மனசில் பட்டதை... (17)
ஆகஸ்ட் 04,2017,12:29  IST

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்?
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்...
கவியரசர் கண்ணதாசனின் தத்துவம்.
ஒவ்வொரு முறை கோயிலுக்குப் போகும் போதும் மனசில் எதிரொலிக்கும் பாடல் இது தான்.
அதிலும் குறிப்பாக குலதெய்வக் கோயிலுக்குப் போகும் நேரம் மனசு பரிதவிக்கும்; பதைபதைக்கும்; ஏங்கும்; பொங்கும்.
பார்க்க மாட்டோமா? எங்கள் முன்னோர்களைப் பார்க்க மாட்டோமா? பரம்பரை பரம்பரையாக எங்கள் குலத்தின் அடையாளமாக இருப்பவர்களைப் பார்த்து உருக மாட்டோமா? குலத்தின் வேராக, நீராக, உரமாக, உயிராக இருப்பவர்களைத் தரிசிக்க மாட்டோமா? என்கிற பாசமும் நேசமும் என்னுள் சேர்ந்தே பரவும்.
ஒவ்வொரு தரிசனத்தின் போதும் ''இதோ ஓடோடி வந்துட்டேன் ஐயா...''
''இதோ ஓடோடி வந்துட்டேன் அம்மா...'' இப்படிக் குலதெய்வங்களைப் பார்த்துக் கூவத் தோன்றும். ஆனால் அங்கே என்னை அழைத்து வந்ததே குலதெய்வங்கள் தானே? அவர்களுக்குத் தெரியாததா? என்கிற நினைப்பும் உள்ளுக்குள் ஓடும்.
திருநெல்வேலி மாவட்டம் கரந்தாநேரி கிராமம். பத்துப் பதினைந்து குடும்பங்களும், வீடுகளும் இருக்கும் சிறுகிராமம். வயல்வெளியும், வாழைத்தோப்பும், மரங்களும், குளுமைக் காற்றும், பனைமரங்களும் நிறைந்த பூமி. எப்போதோ வந்து போகும் ரயில்வண்டி. ஒரு அரசுப்பள்ளி.
இவை மட்டுமே இருக்கும் ஊரில் தான் எங்கள் தாத்தா ஆண்டபெருமாள்பிள்ளை கிராம முன்சீப்பாக இருந்தார்.
அவரின் கைபிடித்து விரல் பிடித்து வயல் வரப்புகளில் நடந்திருக்கிறேன். பதநீரைப் பனையோலையில் உறிஞ்சிக் குடித்திருக்கிறேன். இதையெல்லாம் விடவும் அந்தச் சின்ன கிராமத்தின் வயல்வெளி, வாழைத்தோப்பு, ஆலமரம், அரசமரம், தெய்வநாயகம் பிள்ளையார் கோயில் இப்படி... நான் சின்னஞ்சிறுமியாக ஓடியாடிய இடங்கள் எத்தனையோ...
ஒவ்வொரு பங்குனி உத்திரமும் திருவிழா கொண்டாட்டம் தான். எல்லா ஊரிலிருந்தும் கரந்தானேரி கிராமத்து மக்கள் குடும்பம், குடும்பமாக வருவார்கள். அம்மன் கோயில் வாசலில் அடுப்பு வைத்துப் பொங்கல் செய்து படையல் இடுவார்கள். சாமி கும்பிடுவார்கள். பூஜைகள், பிரார்த்தனைகள், வேண்டுதல் நிறைவேற்றுதல் இப்படியாக மனசெல்லாம் குலதெய்வம் நிறைந்திருக்கும்.
அருமையான தெய்வீக அனுபவங்கள் தேடி ஒவ்வொரு முறையும் கரந்தானேரி செல்வோம். அய்யனாருக்கு வஸ்திரம், அம்மனுக்குப் புடவை, பூ, பழம், மாலை, அர்ச்சனை, சர்க்கரைப்பொங்கல் படையல் என கும்பிட்டு ஐயனார் கோயில் பிரகாரத்தில் ஆசுவாசமாக உட்கார்ந்தால் போதும்; மனசு பஞ்சு போல மென்மையாகும். தூசி, தும்பு, அழுக்கு, கசடு, கோபம், தாபம், வெறுப்பு, பொறாமை, அகங்காரம் எல்லாம் கரைந்து, கழுவிவிட்ட பளிங்குத் தரை போல மனசு வெண்மையாகும்.
