ராமநாதபுரம்: தமிழக பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடல் ஆமைகளால் ஒரிசாவுக்கு கடந்து செல்ல முடியாத நிலையில், முட்டையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கடல் ஆமைகளில் ஆறு வகை மிகவும் பிரசித்தி பெற்றவை. மிகச்சிறிய ஆமையாக கருதப்படும் 110 மி.மீ., கொண்ட "ஸ்டிங்காட்' ஆமையானது வடகிழக்கு அமெரிக்காவில் உள்ளன. மற்ற ஐந்து வகை ஆமைகள் இந்திய கடற்பகுதியில் வாழ்கின்றன. கிலொனியா மைடாஸ்(பேராமை), லெபிடோகிலீஸ் ஒலிவேசியா(சித்தாமை), எரிட்மோகிலீஸ் இம்பிரிக்கேட்டா(அழுங்காமை), லெதர்பெக் டர்டில்(தோணி ஆமை), கேரிட்டா கேரிட்டா (பெருந்தலை ஆமை) என்பவை அவற்றின் பெயராகும். இந்த வகையை சேர்ந்த கருவுற்ற பெண் ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக கரையை நோக்கி கூட்டமாக நீந்தும். பெருந்தலை ஆமையை தவிர மற்ற வகை ஆமைகள் மட்டுமே இந்திய கடற்கரை பகுதியில் முட்டையிடும். நவம்பர் - ஏப்ரல் இவை முட்டையிட ஏற்ற காலமாகும். இதில், சித்தாமைகள் அதிக அளவில் முட்டையிடும். இவை, இந்திய கிழக்கு கடற்கரை பகுதியான ஒரிசாவின் கஹிர்மாதா, ருசிகுல்யா, தேவி ஆற்று முகத்துவாரத்தில் தான் முட்டையிடுகின்றன.
இதற்காக ஆண்டுக்கு ஆறு லட்சம் சித்தாமைகள் தமிழகம், ஆந்திர கடலோரப் பகுதியை கடந்து செல்கின்றன. பயணத்தின் வழியிலும் முட்டையிடும் பழக்கம் கடல் ஆமைகளுக்கு உண்டு. பெரும்பாலான கடல் ஆமைகள் தமிழக கடற்கரையை தற்போது கடந்து கொண்டிருக்கின்றன.
இந்நேரத்தில், தாமதமாக துவங்கிய பருவமழை, கடலோரத்தில் வலுப்பெற்று வருவதால், அவை ஒரிசா செல்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆமைகள் நீந்தி செல்ல சிரமப்படுகின்றன.
பெரும்பாலான ஆமைகள் தமிழக கடலோரத்தில் முட்டையிட துவங்கியுள்ளன. சூரிய வெப்பம் இல்லாமல் அவற்றால் முட்டைகளை பாதுகாக்க முடியாது என்பதால், இந்தியாவில் கடல் ஆமைகள் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கடல் ஆமையும் 200 முட்டைகளுக்கு மேல் இடும் என்பது குறிப்பிடத்தக்கது.
| வாசகர் கருத்து |