ஈரோடு சுற்றுலா
சென்னிமலை முருகன் கோயில்
சென்னிமலைக்கு போவதற்கு ஈரோட்டிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னிமலையின் அடிவாரத்தில் ஊர் உள்ளது. ஊரின் பெயரும் சென்னிமலைதான். சென்னிமலை அடுக்கடுக்காக உயர்ந்து செல்கிறது. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை உண்டு. அடிவாரத்தில் காவல் தெய்வமாக இடும்பன் காட்சி யளிக்கின்றார். இம்மலைத் தலத்தில் சில தீர்த்தங்கள் உள்ளன. மலையின் தென்மேற்குச் சரிவில் மாமங்க தீர்த்தம் உள்ளது. மற்றும் காணாச்சுனை என்னும் தீர்த்தமும், சுப்பிரமணிய தீர்த்தமும் உள்ளன. மலையின் வடபக்கத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. சுப்பிரமணிய தீர்த்தத்திலிருந்து குழாய்கள் மூலம் மலையுச்சி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலை கடல் மட்டத்திலிருந்து 1279 அடி உயரத்தில் உள்ளது. எனவே களைப்பாறிச் செல்ல மண்டபங்கள் இருக்கின்றன. திருக்கோபுரவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. முருகக் கடவுளின் பெயர்: சென்னிமலை நாதர்; மூலவருக்கருகிலேயே மார்க்கண்டேசுவரரும், இமயவல்லியும் உள்ளனர். அருகிலேயே வள்ளி, தெய்வானைக்குத் தனிக்கோவில் உள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தை 'அகத்தியர்' என்கின்றனர். இக்கோவிலின் மகாமண்டபத் துண்களில் 7ஆம் நுற்றாண்டில் திருப்பணி செய்த முத்துவசவய்யன் மற்றும் மைசூர்மன்னர் தேவராச உடையார், மனைவி ஆகியோர் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. இங்கிருந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றால் ஒரு குகை காணப்படுகிறது. அதன் அருகில் சமாதி ஒன்றும் காணப்படுகிறது. இக்குகையை 'சன்னியாசி குகை' என்று மக்கள் அழைக்கின்றனர்.
சங்கமேஸ்வரர் கோயில்
சங்கமேஸ்வரர் கோவில் பவானி என்னும் ஊரில் உள்ள ஒரு கோயில் ஆகும். பவானி ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ளது. இறைவன் பெயர் சங்கமேஸ்வரர், இறைவி பெயர் வேதநாயகி அல்லது வேதாம்பிகை. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் பெயர் பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.
பண்ணாரி அம்மன் கோயில்
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். கொத்த மங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் துண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.
பவானி சாகர் அணை
மேட்டுப்பாளையத்திலிருந்து வடகிழக்கில் 36 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் பவானி நிதியின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. சினிமாக்காரர்களால் சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்பட்ட கோபியைத் தாண்டி சத்தியமங்கலம் வழியாக பவானிசாகர் வரையிலும் பசுமைப் பயணம். கர்நாடகாவிலிருந்து வரும் பவானி ஆறும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் மெய்யாறும் சேர்ந்துதான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பவானி சாகர் அணை தண்ணீராகக் காட்சி தருகிறது. அணையைச் சுற்றிலும் மலை.
சிவன்மலை முருகன் கோயில்
காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் சிவன்மலை அமைந்துள்ளது. இம்மலையைப் பொதுமக்கள் வலம் வருவது உண்டு. பாதி வழியில் பரமேஸ்வரன் கோவிலும் உண்டு. இங்கு அனுமார் சந்நிதியும் உண்டு. மலையில் படிக்கட்டுகள் உண்டு. இளைப்பாறும் மண்டபமும் காணப்படுகிறது. மலைமீது குமரனுக்கும் தனிக் கோவில் காணப்படுகிறது. தொட்டில் மரம் அருகே நஞ்சுண்டேசுவரரும், பர்வதவர்த்தியும் காட்சி தருகின்றனர். திருச்சந்நிதியில் முருகப்பெருமான், வள்ளி நாச்சியாரோடு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் 3 அடி உயரத்தில் அமைந்துள்ளார். தைப்பூசத் திருவிழா - இங்கு நடைபெறும் பெரிய திருவிழா ஆகும்.
|