யார் அந்த சிறுவன்?
ஆகஸ்ட் 04,2017,12:28  IST

அன்று காஞ்சிப் பெரியவரின் பிறந்த தினம். கலவை கிராமத்தில் முகாமிட்டிருந்தார். பக்தர்கள் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.
கூட்டத்தினர் ஒரு தம்பதியைப் பார்த்து கொண்டிருந்தனர். அவர் ஒரு தொழிலதிபர். அவரது மோதிரங்களிலும், மனைவியின் கழுத்து நகைகளிலும் செல்வச் செழிப்பு வெளிப்பட்டது. அவர் கூட்டத்தினரை லட்சியம் செய்யாமல், பெரியவரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
பெரியவர் அறையிலிருந்து வந்ததும் தொழிலதிபரிடம், 'எப்படி இருக்கிறாய்?' என விசாரித்தார். அதுதான் சாக்கு என அந்தத் தொழிலதிபர் எல்லோரும் கேட்கும்படியாகத் தான் செய்யும் தர்மங்களை விலாவாரியாக ஒப்பித்தார். அன்ன தானம், பள்ளி, கோயில்களுக்கு நன்கொடை, ஏழைப் பெண்களுக்கு செய்து வைக்கும் திருமணம் என ஒன்றை விடவில்லை. வலது கை கொடுப்பது இடது கைக்கு மட்டுமல்ல...
எல்லோருக்குமே தெரிய வேண்டும் என்று அவர் நினைப்பதாய்த் தோன்றியது.
அவர் முடிக்கும் வரை காத்திருந்த சுவாமிகள், மெல்லிய குரலில் அவருக்கு மட்டுமே கேட்கும்படி 'திருநெல்வேலியில் இருந்தானே தட்சிணாமூர்த்தி என்ற சிறுவன் அவன் எப்படி இருக்கிறான்?' என்று மட்டும் கேட்டு விட்டு, வேறு எதுவும் பேசாமல் கையுயர்த்தி எல்லோரையும் ஆசிர்வதித்து விட்டு சென்றுவிட்டார்.
உடனே தொழிலதிபர், 'நான் பாவி, நான் பாவி!' என்று சொல்லிக் கொண்டே இருந்தார். பிறகு விசாரித்ததில் தெரிந்த விஷயம் இது தான். அவருக்கு ஓர் அக்கா உண்டு. கணவனை இழந்தவர். அந்த அம்மையாருக்கு ஒரு பையன். அவர்கள் இருவரும் அவர் வீட்டில்தான் இருந்தார்கள். திடீரென ஒருநாள் அக்கா காலமானார். அக்காவின் மகனை ஆதரிக்க மனமில்லாமல் விரட்டிவிட்டார். அது நடந்து சில ஆண்டுகளாகி விட்டது. அந்த அக்கா பையனின் பெயர் தான் தட்சிணாமூர்த்தி.
'அக்கா மகனை ஆதரிக்கத் துப்பில்லாமல், தான தர்மம் செய்து என்ன பயன்?' என்பதே சுவாமிகள் மறைமுகமாய்க் கேட்ட கேள்வி. தொழிலதிபர் அதன்பின் தன் அக்கா மகனை கண்டுபிடித்து நல்ல முறையில் வளர்த்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லையே!

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement