தெய்வ பிறவிகள்! (19)
ஆகஸ்ட் 04,2017,12:39  IST

தாசர்கள் திருமாலுக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அடுத்த வேளை பொருள் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் இறைவனின் புகழைப் பாடியபடியே வீதியில் பிச்சை வாங்கி, மனிதர்களுக்கு நல்வழி சொல்லி வாழ்ந்தவர்கள். இல்லறத்தில் இருந்தபடியே இவ்விதம் இறைவனில் திளைத்த ஹரிதாசர்களில் சிகரமாக விளங்குபவர் புரந்தரதாசர். கருணை மிகுந்த மனைவி சரஸ்வதி பாயின் பக்தியினால் விட்டலனால் ஆட்கொள்ளப்பட்டவர்.
அடகுத்தொழில் செய்து செல்வந்தரானார். ஆனால் ஆணவம் கொண்ட கஞ்சனாக இருந்தார். பாண்டுரங்கன் ஏழை வடிவில் வந்து தன் பிள்ளையின் பூணூல் சடங்குக்குப் பொருளுதவி கேட்டபோது, கடுஞ்சொல் பேசி விரட்டினார்.
பாண்டுரங்கன், தாசரின் வீட்டுக்குச் சென்று சாதுர்யமாகப் பேசி, தாசர் மனைவியின் வைர மூக்குத்தியைப் பெற்றுக்கொண்டு தாசருடைய கடையிலேயே அடகு வைக்கிறார். சந்தேகம் கொண்ட தாசர், அவரைக் கடையில் இருக்கச் சொல்லி விட்டு, வீட்டுக்குச் சென்று மனைவியிடம் விசாரித்தார்.
கணவரிடம் சொல்லாமல் கழற்றிக் கொடுத்து விட்டோமே என்று பயந்து, ஒரு கிண்ணத்தில் நஞ்சை ஊற்றிப் பருக முயன்ற போது, கிண்ணத்தில் ஓசையுடன் வந்து விழுகிறது மூக்குத்தி! அவளுக்கும், விசாரிக்க வந்த கணவருக்கும் ஆச்சரியம். கடைக்கு விரைந்தால் அங்கே அந்த ஏழையையும் காணவில்லை. அவர் கொடுத்து, இவர் பூட்டி வைத்திருந்த மூக்குத்தியையும் காணவில்லை.
தனக்குப் பாடம் புகட்ட வந்தது பாண்டுரங்கனே என்று புரிந்துகொண்டு வியாபாரத்தை விட்டு, வீதிக்கு வந்தார் புரந்தரதாசர்.
ஆயினும் கடுஞ்சொல்லும் கோபமும் அவரை விட்டு நீங்கவில்லை. அப்பண்ணா என்னும் சீடரிடம் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார். சீடர் தாமதம் செய்ததால் வெகுண்டு செம்பால் அவருடைய தலையில் மொத்தினார். விளைவு? பாண்டுரங்கன் சிலையின் தலைப்பகுதி வீங்கியது.
இப்படி பலமுறை அவருடைய வாழ்வில் பாண்டுரங்கன் மாறுவேடங்களில் வந்து உதவி புரிந்தான். தவறுகளைத் திருத்தினான். வியாசராயர் இவரது குருவாக வந்து உபதேசம் செய்தார். அதுமட்டுமல்ல “ஹரி தாசர்களில் புரந்தரதாசரே தலை சிறந்தவர்” என்று புகழ்ந்தார்.
“ஐயா!விட்டலனின் அருளை உங்கள் ஆசியினால் தான் நான் அடைந்தேன். உங்கள் திருவடிகளே கதி” என்று குருவிடம் தாசர் சொன்னார்.
புரந்தர தாசரின் பாடல்களுக்கு 'தேவர நாமா' என்று பெயர். கன்னடத்திலும், வடமொழியிலும் 4 லட்சத்து 75 ஆயிரம் பாடல்களை இயற்றினார். இன்று இருக்கும் பாடல்கள் கொஞ்சமே. அவருடைய கீர்த்தனைகள் எளிய நடையில் அழகான உவமைகளுடன் பக்திரசம் சொட்ட இருக்கும்.
சங்கீதம் படிக்க வேண்டிய முறையை, ஒரு பாடத் திட்டமாக நெறிப்படுத்தி வைத்தார். கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று கொண்டாடப்பட்டார். கல்யாணி, தோடி, வராளி, பைரவி, சாவேரி போன்ற 84 ராகங்களை அடையாளப்படுத்தி வைத்தார்.'புரந்தர விட்டல' என்பது அவருடைய சங்கீத முத்திரை. கணபதி, சரஸ்வதி போன்ற தெய்வங்களையும் பாடியுள்ளார்.
''எல்லோரும் அணுகுவதற்கு எளியவன் இறைவன். அவனே நம்மைக் காப்பவன். அவனுடைய புகழை எப்போதும் பாட வேண்டும். அவன் நம் மீது மிகவும் கருணையுடையவன். ஆடம்பர வழிபாடுகளைக் காட்டிலும், மனப்பூர்வமான எளிய ஆராதனையே அவனுக்கு பிடிக்கும்,'' என்று அவர் போதித்தார்.
'பசித்த பூனை பஞ்சைத் தின்னுமா?' என்பது போன்ற கேள்விகள் அவரது பாடல்களில் வருகின்றன.
''அணுவைக் காட்டிலும் நுண்மையானவன்
அண்டங்களைக் காட்டிலும் விரிவானவன்
அனைத்து நன்மைகளின் வடிவானவன்
அறிய முடியாத பெரிய கடவுள்
அவனைக் குழந்தை என நினைத்து
அவனுடன் விளையாடுகிறாளே யசோதை!''
என்ற பொருளில் வரும் அவருடைய 'ஜகதோதாரணா' என்ற பாடல் போதும்... அவருடைய புகழைப் பாட!
''எந்த விட்டலன் என் நெஞ்சில் குடிகொண்டிருக்கிறானோ, எந்த விட்டலனின் நெஞ்சில் நான் வசிக்கிறேனோ அவனே என் அனைத்துச் செயல்களுக்கும் காரணம். அழைத்தால்வருபவன் ஆண்டவன். நமக்கு அருள்புரியவே அவன் காத்திருக்கிறான். வாழ்வில் எதுவும் நிலையல்ல, அவனுடைய உறவு ஒன்று தான் நிரந்தரமானது.
பொருளே பெரிதென்று இருப்பது இருளில் வாழ்வதற்கு ஒப்பானது. அவன் அருளே அரிதென்று அவனை நாடுவதே ஆனந்தத்தில் வாழ்வதாகும். இறைவனை அடைவது எளிது. பொருள், புகழ், உறவுகள் மீது வைத்திருக்கும் பற்றைத் துறப்பது தான் கடினமானது.
அவனேகதி என்னும் மனநிலை வாய்த்த பின், வேறெதையும் நாடக் கூடாது'' என்கிறார் புரந்தரதாசர்.
''ஓடி வா கண்ணா! உன்னைக்
காணவே என் மனம் காய்கின்றதே
நாடி வேண்டினேன் நாள் கடத்தாதே
வாடியவனை வதைக்காதே கருணைக்கடலே!
தாமரைப் பாதங்கள் தகதிமி ததியென
தண்டைச் சிலம்புகள் கலீர்கலீரென
பூவிழி விரிந்த உன் புன்னகையோடு
புல்லாங் குழலூதிப் பொழுதோடுஉடனே (ஓடிவா)
என்று 'ஓடிப்பாரையா' என்ற கன்னடப்பாடலில் சொல்கிறார்.
அவருடைய பாடல்கள் நம்மைப் புரந்தர விட்டலனின் அரவிந்தப் பாதங்களில் கொண்டு சேர்க்கும்.
''எரியும் கரியை
எறும்புகள் மொய்க்குமோ?
ஹரியைச் சரணடைந்தால்
கவலைகள் அண்டுமோ?''

தொடரும்

இசைக்கவி ரமணன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement