கவனமாக செயல்படுங்கள்
ஆகஸ்ட் 11,2017,09:22  IST

'இயேசுவின் முள்கிரீடம் அவருக்கு பரிசாக தரப்பட்ட தோட்டத்தில் வளர்ந்த முட்செடியில் இருந்தே செய்யப்பட்டது' என்ற தகவலை ஒரு கதை உறுதிப்படுத்துகிறது.
சிமியோன் என்பவன் தனக்கு தொழுநோய் இருப்பதாகவும், அதை குணமாக்கித் தரும்படியும் இயேசு கிறிஸ்துவிடம் முறையிட்டான்.
அவர் அவனிடம் “உன்னைக் குணப்படுத்த எனக்கு வல்லமை உண்டு என நம்புகிறாயா?” என்று கேட்டார்.
அவனும் 'ஆம்' என்றான்.
“நீ நம்பியபடியே உன் தொழுநோய் நீங்கி சுகம் பெறுவாய்” என்றார் இயேசு. அப்படியே சுகம் பெற்றான்.
சிமியோன் இயேசுவிடம் “ஆண்டவரே! என்னைக் குணமாக்கியதற்கு நன்றி காணிக்கையாக நான் ஒரு சிறிய திராட்சை தோட்டத்தை தருகிறேன். அதை நீர் ஏற்று கொள்ள வேண்டும்” என்று வேண்டினான்.
அது தனக்கு வேண்டாம் என்றார் இயேசு. ஆனாலும் வற்புறுத்தி அவரிடம் கொடுத்து விட்டான்.
அந்த தோட்டத்தில் ஒரு முள்செடி இருந்தது. அதை முழுமையாக அகற்றிவிடும்படி அவர் சீயோனிடம் சொன்னார். அவனும் வேலைக்காரர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் வேரோடு அதை அகற்றாமல் மேல் பகுதியை மட்டும் வெட்டி சென்று விட்டனர். அந்தச் செடி மீண்டும் முளைத்து விட்டது.
பிற்காலத்தில் இயேசுவின் மீது பல புகார்களை கூறிய தலைமை குரு, அவரது தலையில் முள் கிரீடம் வைக்க ஆணையிட்டார். ஒரு போர்வீரன் இயேசுவின் தோட்டத்திற்கு சென்று, அந்த முள்செடியை வெட்டி அதை கொண்டே கிரீடம் செய்து அவரது தலையில் வைத்து அழுத்தினான். அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.
சிமியோன் அழுதுகொண்டே, “ஆண்டவர் சொன்னபடி, முழுமையாக அந்தச் செடியை அகற்றாமல் விட்டு விட்டேனே” என புலம்பினான்.
நம் தவறுகளையும் பாவங்களையும் வேரோடு அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மையே திருப்பித் தாக்கும். மேலும் நம் செயல்பாடுகள் அரைகுறையாக இருக்கக்கூடாது. அது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் துன்பம் தரும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement