நாணலரசி!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
00:00

அவர்களைப் பார்த்து செழியன், ""அழகிகளே! வணக்கம். நீங்கள் எல்லாம் யார்? மலைக்குள் இருந்து எப்படி வருகிறீர்கள்?'' என்று கேட்டான்.
அவர்கள் அனைவரும் அவனை வியப்புடன் பார்த்தனர்.
அவர்களில் இளையவள், ""இந்த இரும்பு மலைக்குள் ஒரு கோட்டை உள்ளது. அரக்கன் ஒருவனால் நாங்கள் அங்கே சிறை வைக்கப்பட்டு உள்ளோம்,'' என்றாள்.
""சிறை வைக்கப் பட்டதாகச் சொல் கிறீர்கள். விருப்பம் போல வெளியே வருகிறீர்களே!''
""இந்தத் தீவு கடலால் சூழப் பட்டுள்ளது. ஒரே ஒரு படகால்தான் இங்கு வர முடியும். அந்தப் படகு மந்திரவாதி ஒருவனிடம் உள்ளது. அவனும் உயிருடன் உள்ளானா? இறந்து விட்டானா? என்பது தெரியவில்லை.
இங்கிருந்து தப்பிச் செல்ல வழியே இல்லை. அதனால் நாங்கள் எப்போது வேண்டு மானாலும் வெளியே செல்லலாம். தீவைச் சுற்றிப் பார்க்கலாம். நாங்கள் பழம் பறிப்பதற்காக வந்தோம்,'' என்றாள்.
அவர்களுடன் பேசிக் கொண்டே அவனும் பழம் பறித்தான்.
""நானும் உங்களுடன் கோட்டைக்குள் வரலாமா?'' என்று கேட்டான் அவன்.
""நாங்கள் பத்துப் பேர்தான் மீண்டும் உள்ளே செல்ல முடியும். நாங்கள் சென்றவுடன் வாயில் மூடிக் கொள்ளும். உங்களை உள்ளே அழைத்துச் செல்ல வழியே இல்லை,'' என்றாள் அவள்.
நாணல் பேரழகியை மீட்பதற்காக வந்திருப்பதை அவர்களிடம் சொன்னான் செழியன்.
""அரக்கனிடமிருந்து மந்திர மோதிரத்தை எப்படியாவது எடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் நாணல் பேரழகியைக் காப்பாற்ற முடியும். எனக்கு உதவி செய்யுங்கள்,'' என்று வேண்டினான்.
""நாங்களே சிறைப்பட்டு உள்ளோம். தங்கப் பெட்டியைத் தன் உயிரினும் மேலாகப் பாதுகாக்கிறான் அரக்கன். அதற்குள்தான் மந்திர மோதிரமும், மந்திரப் புத்தகமும் உள்ளது. அந்தப் பெட்டியின் சாவி, அவன் இடது காதில் தொங்குகிறது.
எங்களால் உங்களை உள்ளே அழைத்துச் செல்ல முடியாது. அப்படியே நீங்கள் வந்தாலும் மந்திர மோதிரத்தைப் பெற வழி இல்லை,'' என்றாள் அவள்.
""என் திறமையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்களில் யாராவது ஒருவர் இங்கேயே தங்கி விடுங்கள். என் பூனை அவருக்குப் பாதுகாப்பாக இருக்கும். எப்படியும் அரக்கனை ஏமாற்றி மந்திர மோதிரத்தைக் கைப்பற்றுவேன். அரக்கன் சொன்ன மந்திரவாதியின் படகில்தான் இங்கு வந்துள்ளேன். உங்களையும் காப்பாற்றி அழைத்துச் செல்வேன். எனக்கு உதவி செய்யுங்கள்,'' என்று கெஞ்சினான் செழியன்.
""உங்களுக்குப் பதில் நான் இங்கேயே இருக்கிறேன். உங்கள் உடைகளை என்னிடம் தாருங்கள். என் உடைகளை அணிந்து கொள்ளுங்கள்,'' என்றாள் ஒருத்தி.
அவளின் உடைகளை அணிந்து கொண்டான் செழியன்.
பழக் கூடையைச் சுமந்தபடி அவர்கள் பத்துப் பேரும் இரும்பு மலைக்குள் நுழைந்தனர். அவர்கள் உள்ளே சென்றதும் வாயில் தானே மூடிக் கொண்டது.
உள்ளே கோட்டையும், அரண்மனை போன்ற மாளிகையும் இருப்பதைப் பார்த்த செழியன், வியப்பு அடைந்தான்.
அங்கிருந்த அரக்கன் அவர்களைப் பார்த்தான். பெண்ணின் உடையில் செழியன் இருந்ததால் அவனுக்கு எந்த ஐயமும் ஏற்படவில்லை. செழியனும் தன் முகத்தை அவனிடம் காட்டவில்லை.
இரவு வந்தது. தன் அறைக்குள் சென்ற அரக்கன் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.
அந்த அறைக்குள் நுழைந்தான் செழியன், அரக்கனின் காதில் இருந்த தங்கச் சாவியை மெல்லக் கழற்றினான்.
அங்கிருந்த தங்கப் பெட்டியை, அந்தச் சாவியால் திறந்தான். அதற்குள் இருந்த மந்திரப் புத்தகத்தைக் கையில் எடுத்தான்.
அலறியபடியே எழுந்தான் அரக்கன்.
செழியன் சிறிதும் தாமதம் செய்யவில்லை. அந்தப் புத்தகத்தின் அடிப்பகுதியில், நெருப்பு வைத்தான். புத்தகம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
நெருப்புப் பிடித்து எரிவது போலத் துடி துடித்தான் அரக்கன். புத்தகம் எரிய எரிய அவன் கால்கள் மறைந்தன. வயிறு மறைந்தது. கழுத்து மறைந்து தன் கை சுடுவதை அறிந்தான் செழியன். புத்தகத்தின் சிறு பகுதியைக் கீழே போட்டான். அந்தப் பகுதி மட்டும் எரியாமல் இருந்தது.
அதனால் அரக்கனின் கண்கள் மட்டும் எரியாமல் இருந்தன. அவை விழித்துப் பார்த்தன.
அரக்கனால் இனி எந்தத் தீங்கும் இல்லை என்பதை உணர்ந்த செழியன், மந்திர மோதிரத்தை எடுத்துத் தன் விரலில் அணிந்துக் கொண்டான்.
""அழகிகளே! அரக்கன் இறந்துவிட்டான். உங்களுக்கு விடுதலை கிடைத்தது. வாருங்கள் செல்லலாம்,'' என்றான்.
இரும்பு மலையை விட்டு எல்லாரும் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர்.
தனக்கு உதவி செய்த இளையவளைப் பார்த்த செழியன், ""உன்னால்தான் எனக்கு மந்திர மோதிரம் கிடைத்தது. நன்றி,'' என்றான்.
""நாங்கள் உடனே எங்கள் நாட்டிற்குச் செல்ல வேண்டும்,'' என்று பரபரப்புடன் சொன்னாள் மூத்தவள்.
""இந்தத் தீவில் எனக்கு இன்னும் ஒரு வேலை உள்ளது. யாருமே நீர் அருந்தாத ஏரி இங்கே உள்ளதே. இந்தக் குடுவை நிறைய அந்தத் தண்ணீர் வேண்டும்,'' என்றான் செழியன்.
குடுவையை அவனிடம் வாங்கிய இளையவள் ஒரே ஓட்டமாக ஓடினாள். குடுவை நிறைய தண்ணீருடன் திரும்பினாள்.
""மந்திரப் புத்தகம் எரிந்ததோடு சூனியக்காரியின் மந்திர ஆற்றலும் அழிந்து விட்டது. இனி அவளால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. உடனே சென்றால் நாணல் பேரழகிக்கு உயிர் கொடுக்கலாம்,'' என்றது பூனை
எல்லாரும் விரைந்து கடற்கரையை அடைந்தனர். அரக்கனின் கண்கள் மட்டும் அவர்களைத் தொடர்ந்து வந்தது.
தன் செருப்புகளைக் கடலில் போட்டான் செழியன். உடனே அவை படகாக மாறியது. எல்லாரும் அதில் அமர்ந்தனர். படகு செல்லத் தொடங்கியது.
அவர்கள் செல்வதைப் பார்த்து, அரக்கனின் கண்கள் கண்ணீர் வடித்தன.
கடலின் மறுகரையை அடைந்தது படகு. எல்லாரும் அதிலிருந்து இறங்கினர். படகு மீண்டும் செருப்புகளாக மாறியது. அவற்றைக் கால்களில் அணிந்து கொண்டான் செழியன்.
""அழகிகளே! நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. இனி உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. உங்கள் நாட்டிற்கு மகிழ்ச்சியுடன் செல்லுங்கள்,'' என்றான் செழியன்.
அவர்களும் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டனர்.
செழியனும், பூனையும் சூனியக்காரியின் வீட்டை அடைந்தனர். அழுது புலம்பிக் கொண்டிருந்தாள் அந்தச் சூனியக்கார கிழவி.
குடுவையில் இருந்த தண்ணீரைப் பாறைகளின் மேல் தெளித்தான் செழியன். இரண்டு இளைஞர்களும் உயிர் பெற்று எழுந்தனர்.
நடந்ததை எல்லாம் அவர்களிடம் சொன்னான்.
""நீங்கள் உங்கள் நாட்டிற்குச் செல்லலாம்,'' என்றான்.
அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
அங்கே கட்டப்பட்டிருந்த இரண்டு பூனைகளையும் விடுவித்தான்.
""நீங்கள் மூவரும் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்,'' என்றான்.
மூன்று பூனைகளும் மகிழ்ச்சியுடன் சென்றன.
வேகமாக நடந்த அவன் ஆற்றங்கரையை அடைந்தான். நாணல் புதரின் மேல் மந்திர மோதிரத்தை வைத்தான். நாணல் புதர் மறைந்தது.
மலர்க்கொடி அவன் முன் நின்றாள்.
""பேரழகியே! உன்னைப் பார்த்ததும், காதல் கொண்டு விட்டேன். நீ இல்லாமல் எனக்கு வாழ்வே இல்லை. வீரபுரி நாட்டின் இளவரசன் நான். என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா?'' என்று கேட்டான்.
""இளவரசே! நாணலாகவே இருந்து விடுவேனோ என்று வருந்தினேன். என்னைக் காப்பாற்றியவர் நீங்கள். உங்களைத் திருமணம் செய்து கொள்வது நான் செய்த பெரும்பேறு,'' என்று நாணத்துடன் சொன்னாள்.
அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீரபுரி நாட்டை அடைந்தான் செழியன்.
அவர்கள் இருவரையும் சிறப்பாக வரவேற்றான் அரசன். தன் மகன் செய்த வீரச் செயல்களை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான்.
பல்லவ நாட்டு அரசன், தன் மகள் உயிருடன் மீண்ட செய்தியை அறிந்தான். வீரபுரி நாட்டிற்கு வந்தான். தன் மகளைப் காப்பாற்றிய செழியனை பாராட்டினான்.
ஒரு நல்ல நாளில் செழியனுக்கும், இளவரசி மலர்க்கொடிக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் இருவரும் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
-முற்றும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.