வலது பக்கத்தில் ஒரு இதயம்
டிசம்பர் 10,2007,
22:42  IST
எழுத்தின் அளவு:

* பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது. எனவே, பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம். உலகத்திற்குச் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவதுபோல இதயம் மனதிற்கு ஒளி தருகிறது.

* சூரிய அஸ்தமனத்தின்போது சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று, இதயத்திலிருந்து விலகி நிற்கும்போது மனத்தை மட்டுமே காண முடிகிறது.

* இதயத்தில் வசிப்பவர் மனம், பகலில் சந்திர ஒளி போன்று, இதய உணர்வில் கலந்து விளங்குகிறது. 'பிரக்ஞானம்' என்ற சொல்லுக்கு வெளிப்படையான பொருள் 'மனம்' என்றாலும், அது இதயத்தையே குறிக்கிறது என அறிஞர் உணர்வர். பரம்பொருள் இதயமே.

* அறிபவருக்கும் அறி பொருளுக்கும் இடையே உள்ள வேறுபாடு மனத்தளவிலே தான் உண்டு. மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது துக்கம், பயம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தனது மூலமாகிய இதயத்திற்கு செல்கிறது. அத்தகைய கலப்பை நாம் உணர்வதில்லை. இருப்பினும் உணர்வோடு இதயத்தில் நுழையும்போது அது 'சமாதி' என்று அழைக்கப்பெறும்.

* இதயக் குகையின் நடுவே பிரம்மம் மட்டுமே ஒளிர்கிறது. 'நான்-நான்' என்ற நேரிடையான ஆன்ம அனுபவமே இது. ஆத்ம விசாரத்தின் மூலமோ அல்லது கலப்பினாலோ, அல்லது மூச்சடக்கத்தினாலோ இதயத்தில் நுழைந்து அதாகவே வேரூன்றி இரு.

* ஸ்தூல இதயம் இடது பக்கத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், நான் பேசுகின்ற இதயம் வலப்பக்கத்தில் இருக்கிறது. இது எனது அனுபவம். இதற்கு வேறு சான்று தேவையில்லை.

Advertisement
ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement