Advertisement
மாவட்டம் » ஈரோடு சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
ஈரோடு
ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்
ஈரோடு நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
ஈரோடு சுற்றுலா
சங்கமேஸ்வரர் கோயில்
சங்கமேஸ்வரர் கோவில் பவானி என்னும் ஊரில் உள்ள ஒரு கோயில் ஆகும். பவானி ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ளது. இறைவன் பெயர் சங்கமேஸ்வரர், இறைவி பெயர் வேதநாயகி அல்லது வேதாம்பிகை. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 ...
மேலும்...
ஈரோடு
ஈரோடு

ஈரோடு வரலாறு

ஈரோடு வரலாறு

Hotel image

பருத்தி விளையும் பூமியில் அமைந்துள்ள ஈரோடு நகரம், பெரும்பாளையம் கால்வாய் மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகிய இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த பகுதி கி.பி.1000 முதல் கி.பி.1275 வரை சோழ மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது தாராபுரம் தலைநகராக இருந்தது. பின்னர் இந்த பகுதி கி.பி.1276ல் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. இவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தான் காளிங்கராயன் கால்வாயை, வீரபாண்டிய மன்னன் வெட்டினான். பாண்டியர்களைத் தொடர்ந்து, முஸ்லிம்களும் அதன் பின்னர் மதுரை நாயக்கர்களும் இப்பகுதியை ஆண்டுள்ளனர். பின்னர் ஐதர் அலியும் திப்பு சுல்தானும் ஆட்சி செலுத்தினர். 1799ல் பிரிட்டிஷாரிடம் திப்பு சுல்தான் தோல்வி அடைந்தபோது, இந்த பகுதி, பிரிட்டிஷார் வசம் சென்றது. ஐதர் அலியின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரில் 300 வீடுகள் இருந்தன. சுமார் ஆயிரத்து 500 பேர் வசித்த இந்த நகரைச் சுற்றி கோட்டையும் 4 ஆயிரம் போர் வீரர்கள் தங்குவதற்கான பாசறைகளும் அமைக்கப்பட்டிருந்தன.


வடக்கில் காவிரியும் கிழக்கில் காளிங்கராயன் கால்வாயும் அமைந்திருக்க இந்த நகரைச் சுற்றி தென்னந்தோப்புகளும் வளமான நன்செய் நிலங்களும் அமைந்திருந்தன. ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற மராட்டிய, மைசூர் மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகளால் இந்த ஊர் சீரழிந்து சின்னாபின்னமாகியது. இருப்பினும் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டதும் அமைதி ஏற்பட்டு, மக்கள் மீண்டம் இப்பகுதியில் வந்து குடியேற ஆரம்பித்தனர். ஓராண்டிற்குள் 400 வீடுகள் கட்டப்பட்டு, சுமார் 2 ஆயிரம் பேர் குடியேறினர். 1807ம் ஆண்டு இந்த பகுதியிலிருந்து ராணுவம் வெளியேறியது. 1877ல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின்போது மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப் பணியாக, இந்த பகுதியில் மீண்டும் கோட்டையைக் கட்டும் பணி தரப்பட்டது.


இருப்பிடம்:


கோயம்புத்தூருக்கு கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஈரோடு நகரம். காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த நகரம், 76.21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. 1981ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரின் மக்கள் தொகை 2.48 லட்சமாக இருந்தது. ஈரோட்டில் இரண்டு பழமையான கோயில்கள் உள்ளன. ஒன்று சிவன் கோயில்; மற்றது விஷ்ணு கோயில். ஈரோடு பகுதியில் நிலப்பரப்பு, கருப்பு நிற களிமண்ணாக காட்சி அளிக்கிறது. சில பகுதிகளில் மணல் பரப்பு, கற்கள், கூழாங்கற்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. பொதுவாக கருப்பு மற்றும் செம்மண் என இருவகை நிலப்பரப்பு காணப்படுகிறது. சுண்ணாம்பு கற்களும் அதிக அளவில் கிடைக்கிறது.தமிழகத்தின் பெரும்பாலான நகர்களைப் போலவே ஈரோடு நகரமும் வெப்பம் நிறைந்ததாக,
வறட்சியானதாகவே இருக்கும். சராசரி வெப்ப நிலை 80 டிகிரி பாரன்ஹீட் முதல் 96 டிகிரி
பாரன்ஹீட் வரை இருக்கும். ஆண்டின் மொத்த மழை அளவு 100 மி.மீ., ஈரோடு நகரின் பிரப் ரோடு மற்றும் நேதாஜி சாலைகளில் வர்த்தக நடவடிக்கை சுறுசுறுப்பாக இருக்கும். பிரதான தொழிற்சாலைகள் அனைத்தும் நகருக்கு வெளியே, பெருந்துறை மற்றும் சத்தியமங்கலம் சாலைகளில்தான் அமைந்துள்ளன. நகரில் பெரும்பாலும் எண்ணெய் மற்றும் அரிசி ஆலைகள், அவை தொடர்பான வர்த்தகம், பொறியியல் பணிகள், ஆட்டோமொபைல் மற்றும் விசைத்தறிகள் உள்ளன. இங்கு சாயப்பட்டறைகளும் உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது முக்கிய நகரமாக ஈரோடு கருதப்படுகிறது. ஆண்டிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்த மாவட்டத்தில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ், இன்ஜினியரிங், ஹோசரிஸ் ஆகியவற்றிற்கு ஈரோடு பெயர் பெற்றதாகும். ஐ.டி. நிறுவனங்கள் இங்கு அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நல்ல காலநிலையும், சிறந்த தொழில் கட்டமைப்பும், கல்வி, மருத்துவ மையங்கள் நிறைந்த நகரமாக ஈரோடு விளங்குகிறது.பொருளாதாரம் :

Hotel image

ஈரோட்டில் வேளாண்மைக் கருவிகள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில், தமிழ்நாடு சிறுதொழில் துறையினரால் நடத்தப்படுகிறது. இவை தவிர எண்ணெய், தோல், பருத்தி ஆலைத் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது. இதன் அருகில் முட்டையைப் பொடியாக்கி பேக்கிங் செய்யும் தொழில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பாத்திரத் தொழிலும் நடந்து வருகிறது. ஈரோடு துணி மார்க்கெட் இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது. சிறு சேமிப்பு திட்டத்தில் 33.65 கோடி ரூபாயில் இம்மக்கள் முதலீடு செய்துள்ளனர்.‌ ஈரோடு மாவட்டம் மஞ்சள், சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களுக்கான முக்கிய சந்தையாகும். மஞ்சளானது துணிகளுக்கு சாயமாகவும் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளானது ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழ்நாட்டு, கர்நாடக மாவட்டங்களிலிருந்தும் வருகிறது. 'ஊத்துக்குளி வெண்ணெய்'யும', 'காங்கேயம் காளை'களும' புகழ் பெற்றவை.தொழில்கள்:

Hotel image

பெருந்தொழில் நிறுவனங்கள் - 2; சிறு தொழிற்சாலைகள் 7,249. மற்றும் 1301 குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன.கைத்தறி - நெசவுத் தொழில் பெருந்துறை, தாராபுரம், ஈரோடு, பவானி ஆகிய இடங்களில் நடக்கிறது. அந்தியூரில் மட்டும் 3000 விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் 5000 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு டையிங் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. சென்னிமலை, பவானி ஆகிய இடங்களில் ஜமுக்காளம், போர்வைகள், படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது. கோபிச்செட்டிப் பாளையம், தாளவாடி, சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டம் இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி துணிகளுக்கு பெயர்பெற்றது. இங்கு பருத்திப் புடவைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கி, வேட்டிகள் ஆகியன தயாரிக்கப் படுகின்றன.

சர்க்கரை - சத்திநகர், சித்தோடு, பெருந்துறை, கவுந்தபாடி முதலிய இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மரம் அறுப்பு - சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையத்தில் மரம் அறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மீன்பிடிப்பு - ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிப்பே நடந்து வருகிறது. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளில் அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. தாலக்குளத்தில் மீன் குஞ்சுகள் விற்கப்படுகின்றன. பவானிசாகர் அணையிலும், உப்பாறு அணையிலும் மீன்பிடிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு பிடிக்கப்படும் மீனுக்கு 'பவானிகெண்டை' என்றே பெயர் உள்ளது. ஏரி மீன்பிடிப்பில் ஓடத்துறை ஏரி, தலைக்குளம் ஏரியில் மீன்பிடிப்பு நடக்கிறது. இங்கு இறால் மீன் பக்குவப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. செம்படவ பாளையத்தில் கையினால் மீன்வலை பின்னும் நிலையம் ஒன்று உள்ளது.

எண்ணெய் - எண்ணெய் சந்தையைப் பொறுத்த அளவில் கேரளாவில் உள்ள கொச்சிக்கு அடுத்த படியாக, இங்குள்ள காங்கேயம் தான் பெரிய சந்தையாக திகழ்கிறது.

கால்நடை வளர்ப்பு - ஈரோடு மாவட்டத்தில் பாரம்பரியமாகவே கால்நடை வளர்ப்பு சிறந்த முறையில் நடந்து வருகிறது. தமிழக மாடு வகையில் 'காங்கேயம்' உலகப் புகழ்பெற்றது. இது போலவே பர்கூர் இனக் காளைகளும் தற்போது அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தாளவாடி, பர்கூர், அந்தியூர் பகுதிகளில் குறும்பை ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன. கண்ணபுரத்தில் பெரிய மாட்டுச் சந்தையும்; அந்தியூரில் குதிரைச் சந்தையும் ஆண்டுதோறும் கூடுகின்றன.காட்டுவளம் :

Hotel image

இம்மாவட்டத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. காட்டின் மொத்தப் பரப்பளவு 2,42,953.28 ஹெக்டேர்களாகும். தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் ஈரோடு மாவட்ட வனக் கோட்டமே மிகப் பெரியது. இவற்றை 4 ஆக பிரித்துள்ளனர். அவை: சத்தியமங்கலம் சரகம், தல்ல மலை சரகம், பர்கூர் சரகம், அந்தியூர் சரகம் ஆகியவையாகும். தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடு மாவட்டத்திலிருந்து கிடைக்கிறது. சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்று உள்ளது. மேட்டூர் சந்தன எண்ணெய்த் தொழிற்சாலைக்கு இங்கிருந்தே மரங்கள் செல்கின்றன. அந்தியூர், பர்கூர் மலைப் பகுதிகளில் தேக்கு மரங்களும், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர்ப் பகுதிகளில் மூங்கில் மரமும் அதிகமாக வளர்கின்றன. இவை காகிதத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இம்மாவட்டத்திலுள்ள காடுகளில் வேங்கை, கருங்காலி. ஈட்டி, மருது போன்ற பல்வேறு மரங்களும் காணப்படுகின்றன.