வரலாறு
தூத்துக்குடி முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகம், தமிழகத்தின் மற்ற நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலிக்கு சரக்குகளை கொண்டு வர அருகாமையில் உள்ள துறைமுகமாகும். ஆறாம் நூற்றாண்டில் இருந்தே தூத்துக்குடி கப்பல்கள் வந்து செல்லும் இடமாக விளங்கியுள்ளது.
தூத்துக்குடி பழங்காலத்திலேயே முத்துக் குளித்தலுக்கு பெயர் பெற்றதாகும். 19ம் நூற்றாண்டில் சுதந்திர போராட்டத்தில் தூத்துக்குடி முக்கிய பங்கு வகித்தது. மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் என்பவரே உலகின் முதல் மனித வெடிகுண்டு ஆவார். மகாகவி சுப்ரமணிய பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன், முதல் பெண் மனித வெடிகுண்டு வடிவு, வெள்ளையதேவன், வ.உ.சிதம்பரனார், ஆகியோர் இந்த மாவட்டத்தில் பிறந்தவர்களாவர். 1906ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார், பால கங்காதர திலகரின் உதவியுடன் முதல் இந்திய கப்பலை இயக்கினார். எஸ்.எஸ். காலியா என்ற அந்த பயணிகள் கப்பலே, ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவின் முதல் இந்திய கப்பலாகும்.
தூத்துக்குடி, சென்னைக்கு தென்மேற்கில் 540 கி.மீ. தொலைவில் உள்ளது. வரைபட அமைப்பு படி மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் 1986ம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 5, 2008ல் தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது