பணத்தை காணோம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
00:00

கார்த்திக்கும், அருணும் தங்கள் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மாலை நேரம் மூன்று நான்கு பைக்குகள், உறுமியபடி சீறிக் கொண்டு ஒன்றை ஒன்று முந்தியபடி போய்க் கொண்டிருந்தன. ஒரே சத்தம்; வண்டிகளை ஓட்டியவர்கள் எல்லாரும் இளைஞர்கள். டீன் ஏஜ்! ஹெல்மட்டில் மண்டையோடும் குறுக்காக வைக்கப்பட்ட எலும்பும் கொண்ட ஸ்டிக்கர். பனியனில் வினோதமான வாசகங்கள். கவலையே இல்லாத காளைகள். அசட்டுத் துணிச்சலும், அடாவடித்தனமும் அவர்கள் பொழுது போக்கு என்பதை, "பைக்'கை அவர்கள் ஓட்டும் வேகமே கூறியது. அவர்களைப் பற்றி விவாதித்தபடியே, விடுதி திரும்பினர் கார்த்திக்கும், அருணும்.
இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, டெலிபோன் கிணுகிணுத்தது. அது சகஜம். ஸ்டேஷனிலிருந்து தான் அழைப்பு. "க்விக் ட்ரீட்' எனப்படும் ரெஸ்டாரெண்டில் கொள்ளை. கடையை மூடும் போது, யாரோ ஒரு இளைஞன் திடீரென புகுந்து, முதலாளியைத் தாக்கிவிட்டு, அன்றைய வசூலை அள்ளிக் கொண்டு போய் விட்டான். உடனே, அங்கு போய்ப் பார்க்கவும். இது இன்ஸ்பெக்டரின் கட்டளை.
உடனே, கார்த்திக்கும், அருணும் பத்தாவது நிமிடத்தில், அந்த ரெஸ்டாரெண்ட் முதலாளி முன் இருந்தனர்.
""இன்றைய வியாபாரம் முடிந்து வேலையாட்களை அனுப்பிவிட்டுக் கடையை மூடும்போது, திடீரென்று ஒரு முகமூடியணிந்த இளைஞன், கதவை நெட்டித் தள்ளிக் கொண்டு, உள்ளே புகுந்தான். பேச்சே இல்லை. என்னைத் தாக்கித் தள்ளிவிட்டு, டிராயரிலிருந்த பணத்தை அப்படியே ஒரு பிளாஸ்டிக் பையில் கவிழ்த்துக் கொண்டு, பின்பக்க வழியாக ஒடி விட்டான்!''
கடைக்காரர் விவரித்துக் கொண்டிருக்கும் போதே, கார்த்திக் கீழே குனிந்து, உடைந்து உருண்டு கிடக்கும் மூக்குக் கண்ணாடியைக் கையிலெடுத்தபடி, ""உங்க கண்ணாடியையும் நொறுக்கிட்டான் போலிருக்கே?'' என்றான்.
""ஆமா சார்... திருட்டுப் பயல்! இளவட்டம், ரவுடிப் பையன். அவன் மட்டும் என் கையிலே சிக்கினா...''
""கவலைப்படாதீங்க சார். சீக்கிரமே அவனைப் பிடிச்சு, உங்க பொருளை மீட்டுத்தறோம்,'' என்றான் அருண்.
இருவரும் கடையை நோட்டமிட்டு விட்டு வெளியே வந்தனர்.
""சினிமாவிலே காண்பிக்கறதெல்லாம், நிஜமா நடக்க ஆரம்பிச்சுட்டுது...!'' என்றான் அருண்.
""வழக்கமாக இங்கு வந்து சாப்பிடும் கூட்டம் தான் இதைச் செய்திருக்கணும். கடை மூடும் நேரம், முதலாளி தனியாக இருப்பதை யெல்லாம் நோட் பண்ணி... நாம நாளை இரவு இங்கு வருவோம்... வாடிக்கையாளர்களை நோட்டமிடுவோம்,'' என்றான் கார்த்திக்.
மறுநாள் மாலையே கார்த்திக்கும், அருணும் "க்விக் ட்ரீட்' ரெஸ்டாரெண்டுக்கு வந்து விட்டனர். அங்கு மூன்று நான்கு இளவட்டங்கள், கல்லூரி மாணவர்கள்! விசித்திரமான டீ ஷர்ட்டுகளிலும், லெதர் ஜாக்கெட்டிலும் கும்மாளமாகச் சிரித்தபடி.
""ஹேய்... அதோ பார், யார் வரான்னு... நம்ம ரமேஷ்! புது ஹோண்டா!''
""என்னால் நம்பவே முடியலியே... புது வண்டி... எப்ப வாங்கினான்? எப்படி வாங்கினான்?''
இந்த சம்பாஷனை கார்த்திக்கை கவர்ந்தது.
""அருண் அந்தப் புது வண்டியையும், அந்தப் பையனையும் கொஞ்சம் கவனிக்கலாமா?'' என்று எழுந்திருந்தான்.
பளபளக்கும் புது வண்டியின் அருகில் நிற்கும் இளைஞனிடம், ""பிரமாதமான வண்டி...! ஏகவிலை இருக்குமே...?'' என்று பேச்சு கொடுத்தான் கார்த்திக்.
""பாத்தவங்க எல்லாருமே பிரமிக்கறாங்க. காலனுக்கு நூறு மைல் கியாரண்டி சொல்லியிருக்கார் டீலர்!'' வண்டியைப் பெருமையோடு தடவிக் கொடுத்தான் ரமேஷ்.
""ம்... ஆச்சரியப்படறத்துக்கில்லே. எந்தக் கடையிலே வாங்கினீங்க மிஸ்டர்?''
""லட்சுமி காரேஜ்லதான். அவங்கதான் ஆதரைஸ்ட்டு டீலர் டவுன்லே!''
சற்று நேரத்தில் லட்சுமி காரேஜிலிருந்தான் கார்த்திக்.
""காலையிலேதான் அந்த மாணவனுக்கு வண்டியைக் கொடுத்தேன். ஐம்பதாயிரம் கட்டினான். பாக்கித் தொகையைத் தவணை முறையில் தருவதாகக் கூறினான்,'' என்றார்.
அந்த விற்பனையாளர்களிடம் தங்களை போலீஸ் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர் கார்த்திக்கும், அருணும். அவர்கள் சி.ஐ.டி., பிரிவானதினால், போலீஸ் உடை கிடையாது.
""அந்த மாணவன் கொடுத்த பணத்தைக் காட்ட முடியுமா? அதைக் கொஞ்சம் சோதிக்கணும்,'' என்றான் கார்த்திக்.
""நல்ல வேளை! அதை இன்னும் பாங்கில் கட்டவில்லை... இதோ...'' என்று நூறு ரூபாய்க் கட்டைக் கொடுத்தார்.
அருண் அந்த வங்கி நோட்டுக்களைச் சோதித்தான்.
""இதோ இருக்கு...'' என்று உற்சாகமுடன் ஒரு நூறு ரூபாயை உருவி, கார்த்திக்கிடம் காட்டியபடி, ""ரெஸ்டாரெண்ட் முதலாளி, நூறு ரூபாய்க் கட்டில் ஒரு நோட்டில் ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டுப் போட்டிருக்கும்னு சொன்னாரில்லையா... இதோ!''
அந்த மாணவனின் விலாசத்தை விற்பனையாளரிடம் வாங்கிக் கொண்டு, இருவரும் விரைந்தனர்.
கார்த்திக், ரமேஷின் பெற்றோரிடம் தான் வந்த காரியத்தை விளக்கியதும், அவர்கள் வெலவெலத்துப் போயினர்.
""சார் நாங்க ரொம்ப கவுரவப்பட்டவர்கள். நான் ஒரு வங்கியில் அக்கவுன்டண்ட். என் மனைவி ஒரு சமூக சேவை நிறுவனத்தில காரியதரிசி. ரமேஷ்கிட்ட அவ்வளவு பணம் இருக்க வாய்ப்பே இல்லை. நான் வாரம் நூறு ரூபாய்தான் பாக்கெட் மணி கொடுப்பேன். ஆனா, இது எப்படி?'' குழம்பினார் பையனின் அப்பா.
""பைக் வாங்கற அளவுக்கு அவன்கிட்ட பணம் ஏதுன்னு நீங்க வியப்படையலையா?'' என்றான் கார்த்திக்.
""இல்லே சார், யாராவது சினேகிதங்க கிட்ட இருந்து வண்டியை இரவல் வாங்கி வந்திருப்பான்னு நெனைச்சேன் சார்!''
""உங்க பையனை விசாரிக்க நாங்க கூட்டிப் போகணும்... வேறு வழி இல்லை. அவன் வரும் வரை காத்திருக்கோம்,'' என்று கூறி வெளியில் வந்தான்.
""பையனின் தந்தை வங்கி வேலைகளை வீட்டுக்கு கொண்டு வந்து அதில் மூழ்கி விடுகிறார். அம்மா பிறருடைய நலன்களைக் கவனிக்க வெளியே போயிடறாங்க. தன் மகனுடைய தனிமையைப் பத்தி நினைப்பதில்லை. பையனுடைய பிரச்னையே இங்கு தான் ஆரம்பம்,'' என்று கார்த்திக்கும், அருணும் விளக்கிக் கொண்டிருந்த போது, பைக்கின் "டட்டட்டட்' ஒலி கேட்டது. ரமேஷ் வந்தான்.
அவன் பெற்றோருடன், அவனை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போயினர் விசாரணைக்கு.
-1 தொடரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.