இதயங்களில் கருணை நிறையட்டும்
டிசம்பர் 13,2007,
17:59  IST
எழுத்தின் அளவு:

எவருடைய இதயம் கருணையால் நிரம்பியிருக்கிறதோ, எவருடைய சொல் உண்மையை பூஜிக்கிறதோ, யாருடைய உடல் மற்றவருக்குச் சேவை செய்கிறதோ, அவருக்கு இவ்வுலகில் எந்த தீய ஆற்றலும் தீமை செய்ய இயலாது. கலி கூட அவரை ஒன்றும் செய்யாது. அத்தகைய தீய ஆற்றலின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இருக்க வேண்டுமானால் மனிதன் மனம், வாக்கு, காயம் இவற்றில் தூய்மையாக இருக்க வேண்டும்.

நமது புண்ணிய பாரதம், பன்னெடுங்காலம் உலகோர் போற்றும் உத்தமர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. தன்னலமற்ற தியாகிகளின் மூலம், அன்னிய ஆதிக்கத்தை அகற்றி, பூரண சுதந்திரம் பெற்றுள்ளது. நம் பாரத தேசம் அறிவுக்கும், ஞானத்திற்கும் மட்டுமின்றி உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இசை, இலக்கியம், பழமையான பண்பாடு இவற்றின் மூலம் உலகே பாராட்டுமளவுக்கு உயர்ந்த நாடு நம் பாரத நாடு. யாருடைய கலாசாரமும், மனங்கவரும் இயற்கை எழிலும் நிறைந்த புனிதமான இந்த பாரத மண்ணில் பிறந்தவர் எல்லாரும் பெருமைப்பட வேண்டும். இந்த நாட்டின் உயர்வுக்காகவும், வளமைக்காகவும் பாடுபட வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.

தெய்வம் சூரியனை விட பிரகாசமானது. பனிக்கட்டியை விட பரிசுத்தமானது. விண்வெளியை விட பரந்து விரிந்தது. அத்தகைய தெய்வீகம், எல்லா ஜீவன்களிலும் இயற்கையாகவே குடி கொண்டிருக்கிறது. நம் அனைவரின் ஆத்மாவுக்குள்ளும் பிரத்யட்சமாகவே குடிகொண்டிருக்கிறது. அந்தக் கடவுள் எதிலும் பற்றற்றவர்.

நீ பிரம்மத்தில் இருக்கிறாய். உன்னுள்ளே பிரம்மம் இருக்கிறது என்பதுதான் சத்தியம். பிரம்மனும் நீயும் ஒன்றுதான். இதைவிட உயர்ந்த உண்மை என்று எதைச் சொல்ல முடியும்?

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement