கருணை கலந்த தைரியம் தேவை
டிசம்பர் 10,2007,
22:53  IST
எழுத்தின் அளவு:

எத்தனை பூஜ்யங்கள் இருப்பினும் அவற்றுக்கு முன்னால் 1 என்ற எண்ணைச் சேர்க்காவிடில் அவற்றுக்கு இயல்பான மதிப்பில்லை. இதைப் போன்றே நீங்கள் இறையருள் சார்ந்த ஆன்மிகச் செல்வத்தை அடைய கடும் முயற்சி செய்யாவிடின், உங்களையே நீங்கள் அறிந்து கொள்ள முயற்சி எடுக்காவிடின், மூவுலகங்களின் செல்வங்களும் மதிப்பற்றவைகளாகவே இருக்கும். ஆகவே, ஆன்மிக வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். உங்களில் உறையும் பரம்பொருளை முதலில் நாடுங்கள்.

வாழ்க்கைப் பயணம் என்பது தூய்மையின்மையிலிருந்து தூய்மைக்கும், வெறுப்பிலிருந்து அன்புக்கும், இறப்பிலிருந்து அழியாமைக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், முழுமையற்ற நிலையிலிருந்து முழுமைக்கும், தொல்லைகளிலிருந்து அழிவற்ற பேரின்பத்துக்கும், வேற்றுமையிலிருந்து ஒற்றுமைக்கும், அறியாமையிலிருந்து நிலைத்த அறிவுக்கும், பலவீனத்திலிருந்து வலிமைக்கும் செல்லும் பயணமாகும். ஒவ்வொரு எண்ணமும் உங்களைப் பரம்பொருளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு செயலும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

புத்தரைப் போல் கருணையும், பீஷ்மரைப் போல் தூய்மையும், அரிச்சந்திரனைப் போல் வாய்மையும், பீமனைப்போல் தைரியமும் கொள்ளுங்கள். உங்கள் கண்கள் அன்பாகப் பார்க்கட்டும். நாக்கு இனிமையாகப் பேசட்டும். கைகள் மிருதுவாகத் தொடட்டும். உங்கள் காதுகள் இறைவன் புகழால் நிறையட்டும். களைப்பின்றித் தொண்டாற்றுவதன் மூலம் வறுமையிலும், துயரங்களிலும் உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, உற்சாகப்படுத்தி ஆறுதலைத் தாருங்கள்!

Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement