யாரை பின்பற்றப்போகிறீர்கள்
பிப்ரவரி 03,2012,11:03  IST

தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதனைத் தொடர்ந்து சில பன்றிகள் சென்று கொண்டிருந்தன. வழியில் இன்னும் சில பன்றிகளும் சேர்ந்து கொண்டன. அந்த மனிதன், ஒரு கசாப்புக் கடைக்காரன் காம்பவுண்டுக்குள் சென்றான்.
பன்றிகளும் பின் தொடர்ந்தன.
கசாப்புக் கடைக்காரன் காம்பவுண்டின் வாசலை அடைந்தான். பன்றிகளை ஒவ்வொன்றாகப் பிடித்து துண்டு துண்டாக வெட்டினான். அந்த மனிதன் காத்திருந்து தான் கொண்டு வந்து சேர்த்த பன்றிகளின் இறைச்சியின் எடைக்குத் தக்க பணத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பினான்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த அம்மனிதனின் நண்பன், ""எப்படி முன் பின் பழக்கப்படாத இத்தனை பன்றிகள் எந்த சிரமமுமின்றி உன்னைப் பின்பற்றி வந்தன?'' என்று வியப்புடன் கேட்டான்.
""என் கையில் பன்றிகளுக்கு மிகவும் விருப்பமான பெரிய பயறுகள் இருக்கின்றன. அவற்றை நான் ஒவ்வொன்றாக தரையில் போட்டுக் கொண்டே வருவேன். அவற்றைப் பொறுக்கி ஆசையோடு தின்று கொண்டே எங்கே போகிறோம் என்ற சிந்தையில்லாமல் என் பின்னால் வந்துவிடும். அப்படியே கசாப்புக் கடைக்காரன் கடைக்கே கொண்டு போய் விடுவேன்,'' என்றான்.
இதேபோலத்தான் சாத்தான் மக்களை ஈர்த்து தன்னைப் பின்பற்றத்தக்கதான பல கருவிகளை மக்கள் முன் வைக்கிறான். சினிமா, "டிவி', கம்ப்யூட்டர், மொபைல், போதை மருந்துகள், ஆபாசப்புத்தகங்கள், தகாத நண்பர்கள் இன்னும் இதுபோன்ற கருவிகளை முன்வைத்து கண்களின் இச்சை, மாமிசத்தின் இச்சை போன்ற பாவங்களைச்
செய்யத் தூண்டி தனது வசப்படுத்திக் கொள்ளுகிறான். கடைசியில் தேவ கோபாக்கினைக்குஅவர்களை ஆளாக்கி நரகத்திற்கு கொண்டு விடுகிறான்.
நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி அவருடைய அடிச்சுவட்டில் நடக்க அழைக்கப்பட்டவர்கள். நாம் அவருக்கு உண்மையோடு கீழ்ப்படிந்து நடக்க நம்மை ஒப்புக் கொடுக்கும் போது அவர் நம்மை நடத்தி அவர் எங்கேயிருக்கிறாரோ அங்கே கொண்டு போய்ச் சேர்ப்பார். நாம் யாரைப் பின்பற்றுகிறோம் என்பதில் எச்சரிக்கையாயிருப்போம்.
""அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை'' (சங்.37:31)

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement