பயம், சந்தேகம், சலனம் வேண்டாம்
டிசம்பர் 12,2007,
21:31  IST
எழுத்தின் அளவு:

ஒன்று கூடிக் கடவுளை வணங்கச் செல்லும் போது, மனிதர்களின் மனங்கள் ஒருமைப்பட்டுத் தமக்குள் இருக்கும். ஆத்மவொருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடமுண்டாகும். எனவே தான் நம் முன்னோர் கோயில்களை உருவாக்கினார்கள்.

சிவன் நீ; சக்தி உன் மனைவி. விஷ்ணு நீ; லட்சுமி உன் மனைவி.

பிரம்மா நீ; சரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரை தேவநிலைக்கு கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப்பள்ளிக்கூடங்களே கோயில்கள் ஆகும்.

சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந்தடையாக வந்து முண்டிருக்கிறது.

சகல மனிதரும் சகோதரர். சகோதர உணர்ச்சியைப் பற்றி கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. ஆனால், நடைமுறையில் எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அது நடைமுறைக்கு வர வேண்டும்.

சக்தியால் உலகம் வாழ்கிறது. நாம் வாழ்வை விரும்புகிறோம்.

ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம். ஒவ்வொருவனுக்கும் அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்று சக்திகள் வேண்டும். இந்த மூன்றும் நமக்கு இகலோக இன்பம் கிடைக்கும்படியாகவும், பரலோக இன்பங்கள் சாத்தியமாகும் படியாகவும் செய்கின்றன. ஆத்மா உணர்வாகவும், சக்தி செய்கையாகவும் உள்ளது.

விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இல்வுலகத்தை ஆளுகிறது. இதை பூர்வ சாஸ்திரங்கள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்கின்றன. பயம், சந்தேகம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் சக்தி ஏற்படும்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement