பழநி: "வீட்டில் தேங்கியுள்ள கழிவுநீரில், மண்ணெண்ணெய் ஊற்றுவதால், கொசுக்கள் அழியும்' என, சுகாதாரத்துறை ஆலோசனை தந்துள்ளது. பழநியில் திறந்தவெளி சாக்கடை, கழிவுநீர் தேக்கத்தால், கொசு தொல்லைக்கு பஞ்சமில்லை. பஸ் ஸ்டாண்ட் ஓட்டல் கழிவுகள் கொட்டப்படுவதால், புனித நீராடும் குளமாக இருந்த வையாபுரிக்குளம், இன்று, கழிவுநீர் குளமாகவும், கொசு உற்பத்தி தொழிற்சாலையாகவும் மாறிவிட்டது.
பழநி நகராட்சி சுகாதாரத்துறை சார்பில், தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரில், கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. வீடுகளுக்குள் தேங்கியுள்ள கழிவுநீரில் மண்ணெண்ணெய் ஊற்றுமாறும், இதனால், கழிவுநீரில் உள்ள கொசுமுட்டைகள் அழியும் என, நகராட்சியினர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
கோட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த காளிதாஸ் கூறுகையில்,"நகராட்சியினர் கூறியபடி, வீட்டில் உள்ள சாக்கடைகளில், மண்ணெண்ணெய் ஊற்றியதால், கொசு ஓரளவு குறைந்துள்ளது; எங்கள் தெருவிலுள்ள பலரும், இம்முறையை கடைபிடிக்கிறோம்,' என்றார்.
| வாசகர் கருத்து |