காட்டிக் கொடுத்த பிரசாதம்!
ஆகஸ்ட் 11,2017,09:15  IST

பெரியவரைத் தரிசிக்க காஞ்சிபுரம் வந்த ஒரு மூதாட்டி, வரிசையில் நின்றார். கையில் பை... அதில் சில துணிமணிகளும் பர்சும்...
பெரியவர் முன்னால் வந்ததும் மூதாட்டியின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர்! பரிவோடு பார்த்தார் பெரியவர். பழத்தட்டு ஒன்றை மூதாட்டியை நோக்கி நகர்த்தினார். ''பிரசாதம் எடுத்துக்குங்கோ!'' என்றார்.
மூதாட்டி பரவசத்துடன் பழங்களைப் பையில் போட்டுக்கொண்டார். தட்டில் ஒரே ஒரு மருக்கொழுந்து பச்சை வண்ணத்தில் கண்சிமிட்டியது. அதை எடுக்க யோசித்த மூதாட்டியிடம் ''மருக்கொழுந்தும் பிரசாதம் தானே? எடுத்துக்கலாமே?' என்றார் பெரியவர்.
மூதாட்டி அதையும் எடுத்து பக்தியுடன் பர்சில் வைத்துக் கொண்டு நமஸ்கரித்து விடைபெற்றார்.
ஊருக்குச் செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தார். கண்டக்டர் பயண சீட்டு வாங்கச் சொன்னார். மூதாட்டி பர்சை எடுக்கப் பையில் கைவிட்டாள். பர்சை காணோம்!
பரபரப்போடு அங்குமிங்கும் பார்த்தார். பக்கத்திலிருந்த பெண்ணின் பையில் மூதாட்டியின் பர்ஸ்! ஓசைப்படாமல் திருடி இருக்கிறாளே! ''அதோ என் பர்ஸ்!'' எனக் கூச்சலிட்டார்.
கண்டக்டர் விசாரித்தார். அது தன்னுடையது என்றும் அதில் 140 ரூபாய் இருக்கிறது என்றும், வேண்டுமானால் சரிபார்த்துக் கொள்ளுங்கள்'' என்று
அசராமல் சொன்னாள் அந்தப் பெண். பர்சில் இருக்கும் தொகையை எண்ணிப் பார்த்து விட்டாள் அவள் என்று மூதாட்டிக்கு புரிந்தது.
இப்போது என்ன செய்வது?
''தெய்வமே, எனக்கு ஏன் இந்தச் சோதனை!'' பெரியவரைப் பிரார்த்தித்தாள். அவரது செவிகளில் பெரியவரின் குரல் மீண்டும் ஒலித்தது. 'மருக்கொழுந்தும்
பிரசாதம் தானே? எடுத்துக்கலாமே?'
மூதாட்டிக்கு தைரியம் பிறந்தது.
''எவ்வளவு பணம் என்பது இருக்கட்டும். பர்சில் பணத்தைத் தவிர வேறொன்று இருக்கிறது. அது என்னவென்று சொல் பார்ப்போம்!''
அந்தப்பெண் திருதிருவென்று விழித்தாள். மூதாட்டி கம்பீரமாக ''கண்டக்டர்! பர்சை வாங்கிப் பாருங்கள். அதில் ஒரே ஒரு மருக்கொழுந்து இருக்கும்!'' என்றார்.
கண்டக்டர் பெண்ணிடமிருந்து பர்சை வாங்கி திறந்து பார்த்தார். உள்ளே ஒரு மருக்கொழுந்து கண்சிமிட்டியது!
பெண் திருட்டை ஒப்புக்கொண்டாள். மூதாட்டி அவளை மன்னித்துவிட்டார்.
பெரியவரை நினைத்து மனதிற்குள் வணங்கினாள். இதைக் கேட்ட கண்டக்டரின் கரங்களும் பெரியவரை நினைத்தவாறே குவிந்தன.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement