கொண்டாடினால் தப்பில்லை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 டிச
2011
00:00

காலையில் கண் விழித்ததுமே வீட்டில் வித்தியாசத்தை உணர்ந்தேன். கழுவி, மொழுகி, சீர் செய்து, சந்தன குங்குமம் வாசனை மணக்க, இன்னைக்கு என்ன விசேஷம்... அமாவாசையா, கிருத்திகையா, வேறெதுவுமா என்று கண்களை கசக்கும் போதே, எதிரே கற்பூர ஆரத்தியுடன் நின்றாள் மனைவி அருணா. ஆரத்தியை தொட்டு என் கண்களில் ஒற்றி, ""சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. கீசர் போட்டு வச்சுட்டேன்; தண்ணி சுட்டிருக்கும். புதுசு கட்டிக்கிட்டு கோவிலுக்கு போகணும். சித்தி விநாயகருக்கு அபிஷேகத்துக்கு சொல்லியிருக்கு. அப்படியே பாபுஜி முதியோர் இல்லத்துக்கு போகணும். அங்குள்ளவர்களுக்கு காலை டிபன் உங்க கையால. ஆபீசுக்கு லேட்டாயிடும்ன்னு யோசிக்க வேணாம். உங்க கொலீக் ராமநாதனுக்கு சேதி சொல்லியாச்சு, ஒன் அவர் பர்மிஷன் சொல்லிடுங்கன்னு...'' என்று அவள் சொல்லிக் கொண்டே போனாள்.
"என்ன அதிகப்பிரசங்கித்தனம்... யார் உன்னை இதெல்லாம் செய்யச் சொன்னது. எனக்கு இதெல்லாம் பிடிக்காது...' என்று சத்தம் போடுவதற்குள், ""ஹேப்பி பர்த் டே டாடி...'' என்று தரிசனம் தந்தான் மகன்.
""பெங்களூருவில் இருந்து இவன் எப்போ வந்தான்?''
""ராத்திரி, 11:00 மணிக்கு,'' என்றாள் அருணா.
""நேத்து போன் பண்ணினான். எப்படி இருக்கீங்க அம்மான்னு கேட்டான். நாளைக்கு அப்பாவுக்கு பிறந்த நாள்டா... மறக்காம அவருக்கு, "விஷ்' பண்ணுன்னு சொன்னேன். சர்ப்ரைசா ராத்திரி ப்ளைட் பிடிச்சு வந்து இறங்கிட்டான். குழந்தை கண் முழிச்சு, கலர் காகித தோரணம், பலூன்கள்ன்னு வீட்டை அலங்காரம் செய்தான்,'' என்றாள்.
அப்போதுதான் கவனித்தேன்... அறையெங்கும் அலங்காரம்.
""அவ்வளவுதானா... இன்னும் ஏதாவது அதிரடி இருக்கா?''
"காஞ்சிபுரத்திலிருந்து ராஜி, அவ புருஷன் வர்றாங்க. உங்களை ஒருநாள் லீவு போடச் சொன்னாங்க. எனக்குத் தெரியாதா, சுனாமியே அடிச்சாலும், அணு உலையே வெடிச்சாலும், உங்க அப்பா, அட்டண்டன்சை விட மாட்டார்னேன்... அப்படியானால் வீக் எண்ட்ல கொண்டாடலாமா என்றாள். சுரேஷ் அத்தனை நாள் இங்கே இருப்பானா... சாயங்காலமே கால்ல சக்கரத்தை கட்டிக்குவானே என்றேன். மத்தியானமே வர்றேன்னாள்... தவிர...'' என்று அவள் பட்டியலை நீட்டிக் கொண்டு போன போது, எரிச்சலில் அவளை அறைந்து விடுவேனோ என்ற பயத்தில் பாத்ரூமுக்குள் பாய்ந்தேன்.
எனக்கு கிராமம். பிறந்த தேதியே சரியாக தெரியாது அங்கு யாருக்கும். பையன் வளரும் போது, வலது கையை தலைமேல் கொண்டு போய் இடது காதைத் தொடச் சொல்வர். அப்படி காது கைக்கு எட்டினால், அந்த பையனுக்கு ஐந்து வயதாகிறது; ஸ்கூலில் சேர்க்கலாம் என்று அர்த்தம்.
ஒப்புக்கு பிறந்த தேதி கேட்பர் பள்ளியில்.
ஒரு சிலரை தவிர, பல பெற்றோர், "அதென்னங்க, ஐப்பசி மாசம் தீபாவளிக்கு மக்யா நாளு... நல்ல மழை பெய்ஞ்சுகிட்டிருந்த மத்தியான நேரம் பார்த்து பொறந்தான்...' என்பதாகத்தான் சொல்வர்.
வாத்தியார்களாகப் பார்த்து, ஒரு தேதி, மாதம், வருடத்தை எழுதிக் கொள்வர். அதன்படி பெரும்பாலான பையன்களுக்கெல்லாம் மே அல்லது ஜூன் மாசத்தில்தான் பிறந்த தேதியே அமையும்.
முதல் வருஷம் முடி இறக்குவதற்கும், அஞ்சாம் வருஷம் ஸ்கூலில் சேர்ப்பதற்கும் தவிர, வேறெந்த நேரத்திலும் பிறந்த தேதியை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்காது.
ஸ்கூலுக்கு பிறகு வேலைக்கு விண்ணப்பங்கள் எழுதும் போதுதான், அந்த தேதி தேவைப்பட்டது எனக்கு. பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் பரம்பரையிலேயே இல்லை; சினிமாவில் பார்த்ததுதான்.
கேக் வெட்டி, டான்ஸ் ஆடி, பாட்டு பாடி, சினிமாவுக்காக கொண்டாடுகின்றனர். நிஜத்தில் இப்படி கொண்டாட முடியுமா? ஒரு பிறந்த நாளைக் கொண்டாடினால், இரண்டு வருஷ சம்பாத்தியம் பஸ்பமாகி விடுமே.
நடிகர்கள், அரசியல்வாதிகள் விளம்பரத்திற்கு கொண்டாடுகின்றனர். குடும்பஸ்தனுக்கு எதுக்கு அந்த ஜம்பமெல்லாம் என்று நினைப்பேன். தவிர, பிறந்த நாள் என்பது துக்ககரமான விஷயம் என்ற எண்ணமும் உண்டு எனக்கு. வருஷம் ஒன்று கடந்தது என்றால், வாழ்நாளில் ஒரு வருஷம் போய் விட்டதாகத்தானே பொருள். மரணத்தை நோக்கி போகும் பாதையில், ஒரு வருடம் நெருங்கி விட்டதாகத்தானே அர்த்தம். இதைப் போய் கொண்டாடலாமா என்பேன்.
எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு, அருணா மனைவியாய் வந்த பிறகு, டவுனில் வசித்தவள், படித்த குடும்பம், கொஞ்சம் நாகரிகம். ஒரு அதிகாலை, "பிறந்தநாள் வாழ்த்துக்கள்...' என்றாள். "தாங்க்ஸ்' சொல்ல வேண்டுமென்று கூட தெரியவில்லை.
"ம்... ம்...' என்று தலையாட்டிக் கொண்டேன்.
புதுத் துணி கொடுத்தாள்; இனிப்பு செய்தாள். கோவிலுக்கு போகணும் என்றாள்.
அப்போதே தெளிவாகச் சொல்லி விட்டேன்... "இதெல்லாம் இருக்கப்பட்டவங்க, பணத்தை செலவழிக்க கண்டுபிடித்தது. நாம அதை கடைபிடிக்கக் கூடாது; காசு வேஸ்ட் ஆகும். எனக்கு பிடிக்காது...' என்று.
மறு வருஷம் மகன் பிறந்தான். அவனுக்கு முதல் பிறந்த நாள் வந்த போது, "உங்கள் பிறந்த நாளை கொண்டாடக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க; அதனால, என் பிறந்த நாளையும் நான் மறந்தாச்சு. ஆனால், குழந்தைகள் விஷயத்தில் அப்படி இருக்க முடியாது...' என்று பிடிவாதம் பண்ணி, அக்கம் பக்கத்தாரை திரட்டி, 4,000 ரூபாய் செலவில், "பர்த் டே' கொண்டாடினாள்.
இரண்டாவது குழந்தை ராஜிக்கும் அப்படியே!
பிறகு, ஆண்டு தோறும் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தவிர்க்க முடியாமல் போனது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் அது ஒரு புதுத்துணி, இனிப்பு என்ற அளவில் நிறுத்தப் பட்டது.
ஆண்டுகள் கடந்தன. இரண்டு பிள்ளைகளும், "செட்டில்' ஆகி விட்டனர். எனக்கும் ரிடையர் மென்ட்டுக்கு சில வருஷங்களே உள்ள நிலையில், திடுதிப்பென்று இப்படியொரு கொண்டாட்டத்தை துவக்கி விட்டாள் அருணா. பிறந்தநாள் கொண்டாட்டம் என்ன வேண்டியிருக்கு. பார்க்கிறவன் என்ன நினைப்பான். என் கோபத்தை நானே விழுங்க வேண்டியிருந்தது. அவளுக்கு சுகரும், பிரஷரும் ஏகத்துக்கு ஏறியிருக்கிறது.
நான் கோபப்படப் போய், அவள் தலை சுற்றி விழுந்தால், இன்னும் அமர்க்களமாகி விடும்.
குளித்து வந்ததும், பட்டு வேட்டி, சட்டை கொடுத்தாள்; அணிந்து கொண்டேன். பாயசம் கொடுத்தாள். டாக்சி பிடித்து, குடும்பத்தோடு கோவிலுக்கு போய் பிள்ளையார் முன் நின்றோம். அமர்க்களமாக இருந்தார் பிள்ளையார். அர்ச்சகர் வரவேற்றார். தட்டு நிறைய மாலை, பூஜை பொருட்கள்.
பொறுமையாக எல்லா மந்திரமும் படித்து, அபிஷேகம். அங்கிருந்து ஹோம். நாற்பது முதியவர்களாவது வரிசை கட்டி காத்திருந்தனர்.
ஒரு ஸ்வீட்டுடன், இரண்டு இட்லி, ஒரு கரண்டி பொங்கல், வடை என்று டிபன். சம்பிரதாயத்துக்கு ஒருவருக்கு பரிமாறி, அங்கிருந்தே ஆபீசுக்கு விரைந்த போது, ""சாயங்காலம் சீக்கிரம் வந்துடுங்க... குழந்தைகள் எல்லாம் காத்துகிட்டிருக்கும்,'' என்று அருணாவின் குரல் பின் தொடர்ந்தது.
""பைத்தியம் பிடிச்சு போச்சு அருணாவுக்கு. உடம்புக்கு முடியாததை சாக்காக வச்சுக்கிட்டு, அவள் இஷ்டத்துக்கு காரியங்களை செய்கிறாள். சொல்லாம கொள்ளாம இவ்வளவு பெரிய விமரிசையான ஏற்பாடுகள். புதுத் துணி, கோவில் செலவு, பையன் ஊரிலிருந்து வந்த பயணச் செலவு, ஹோமுக்கு டொனேட் பண்ணதுன்னு கணிசமான தொகை பணால். போதாக்குறைக்கு, இந்த ராமநாதன், "சம்பத் சாருக்கு பர்த் டே...'ன்னு, ஆபீஸ் பூரா தம்பட்டம் அடிச்சு வச்சுட்டான்.
""ஆபீஸ் உள்ளே நுழைஞ்சதும், ஒரே கோரஸ். கேன்டீனிலிருந்து எஸ்.கே.சி., வரவழைச்சு கொடுத்தேன். ஏமாற மாட்டோம், ஈவ்னிங், "டிரிங்ஸ் பார்ட்டி' வைங்கன்னு நச்சரிப்பு. கல் அடிபட்ட நாய் மாதிரி ஓடியாறேன். போதாதுன்னு "சாயங்காலம் சீக்கிரம் வா'ன்னு உத்தரவு. ஊரை திரட்டி வச்சுக்கிட்டு காத்திருப்பாளோ என்னமோ! என் கோபத்தை தெரிவிக்க, நான் இன்னைக்கு லேட்டா வீட்டுக்கு போக முடிவு பண்ணித்தான் இங்கே வந்தேன்.''
நண்பனும், வக்கீலுமான வரதராஜனிடம் உட்கார்ந்து மனக்குறையை கொட்டினேன். அவன்தான் ரொம்ப வருஷமாக எனக்கு நண்பனாக இருக்கிறான். அதன் ரகசியம் வேறொன்றுமில்லை. நான் எது சொன்னாலும் மறுப்பு சொல்லாமல் கேட்டுக் கொள்வான். வக்கீலாக இருந்தாலும், அருணா மாதிரி குறுக்கு கேள்வி கேட்க மாட்டான். ஆதங்கத்தை கொட்டிவிட்டு, பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி போய் விடுவேன்.
என்றைக்காவது பீஸ் கேட்பான். காபிக்கு ஐந்து ரூபாய் சில்லரையை டேபிள் மேல் வைத்து விடுவேன்.
இப்போதும் அப்படி கிளம்ப ஆயத்தமான போது, அந்த தெரு வழியாக மேளச் சத்தத்துடன் சாமி ஊர்வலம் ஒன்று நகர்ந்து வந்தது.
""புதுசா கோவில் கட்டியிருக்காங்க... அடிக்கடி இப்படி உற்சவம், ஊர்வலம்ன்னு நடக்குது இங்கே...'' என்றபடி எழுந்தவன், வாசலுக்கு போய் நின்று கொண்டான்... பக்தன், நானும் எட்டிப் பார்த்தேன்.
மயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானை சமேதராய் காட்சியளித்தபடி முருகப்பெருமான் வந்து கொண்டிருந்தார். வெகு விமரிசையான அலங்காரம், பட்டு வஸ்திரம், ஆபரணங்கள், ஜோடனைகள் என்று கண்களை பறித்தது. மாலைகள் கடவுளரின் முகம் மறைத்தது. ஊர்வல வண்டியோ இன்னும் விமரிசையாக இருந்தது. முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கில் அரோகரா போட்டுக் கொண்டு, மேள, தாளம் முழங்க, ஆட்டம் பாட்டமென்று போயினர். ஊர்வலம் அருகில் வந்த போது, வரதன் தோள் துண்டை இடுப்புக்கு கொண்டு வந்து, கன்னத்தில் போட்டுக் கொண்டு, பக்திப் பரவசத்தோடு கடவுளை வணங்கினார். நீட்டிய கரத்தில் விபூதி, சந்தனம் விழுந்தது. நெற்றி நிறைய பூசிக் கொண்டு, எனக்கும் கொஞ்சம் கொடுத்தான்; இட்டுக் கொண்டேன்.
ஊர்வலம் கடந்து போன பின், ஆரவாரம் அடங்கி அமைதியானது... ""அப்ப நான் கிளம்பறேன்,'' என்றேன்.
""ஒரு நிமிஷம் உட்கார்,'' என்றான் கட்டளை போல. காபி வரவழைத்தான். கொஞ்சம் குடித்ததும், ""ஆனாலும், நீ இவ்வளவு சுயநலக்காரனாய் இருக்கக் கூடாது,'' என்றான். ""உனக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா, மத்தவங்களும் அதை வெறுத்து ஒதுக்கணும்ன்னு எதிர்பார்க்கறது சர்வாதிகாரம். பணச் செலவை வேண்டுமானால் கொஞ்சம் கூட்டி, குறைச்சுக்கலாம். ஏன், பணமே இல்லாமல் கூட பிறந்த நாள், திருமண நாளை கொண்டாட முடியும்; மனசு வேணும். அடுத்தவங்களை சந்தோஷப்படுத்த தெரிஞ்சவனுக்குத்தான் அது புரியும். இப்ப சாமி ஊர்வலம் போச்சே... என்ன அழகா, கண்ணுக்கு லட்சணமா அலங்காரம் பண்ணிக் கொண்டு போறாங்க... இப்படியெல்லாம் என்னை சிங்காரிச்சு ஊர்வலம் கொண்டு போன்னு சாமி கேட்டுச்சா... சாமிக்கு என்ன சந்தோஷம்... அது எல்லாம் கடந்தது... எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது. ஆனாலும், ஜனங்கள் செய்யறாங்க... சாமி மேல அவங்க வச்சிருக்கிற அன்பு, பக்தியால, தங்கள் கடவுளை மனம் போல அலங்கரிச்சு, அழகு பார்த்து, விழா கொண்டாடி மகிழ்ச்சியடையறாங்க. அது போலத்தான் உனக்கு, பிறந்த நாளை, உன் குடும்பத்தார் கொண்டாடி, உன் மேல தங்களுக்கு உள்ள அன்பை, பிரியத்தை வெளிக்காட்டி, சந்தோஷப்பட நினைக்கிறாங்க...
""ஊர்ல நடக்கிற விழாக்கள், சமூக ஒற்றுமைக்கு வழி வகுக்கிற மாதிரி, வீட்டில் நடக்கிற விழாக்கள் குடும்பத்தை ஒன்று சேர்க்க, கூடி மகிழத்தான். உன் மனைவி தனக்கு பிறந்த நாள் கொண்டாடி மகிழலையே... உன் பிறந்த நாளை கொண்டாடி மகிழணும்ன்னுதானே விரும்பினாங்க... போன்ல வாழ்த்து சொன்னால் போதும்ன்னு சொல்லியும், இரவோடு இரவாக கிளம்பி வந்து வாழ்த்து சொல்லி இருக்கானே மகன்... பிரியத்துனாலதானே ஓடி வந்தான்... இந்த காலத்தில் அப்படியொரு மகன் இருப்பது எத்தனை பாக்கியம்... உனக்காக வந்து வீட்டில் காத்துகிட்டிருக்காளே உன் மகள்... பாசத்தினால்தானே வந்திருப்பாள்... நாற்பது பேருக்கு ஏன் அன்னதானம் கொடுத்தாங்க... அதில், பத்து பேராவது உன்னை வாழ்த்தட்டும்ன்னு தானே...
"உன்னுடைய இந்த பிறந்த நாள் நிகழ்ச்சி மூலம், இவ்வளவு நல்லது நடந்திருக்கும் போது, இதை நீ விமர்சனம் பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறது மடத்தனம். கொஞ்சமாவது மனிதத்தனம் இருந்தால், புரிஞ்சுக்க முயற்சி செய்... இந்த மாதிரி வாய்ப்பு எல்லாருக்கும் கிடைச்சுடறதில்லை... என்னையே எடுத்துக்க, எனக்கு பிறந்த நாள்ன்னு என் மனைவிகிட்ட சொன்னால், அதுக்கென்ன இப்பன்னு முகத்தை காட்டுவாள். அட்லீஸ்ட் ஒரு பால் பாயசமாவது பண்ணலாமேன்னு கெஞ்சுவேன். அது ஒண்ணுதான் குறைச்சல்ன்னு மோவாயை தோள் பட்டையில் இடிச்சுக்குவாள். இத்தனைக்கும் நான் அவளுக்கு ஒரு குறையும் வச்சதில்லை... எல்லாத்துக்கும் ஒரு ப்ராப்தம் வேணும்; அது, எனக்கில்லை. உன்னை மாதிரி ஆட்களுக்கு இருக்கு. ரொம்ப யோசிக்காம, மத்தவங்களுக்காகவாவது கொண்டாடுய்யா... போய்யா போ,'' என்று விரட்டினான்.
முகத்தில் குளிர்ந்த நீரை அடித்தது போல ஒரு தெளிவு, மனதில் ஒரு சிலிர்ப்பு. எழுந்து ஓடி, ஆட்டோ பிடித்து வீட்டுக்கு விரைந்தேன். எனக்காக காத்துக் கொண்டிருப்பரே எல்லாரும். ஆட்டோவை வேகமாக ஓட்டச் சொன்னேன். ""என்ன சார், அத்தனை அவசரம்...'' என்று கேட்டான். ""என் பிறந்த நாளுய்யா...'' என்றேன்.
""வாழ்த்துக்கள் சார்...'' என்றான்; மகிழ்ச்சியாக இருந்தது.
***

படுதலம் சுகுமாரன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
16-டிச-201113:48:16 IST Report Abuse
ஸ்ரீனிவாசன் இது கதை writer photo போடுங்கப்பா .. really சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
R.Vijaya kumar - JBMalaysia.,இந்தியா
16-டிச-201110:39:54 IST Report Abuse
R.Vijaya kumar அருமையான கதை. உன்ன முடியாத பணத்தை தேடி அலையும் மனித தோல் போர்த்திய விளங்குளுக்கு நல்ல பாடம்!
Rate this:
Share this comment
Cancel
விமலா - madurai,இந்தியா
15-டிச-201120:34:46 IST Report Abuse
விமலா its realy a nice story touching my heart
Rate this:
Share this comment
Cancel
செந்தில் நாதன் - மாலதீவு,மாலத்தீவு
15-டிச-201115:38:50 IST Report Abuse
செந்தில் நாதன் என்னையும் இப்படி மகிழ்வித்த திரு. செல்வராஜ், திரு. ஜீவா திரு. ராஜ லக்ஷ்மி, அவர்களுக்கு நன்றி ----செந்தில் நாதன் - மாலதீவு
Rate this:
Share this comment
Cancel
nandhini - வெரிnice,இந்தியா
14-டிச-201114:07:45 IST Report Abuse
nandhini super
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Chennai,இந்தியா
13-டிச-201112:08:23 IST Report Abuse
Tamilnesan மற்றவர்கள் அன்பை பெரும் அந்த நிமிடங்கள் விலைமதிப்பு அற்றது......நல்ல கதை, வாழ்த்துக்கள் சுகுமாரன் சார்....
Rate this:
Share this comment
Cancel
12-டிச-201114:57:23 IST Report Abuse
ராம்குமார் சுப்ரமணியம் மிக்க அருமையாக இருந்தது. ஒரு நிமிடம் என் அப்பா நினைவுக்கு வந்தார்கள் ...!
Rate this:
Share this comment
Cancel
அகிலன் - துபாய்,இந்தியா
12-டிச-201110:48:30 IST Report Abuse
அகிலன் நல்ல கதை... உணர்வுகள் மறித்து வரும் வேளையில் இது போன்ற கதைகள் அவசியம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.