இந்த ரசவாதம் நடப்பதற்கு என்ன மாயம்... என்ன மந்திரம் வேண்டும்? எதுவும் வேண்டாம். குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதை வாழ்வியல் கடமையாக கொண்டாலே போதும்.
மெக்கா, மதீனா செல்வது இஸ்லாமியர்கள் கடமை. வாடிகன் செல்வது கிறிஸ்தவர்கள் கடமை. அதுபோல குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது இந்துக்கள் கடமை என்று சொல்லலாமா? இது தர்க்கம் சார்ந்த விஷயமும் அல்ல. குதர்க்கம் சார்ந்த விஷயமும் அல்ல.
மருந்து வேண்டாம். மாத்திரை வேண்டாம். தேவையற்ற வஸ்துக்களின் பின்னால் போக வேண்டாம். நிம்மதி தேடுபவர்கள் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று, வசதிக்கேற்ப உழவாரப்பணி செய்து (தூய்மை செய்தல்) குலதெய்வத்தைக் கும்பிடுங்கள்.
உங்கள் குலம், குணம், வளம், மனம் துலங்கும். இது ஆரூடம் அல்ல; சத்தியம்.
காரணம் நம் உயிர்த்துளி உருவான மூலத்துளி குலதெய்வம். பரம்பரை பரம்பரையாக அவர்களின் வழித்தோன்றல்களாக வந்திருப்பவர்கள் நாம். நம்மை அரூபமாக (கண்ணுக்கு தெரியாமல்) வழி நடத்தி ஆசீர்வதிப்பவர்கள் அவர்கள். அதற்கு எளிய கைங்கர்யமாக நாம் செய்வது என்னவாக இருக்க முடியும்? கை கூப்பி, மனம் ஒன்றி பிரார்த்தனை செய்து இயலும் போதெல்லாம் குலதெய்வ தரிசனம் செய்வதே நம் வரம்.
கடந்த ஆண்டு என் அப்பா கவிஞர் நெல்லை ஆ.கணபதியை உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் சேர்த்தோம். அறுவை சிகிச்சை செய்து வீடு திரும்பியாயிற்று. ஆனால் எதிர்பாராத விதமாக உடல்நலம் முழுமையாக தேறவில்லை. அப்பாவுக்கு கரந்தானேரி சாஸ்தா தான் இஷ்ட தெய்வம். குலதெய்வம் எல்லாமே.... ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தரிசனம் செய்யும் அப்பாவால் கரந்தானேரி செல்ல இயலவில்லை.
என் கணவர் முனைவர் பால ரமணியும், நானும் கிளம்பி கரந்தானேரி சென்றோம். வஸ்திரம், புடவை, பூஜைப் பொருட்களோடு அய்யனார், அம்மன் பூஜை முடித்தோம். ஒவ்வொரு திருத்தல வாசலிலும் இருந்து திருமண் சேகரித்து எடுத்து வந்தோம். இப்படியாக கரந்தானேரி குலதெய்வத் திருமண் சென்னை அண்ணநகர் வீட்டுக்கு வந்தது.
என் அம்மா சுப்புலட்சுமி திருமண்ணைப் பொட்டலமாக்கி, அப்பா படுக்கையில் வைத்ததும், கொஞ்சம் திருமண்ணைத் தண்ணீரில் கரைத்து தீர்த்தமாக குடிக்கச் செய்ததும் அடுத்தநாளே அப்பாவின் சுகவீனம் மறைந்தது. இதற்கு மாயாஜாலம் எதுமில்லை. குலதெய்வ ஜாலம். குலதெய்வம் நம் பரம்பரையின் ஆதிவித்து. உயிரின் சொத்து. அவர்களைக் குளுமை செய்வோம். நம் வாழ்க்கை குளுமையாகும்

இன்னும் சொல்வேன்

ஆண்டாள் பிரியதர்ஷினி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement