இவர்களல்லவா ஆட்சியாளர்கள்!
நவம்பர் 11,2011,14:16  IST

அரபு மன்னர் (கலீபா) உமர் பாரூக் (ரலி) அவர்கள், ஒரு நாள் இரவு நகர்வலம் வந்தார்கள்.
அப்பொழுது எங்கிருந்தோ வந்த இனிமையான குரல் அவர்களின் காதில் விழுந்தது. சற்று நெருங்கிய போது அது பெண் குரலாக கேட்டது. இனிய ராகத்தில் அவள் பாடிக் கொண்டிருந்தாள். கூர்ந்து கவனித்த பொழுது, அது ஒரு காதல் பாட்டு என்று தெரியவந்தது.
அந்த வீட்டருகே வந்து, ""யார் அங்கே?'' என்று அதட்டும் தொனியில் கேட்டார்கள்.
அவ்வளவு தான். பாட்டு நின்று அமைதியானது. பயத்தில் பேச்சு வரவில்லை.
""யார் அங்கே?'' என்று திரும்பவும் உமர் கேட்டார்கள். இப்போதும் பதில் வரவில்லை. கதவைத்தட்டினார்கள். நிசப்தமே நீடித்தது. உள்ளே ஏதோ நடக்கிறதோ என்ற சந்தேகம் வலுத்தது. எனவே சுவரேறி கூரையைப்பிய்த்துக் கொண்டு உள்ளே இறங்கினார்கள். உமரைக் கண்ட பயத்தில், ஒரு பெண்மணி அப்படியே உறைந்து போய் தலை குனிந்தவண்ணம் நின்று கொண்டிருந்தாள்.
""யார் நீ? ஏன் இப்படி தனியாகப் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கிறாய்? அதுவும் காதல் பாட்டு இந்த நடுநிசி நேரத்தில்?''
உமருடைய ஆட்சி நீதிக்குப் பேர் போனது. கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த தைரியத்தில் அவள் , ""என்னை யாரென்று கேட்டு, என் மீது குற்றம் சுமத்தும் நீங்கள் இப்போது மூன்று குற்றம் செய்திருக்கிறீர்கள்,'' என்றாள்.
இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அசந்து விட்டார்கள்.
""என் மீதே குற்றச்சாட்டா? என்ன குற்றம் செய்தேன்?'' என அவளிடம் தயவோடு கேட்டார்கள்.
""முதலாவது நான் ஒரு அன்னியப்பெண், நான் தனியாக இருக்கும் போது அன்னிய ஆடவராகிய நீங்கள் எப்படி உள்ளே வரலாம். இரண்டாவது அல்லாஹ் கூறுகிறான். "வீட்டிற்குள் நேர்வழியாக வாருங்கள். பின்வாசல் வழியாக வருவது நன்மையல்ல' (குர்ஆன்2:189) என்று. ஆனால், நீங்கள் நேர்வழியாக வரவில்லை. அடுத்த வீட்டிற்குச் செல்லும் போது ஸலாம் சொல்லி முறையாக அனுமதி பெற்றே செல்ல வேண்டும். அனுமதி கிடைக்காவிட்டால் திரும்பிச் சென்றுவிட வேண்டும். "அனுமதியில்லாமல் உள்ளே நுழையாதீர்கள்' என்று குர்ஆனில் (24:27,28ல்) இறைவன் கூறுகிறான். நீங்கள் என் அனுமதியின்றி என் வீட்டினுள் பிரவேசித்துள்ளீர்கள். இதுமுறையா? திருக்குர்ஆனுக்கு விரோதமல்லவா?'' என்றாள்.
உமர் (ரலி) அவர்கள், தான் தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டார்கள். இதற்காக பெரிதும் வருந்தி, இரவு முழுவதும் நின்று வணங்கி, இறைவனிடத்திலே பாவ மன்னிப்பு தேடினார்கள்.
காலையில் அந்தப் பெண்ணை அழைத்து வரச்செய்து, ""சரியம்மா நான் செய்தது தான் தவறு. நீ ஏன் நடுநிசியில் பிற ஆடவரை சுண்டி இழுக்கும் வகையில் காதல் ரசம் சொட்ட கவிதை பாடினாய்?'' என்றார்.
அதற்கு அவள், ""கல்யாணமாகி மூன்று மாதத்தில் என் கணவர் என்னை பிரிந்து போருக்கு போய்விட்டார். நீங்கள் தான் அவரை ஒரு படைப்பிரிவோடு அனுப்பிவைத்தீர்கள். அவரது பிரிவின் ஏக்கத்தை என் கவிதையில் வடித்துக் கொண்டிருந்தேன்,'' என்றாள்.
இப்போது உமர் (ரலி) அவர்களுக்கு பொறி தட்டியது.
"ஒரு இளம் பெண்ணை விட்டும் அவளது கணவரை பிரித்த தவறும் நான் செய்திருக்கிறேனா, அப்படியானால் கற்பொழுக்கமுள்ள ஒரு இளம்பெண்ணால் எவ்வளவு காலம் தனது கணவரை பிரிந்திருக்க முடியும்' என்று பெண்களிடம் ஆலோசனை கேட்டார்கள். மூன்று மாதம் வரை இருக்கலாம் என்று அவர்கள் சொன்ன அபிப்ராயப்படி ஒரு அரசாணை பிறப்பித்தார்கள்.
மார்க்கம் கூறுவதற்கு எந்தளவுக்கு ஆட்சியாளர்கள் மரியாதை தந்துள்ளார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement