துப்பறியும் புலிகள் 007
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
00:00

சாமின் வீடு தேடி வந்திருந்தான் அவன் நண்பன் கோபி. பெரும் பணக்காரர் வீட்டுப் பிள்ளை. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன். ஆரம்பப் படிப்புக் கூட அமெரிக்காவில்தான். பிறகு அவன் அப்பாவிற்குத் திடீரென்று தாய் நாட்டின் மீது பாசம் ஏற்படவே, இங்கு வந்து செட்டிலாகி இருந்தனர். இரண்டு வருஷமாக, கோபிக்கு சாம் தோழன்.
கோபிக்கு கட்டடக் கலையில் ஆர்வம். அவன் பேச்செல்லாம் பெரிய, பெரிய அடுக்கு மாடிக் கட்டடங்களையும், பாலங்களையும் பற்றியே இருக்கும். தான் ஒரு கட்டடக் கலை வல்லுனராக வரப் போவதாகக் கூறுவான் கோபி.
அது வெறும் தற்பெருமையல்ல... உண்மைதான் என்பதை அறிந்திருந்தான் சாம். அவன் செல்வத்துக்கும், எண்ணத்துக்கும் அது சாத்தியமே.
மறுநாள் கோபியின் பிறந்த நாள். அதற்கு சாமை, "இன்வைட் ' பண்ணவே வந்திருந்தான் கோபி.
""பர்த்டே பார்ட்டின்னா வெறுமே ஸ்வீட், காரம், காபியில்லே. நாளை முழுதும் நீ என் விருந்தாளி. வேடிக்கை, விளையாட்டு விருந்து, கேளிக்கை எல்லாம் உண்டு தெரியுமில்லையா?'' என்று கண்சிமிட்டிச் சிரித்தான் கோபி.
""ஓ தெரியுமே! உன், கடந்த பிறந்த நாள் பார்ட்டியை மறக்க முடியுமா?'' என்றான் சாம். அதன் நினைவு, அவன் இதழ்களில், முறுவலை வரவழைத்தது.
அதிபுத்திசாலியும், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவனுமான கோபி, சரியான தூங்குமூஞ்சி; ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டால், விரைவில் களைத்துப் போய் அப்படியே தூங்கிப் போவான். போன பிறந்தநாளின் போது, விளையாட்டுப் போட்டி முடிந்தது. விருந்து உண்ண எல்லாரும் தயாராக இருந்த போது, கோபி, சோபாவில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் கண் விழிக்க எல்லாரும் காத்திருந்தனர்.
பணக்கார நண்பனின் பிறந்த நாள் விழாவுக்குக் கிளம்பத் தன் அலங்காரத்தில் கொஞ்சம் கூடுதலாகவே அக்கறை எடுத்துக் கொண்டிருந்தான் சாம். ரமேஷ் வரவே, இருவரும் கிளம்பினர்.
""என்ன பிரசண்ட் பண்ணப் போறே?'' என்று கேட்டான் ரமேஷ்.
""உலகப் புகழ்பெற்ற, கட்டடங்கள், பாலங்களைப் பற்றிய ஒரு புத்தகம். உன்னோட பிரசண்ட் என்ன?'' என்றான் சாம்.
""ஒரு வெளிநாட்டு சீட்டுக்கட்டு. ஒவ்வொரு சீட்டின் பின்னாலும் உலகப் புகழ் பெற்ற கட்டடத்தின் படம். ரொம்ப அற்புதமான தயாரிப்பு,'' என்றான் ரமேஷ்.
""நம் இருவருடைய பரிசுமே கோபிக்கு, ரொம்பப் பிடிக்கும்,'' என்றான் சாம்.
கோபியின் நண்பர்கள் எல்லாமே இதே மாதிரி, அவன் கற்பனைக்குத் தகுந்த மாதிரி பரிசுகளுடன் வந்திருந்தனர். வந்திருந்திருந்த தோழர்கள் பத்துப் பன்னிரெண்டு பேர். எல்லாரும் சாமிற்கு தெரிந்தவர்கள் தான். ஒரு பையனைத் தவிர. அவன் பெயர் மதன். அவன் மற்றவர்களுடன் சரளமாகப் பழகவில்லை. புதுமுகமானதினால் இருக்கும், என்று நினைத்துக் கொண்டான் சாம்
கோபிக்கு வந்திருந்த பரிசுகளில் ஒன்று, "எலக்ட்ரானிக் விளையாட்டுச் சாதனம்' அதுவும் கட்டடக்கலையோடு தொடர் புடையதுதான். பொத்தான்களை அழுத்த விதவிதமான வகையில் கட்டடங்கள் திரையில் உருவாகும். வெளிநாட்டுச் சரக்கு. விலை உயர்ந்த பொருளும் கூட. அதை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் மதன்.
விழா ஆரம்பமாயிற்று... விளையாட்டும், வேடிக்கையும் தொடர்ந்தன. இடையிடையே சிற்றுண்டி, பானம், ஐஸ்கிரீம் என்று வந்து கொண்டே இருந்தது. புதையல் வேட்டை என்ற விளையாட்டுக்கு எல்லாரும் தயாரானார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு பிளாஸ்டிக் பையும், ஒரு பென்சிலும் எட்டுப் பொருள்கள் அடங்கிய ஒரு பட்டியலும் தரப்பட்டன. ஒவ்வொருவரும் தங்கள் பட்டியலில் காணப்படும் பொருள்களை அந்தப் பங்களாவிலும், தோட்டத்திலும் எங்கு வேண்டுமானமாலும் புகுந்து, போய்த் தேடிக் கண்டுபிடித்து சேகரித்து வர வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள்.
சாம் இடம் தரப்பட்டிருந்த லிஸ்டில் ஒரு சேப்டி பின், டார்ச் லைட், 1948ம் ஆண்டு ரூபாய் நாணயம், பச்சை வர்ண கிரேயான், சிவப்பு நிற சோப்பு, ஆறு அங்குல ஸ்குரூ டிரைவர், இரண்டு நயா பைசா நாணயம், பல்லு போன பழைய சீப்பு!
புதையல் வேட்டைக்குக் கிளம்பினர், கோபியின் தோழர்கள்.
""நாம் புதையலைத் தேடிப் பிடித்துக் கொண்டு வரும் போது, கோபி தூங்கிக் கொண்டிருப்பான்!'' என்று கிண்டலடித்தபடி கிளம்பினான் சாம்.
தன் பட்டியலில் நான்கு பொருள்களை சேகரித்து, ஐந்தாவதான சிவப்பு நிற சோப்பை, அவுட் ஹவுஸ் பாத்ரூமில் குடைந்து கொண்டிருந்தான் சாம்.
அப்போது மெகாபோன் மூலம், தோட்டத்திலிருந்து ஓர் அழைப்பு ஒலித்தது.
""எல்லாரும் உடனே ஓடி வாருங்கள். கோபியின் பரிசுப் பொருள் ஒன்று திருடு போய்விட்டது!''
சாம் தன் தேடலை நிறுத்திவிட்டு, பங்களாவின் கூடத்துக்கு விரைந்தான். மற்றவர்களும் பரபரப்புடன் வந்து சேர்ந்தனர். மதனின் முகத்தில் வேதனை. முழங்காலைப் பிடித்துக் கொண்டு நொண்டியபடி சோபாவில் போய் அமர்ந்தான்.
திருடு போனது, வந்திருந்த பரிசுப் பொருள்களிலேயே உயர்ந்ததும், சிறந்ததுமான அந்த எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருள்தான்.
""திருடு போனதைக் கண்டுபிடித்தது யார்?'' என்று கேட்டான் சாம்.
""நான் தான்...!'' என்றான் மதன் முழங்கால் வலியோடு.
""நான் சேகரிக்க வேண்டிய பொருளில் டயமண்ட் ராணியின் சீட்டும் ஒன்று. கோபிக்கு வந்திருந்த பரிசில் ஒரு சீட்டுகட்டு இருந்தது நினைவுக்கு வரவே, அதிலிருந்து அதை எடுக்க இங்கு வந்தேன்!''
""அப்போதுதான் அந்த எலக்ட்ரானிக் டாய் இல்லாதிருப்பது கண்ணில் பட்டதாக்கும்,'' என்றான் சாம்.
""கண்ணில் பட்டதா? அதைத் தூக்கிக் கொண்டு ஒரு பயல் ஜன்னல் வழியாக வெளியே குதித்து ஓடுவதையே பார்த்தேனே!'' என்றான் மதன்.
""அவனை நீ தடுத்துப் பிடிக்க முடியவில்லையா?''
""செய்யாதிருப்பேனா? அவனைத் தாவிப்பிடிக்க முயற்சிக்கும்போதுதான், என் முட்டியில் அந்த மேஜை முனை தாக்கியது. வலி, உயிர் போகிறது...'' என்று முழங்காலை பிரயாசையுடன் அசைக்க முயன்றான்.
""நான் சுதாரித்துக் கொண்டு எழுதுவதற்குள் அவன் வெளியே குதித்து ஓடிவிட்டான்!''
""மதனின் கூச்சல் தான் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பியது,'' என்றான் கோபி.
""திருடன், திருடன் என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபடி கத்திக் கொண்டிருந்தான் மதன்!''
தான் நினைத்தபடியே கோபி குறட்டை விட்டிருக்கிறான் என்பதை அறிந்த போது, சாமுக்கு, சிரிப்பு வந்தது. ஆனால், அதை அடக்கிக் கொண்டு, ""நீ எங்கு படுத்துத் தூங்கினாய்?'' என்று கேட்டான்.
""சோபாவில் தான். ரமேஷின் சீட்டுக்கட்டிலுள்ள கட்டடங்களின் படங்கள் என்னை கவர்ந்தன. அதை ரசித்தப்படியே அந்த சீட்டுக்களைக் கொண்டு ஒரு கட்டடமெழுப்பினேன். அதோ பார்!'' என்று காட்டினான்.
அங்கிருந்த ஒரு சிறு மேஜை. மதனின் முழங்காலைப் பதம் பார்த்த அந்த மேஜை மீது சீட்டுக்களை ஒன்றோடொன்று முட்டச் செய்து, நிறுத்தியும், அதன் மீது சீட்டுக்களைப் பரப்பியும் ஒரு ஐந்தடுக்கு மாளிகை உருவாக்கப்பட்டிருந்தது.
""சீட்டுக் கட்டிலுள்ள சீட்டுக்கள் தீர்ந்து போவதற்கும், எனக்கு தூக்கம் கண்களை சுழட்டுவதற்கும் சரியாக இருந்தது. பிறகு மதனின் கூச்சல் கேட்டுத்தான் கண் விழித்தேன்.
""அந்தத் திருடன் முகத்தைப் பார்த்தாயா நீ?'' சாம் கேட்டான் மதனிடம்.
""இல்லை. ஆனால், அவன் போட்டிருந்த பனியனின் முதுகுப் பகுதியில் ஒரு புலித்தலை இருந்தது''
""புலிப்படையைச் சேர்ந்தவனாக இருக்கும்,'' என்றான் ரமேஷ்.
""குடிசைப் பகுதியிலே ஒரு ரவுடிக் கும்பல் இருக்கு. தங்களைப் புலிப்படைன்னு சொல்லிக்கிட்டு அட்டகாசம் பண்றாங்க. இங்கே நடக்கற பார்ட்டியைக் கேள்விப் பட்டு, அவர்களில் ஒருத்தன் உள்ளே புகுந்திருக்கணும்,'' என்று விளக்கமளித்தான் ரமேஷ்.
சாம் கம்பிகள் இல்லாத அந்த ஜன்னலருகே போய் வெளியே நோட்டமிட்டான். தரையிலிருந்து உயர்வாக எழுப்பட்டிருந்த பங்களா அது. ஆகவே, ஜன்னல் வழக்கமான கட்டடங்களை விட உயரத்தில் அமைந்திருந்தது. ஜன்னலின் கீழுள்ள பாத்திகள் ஓடிவந்து தூசுபட்டுப் பாழாகி இருப்பதைக் கண்டான் சாம்.
""ஜன்னலிலிருந்து குதிக்கும் போது திருடனுக்கு அடிபட்டிருக்க வேண்டும். பாத்திச் செடிகள் பாழ்பட்டிருப்பதிலிருந்து அது தெரிகிறது. திருடன் வெகுதூரம் ஓடி இருக்க முடியாது. அனேகமாக திருடிய பொருளை இங்கு தான் எங்காவது பதுக்கி வைத்திருப்பான். பிறகு சாவகாசமாக வந்து கொண்டு போகும் நோக்கத்துடன்,'' என்றான் சாம்.
""அப்படியானால்... முழங்காலில் மதனுக்கு ஏற்பட்டுள்ள அந்த அடி... அவன் தான் திருடன் என்கிறாயா?'' சாம் இடம் கிசுகிசுத்தான் ரமேஷ்.
""அவனே தான்... உன் சீட்டுக்கட்டுக்களே அதைச் சொல்கிறதே!'' என்றான் துப்பறியும் புலியான சாம்.

விடைகள்: எலக்ட்ரானிக் விளையாட்டுச் சாதனத்துடன் ஜன்னலிலிருந்து குதிக்கும் போதுதான், மதனின் முழங்காலில் அடி பட்டிருக்க வேண்டும். அவன் கூறியபடி மேஜையின் முனையில் அவன் மோதிக் கொள்ளவில்லை. காரணம் சீட்டுகளினால் உருவாக்கப்பட்ட ஐந்து மாடிக் கட்டடம் அப்படியே உள்ளது. திருடனைப் பிடிக்க முடியாமல் மேஜையின் முனை தாக்கி, தான் விழுந்து விட்டதாகக் கூறினான் மதன். அந்த வேகத்தில், மோதலில் சீட்டுக் கட்டடம் நிலை குலைந்து விழுந்திருக்க வேண்டும். ஆனால், அது பாதிக்கப் படவே இல்லை. ஆகவே, திருடிய பொருளைத் தோட்டத்தில் பதுக்கி விட்டு, உள்ளே வந்து கூச்சல் போட்டிருக்கிறான் மதன். சாமின் விளக்கம் கேட்டு, தலை குனிந்தான் மதன். திருடிய பொருளை ஒப்படைத்துவிட்டு, அவமானம் தாங்காமல் ஓடினான்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.