உடுமலை: பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி வழியும் நிலையில், காண்டூர் கால்வாய் பழுதால் திருமூர்த்தி அணைக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பு செய்யமுடிவதில்லை. பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட மூன்று லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்காக, நான்கு மண்டலங்களாக பிரித்து, ஆறு மாதத்துக்கு ஒரு மண்டலம் என 135 நாட்கள் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. போதிய நீர் இருப்பு இல்லாததால், நான்காம் சுற்று தண்ணீர் வழங்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளது. பாசனத்துக்கு 1,200 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,"அணையில் நீர் இருப்பு குறைந்ததால், பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியவில்லை. அணையில் நீர் சேகரிக்கப்பட்ட பிறகு, நான்காம் சுற்றுக்கு நவ., 11ம் தேதி முதல் தண்ணீர் வழங்கப்படும்' என்றனர்.
பி.ஏ.பி., பாசன சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் சேகரிக்கப்படும் தண்ணீர், 49 கி.மீ., தூர காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு கொண்டு வரப்பட்டு, பிரதான கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு வழங்கப்படுகிறது. பி.ஏ.பி., திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாய் முழுவதும் மலை பகுதிகளில் வருகிறது. பல இடங்களில் மலையை குடைந்தும் அமைக்கப்பட்டுள்ளது. மலை மற்றும் அடர்ந்த வன பகுதியில் உள்ள காண்டூர் கால்வாய் 50 ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், முற்றிலும் பழுதடைந்துள்ளது. இதனால், தண்ணீர் விரையம் அதிகரித்துள்ளது. வினாடிக்கு 1,100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், திருமூர்த்தி அணைக்கு வெறும் 730 கன அடி நீர் மட்டுமே வருகிறது. தற்போது, பாசன திட்டத்தின் சுற்றுக்களில் மாற்றம் செய்யப்பட்டு, பிரதான கால்வாயின் கொள்ளளவான 1,100 கன அடிக்கு பதிலாக, வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, மேல் பகுதிகளுக்கும், மீதம் உள்ள நாட்களில் 450 கன அடி நீர் திறக்கப்பட்டு கடை மடை பகுதிகளுக்கும் வழங்கப்படுகிறது.
இதனால், அணையில் நீர் சேரும் வாய்ப்பு அதிகளவு உள்ளது. ஆனால், தற்போது நீர் விரையம் மேலும் அதிகரித்துள்ளதால், பாசன காலத்தில் இடையில் தண்ணீர் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காண்டூர் கால்வாய் பராமரிப்புக்கு 127 கோடி ரூபாய்க்கு திட்டமதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டும், இதுவரை நிதி ஒதுக்கவில்லை. இதனால், பி.ஏ.பி., பாசன திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி வழியும் நிலையில், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆதாரமாக உள்ள திருமூர்த்தி அணை மட்டும் வறண்டு காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை தண்ணீரை முறையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நீர் அனைத்தும் வீணாக கடலில் கலக்கும் அவலம் உள்ளது.
பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் திருப்தியான நீர் இருப்பு இருந்தும், திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாய் பழுது காரணமாக பாசன நிலங்கள் தொடர்ந்து வறட்சியில் சிக்கி தவிக்கிறது. இவ்வாறு, பாசன சங்க நிர்வாகிகள் கூறினர்.
| வாசகர் கருத்து |