கோவை: கோவையில் அரசு ஊழியர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் குடியிருப்புகளை புதுப்பிக்க வேண்டும், என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை வின்சென்ட் ரோட் டில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்புகள் இருந்தன. மாதம் 15 ரூபாய் வாடகை அடிப்படையில் ஏழை மக்கள் வசித்து வந்தனர். இந்த குறைந்த வாடகையையும் பலரும் பல மாதமாக செலுத்தாமல் இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில், அங்கிருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பு 2007 அக்.,19ல் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, அங்குள்ள மற்ற குடியிருப்பில் இருந்தோரையும், பாளையந்தோட்டம், காமராஜபுரம், சித்தாபுதூர் பகுதி குடியிருப்புகளில் வசித்தோரையும் காலி செய்ய 650 வீடுகளுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. சித்தாபுதூர் தவிர மற்ற இடங்களில் இருப்பவர்கள், வீடுகளை காலி செய்து விட்டனர். பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, முதற்கட்டமாக எட்டு கோடி ரூபாய் மதிப்பில் வின்சென்ட் ரோட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தொடரும் அபாயம்: உக்கடம், வின்சென்ட் ரோட்டில் குடியிருப்பு இடிந்து 13 உயிர்கள் பலியான பிறகே, மாற்று குடியிருப்பு கட் டும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அதே போன்று, இன்னொரு விபரீதத்துக்கு தயாராகி வருகின்றன கோவையிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்.
கோவை ரேஸ்கோர்ஸ், ரெட் பீல்ட்ஸ், சிங்காநல்லூர், கணபதி மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள், வீட்டு வசதி வாரியத்தால் அரசு ஊழியர்களுக்கு வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பராமரித்து பல ஆண்டுகளாகி விட்டதால், பல குடியிருப்புகள் பாழடைந்து இடியும் நிலையில் உள்ளன. வீட்டு வசதி வாரியமும் இந்த வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீசும் அனுப்பி விட்டது. ஆனால், நோட்டீஸ் அனுப்பாத வீடுகளின் நிலையும் மோசமாகவே உள்ளது.
இந்த குடியிருப்புகளுக்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் சில லட்சங்களை ஒதுக்கினாலும் அவை வெறும் காகித அளவிலேயே வேலை நடந்ததாக காட்டப்படுகின்றன. இதனால், குடியிருப்புகளில் பல, எப்போது வேண்டுமானாலும் விழும் அவல நிலையில் உள்ளன. இத்தனைக்கும் இந்த வீடுகளுக்கு மாதந்தோறும் பல லட்ச ரூபாய் வாடகையாக, வீட்டு வசதி வாரியத்துக்கு வருவாய் வருகிறது. இந்த வீடுகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்காத வீட்டு வசதி வாரியம், ஆறாவது சம்பள கமிஷன் அடிப்படையில் வாடகையை மட்டும் உயர்த்தியுள்ளது. பாழடைந்த நிலையிலுள்ள ஏதாவது ஒரு வீடு இடிந்தாலும் அரசு ஊழியர் குடும்பங்களை சேர்ந்த பலர் பாதிக்கப்படுவது நிச்சயம். வாடகையே செலுத்தாதவர்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, வீடுகளை புதிதாக கட்டித்தரும் தமிழக அரசு, அரசு ஊழியர்கள் வசிக்கும் வீடுகளை மட்டும் கண்டுகொள்ளவேயில்லை. அரசு ஊழியர் குடியிருப்புகளில், ஓரளவு நல்ல நிலையிலுள்ள வீடுகளிலும் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, எஸ்.ஐ. எச்.எஸ். காலனி குடியிருப்பில் 234 அரசு ஊழியர் குடும்பங்களுக்கு குடிநீர் வசதியில்லை; விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். முன்பு, மாநகராட்சி லாரிகளில் 20 நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு 20 குடம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது; அதுவும் இப்போது கிடைப்பதில்லை. இரு ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி சார்பில் இந்த குடியிருப்புக்கு குடிநீர் இணைப்பு வழங்க குழாய் பதிக்கப்பட்டது; ஆனால், பணிகள் முழுமையடையவில்லை. இந்த பணி, வீட்டு வசதி வாரியத்தினுடையது என்று மாநகராட்சி தட்டிக் கழித்து விட்டது. இந்த இரு துறைகளின் மோத
லில், இப்பகுதியிலுள்ள 234 குடும்பத்தினர் படும்பாடு கொஞ்சமில்லை. தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, முதல்வருக்கு ஏராளமான மனுக்களை குடியிருப்புவாசிகள் அனுப்பியுள்ளனர்; அதற்கும் எந்த பலனும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியுள்ள தமிழக அரசு, கோவையில் பல ஆயிரம் அரசு ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் நிலவும் பிரச்னைகளுக்கும் துரித தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
| வாசகர் கருத்து |