நன்மையின் பக்கம் வழிகாட்டிய உண்மை
டிசம்பர் 24,2010,15:36  IST

நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாத்தை மெக்காவில் பரப்பிக் கொண்டிருந்தார்கள். அவரது கொள்கைகள் சிலருக்கு பிடிக்கவில்லை. அவரை கொலை செய்யவும் துணிந்தனர். இதற்காக கூலிப்படையினரை நியமித்தனர். அண்ணலார் அவர்களை யார் கொலை செய்கிறார்களோ அவருக்கு ஏராளமான பணம் தரப்படும் என எதிர்ப்பு தலைவர்கள் அறிவித்தனர். சில கொலைகாரர்கள் ஆயுதங்களுடன் நாயகம் அவர்களின் வீட்டை சூழ்ந்தனர். நாயகம் அவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டது. அவர்கள் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பினார்கள். தனது நண்பர் அபூபக்கருடன் ஒட்டகத்தில் ஏறி மெதினாவிற்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது பகைவர் கும்பலில் சிலர், இருவரையும் மறித்துக் கொண்டனர். ஆனால், அவர்களுக்கு இருவரையும் அடையாளம் தெரியவில்லை. அந்த கொலைகாரர்கள் நாயகம் அவர்களிடம், ""நீங்கள் யார்? எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்?'' என கேட்டனர். இந்த நிலையிலும் நபிகள் நாயகம் தான் கொண்டிருந்த உண்மை பேச வேண்டும் என்ற கொள்கையை கைவிடவில்லை. அவர்களிடம், ""நான் தான் முகம்மது, இவர் எனது தோழர் அபூபக்கர்'' என்று உண்மையைச் சொன்னார்கள். அந்த பகைவர்கள், ""நீங்கள் உண்மையிலேயே முகம்மதுவும், அபபூக்கருமாக இருந்தால், எங்களிடம் மாட்டிக் கொண்டு உண்மையைச் சொல்வீர்களா? நீங்கள் பொய் தானே சொல்கிறீர்கள்?'' என திருப்பிக் கேட்டனர். இருவரையும் அவர்கள் விட்டுவிட்டனர். நாயகம் அவர்களும், அபூபக்கர் அவர்களும் தங்களுக்கு வந்த ஆபத்து நீங்கி மெதீனாவிற்கு சென்றுவிட்டார்கள். இதுபற்றி நாயகம் அவர்கள் கூறும் போது, ""உண்மை நிச்சயமாக, நன்மையின் பக்கம் வழிகாட்டும். நன்மை, சொர்க்கத்தின் பக்கம் வழிகாட்டும். உண்மை நிம்மதியை வழங்கும், பொய் சந்தேகத்தையும், குழப்பத்தையும் விளைவிக்கும்,'' என்றார்கள். நாயகத்துடன் சேர்ந்த தோழர் அபூபக்கரும் கொலைகாரர்களிடம் உண்மையையே சொன்னார். நல்லவர்களுடன் சேரும் எவரும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement