மனசில் பட்டதை... (16)
ஜூலை 28,2017,10:20  IST

இரவு எட்டுமணி... இருட்டின் அடர்த்தி... மலைக்காற்றின் அடர்த்தி... அந்த திருத்தலத்தின் புனிதத்தின் அடர்த்தி... இந்தச் சூழலில் தங்கத்தின் அடர்த்தியாக நகர்ந்து வந்தது அந்தத் தங்கத்தேர். அதில் சிறுவனாக, அழகனாக, கந்தர்வனாக, சூரியனாக, சந்திரனாக, நிலவாக வந்தது பேரழகன் முருகன். சூரசம்ஹாரம் செல்பவனும் முருகன்... சர்வ நன்மைகள் செய்பவனும் முருகன்.
முருகன் ஒரு குழந்தை... கள்ளம் கபடம் இல்லாத குழந்தை... அம்மா, அப்பா சொல் கேட்டு, மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு உலகை வலம் வந்த குழந்தை... அவனிடம் அழகான குழந்தை தன்மையும் உண்டு... தகப்பன் சாமியாகத் தந்தைக்கு உபதேசித்த பெருஞானமும் உண்டு... சூரசம்ஹாரம் செய்யும் பெருவீரனாகவும் இருப்பான். அடியவருக்கு அன்பு செய்யும் கருணையாளனாகவும் இருப்பான்.
மலையில் இருப்பான்... கலையில் இருப்பான்... நவபாஷாணச் சிலையில் இருப்பான்... அறுபடை வீட்டில் இருப்பான்... தமிழ் மொழியில் இருப்பான்.
பழநி மலையில் இருப்பவனைத் தரிசிக்க மலையளவு ஆசை வளர்த்தேன். 25, 30 ஆண்டுகளுக்கு முன்னால் அம்மா, அப்பாவோடு பழநி போயிருந்தேன். அதன் பின் நீண்ட இடைவெளி... அன்றைக்குப் போனேன்.
இழுவை வண்டி என்னும் 'வின்ஞ்' வண்டி மெல்ல மெல்ல நகர்ந்தது. மலைமீது ஊர்ந்து ஏறியது. இருபக்கமும் பிரம்மாண்டமான பாறைகள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி, இறுகிப் போயிருக்கும் பாறைகள். ஆனால் ஆச்சர்யம், அதிசயம், பாறைகளுக்கு இடையே வளர்ந்திருக்கும் செழிப்பான உயரமான பசுமை மரங்கள், பூச்செடிகள்... பாறையில் எப்படி மரங்கள் முளைத்தன? பாறையில் எப்படி செடிகள் பூத்தன? இது பதில் புரியாத தேவ ரகசியம் தான்.
'வின்ஞ்' மலையை அடைந்ததும், கோயிலுக்குள் செல்ல ஒரு சில படிகள்... பிரம்மாண்டமான பிரகாரம். என் எதிரிலேயே, ஆடி அசைந்து தேவரூபனாக வந்தான் முருகன். தங்கத்தேர் சொக்கத்தங்கமாக ஜொலித்தது முருகனின் பேரழகால்.
கனத்த இரவின் பின்னணியில் ஆயிரம் சூரியப் பிரகாசமாகத் தங்கத்தேர் பவனி வந்தது. பக்கத்தில் தேர் வரவர எனக்குள் பரவசம். முதல்முறையாகப் பழநி தங்கத்தேர் தரிசனம். கிட்டத்தட்ட ஐந்து கிலோ தங்கம், 63 கிலோ வெள்ளி சேர்த்து செய்யப்பட்ட தங்கத்தேர் தரிசனம். நான் திட்டமிடாத தற்செயல். நான் நினைக்காத பாக்கியம். அந்த நொடி எனக்குள் மின்னல் வெட்டியது.
கருவறை சன்னதிக்குள் சென்று நவபாஷாண முருகன் தரிசனம்... அதிலும் ராஜ அலங்கார முருகனாக பொன்னும், மணியும், முத்தும், பவளமும், நவரத்தினமுமாக தலையில் சூட்டிய கிரீடத்தோடு ராஜ அலங்காரனாக முருகனைத் தரிசித்ததில் நான் நிறைவானேன்.
வெளியே போகர் சன்னிதானம்... ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் காற்று வழியாக ெமக்கா, ெமதீனா, ரோமாபுரி வழியாகப் பறந்து சென்று பழநிக்கு வந்து நவபாஷாண முருகனை நிர்மாணித்தது என்பது நான்கு வரியில் எழுத முடிகிறது. ஆனால் இத்தனை நிகழ்வுகளும் நடந்தேற எத்தனை காலம் கடந்திருக்கும்?
பழநி முருகன் தரிசனத்துக்கு இப்போது 'வின்ஞ்' தேவைப்படுகிறது. இத்தனை உயரமான மலையில் நவபாஷாண திருமேனி அமைத்தது எப்படி? இங்கே இப்படி ஓர் அற்புதமான திருத்தலம் நிர்மாணித்தது எப்படி? இதையெல்லாம் செய்கையில் என்னென்ன இன்னல்கள் கடந்திருப்பார்கள்? என்னென்ன சிக்கல்கள் தீர்த்திருப்பார்கள்? எத்தனை முறை மலை மீது ஏறி இறங்கிப் பணிகளை முடித்திருப்பார்கள்?
மலைப்பாக இருந்தது. வியப்பாக இருந்தது. நம் முன்னோர்களை நினைத்து பிரமிப்பாக இருந்தது.
''இந்த ஆறு தான் உலகிலேயே நீளமான ஆறு'' ''இந்த குளம் தான் உலகிலேயே ஆழமான குளம்'' ''இந்த மலை தான் உலகிலேயே உயரமான மலை'' இப்படியான தகவல்களை மட்டுமே தெரிந்து வைத்துக் கொள்வதை 'புத்தி' 'அறிவு' என்று வகைப்படுத்துகிறோம். ஆனால், நமது முன்னோர்கள் ஞானிகள். முழுமையானவர்கள். நம்மைப் போல அரைகுறை பின்னம் அல்ல. நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சாதனைகளைச் சர்வ சாதாரணமாகச் செய்தவர்கள். அந்த ஞானத்துக்கும், சாதனைக்கும் பழநி முருகன் திருக்கோயில் கட்டியம் கூறுகிறது.
வந்து பாருங்கள்... கோயிலின் தூய்மை... அன்னதானக் கூடத்தின் தூய்மை... பிரகாரத்தின் தூய்மை... பக்தர்களின் மனத்தூய்மை... எல்லாமே பிரமிப்பு தான்.
போகர் சன்னிதானம் தெய்வீக கதிர்வலைகளின் கூடம். 'கடவுளே.... கடவுளே...' என்று கைகூப்பித் தொழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத திருத்தலம். எப்படி ஐயா இந்தத் திருத்தலத்துக்கான நவபாஷாண முருகன் உருவத்தை நிர்மாணிக்க முடிந்தது? என்ன தொழில் நுட்பம் இருந்தது? என்ன விஞ்ஞானம் இருந்தது? எல்லாவற்றுக்கும் மேலாக உங்களிடம் இருந்தது
மெய்ஞானம் மட்டுமே... இந்தப் புரிதல் வரும் போது, போகர் சன்னிதானத்தில் கரைந்து காற்றோடு கலந்து விடப் பெருவிருப்பம் பொங்கியது எனக்கு.
'பீ கூல்'' (அமைதியாயிரு) என்பது இன்றைய இளைஞர்களின் வேத மந்திரம். அதற்கு அவர்கள் ஆயிரமாயிரம் புறக்காரணிகளைத் தேடுகிறார்கள். ஆனால் ஒரே ஓர் அகக்காரணி கிடைத்து விட்டால் போதும், 'பீ கூல்' நமக்கு சாத்தியமாகும். அது பழநி முருகனின் சன்னிதானம்.
ஆயிரம் புயல்கள் அடித்து நொறுக்கட்டும்... ஆயிரம் பிரளயம் அடித்து நொறுக்கட்டும்... ஆயிரம் கவலைகள் அடித்து நொறுக்கட்டும்... ஆயிரம் வேதனை அடித்து நொறுக்கட்டும்... ஆயிரம் தோல்விகள் அடித்து நொறுக்கட்டும்... ஆயிரம் கோடி நிம்மதியைத் தந்து 'பீ கூல்' என்று நம்மை மாற்றும் சக்தி பழநிமுருகன்.
அவனின் கடைவாய்ச்சிரிப்பு, ''நான் இருக்கிறேன் கவலைப்படாதே'' என்று சொல்லும். அவனின் குட்டிக் கரத்தின் அபயஹஸ்தம்,''என்னிடம் வா....'' என்று சொல்லும். அவனின் குழந்தைக் கண்கள், ''களங்கம் இல்லாமல் மனதை வைத்துக் கொள்'' என்று சொல்லும். அவனின் பிஞ்சுப்பாதம், ''என்னைப் பற்றிக் கொள். பூரண சரணாகதியைக் கற்றுக் கொள்'' என்று சொல்லும். இத்தனையும் முருகன் எனக்கு போதித்த பிரணவம். அவன் தகப்பன் சாமி மட்டுமல்ல... தாய்மைச் சாமியும் தான்... அதனால் தான், நானும் எப்போதும் 'பீ கூல்' என்றே இருக்கிறேன்.
இன்னும் சொல்வேன்

ஆண்டாள் பிரியதர்ஷினி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement