இதயப்பூர்வமாக கடமையைச் செய்
டிசம்பர் 12,2007,
18:49  IST
எழுத்தின் அளவு:

* குரு என்றால் கனமானது, பெரியது, அதாவது பெருமை உடையவர். மகிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை 'மஹாகனம் பொருந்திய' என்று சொல்கிறோம். கனமென்றால் வெயிட் அதிகமென்றா அர்த்தம்? உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் படிப்பிலே பெரியவர். நடத்தையால் வழிகாட்டுவதில் சிறந்தவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கிறார்கள். குருவிடமிருந்து புறப்பட்டு போய், சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செல்லுவது 'தீட்சை' என்று அறியப்படுகிறது.

* மீனாட்சி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறது. இதனால் அவளை கடாக்ஷத்தாலேயே ஞான தீட்சை தந்துவிடும் குருவாகச் சொல்லியிருக்கிறார்கள். இது மத்ஸ்ய தீட்சை. காமாட்சி பக்தனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கி விடுபவள். ஞானகுரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீட்சை வேண்டுகிறோம்.

* கருணை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை நினைத்துக்கொண்டு அன்பு செலுத்துகிறோம். இந்த வேண்டியவர்களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால், அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது. 'நம் கடன்பணி செய்து கிடப்பதே' என்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். கடனை, அதாவது கடமையை அன்போடு, ஆர்வத்தோடு, இதயப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement