களைப்பை நீக்க என்ன செய்யலாம்?
மார்ச் 04,2011,09:30  IST

வீட்டு வேலை செய்யும் பெண்களில் பலர் ""உடல் வலி, கால்வலி, கைவலி, வயிறு வலி'' என ஏதாவது ஒன்றால் பாதிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து வேலை செய்ய இயலாமல் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கெல்லாம், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியே அறிவுரையாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் திருமகளார், பாத்திமா நாயகி அவர்கள் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது, கோதுமை அரைப்பது, ரொட்டி சுடுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்தார்கள். அவர்களது கணவர் அலி(ரலி) அவர்கள் ஒட்டகத்துக்கு தீனி வைப்பது, தண்ணீர் காட்டுவது, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி வருவது போன்ற வேலைகளைச் செய்தார்கள்.
ஒருநாள் நாயகம்(ஸல்) அவர்கள், பாத்திமா அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். அப்போது பாத்திமா அவர்கள், தங்கள் தந்தையிடம், ""எனது தந்தையவர்களே! நான் கோதுமை அரைத்து அரைத்து களைத்துப்போய் விட்டேன். எனது கைகள் காய்த்துப் போய்விட்டன. அடுப்பு வேலை செய்து உடையும், உடலும் கெட்டு விட்டது. அலி (ரலி) அவர்களும் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து களைத்துப் போய் விட்டார்கள். எனவே எங்களுக்கு உதவியாக ஒரு அடிமையை ஏற்படுத்துங்கள்,'' என்றார்கள்.
இதைக் கேட்ட நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ""அன்பு மகளே! அஸ்ஹாபுஸ்ஸுஃப்பாவான தாழ்வாரத் தோழர்கள் பசியால் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஒவ்வொரு நாளும் இரவு
படுக்கைக்கு முன் "சுப்ஹானல்லாஹ்' என்று 33 தடவையும், "அல்ஹம்துலில்லாஹ்' என்று 33 தடவையும், "அல்லாஹு அக்பர்' என்று 34 தடவையும் ஓதி நித்திரை செய்யுங்கள். அது உங்களின் சிரமங்களையும், கஷ்டங்களையும் நீக்கி விடும். அதிகமான வேலையாட்களை விட அதிக அளவில் உதவியாகவும் இருக்கும்,'' என்று சொன்னார்கள்.
அன்னை பாத்திமா அவர்களும், தனது அன்புத்தந்தையின் சொல்படியே நடக்க ஆரம்பித்தார்கள். அது மிகப்பெரும் பேருதவியாக அமைந்தது. வீட்டு வேலை செய்ய முடியவில்லை, வேலையாளும் கிடைக்கவில்லை என்று கூறும் பெண்மணிகள், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், தன் மகளாருக்கு கூறிய முறைகளைச் செய்து வந்தால், சலிப்பும்,களைப்பும் நீங்கி தெம்பும் தெளிவும் பெற முடியும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement