தெய்வப் பிறவிகள்! (20)
ஆகஸ்ட் 11,2017,09:18  IST

மந்த்ராலய மகான் என்றும், கண்கண்ட தெய்வமென்றும் கொண்டாடப்படும் ராகவேந்திரர், ஜீவசமாதியில் இருந்து அருள் புரிந்து வருகிறார்.
92 வயது வரை வாழ்ந்து, எழுநூறுக்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் கோவில்களை நிறுவி கிருஷ்ண தேவராயருக்கு ஏற்பட்ட மிகப்பெரும் சோதனையைக் களைய, அவருடைய அரியாசனத்தில் வீற்றிருந்து 'வியாசராயர்' என்று பெயர் பெற்ற வியாச தீர்த்தரின் மறு வடிவமே ராகவேந்திரர்.
விஜயநகர சமஸ்தானத்தால் கவுரவிக்கப்பட்ட பெரிய மனிதர்களின் வரிசையில் வந்த திம்மண்ண பட்டர், கோபிகாம்பாள் தமபதியருக்கு பிறந்தவர். இவரது நிஜப்பெயர் வேங்கடநாதன். சிறு வயதிலிருந்தே அபார அறிவும் கிரகிக்கும் திறமையும், பற்றற்ற மனப்பான்மையும் வாய்க்கப் பெற்றிருந்த வேங்கடநாதனுக்கு, கும்பகோணம் மத்வ மடத்தின் அதிபதியாக விளங்கிய சுதீந்திரரிடம் ஈடுபாடு இருந்தது. அவருடைய உதவியால் வேதங்கள் உட்பட பற்பல சாத்திரங்களையும் திறம்பட கற்றார்.
பிரம்ம சூத்ர பாடத்தை நடத்திய போது ஒரு சொல்லுக்குப் பொருள் கிடைக்காமல் தவித்தார் சுதீந்திரர். பாடத்தை நிறுத்திவிட்டு வேங்கடநாதன் எங்கே என்று தேடினால், அந்த இரவில் நடுங்கும் குளிரில் தரையில் படுத்துக்கிடந்தார். அவரருகே சில ஓலைச் சுவடிகள் இருந்தன. அவற்றை படித்து பார்த்த குருநாதர் அதில் தான் தேடிய விளக்கம் இருப்பது கண்டு அதிசயித்தார். தன்னுடைய காவி உடையால் சீடனுக்கு போர்த்தி விட்டார். காலையில், குரு வந்திருந்தபோது உறங்கிவிட்டோமே என்று பதைத்த அவரை சமாதானப்படுத்தி, அவருடைய விளக்கவுரையை மெச்சி அவருக்கு “பரிமளாச்சார்யர் என்னும் விருதை அளித்தார்.
சரஸ்வதிபாயை மணந்து, லட்சுமி நாராயணன் என்னும் மகனைப் பெற்றார். தான் பிருந்தாவனப் பிரவேசம் - அதாவது சமாதி கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த சுதீந்திரர் வேங்கடநாதனைப் பீடாதிபதியாக்க எண்ணி தன் விருப்பத்தை தெரிவித்தார். இல்லறத்தில் இருக்கும் தான் அதை ஏற்பதற்கில்லை என்று பணிவுடன் தெரிவித்தார் சீடர். அவருடைய மனைவியும் கணவர் தன்னை விட்டு விட்டு சென்று விடுவாரோ என்று வருந்தினார்.
இந்த நிலையில் வேங்கட நாதனுக்குக் கலைமகள் காட்சி அளித்தாள்! 'குருநாதரின் விருப்பத்தை நிறைவேற்றுக! நான் உனக்கு துணையிருப்பேன்!” என்றாள். மறுநாளே குருவின் திருவடியை வணங்கி அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
வேங்கடநாதனுக்குத் துறவறம் அளித்த துறவி, அவருக்கு “ராகவேந்திர தீர்த்தர்” என்று பெயர் சூட்டினார். இதைக் கேள்விப்பட்ட சரஸ்வதிபாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பேயாய்த் திரிந்து தன்னிடம் முறையிட்ட அவளுக்கு அருள்புரிந்து நற்கதி வழங்கினார் ராகவேந்திரர்.
பல அதிசயச் செயல்களை நிகழ்த்தினார் ராகவேந்திரர். அவற்றுள் சிலவற்றை குறிப்பிடலாம்.
''நீண்ட நாள் வாழ்வாய்!” என்று தான் ஆசீர்வதித்த மணமகன் ஒருவன் தடுக்கி விழுந்து இறந்தான். அவனை நீர் தெளித்து உயிர்ப்பித்தார். ஒரு நவாபின் மகன் உடலைக் கல்லறையிலிருந்து உயிருடன் மீட்டார். பஞ்சம் ஏற்பட்ட போது, அரண்மனை தானியக் கிடங்கிலிருந்து மக்களுக்கு வழங்க தானியம் பெருகச் செய்தார்.
சோதிக்க வந்த மூன்று வேதியரை தீர்க்க தரிசனத்தால் திருப்தி செய்ததுடன், அவர்களும், அவர்களின் பரம்பரையினரும் தனது பிருந்தாவனத்தில் தொண்டு செய்ய பணித்தார்.
நவாப் வழங்கிய மாஞ்சாலி கிராமத்தில் உள்ள அம்மனை வழிபட்டு, தான் குடிகொள்ள நிச்சயித்த பிருந்தாவன பணியை துவக்கினார். தன்னுடைய
வாரிசாக, தனது பூர்வாசிரம அண்ணனின் பேரனான வெங்கண்ணாவை நியமித்தார்.
தான் சமாதியடைவதை துன்ப நிகழ்ச்சியாக யாரும் கருதக் கூடாது. நாம சங்கீர்த்தனம் செய்து, விருந்து உண்ண வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. அவரது கட்டளைப்படி, கையிலிருந்த துளசி மாலை கீழே விழுந்தவுடன் கல்லால் பிருந்தாவனம்(சமாதி) மூடப்பட்டது.அதன் பின் மாஞ்சாலி கிராமம் 'மந்த்ராலயம்' என்னும் திருத்தலமானது. அந்த நிலத்தை அரசுடைமையாக்க முயன்ற தாமஸ் மன்றோவுடன், சமாதியிலிருந்து எழுந்து பேசி தடுத்ததோடு, அட்சதை வழங்கி வாழ்த்தினார்.
இன்றும் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் குருராகவேந்தரின் அருளை நாளும் அனுபவித்து வருகின்றனர்.
-தொடரும்
இசைகவி ரமணன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement