து புண்ணியம் இல்லை....
Rate this:
Share this comment
Brindha - Bangalore,இந்தியா
08-பிப்-201313:02:19 IST Report Abuse
Brindhaவலியில் சுகம் காண்பவர்கள் உண்டு அதில் நீங்களும் ஒன்று .. ஆனால் மற்றவர்களையும் துன்பத்திற்கு தள்ளிவிட்டு இப்படி நிம்மதி அடைவது அதீத சுயநலத்தை காட்டுது .. உங்கள் பிள்ளை பெண் பிள்ளையாய் இருந்தால் (ஒரு வேளை உங்களவள் மூலமாக ) அந்த பெண்ணின் கணவன் இதையே செய்தா உங்களுக்கு சரியே என்றே படுமோ ?.. இதை ஈகோ லூசு சொல்வதை விட வறட்டு பிடிவாதம் என்று வைத்துக்கொள்ளுங்கள் ... அது மட்டும் இல்ல இன்று எத்தனயோ இல்லறத்தில் தலைவனும் தலைவியும் மனதில் முதல் காதலை தென்றலாய் வருட விட்டுத்தான் அவர்கள் இல்லறத்தை சிறப்பித்து கொண்டிருக்கின்றனர் ... அவர்கள் கண்களுக்கு அவர்கள் மனைவி தொல்லையாய் தெரிவதில்லை ... புரிந்து கொள்ளுங்கள் உங்கள் பிடிவாதம் உங்கள் தொல்லை .. ஏதும் பிழை செய்யாத உங்கள் மனைவியும் பிள்ளையும் எந்த விதத்தில் உங்கள் அன்பை பங்கிட தகுதி அற்றவர்கள் இல்லையெல் எந்த தகுதி உங்களுக்கு உண்டு அவர்களை ஒதுக்க ... எனக்கு புரிந்தவரை அவர்கள் உங்க அன்புக்கு ஏங்கிய காலம் போய் உங்கள் நிழலுக்கு எங்க தொடங்கி இருப்பர் ... அதை செய்ய தொடங்குங்க .. அந்த நிழலில் கொஞ்சம் ஈரம் ..இருக்கட்டும் .....
Rate this:
Share this comment
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
08-பிப்-201323:14:34 IST Report Abuse
HoustonRajaஅன்பு நண்பரே, சூழ்நிலை கைதியாக நீங்கள் உணரும் ஆழமான வலியை என்னால் ஓர் அளவிற்கு புரிந்து கொள்ளமுடிகிறது. முடிந்த வரையில் சுருக்கமாக சொல்கிறேன். வாழ்கையில் எல்லோருக்கும் சில நேரங்களில் இரு பெரிய முரண்களின் (opposing dielemmas) இடையே அமைதியான வழியை காணும் போராட்டம் வரும். உங்களுக்கு உங்கள் மனைவியின் தோழியிடம் கட்டுக்குள் அடங்காத ஈர்ப்பு (கண்களின் வழி - PERCEPTIVE) ஆழமாக வளர்ந்து இருக்கிறது, அது திருமணத்திற்கு சற்று முன் புகுந்ததால் உங்களால் மனைவியின் அன்பில் முழுமையாக புகமுடியவில்லை. அதன் பின் நடந்தவை எல்லாம் a reptitive worsening cycle of your wife's natural response/defence, your egoistic dominance, clueless & insensitive social/family expectations. இவை எல்லாவற்றின் இடையே உங்களின் ஈர்ப்பு மட்டும் இன்னும் ஆழமாகவே உள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை. Love is never supposed to be perfect, because "To Err is Human". Relationships are never perfect either, because of the same reason. நீங்கள் விரும்புபவரை நெருங்கி வாழும்போது தான் கண்களால் ஏற்படும் ஈர்ப்பு குறையும், மனதில் அன்பு வளரும். ஈர்ப்பு கட்டுக்குள் இருந்தால் தான் நம்மால் சரியாக நாம் விரும்பும் முடிவை தேர்வு செய்ய முடியும். காலம் செல்ல செல்ல அன்பில் இருந்து ஒரு ஈர்ப்பு வளரும், அதுவே நமக்கு நிரந்திர கிளர்ச்சியை தரும். முடிவாக, தனிமையில் வாழ்வது எளிமையானது அல்ல. அவ்வப்போது வரும் நோயும், எப்போதும் வரும் வார இறுதி வெறுமையும் கொடுமையானது, ஒரு காலத்திற்கு பின்னும் தனிமையாகவே இருந்தால் அந்த வலி நிரந்திரமானது....
Rate this:
Share this comment
Raju - Bengaluru,இந்தியா
09-பிப்-201314:41:43 IST Report Abuse
Rajuநன்றி HoustonRaja அவர்களே. அக்கொடுமையான தனிமையை பழகிக் கொண்டு இருக்கிறேன். திரு Gokzz அவர்கள் கூறுவது போல், நான் யாருடைய வாழ்கையையும் மென் மேலும் நரகமாக்க விரும்பவில்லை. இத்துடனாவது நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன், அவர்கள் நலன்/எதிர்கால வாழ்க்கை கருத்தில்கொண்டு. ஆனால் அதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. கடனுக்கு அவர்களிடம் குடும்பம் நடத்த விருப்பம் இல்லை. பதில் சொல்லும் நாட்களுக்காக காத்திருக்கும்... ராஜு....
Rate this:
Share this comment
Cancel
Brindha - Bangalore,இந்தியா
05-பிப்-201311:05:46 IST Report Abuse
Brindha மறக்க நினைக்கவோ இல்லை முயற்சித்தோ பயனில்லை அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மறுக்காமல் மறப்பதே ... அதை மறக்க உங்கள் கணவருடன் அதிக நேரம் செலவு செய்யுங்கள் .. அவரை அணு அணுவாய் கவனியுங்கள் உங்கள் மனதை அவரை சுற்றி வர செய்யுங்கள் .. வாழ்வில் அதிகம் உள்ளது நினைப்பதற்கும் யோசனை செய்யவும் .. மனதை வாழ்வின் வேறொரு பகுதிக்கு இட்டு செல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Raju - Bengaluru,இந்தியா
05-பிப்-201300:52:50 IST Report Abuse
Raju வணக்கம், என்னுடைய வயது 30 . ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். நான் பட்டயப் படிப்புடன், ஒரு மென் பொருள் நிறுவனத்தில் பணி புரிகிறேன் கடந்த 5 வருடங்களாக.. “நான் சரியான விலாசத்துடன் வந்து தவறான முகவரியில் தந்து விட்டு சென்று விட்ட தபால்” ஆகிவிட்டேன். சரியான என்னவளின் விலாசத்திற்கு போய்ச்சேரும் என் ஆசையை நிறைவேற்ற தயவுசெய்து உதவுங்களேன்… வாழ்வில் நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என் மண வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன். என் தம்பி, தங்கை மண வாழ்விற்கு எவ்விதத்திலும் தடையாக இருக்க கூடாது என்பதால், என் விதவை தாய்க்கு அதிக சிரமம் கொடுக்க கூடாது என்பதாலும் என் 27 வயதில் 24 வயது இளநிலை பட்டம் பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன். அப்பெண்ணுடன் கல்யாண பத்திரிக்கை கொண்டு செல்லும் போதுதான் அப்பெண்ணின் நண்பியான அக்-கைம்பெண்ணை (அப்போது என் அவள் வயது 27) சந்தித்தேன். அப்போது எனக்குள் தோன்றிய எண்ணங்கள்,”நான் இப்பெண்ணை தான் மணந்திருக்க வேண்டும், அவளின் செல்லக் பெண்குழந்தைக்கு(வயது 6) ஒரு நல்ல அப்பாவாகவும் இருக்க வேண்டும்” என்றே தோன்றியது. ஆனால் தைரியம் எனக்கு இல்லை செய்த கல்யாண ஏற்பாடுகளை நிறுத்தும் அளவிற்கு, ‘நான் உன் தோழியை மணம் செய்ய விரும்ப வில்லை, உன்னைத்தான் மணம் செய்ய விரும்புகிறேன்’ என்று என்னவளிடம் கூறும் அளவிற்கு. அவளுடன் மட்டும்தான் என் வாழ்கையே இருக்க முடியும் என்பதை எனக்கு கூறிட யாரும் அன்று இல்லை. பயந்து, என் விதியை நொந்து கொண்டு விதிப்படி, கல்யாணம் செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று எண்ணி, கல்யாணமும் செய்தேன், உடனே ஒரு பெண் குழந்தையும் உருவாகி விட்டது. நான் திருமணம் செய்த பெண்ணிடம் ஒரு மாதமே பேசி பழக முயற்சி செய்தேன், அப்பெண்ணிடம் என் மனம் ஒன்றவே இல்லை. எப்போதும் என் மனம் என் வாழ்வையே இழந்துவிட்டதாகவே எண்ணி மனம் புழுங்கி எதிலும் விருப்பம் இல்லாமல் செயல் பட ஆரம்பித்தது. பல முறை முயன்றும் என் மனதை என்னால் சமாதானம் செய்ய முடியவில்லை. விளைவு வீட்டில் பெரும் சண்டை. கல்யாணம் செய்த 4 மாதங்களில் என் குடும்பத்தார், அப் பெண்ணின் குடும்பத்தார் எல்லோரும் வந்து பேசும் அளவிற்கு சென்று, 3 மாதம் முழுகாமல் இருந்த அப் பெண்ணிடமும் மற்றும் எல்லோரிடமும் எனக்கு விவாகரத்து கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டேன். அன்று முதல் இன்று வரை நானும், அப் பெண்ணும் தனி தனியாகத்தான் வாழ்கிறோம். பேசிக்கொள்வது கூட இல்லை. நான் வேலை செய்யும் இடத்தில தனி ரூம் எடுத்து தங்கி இருக்கிறேன். என் அம்மாவுடன், குழந்தையுடன் என் ஊரிலேயே அவர்கள் இருந்து வருகிறார்கள். எங்களை சேர்த்து வைக்க எடுக்கப்பட முயற்சிகள், அறிவுரைகள் எல்லாவற்றயும் காற்றில் பறக்கவிட்டேன். நாளுக்கு நாள் அதிகமான வெறுப்பு அப்பெண்ணை பார்த்தாலே வெறுக்கும் அளவிருக்கு போய்விட்டது. என் மனம் இப் பெண்ணிடம் வாழ 0.01% கூட சம்மதிக்க இல்லை என்பதை சொன்னேன். ஆனால் “நீ வாழ்ந்தால் என்னோடு மட்டுமே வாழ், இல்லையேல் செத்துப்போ, அப்புறம் நான் தனியாக வாழ்ந்து கொள்கிறேன். இப்போது போக மாட்டேன் என்கிறார்கள்” அப்பெண்மணி. பக்தி,ஆன்மிகம்,சன்யாசம் போன்ற வார்த்தைகளை ஆராய்ந்து, மாற்று வழியாக முயன்று, என்னவளுடனான(என் காதலி) வாழ்வு மட்டுமே முடியும் என்று திரும்பி விட்டேன். ஒருவேளை என்னவளுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் இந்த ஜென்மத்தில் இல்லாமல் போனாலும், அவளுடைய நினைவுகளுடனே வாழ விரும்புகிறேன்(தமிழ் சினிமா கிளைமாக்ஸ் இல்லங்க) நிஜமாக. என்னை அவளுடனும் சேர்ந்து வாழ விட மாட்டேன், அவள் நினைவுகளுடன் நான் தனியாக வாழவும் கூடாது என்கிறார்கள், நான் தாலி கட்டியப் பெண்ணும், என் குடும்பத்தாரும். கல்யாணம் செய்து பின் ஒருநாள் "நான் உன் தோழியை முதலில் சந்தித்திருந்தால், அவளையே மணம் செய்திருப்பேன்" என்று நான் தாலி கட்டிய பெண்ணிடம் கூறி விட்டேன். இந்த செய்தி என்னவள் காதிற்கும் யார் மூலமோ சென்று விட்டது. பின்பு நான் பேச கிடைத்த சந்தர்பங்களில் நான் அவ்வாறு கூறி இருக்க கூடாது என்றும் அது அவர்கள் நீண்ட நாள் நட்பை அழித்து விட்டதாகவும் கூறி வருத்தப்பட்டுள்ளாள் என்னவள். என்னவளுக்கு எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் தெரியும். இப் பிரச்சினைக்கு மூல காரணம் என்னவள் மீதுள்ள காதல் என்பதை நான் யாரிடமும் நேரடியாக ஒப்புக்கொள்ள வில்லை என்றாலும் எல்லோருக்கும் இது தெரிந்த ஒன்றே. என்னுடைய விருப்பத்தை இந்த நாள் வரை யாரும் அங்கீகரிக்க வில்லை, எங்கள் குடும்பம், ஊர், நட்பு எல்லோருமே.இங்கே நான் செய்த எதையும் ஞாயப்படுத்த விரும்ப வில்லை. இதை எல்லாம் நான் விரும்பும் அப் பெண்ணிடம் முழுமையாக/நேரடியாக பேசியதில்லை. நான் தாலி கட்டியப் பெண் எனக்கு விவாகரத்து கொடுத்த பின் என்னவளுடன் இவ்விசயங்களை வெளிப்படையாக பேசலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த விவாகரத்து கிடைக்கும் நம்பிக்கை மிகவும் குறைந்து விட்டது. உண்மையில் என் மனம் என்னவளை மட்டுமே நினைக்கிறது, அவளுடன் மட்டுமே பேச துடிக்கிறது, அவளுக்காக மட்டுமே வாழ வேண்டுகிறது, அவள் இல்லையேல் எனக்கு எதுவும் (வாழ்வு, அம்மா, குழந்தை, குடும்பம், நட்பு, ஊர், உலகம், உணவு, உயிர் எல்லாமே) வேண்டாம் என்றே தோன்றுகிறது. நான் எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவே படுகிறது. நான் பிதற்றுவதாகதான் உங்களுக்கு தோன்றும், இது கடந்த 3.5 வருடங்களாக நான் படும் சித்ரவதை. என் இயலாமை கண்டு எனக்கு என் மேல் ஏகப்பட்ட வெறுப்பு. யாரிடமும் பேச, பழக, சந்திக்க விருப்பம் இல்லை. தனிமை மட்டுமே விரும்புகிறேன். என் வேலையில் கடமை உணர்ச்சி/முன்னேற்றம் இல்லை. தற்கொலை எண்ணம் தொடர்ந்து இருந்ததாலும், அதற்கும் தைரியம்இல்லை. மன நோயின் பண் பட்ட நிலையில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. நான் வாழ்க்கையில்(/காதலில்) தோற்று கொண்டிருக்கிறேன். வெற்றி பெற வழி தெரிந்தால் காட்டுங்களேன் தயவு செய்து. என்னால் வாழ முயன்று முடியாமல் போன, ஏற்கனவே எல்லோரும்(உறவு/நட்பு) கூறிய, ‘நான் தாலிக்கட்டியப் பெண்ணிடம் சேர்ந்து வாழ வேண்டும்’ என்று தயவு செய்து மீண்டும் கூறவேண்டாம். (நான் வாழ்ந்து சாதிப்பது என்ன என்கிறீர்களா?) எல்லோருக்கும், தினமலருக்கும் நன்றி....
Rate this:
Share this comment
shame on you - Chennai,இந்தியா
05-பிப்-201304:17:54 IST Report Abuse
shame on youஉன்ன போஎ ஒரு லூச இன்னும் டைவர்ஸ் பண்ணாம இருக்கிற உன் மனைவி தாண்டா பிரியா லூசு....
Rate this:
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
05-பிப்-201305:32:59 IST Report Abuse
GOWSALYAஅன்பு மகன் ராஜு, இதற்கு நீங்கள் ஒரு நல்ல முடிவை எதிர்பார்த்தால், நேராக,மகன் மீனவனைத் தொடர்பு கொள்ளுங்க.நிச்சயம் மகன் ,உங்களுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை....மகன் மீனவன் இதற்கு நல்ல ஒருமுடிவு உங்களால்தான் கொடுக்க முடியும். நிச்சயம் இதற்குப் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்....அம்மா....
Rate this:
Share this comment
Brindha - Bangalore,இந்தியா
05-பிப்-201310:50:43 IST Report Abuse
Brindhaஉங்கள் மனைவியை நீங்கள் இறந்த பிறகு உங்களுக்கு பிடிக்குமா ?.. அபொழுது அவள் உங்களவள் ஆக தெரிவாளா ? உங்கள் மனதில் இருக்கும் தேவையற்ற என்னத்தை சாகடியுங்கள் .. ஒரு பெண்ணை நோகடித்து இன்னொரு பெண்ணோடு நன்றாக வாழ முடியுமா என்று யோசனை செய்ய .வேண்டும் ....
Rate this:
Share this comment
Ganapathy Kannan - Singapore,சிங்கப்பூர்
05-பிப்-201311:27:42 IST Report Abuse
Ganapathy Kannanதம்பி, நீங்கள் படித்தவர்தானே. ஆனால் நீங்கள் நடந்து கொள்ளம் முறை கல்வியறிவு அற்றவர்கள் நடந்து கொள்வதை விட மோசமாக இருப்பதாகத் தோன்றுகிறது. சொல்லப்போனால், கல்வி கற்காதவர்களில் எத்தனையோ உண்மையான சிந்தனையாளர்கள் உள்ளனர். தம்பி தங்கை வாழ்வுக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, திருமணம் செய்ததாகச் சொல்கிறீர்கள். அந்த உங்கள் தங்கையைத் திருமணம் செய்பவன், நீங்கள் இப்பொழுது உங்கள் மனைவிக்குச் செய்வது போல் செய்தால், நீங்கள் எப்படி அதை எதிர்கொள்வீர்கள். உங்கள் வீட்டுப் பெண் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் யார்வீட்டுப் பெண்ணையோ கட்டி, அவரை குழந்தையுடன் நடுத்தெருவில் விடுவீர்களா. என்னவள் என்னவள் என்கிறீர்களே, ஆனால் உண்மையிலேயே உங்களவள், உங்களைக் கட்டிய மனைவியல்லவா. விதவை மறுமணம் என்பது போற்றுதலுக்குரியது. ஆனால் கட்டிய மனைவியை, நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டு, எந்த மடையனும், விதவைக்கு மறுவாழ்வு கொடுக்கச் சொல்லவில்லை. வாழ்க்கையைத் தொலைத்த பெண்ணுக்கு வாழ்வளித்தல் சிறந்தது. ஆனால் நீங்கள் செய்வது கொஞ்சம் கூட சரியானதல்ல. ஆண் என்ற அகந்தை இவ்வாறெல்லாம் செய்யத் தூண்டுகிறது. ஒரு வேளை புதியவள் கழுத்தில் தாலி கட்டப் போகும்போது, அவளைப் பார்க்க வேறு எவளாவது வருவாள். அவள் மேல் உங்களுக்கு, இதைவிட அழியாத அமரகாதல் உண்டாகலாமல்லவா. அந்த கணவனை இழந்த பெண்மட்டும், சற்று யோசிக்கும் திறன் கொண்டவளாக இருந்தால், இதுபோன்ற திடமற்ற மனதுடைய, தங்களைப் போன்ற நபரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள். நாளைக்கு அவளையும் நீங்கள் நடுத்தெருவில் நிறுத்த பெறுமளவு வாய்ப்பிருக்கிறது. மற்றவர்கள் அனைவரின் வேதனையும் கொட்டிக் கொண்டு, நீங்கள் சந்நியாசம் முயற்சித்தது மிகவும் வேடிக்கைக் குரியது. உங்கள் உறவினர்கள் அனைவர் சொல்லியும் கேட்காத நீங்கள், நாங்கள் எழுதும் இந்த நாலுவரிகளைப் படித்தா திருந்தி விடப்போகீறீர்கள். நிச்சயமாக இல்லை. ஆண் இன்னும் தன் திமிரை கைவிடாமல், தன் சபல புத்தியால் இதுபோன்று, பெண்களை கண்ணீர் சிந்த வைக்கிறானே என்ற ஆற்றாமையைப் பதிவு செய்யவே இந்த வரிகளை இங்கு எழுதி வைக்கிறோம். -அன்புடன் கண்ணன்...
Rate this:
Share this comment
Stay Hungry. Stay Foolish. - La Jolla,யூ.எஸ்.ஏ
06-பிப்-201300:44:27 IST Report Abuse
Stay Hungry. Stay Foolish.சிரிப்பு தான் வருகிறது. உன்னை போன்ற ஒரு பைத்தியகாரனை, ஒரு காமுகனை கட்டிய உன் மனைவிதான் உண்மையிலேயே பாவம். உங்கள் மனைவி உண்மையிலேயே உன்னைவிட புத்திசாலி மற்றும் நல்லவர். இல்லையென்றால் 4 வருடம் உன்னுடன் எல்லாம் குடும்பம் நடதியிருப்பாளா???...
Rate this:
Share this comment
saravanan - Dares Salaam,தான்சானியா
07-பிப்-201319:18:00 IST Report Abuse
saravananஉங்க காதலியோட ஒருமுறை வெளியே போயி வாங்க........ அனேகமா புதுசா இன்னொரு காதலி கிடைக்க வாய்ப்பிருக்கு........
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
04-பிப்-201316:58:40 IST Report Abuse
காயத்ரி நாம் சாப்பிடும் தட்டில் வைக்கப்பட்ட உணவு கெட்டுப் போனது என்று தெரிந்ததும், அதை எடுத்து வீசிவிட்டு, தட்டைக் கழுவி, புதிய உணவு வைத்து உண்டால் எதுவும் அருவெறுப்பு உண்டாகாது. அதை விட்டுவிட்டு, அந்தக் கெட்டுப் போன உணவை, அதே தட்டில் வைத்துக் கொண்டே, புதிய உணவை உண்ணத் தொடங்கினால் அருவெறுப்பு ஏற்படாமல் எண்ண செய்யும். அற்புதமான வரிகள் திரு.கணபதி கண்ணன்..வாழ்த்துகள். கெளசல்யா அம்மாவின் கருத்துக்களும் அருமை. கமலஹாசன், மன்சூர் அலி, குமரேசன், மகுடேஸ்வரன் அனைவரின் கருத்துக்களும் அருமை.
Rate this:
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
08-பிப்-201304:23:10 IST Report Abuse
GOWSALYAசகோதரர் கணபதி கண்ணன் சொன்ன கருத்து மிக உண்மை........அற்புதமான வரிகள்....
Rate this:
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
04-பிப்-201314:33:34 IST Report Abuse
Vaal Payyan கருத்து கண்மணிகளா ... மல மலையா எழுதி குவிக்குறீங்க ...
Rate this:
Share this comment
Cancel
basha - chennai,இந்தியா
04-பிப்-201313:52:58 IST Report Abuse
basha இவர்கள் கள்ள காதலில் அந்த புதிதாக திருமணம் செய்யப்பட்ட பெண்ணும் பாதிப்பு அடைகிறாள் ...
Rate this:
Share this comment
Cancel
basha - chennai,இந்தியா
04-பிப்-201313:49:19 IST Report Abuse
basha நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவிக்கிறேன் என் மனைவி என்க்கு வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.