திருநெல்வேலி சிறப்பு
முற்காலத்தில் வேதபட்டர் என்ற சிவபக்தர் ஒருவரின் பக்தியை சோதிக்க நினைத்த சிவ பெருமான் அவருக்கு வறுமையை உண்டாக்கினார். ஒருநாள் அவர் பல வீடுகளில் இருந்து பிச்சை பெற்ற நெல்லை சூரியஒளியில் காய வைத்து விட்டு நதியில் நீராட சென்றார். நீராடி, கடவுளிடம் மழை தருமாறு வேண்டினார். பக்தரின் வேண்டுதலுக்கு உடனடியாக செவிசாய்த்த இறைவன் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்ய செய்தார்.
அப்போது தான் பக்தருக்கு நெல்லை காயவைத்தது நினைவிற்கு வந்தது. நெல் நனைந்து விடுமே என வேகவேகமாக திரும்பியவருக்கு மிகவும் ஆச்சரியமடைந்தார். மழை நெல் காயவைத்திருக்கும் பகுதியை தவிர பிற இடங்களில் பெய்தது. நெல்லை வேலி போல் காத்து பிற இடத்தில் மழை பெய்ததால் திருநெல்வேலி என்ற பெயர் வந்தது. திருநெல்வேலி, நெல்லை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலியின் சாட்டிலைட் படத்தில் நகர் சுற்றி நெல்வயல்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த நகரத்திற்கு திருநெல்வேலி என்ற பெயர் வந்ததாக கூறுவதுண்டு. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியால் நகரம் செழிப்புடன் காணப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் மாறுபட்ட நில அமைப்பை கொண்டுள்ளது. உயரமான மலைகள், தாழ்வான சமவெளிகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கொண்டுள்ளது. கடற்கரை, அடர்ந்த மலை காடு, மணற்பாங்கான பகுதிமற்றும் வளமிக்க வண்டல்மண் பகுதி மற்றும் வனவிலங்குகள், தாவங்களையும் கொண்டுள்ளது.
பரப்பளவு : 87.64 ச.கி.மீ மக்கள் தொகை : 27,23,988
|