அலைகள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2013
00:00

ஆயுள் தண்டனை ஒரு வழியா முடியுற மாதிரி இருந்தது ராகவனுக்கு!
"எப்படா கதவு திறக்கும்ன்னு, கைதி அங்க ஜெயில்ல பரபரக்கலாம். இங்க நாம சுவர் கடிகாரத்தை, அடிக்கடி நிமிர்ந்து பார்க்க வேண்டியிருக்கு. மத்தபடி, என்னிக்குத்தான் நாம வீட்டுக்கு போக நேரம் ஆயிடிச்சான்னு கடிகாரத்தை பாத்திருக்கோம்? கைதிக்கு, வெளியே மலர் மாலையைப் போட்டு அழைத்துப் போக, உறவினர், நண்பர்கள் ஒருவேளை வரலாம். இங்க, உள்ளேயே எனக்கு பூங்கொத்து கொடுத்து, சக ஊழியர்கள் வழியனுப்பப் போகின்றனர், என்ன... இந்த அடைபட்ட வாசம் மனசுக்கென்னவோ ரொம்ப பிடிஞ்சிருந்தது...'
சுற்றும் முற்றும் பார்த்தார். நிசப்தம்! சாதாரணமாக வேலையைக் கவனித்தபடி இருப்பர். ஆனால், முதல் நாள், "டிவி' சீரியலை பற்றி குசுகுசுவென்று பேச்சு மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கும். ராகவன், தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். எதிலேயும் ஈடுபட்டுக் கொண்டதில்லை. இன்று சப்தம் வெகுவாகக் குறைந்திருந்தது. அனைவரும் அவரையே பார்ப்பது போன்ற பிரமை! பிரமையல்ல உண்மைதான் என்று, பரிமளாவை நோக்கியபோது தெரிந்தது. ராகவன் பார்ப்பது தெரிந்ததும், தலையைத் தாழ்த்திக் கொண்டாள். இதுவரை அவள் வேலையை மட்டும் கண்காணித்த ராகவனுக்கு, இன்று அவள் கொண்டையும், அதிக முகப்பவுடரும் சேர்ந்து தென்பட்டன. அவருக்கு பூங்கொத்து, இன்று அவள் தரலாம். இந்த மாதிரி பிரிவு உபசார விழாக்களில், அவள், தோற்றத்தினால் அவளுக்கு முக்கியத்துவம் அதிகம். "நீ தரயா... நீ தரயா...' என்று, ஒவ்வொருத்தரிடமும் போய் கேட்டு கொண்டிருப்பாள். "நீயே... தா' என்று மற்ற பெண்கள் கொஞ்சம் பொறாமையோடு சொல்லும்போது, அவளுக்கு களிப்பு அதிகரிக்கும்.
அலுவலக ஊழியர்களும் அன்று அவரை, ஏதோ தீவிர சிகிச்சை பிரிவு நோயாளி மாதிரி தான் முதலில் கருதியிருக்க வேண்டும். அவர் முகத்தில் தவழ்ந்த சிரிப்பை கண்டு துணுக்குற்று, முகத்தை திருப்பிக் கொண்டனர். எத்தனையோ ஆண்டுகள் வேலை பார்த்து இருந்தாலும், ராகவன் திடீரென்று அவர்களுக்கு, ஒரு வினோத பொருளாக தெரிந்தார்.
வழக்கமாக அனைவருக்கும் தரும் இரண்டாவது வேளை டீயை, ராகவன் மேஜை மேல் வைத்து விட்டு, தயங்கி நின்றான் செந்தில். முன்பெல்லாம், தலையை அசைத்து விட்டு, வேலையில் மூழ்கி விடுவார் ராகவன். ஆறின டீயை, பிறகு, ஏதோ ஞாபகம் வந்தது போல், அவசரம் அவசரமாக பருகுவார். இன்று கோப்பையைக் கையில் எடுத்து, நன்றாக தலை நிமிர்ந்து செந்திலைப் பார்த்து, புன்முறுவல் பூத்தார் ராகவன். அத்தனை வருட சேவைக்கு, அவனுக்கு நன்றி சொல்வது போல் இருந்தது.
""ஆறுமாதத்துக்கு மேலேயே உங்களுக்கு லீவு இன்னும் பாக்கியிருக்காம் ராகவன். இந்த வருஷ காஷுவல் லீவையும் கூட நீங்க தொடலயாமே. பர்சனல் டிபார்ட்மென்டில் சொல்லிட்டிருந்தாங்க. செட்டில்மென்ட் ஆக ரெண்டு மாசமாவது ஆகலாம்... அப்புறம், அக்கம் பக்கத்தில ஏதேனும் பார்ட் டைம் வேலைக்கு சொல்லி வச்சுட்டீங்களா? அக்கவுண்டன்சி, ஆடிட் எல்லாம் உங்களுக்குத்தான் அத்துப்படியாச்சே, பைனான்ஸ் கம்பெனிக்காரர் ஓடி வருவாங்க,'' தணிந்த குரலில் கேட்டுக் கொண்டே, மாதவன் வந்து உட்கார்ந்து கொண்டார். அவருக்கு பிரிவு உபசாரம் அடுத்த மாதம்.
மாதவன் கண்களில் இப்போதே ஒரு சோகம். மத்திய வர்க்கத்தில் ஓய்வு பெற போகிறவர்களிடம் பொதுவாக இருக்கும், இடி விழுந்த நிலை, ராகவனிடம் அறவே இல்லாதது, ஆச்சரியமாக இருந்தது மாதவனுக்கு...
""அட நீங்க ஒண்ணு... அந்தந்த பருவத்துல எதை செய்யணுமோ அதைத்தான் செய்யணும் மாதவன். உழைக்கறப்ப கடுமையா உழைச்சாச்சு! எனக்கும் திருப்தி. மத்தவங்களுக்கும் சந்தோஷம். இப்ப ஓய்வுன்னா பூரண ஓய்வுதான். ரொம்ப வருஷமா, இந்த நாளைத்தான், "கவுன்ட் டவுன்' செய்துகிட்டு இருந்தேன். எத்தனை நாளைக்குத் தான் உழைக்கிறது? நாம என்ன எந்திரமா? நமக்குன்னு கொஞ்ச நாளாவது இருக்க வேண்டாமா? பார்ட் டைம் வேலையில பணம் கிடைச்சாலும், நம்மள கலெக்ஷனுக்குத் தான் அனுப்புவாங்க. அந்த கதி தேவையா!''
ராகவனது மனோதிடம், மாதவனிடம் பொறாமையை உண்டாக்கியது.
""உங்களுக்கென்ன சார், பொண்ணுக்கு கலியாணம் செய்தாச்சு; பையனையும் குடும்பஸ்தனாக்கி தனிக் குடித்தனமும் வச்சிட்டிங்க.'' மாதவன் சொன்னது ராகவன் காதிலேயே விழவில்லை. மோட்டு வளையைப் பார்த்தப்படி முறுவலித்து கொண்டிருந்தார்.
""ஒரு நாய் வளர்க்கணும் மாதவன். விடியற்காலைல அதோட வாக்கிங் போயிட்டு வரணும்; கழுவி, குளிப்பாட்டி ஒரு தோழனாவும் அதை மாத்தணும்; துளசி, கருவேப்பிலை, ரோஜான்னு வீட்டுப் பின்னால தொட்டிகளா வைக்கணும்; ஆற, அமர தண்ணீர் ஊத்திப் பாக்கணும். இந்து பேப்பர், சுடோகுன்னு பொறுமையா ஒரு மணி நேரம்; யோகா கிளாஸ் - பக்கத்திலேயே இருக்கு. இப்பவாவது சேரணும்.
""நானும், என் மனைவியும் எங்கயும் வெளிய போனதில்ல. ரயில்வேலேயே நிறைய டூர் போடுறாங்களாம். ரொம்ப சீப்பாத்தான் இருக்குன்னு கேள்விப்பட்டேன். மாசத்துல, ஒரு டூராவது வீட்டுக்காரியோட போயிட்டு வந்துடணும். ஒண்ணுமே இல்லாட்டா, சும்மா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்லேயோ, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்லேயோ ஏறி, கொல்கத்தா, டில்லின்னு போயிட்டு, அதே நாள், அதே டிரெயின்ல ஏறி வந்துடணும். ஊரெல்லாம் பாத்த மாதிரி
இருக்கும்,'' தன் கனவுகளை மாதவனுடன் பகிர்ந்து கொண்டார் ராகவன்.
""சார் வாங்க... எம்.டி., வரப் போறார். நிகழ்ச்சியை ஆரம்பிக்கணும்,'' ராகவனை அவசரப்படுத்தினாள் பரிமளா.
முதல் தடவையாக, அதுவும் ரிடையராகும் சமயத்தில், மேடையில் உட்காருவது ராகவனுக்கு வினோதமாக இருந்தது. சற்றே கூனிக் குறுகி அமர்ந்து கொண்டார். எம்.டி.,தான், அவரை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
பரிமளா ஆடி, ஓடி நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். ராகவனுக்கு, அவ்வப்போது தலையை தாழ்த்தி கொள்ள வேண்டி இருந்தது. அவ்வளவு பாராட்டுதல்கள். ராகவனுக்கே அவரது நல்ல குணங்கள், அப்போதுதான் புரிந்தன.
நிகழ்ச்சி முடிந்து, ஊழியர் ஒருவர் போர்த்திய சால்வையோடு, அவரை வீடுவரை கொண்டு வந்து விட்டார். ஓய்வு பெற்றவர்களை, அப்படி நடத்துவது கம்பெனியின் வழக்கம்.
வழக்கமாக லஞ்ச் பாக்ஸ் பையை, மனைவி பர்வதம் கையில் கொடுத்துவிட்டு, கால் கழுவச் செல்வார். இன்று, அவரை வரவேற்க,
பர்வதத்துடன் பெண் கவுசல்யாவும், பையன் அபிராமனும் ஆஜர். அவர்களுடன் வந்திருந்த மருமகளும், மாப்பிள்ளையும் முறுவலித்தனர். எப்போதாவது அவரைப் பார்க்கும் பேரனும், பேத்தியும் தான், கையில் சால்வை, பூங்கொத்துடன் வரும் தாத்தாவை மருட்சியுடன் பார்த்தனர். "கோமாளியாகத் தெரிகிறமோ...' என்று ராகவனுக்கு சந்தேகம்!
""இந்த தடவை உங்க நட்சத்திர பிறந்தநாள், இரண்டுநாள் கழிச்சுத்தான் வருதுப்பா! கம்பெனி நட்சத்திரப்படி, பிறந்த நாளை பாத்திருந்தா இன்னும் ரெண்டு வாரம் சர்வீஸ் இருந்திருக்கும்,'' புன்முறுவலுடன் சொல்லிக் கொண்டே, பூங்கொத்து மற்றும் சால்வையை கையில் வாங்கிக் கொண்டாள் கவுசல்யா.
""அன்னிக்கு கோவில்ல அபிஷேகத்துக்கு சொல்லிட்டோம்பா! நீங்க திருக்கடவூர் போகணுமான்னு, அன்னிக்கு போன்ல கேட்டேன். நீங்க தான் பதிலே சொல்லல,'' அபிராமும், தங்கையுடன் சேர்ந்து கொண்டான். பர்வதம், குழந்தைகளின் ஒட்டுதலைப் பார்த்து பூரித்த வண்ணம் கணவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கவுசல்யாவும், அபிராமனும், ராகவன் முன் வந்து அமர்ந்து கொண்டனர். மாப்பிள்ளை தயங்கி தயங்கி நின்று கொண்டார். பையனை, ராகவன் மடியில் அமர்த்தி விட்டு, மாமியாருடன் நின்று கொண்டாள் மருமகள். கவுசல்யாவின் மகள், பாட்டி இடுப்பில் ஏறிக் கொண்டாள். ராகவன் பேரனையே பார்த்தார். பேரனும் கண்கொட்டாமல் தாத்தாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பேர குழந்தைகளை கையில் எடுத்துக் கொண்டதில்லை. மூச்சா போய்டுமோன்னு பயம். கொஞ்சியதில்லை. திடீர்ன்னு அவைகள் அழத் தொடங்கினாலும், என்ன செய்வது என்று தெரியாது. ஏன். அபிராமன், கவுசல்யா குழந்தையாக இருக்கும்போதும், வீட்டில் கூட ஆபீஸ் பைலில் மூழ்கியிருப்பார். அவர்கள் கத்தினால் கூட, "பர்வதம்' என்று மட்டும் குரல் கொடுப்பார். அவ்வளவுதான்... முதல் தடவையாக பேரனின் கரங்களை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார் ராகவன்.
""அப்பா... டாக்டர், மருந்துன்னு தேவைப்பட்டா சொல்லுங்கப்பா! நாங்க பார்த்துக்கிறோம்.''
அபிராமனிடத்தில் உண்மையான அக்கறையிருந்தது.
அபிராமன் ஏதோ பேச முனைந்து, தயங்குவது ராகவனுக்குப் புரிந்தது. கவுசல்யாவும், அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பேத்தியுடன் சமையல் அறைப்பக்கம் நகர முற்பட்டுக் கொண்டிருந்தாள் பர்வதம். ராகவனுக்கு குழப்பமாக இருந்தது... ""ஏதாவது நாடகத்துக்கு ஒத்திகையோ!''
""என்னம்மா... ஏதாவது பணம் கிணம் வேணுமா?'' கவுசல்யாவை நேரடியாக கேட்டார் ராகவன்.
அபிராமன் பாவம். சின்ன வயதில் நோட்டுப் புத்தகம் வேண்டும் என்றாலும், அம்மா மூலமாகத் தான் வாங்குவான். என்னிக்கும் அவரிடம், அவனுக்கு இருந்த மரியாதைக்கு குறைவிருந்ததில்லை. ""எப்படியும் பி.எப்., கிராஜுவிடின்னு கணிசமா பணம் வரும். அது உங்களுக்குத்தான் போகணும். எனக்குன்னு கொஞ்சம் வைச்சுட்டு, மிச்சத்தை கொடுத்துடறேன். எப்ப கொடுத்தா என்ன?'' ராகவனிடம் தயக்கமில்லை.
""சே...சே... அப்படியெல்லாம் ஒண்ணும் அவசியமில்லைப்பா?'' அபிராமனும், கவுசல்யாவும் ஒரு சேரக் கூவினர். மாப்பிள்ளை முகத்திலும் ஒரு சின்ன வாட்டம். "நான் உங்க கிட்ட எப்ப என்ன கேட்டேன்...' என்று, அவர் நினைப்பது போலிருந்தது. "ஏதோ அவசரமாக தப்பாக கேட்டுட்டோமோ ...' என்ற எண்ணம், ராகவனையும் மெல்லச் சூழ்ந்தது. வேற என்ன என்று கேட்பது போல அவர்களையே பார்த்தார். ஏன் பர்வதம் தலையைக் காட்டவில்லை என்று அவருக்கு புரியவில்லை.
""கவுசல்யா மற்றும் உங்க மருமகள் ரெண்டு பேரும் படிச்சிருக்காங்கப்பா. கல்யாணத்துக்கு முன்னாடி வேலையில் இருந்ததும், பின்னால விட்டதும் உங்களுக்குத் தெரியும். இப்ப வேலைக்கு போகலாம்ன்னு அவர்களுக்கு அபிப்ராயம் இருக்கு. வேலையும் கிடைக்க போறது. அது சம்பந்தமா உங்க கிட்ட பேசலான்ம்ன்னு வந்தோம்.''
""தாராளமாக போகலாமே... ரெட்டை மாட்டு வண்டியா, வீட்டுல ரெண்டு சம்பாத்தியம் இருக்கிறது. இந்த காலத்துக்கு அவசியம் தான். கார், வீடு, வாசல்ன்னு உங்களுக்கு நிறைய ஆசைகள் இருக்கலாம். தப்பில்ல.
""படிச்ச படிப்பும் உபயோகத்துல இருக்கும். கனவுகளும், நம்பிக்கையுமாகத் தான் நீங்க வாழணும். இந்த சின்ன விஷயத்துக்கு, என் சம்மதம் வேணும்ன்னு நீங்க நெனைச்சதே எனக்கு பெருமையா இருக்கு. வளர்ந்த பிள்ளைகளாயிட்டிங்க... இதெல்லாம் எப்பவாவது வந்தப்ப சொன்னாக்கூடப் போதும்.''
""அதில்லைப்பா...''
அபிராமன் தயங்கியபடி அம்மா இருக்கிறாரா என்று பார்த்தான். அம்மா எப்போதோ கிச்சனுக்கு பேத்தியுடன் பறந்திருந்தார். வேற என்ன என்று குழம்பியபடியே ராகவன், குழந்தைகளையே பார்த்தார்.
""எங்க ரெண்டு பேருக்குமே, சின்ன குழந்தைகள் இருக்காங்க. நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சப்புறம், குழந்தைகளைப் பாத்துக்கறதுக்கு ஒரு வழி பண்ணனும்பா,'' அப்பாவின் முகத்தை பார்த்துக் கொண்டேபேசினாள் கவுசல்யா.
""ஏன்? அங்க கிரச் ஒண்ணும் பக்கத்தில இல்லையா? வீட்டோட கூட முழு நேர வேலைக்காரி வச்சுடலாம்.''
அவர்களுக்கு புத்திமதி சொன்னாலும், ராகவனுக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது போல இருந்தது.
""கிரச் ரொம்ப தள்ளி இருக்குப்பா... அபிராம் பையன் பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சாச்சு, ஆனா, இந்த வருஷம் தான் உங்க பேத்தியையும் நர்சரில போடணும். பள்ளிக்கூடம், கிரச் இரண்டுக்கும், போக வர ஏற்பாடு செய்யறதும், எங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு சுலபம் இல்ல. குழந்தைகளும் எப்படி பழகிக்குமோ? நம்பகமான வேலைக்காரி ரெண்டு பேருக்குமே கிடைக்கறது துர்லபம்.''
""அப்பா... உங்க பேரன், பேத்தி ரெண்டையுமே இங்கயே உங்ககிட்ட வளர்க்கலாம்ன்னு பார்க்கறோம். பக்கத்திலேயே நிறைய பள்ளிக் கூடங்கள் இருக்கு. நாங்க இருக்கறதும் உள்ளூர் தான். சனி, ஞாயிறு, மத்த லீவ் நாட்கள்ல் வந்து பாத்துக்கறோம். இங்க குழந்தைகளும் பழகிக்க நேரமாகாது. அம்மா பாத்துக்கற மாதிரி எங்களால் கூட குழந்தைகளை கவனிக்க முடியாது. எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்.
ராகவனுக்கு உள்ளூர திக்கென்றிருந்தது. வெளியில் காட்ட முடியவில்லை. மென்று முழுங்கிக் கொண்டிருந்தார். "தினசரி குழந்தைகளோட படிப்பு, பள்ளிக்கூட சமாச்சாரங்களை நீங்கதான் பாத்துக்கணும்'ன்னு அவங்க மறைமுகமாக சொல்வதும், ராகவனுக்கு புரிந்தது. பர்வதம் வெளியில் வருவாளா என்று பார்த்தார். காணவில்லை. அபிராமும், கவுசல்யாவும் முன்னாலயே கலந்து பேசி வந்திருக்கணும். வியர்க்க ஆரம்பித்திருந்தது ராகவனுக்கு.
"நர்சரிக்கும், பிரைமரி ஸ்கூலுக்கும் நேரம் வித்தியாசம் இருக்கும். முதல்ல ஒரு குழந்தையை விடணும். அடுத்தது இன்னொரு குழந்தை. குழந்தைகள் நம்மகிட்ட இருந்தா ஸ்கூட்டர் ஓட்ட ஆரம்பிக்கணும். இல்லைன்னா பஸ் ஸ்டாப் எதுன்னு பாக்கணும். எப்பவாவது மீட்டிங் இருந்தாலும், கார்டியனா போக வேண்டியிருக்கும். பள்ளிக்கூடத்துல, ஹோம் வொர்க் குடுத்தா, அதுக்கும் குழந்தைகளுக்கு உதவி பண்ணனுமோ...' எண்ண ஓட்டங்கள், ராகவனின் வயிற்றில் புளியை கரைத்தன.
பெண்ணும், மருமகளும் தவிப்போடு ராகவன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தனர். ""கவுசி... உம் பொண்ணு சாப்பிட அடம் பிடிப்பான்னு சொன்னியே... எங்கிட்ட பாரு! ரெண்டு வாய் அதிகமாகவே எடுத்துகிட்டா, ஊட்றதுக்கு உனக்கு பொறுமையே இல்ல,'' பர்வதம் குழந்தையின் வாயைத் துடைத்தபடியே வந்தாள். ஒரு வினாடி கணவர் பக்கமும், பர்வதம் பார்வையை திருப்ப மறக்கவில்லை.
கணவரின் எண்ண ஓட்டம் பர்வதத்திற்குத் தெரிந்தது தான். இரண்டு மூணு மாசமா சரியான தூக்கமே ராகவனுக்கு இருந்ததில்லை. பாதி ராத்திரியெல்லாம் காலை மாற்றிக் கொண்டு புரண்டு கொண்டிருப்பார்.
"கால் வலி இருக்கா, புடிச்சு விடட்டுமா?' என்று பர்வதம் கேட்டதுண்டு.
"அதெல்லாம் ஒண்ணுமில்லே பர்வதம். வேலை பாக்கற கட்டத்துக்கு, ஒரு முழுக்கு போட்டதும், நம்ம வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணும்ன்னு மனசளவில் திட்டம் போட்டுட்ருந்தேன். அவ்வளவுதான்!'
குழந்தை மாதிரி கணவர் குதூகலத்துடன் சொல்லும்போது, பர்வதத்திற்கு சிரிப்பும், நெகிழ்ச்சியும் சேர்ந்து வரும்.
பாவம்... கல்யாணம் ஆனதில் இருந்து, அவரை நேராக நிமிர்ந்து பார்த்துக்கூட பேசியதில்லை பர்வதம். "எனக்கு ஏதாவது சங்கடம் இருக்கும்ன்னு மட்டும் நெனைச்சிடாதீங்க...' என்று, ராகவனுக்கு இன்று அவள் தன் கருத்தை மறைமுகமாகச் சொல்வதுபோல் இருந்தது.
"சுயநலமாக தெரிஞ்சாலும், நம்ம குழந்தைங்க தானே... வேற யார் முழு மனசோட உதவி பண்ணுவாங்க. அந்த அன்பில் கிடைக்குற சுகமும், அலாதிதானே. இது என்ன பெரிய தியாகம்? சின்ன விஷயம் தான்...' ராகவன் மனசு அலைபாய்ந்து கொண்டிருந்தது, அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது.
அப்போது அபிராமனும், கவுசல்யாவும் குழந்தைகள். இரண்டுபேருக்கும் சங்கீதம் சொல்லி தரணும்ன்னு ராகவனுக்கு அடங்காத ஆசை! வீட்டிலேயே வித்வானை அழைத்து வந்து துவக்கி வைத்தார். பத்து வயது வரைக்கும் சொன்னதை கேட்டனர். வீட்டில் ஸ்ருதிப் பெட்டி, ஹார்மோனியம் என்று ஒவ்வொன்றாக சேர்ந்தன. ஆபீஸ் வேலையை பார்த்துக்கொண்டே, அவர்கள் பயிற்சியை கவனிப்பது, ராகவனின் ரசனையாகவே மாறியிருந்தது. வயசு ஏற ஏற அபிராம், கவுசல்யாவிடமும் மாறுதல்கள். விளையாட்டு, சினிமா என திரும்பினர்.
"விட்டுடுங்களேன்...' பர்வதம் தான், அப்போது தைரியமாகக் கெஞ்சியிருந்தாள்.
"விளையாட்டில் செகண்ட் இன்னிங்ஸ்ல ஒழுங்கா விளையாடணும்ன்னு நெனைச்சதில்லையா? இப்ப வாழ்க்கையில், இன்னொரு சான்ஸ் கிடைச்சிருக்கு...'
ராகவன் மறுபடியும் பேரனைப் பார்த்தார். "பேரன் சொன்னாக் கேட்பானா? சாதுவாத்தான் இருக்கான். கர்நாடக சங்கீதமில்லாமல் திருப்புகழ், திருவாசகம்ன்னு கூட முயற்சி செய்யலாம். பேத்திக்கு கண்கள் பெரிசா இருக்கு... ஒருவேளை பரத நாட்டியம் பாந்தமா இருக்கும்.
"சின்ன வயசிலேயே ரெண்டு பேருக்கும் ஆரம்பிச்”டலாம். ஏன் படிப்பிலேயும், அவங்கள மேல தள்ளி விடலாம். "வீட்டில் யார் சொல்லித்தரா'ன்னு கேட்டு, டீச்சர் மூக்கில விரல வைக்கணும்.
பேரனும், பேத்தியும் இப்பவே போட்டிகள்ல முதல் பரிசை வாங்கற மாதிரி, ராகவனுக்கு காட்சிகள் கண்கள் முன்னே விரிந்தன.
ராகவன் முகத்தில் கொஞ்சம் தெளிவு... கொஞ்சம் வயதும் குறைந்த மாதிரியும் இருந்தது.
""ரெண்டு குழந்தைகளையும், ஒரே ஸ்கூல்லதானே போடுவீங்க?''
""ஆமாம்ப்பா! ஒரே ஸ்கூல்லேர்ந்து தான், அப்ளிகேஷன் பாரம் வாங்கிட்டு வந்திருக்கோம்,'' அபிராம், கவுசல்யாவிடமிருந்து கோரசாக பதில் வந்தது.
""அப்பாவுக்கு வத்தக் குழம்புன்னா உயிர். சமையலை நான் பாத்துக்கறேம்மா.''
சமையற்கட்டு பக்கம் விரைந்தாள் கவுசல்யா.
***

குமார்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
razack - chennai,இந்தியா
08-பிப்-201318:52:36 IST Report Abuse
razack தாத்தா பாட்டிகள் கௌரவம் மிகுந்த (GLORIFIED) பேபி SITTERS என்பதில் என்ன சந்தேகம்?
Rate this:
Share this comment
Cancel
karthikeyan - c ovai  ( Posted via: Dinamalar Android App )
04-பிப்-201322:02:44 IST Report Abuse
karthikeyan நன்று
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
04-பிப்-201301:43:05 IST Report Abuse
GOWSALYA உண்மைதான் காயத்ரி... ...........பெற்றோர்களின் விருப்புவெறுப்பு அறிந்தும் அறியாத சுயநலம் கொண்ட பிள்ளைகள்....
Rate this:
Share this comment
Cancel
Gayathri - Manama,பஹ்ரைன்
03-பிப்-201312:50:47 IST Report Abuse
Gayathri Such a sad story and such selfish children...Ragavan should have stuck to his original plans...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.