இஷ்ட தெய்வ வழிபாடு
செப்டம்பர் 17,2009,
16:39  IST
எழுத்தின் அளவு:

கடவுள் உருவம் இல்லாதவர். மக்கள் தமக்குப் பழக்கமான உருவத்தில் அவரை வணங்கி வழிபாடு செய்கிறார்கள். கடவுளை அவரவர் மனதிற்கு உகந்த முறையில் படைத்துக் கொள்கிறோம். குழந்தையாக இருந்தால், கடவுளையும் ஒரு குழந்தையாக பாவித்துக் கொள்ளும். பசு, கடவுளை வணங்க விரும்பினால் தனது வடிவத்தில் தான் வணங்க முற்படும். நாம் வீட்டில் பூஜை செய்யும் போது, மஞ்சள் பொடியில் சிறிது புனிதநீரைக் கலந்து பிடித்து வைத்துவிட்டு பிள்ளையார் என்று கூறுகிறோம். பிடித்து வைத்த மஞ்சளில், ""அஸ்மின் பிம்பே மகா கணபதிம் ஆவாகயாமி'' என்று அவரை உருவாக்கி வழிபடத் தொடங்குகிறோம். மஞ்சளில் பிள்ளையாரைப் படைத்தபின் அதனை மஞ்சளாக நாம் நினைப்பதில்லை. அதன் பின் அம்மஞ்சளை சமையலுக்கோ, மற்றதற்கோ நாம் பயன்படுத்துவதில்லை. இதனைத் தான் ""பிடித்தால் பிள்ளையார்''என்று நாம் வழக்கில் சொல்வதுண்டு. நம் மனதிற்குப் பிடித்த எந்த உருவத்தில் கடவுளை வழிபாடு செய்ய விரும்புகிறோமோ, அந்த வடிவத்தில் இறைவனை வழிபாடு செய்வதையே இஷ்ட தெய்வவழிபாடு என்கிறோம். அந்த உருவம் நாம் கொடுத்தது தான் என்றாலும், நாம் உருவம் கொடுத்தபின் அவ்வடிவம் மதிப்பு பெற்று விடுகிறது. நம் மனம் அந்த வடிவத்தில் ஒன்றிவிடத் தொடங்குகிறது. வெறும் வடிவமாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. கடவுளாகப் பாவித்து வழிபாடு செய்து மகிழ்கிறோம்.
-தயானந்த சரஸ்வதி சுவாமி

Advertisement
தயானந்த சரஸ்வதி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement