மனசில் பட்டதை... (18)
ஆகஸ்ட் 11,2017,11:08  IST

இந்த வார கோயில்: புதுச்சேரி - திண்டிவனம் ரோட்டில் 6 கி.மீ., துாரத்தில் உள்ள மொரட்டாண்டி பிரத்யங்கரா கோயில்

அத்தனை உயர திருவுருவமாக அவளைப் பார்த்தேன்... பிரமித்தேன்... பார்த்தேன்...
பிரமித்தேன்... பார்த்தேன்... பிரமித்தேன். என்னவொரு விஸ்வரூபம்? என்னவொரு கம்பீரம்? என்னவொரு தேஜஸ்? என்னவொரு மந்திரசக்தி?
அவளின் சிங்கத்தலை அழகா? வெளியே தெறித்து விழும் நெருப்புக் கண்கள் அழகா? கழுத்தை அலங்கரிக்கும்
மண்டையோட்டு மாலை அழகா? திருமேனியின் கருநீலம் அழகா? வலதுகரத்தில் தாங்கியிருக்கும் திரிசூலம் அழகா? இடது கரத்தில்
பிடித்திருக்கும் சிரம் அழகா? அவள் அமர்ந்த கோலம் அழகா? அவளின் ஓங்காரம் அழகா? அவளின் ரவுத்ரம்(கோபம்) அழகா? அவளின் சிங்கம் அழகா? நாகம் அழகா? உடுக்கை அழகா?
வியப்பின் பிடியில் நான்... பிரமிப்பின் பிடியில் நான்... சிலிர்ப்பின் பிடியில் நான்...
இந்த திருவுருவம் எப்படி கற்பனையாக இருக்க முடியும்? எதை கற்பனை செய்வோம்? எது கற்பனையாக வெளிப்படும்?
நீட்ஷே என்னும் தத்துவஞானி சொல்கிறார் - எப்போதாவது, எந்த ஜென்மத்திலாவது, எந்த நொடியிலாவது நாம் அனுபவித்த, பார்த்த, கேட்ட, உணர்ந்த, தொட்ட, சுவைத்த ஏதோ ஒன்றின் பிரதி நமது நினைவு அடுக்குகளில் பதிந்திருக்கும். அந்த நினைவின் நீட்சி தான் எழுத்தாக உருவாகிறது. ஓவியமாக உருவாகிறது. காவியமாக உருவாகிறது. பிரத்யங்கரா தேவி போன்ற திருவுருவமாக உருவாகிறது.
அப்படியானால் பிரத்யங்கரா அன்னையின் ரவுத்ரம் நமக்கு என்ன சொல்கிறது? அவள் கழுத்தின் மண்டையோட்டு மாலை நமக்கு என்ன சொல்கிறது? அவளின் நெருப்புக் கண்கள் நமக்கு என்ன சொல்கிறது?
வேறெதையும் சொல்லவில்லை. நன்மை தீமையை அழிக்கும் என்று தான் சொல்கிறது. புதுச்சேரி அருகிலுள்ள மொரட்டாண்டி அன்னை பிரத்யங்கரா தேவியை பார்க்கும் போது எனக்கு அச்சம் தோன்றவில்லை. படபடப்பு தோன்றவில்லை. பரிதவிக்கும் குழந்தையை அணைத்து கொள்ளும் அம்மாவைப் பார்ப்பது போலத் தான் புல்லரித்தேன்.
அவள் ரவுத்திரகாளி...
அவள் ருத்ரகாளி...
அவள் செங்காளி...
அவள் கருநீலக்காளி...
அவள் ஆக்ரோஷக்காளி...
அவள் அரக்கிக்காளி...
அவள் அன்புக்காளி...
அவள் தண்டனைக்காளி...
அவள் கருணைக்காளி...
அவள் மெய்மைக்காளி...
அவள் செம்மைக்காளி...
அவள் உண்மைக்காளி...
ஓம் பிரத்யங்கராயே வித்மஹே
ஷத்ரு நிஷ்கிந்தை தீமஹி
தன்னோ தேவி பிரஷோதயாது....
ஓம் பரமந்த்ர யந்த்ர தந்த்ர
ஆதர்ஷனாயை நமஹ
ஓம் சர்வ துஷ்ட பிரதிஷ்ட
சிரச்சேதின்யை நமஹ
ஓம் மஹா மந்த்ர தந்த்ர
யந்த்ர அர்சின்யை நமஹ
ஓம் மகா பத்ரகாளி
பிரத்யங்கராயை நமஹ
பிரத்யங்கரா என்று
அன்போடு அழைத்தாலே
பிரத்யட்சமாக வருவாள்...
அம்மா நேரிலே உரையாடுவாள்...
ஆங்கார ரூபமாய்
அன்பான வடிவமாய்
அன்னையாய்க் காக்க வருவாள்
கொடும் வினை யாவும்
மிதித்தாடுவாள்....
இது தான், இந்த மந்திரம் தான், இந்த பாடல் தான் என் உயிரின் இயக்கம். என் இயக்கத்தின் உயிர்.
பிரத்யங்கரா தேவியை உன்னதமான படிமமாகத் தான் என்னால் உணர முடிகிறது. அவளின் ரவுத்திரக் கண்கள் அநீதி கண்டு கொப்பளிக்கும் தன்மையின் அடையாளப் படிமம். அவள் கழுத்தில் நீண்டிருக்கும் மண்டையோட்டு மாலை, நம் மனசின் இருட்டில் ஒளிந்திருக்கும் காம அரக்கன், கோப அரக்கன், பொறாமை அரக்கன், வெறுப்பு அரக்கன், பேராசை அரக்கன், ஆணவ அரக்கன், அகங்கார அரக்கன்
ஆகியோரையெல்லாம் அழித்தொழித்து, நம் மனசை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற தன்மையின் அடையாளப் படிமம். வலக்கரத்தின் திரிசூலம் சிந்தையை, ஞானத்தை, வாழ்வின் நிறைவுத்தேடலை நாம் கூர்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதன் அடையாளப்படிமம்.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான குருக்ஷேத்திரத்தின் அடையாளம் என்பதையே பிரத்யங்கரா தேவி சொல்லுகிறாள். சுற்றிலும் இருப்பவர்கள், சமூகத்தினர், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருமே அவரவர் கற்பனைக்கேற்றபடி அவதுாறு பேசி, நெஞ்சில் ஆணியடித்து, குருதி வழிவதைப் பார்த்துச் சந்தோஷிக்கும் சங்கடப் பொழுதுகள் பலப்பல. அப்போதெல்லாம் பிரத்யங்கரா தேவிக்கும் எனக்கும் மவுன உரையாடல் நடக்கும்.
''என்னம்மா இது? இத்தனை போராட்டம் எதற்கு? என்பேன்.
''தங்கம் என்றால் நெருப்பின் அனலில் வறுபட வேண்டும். வைரம் என்றால் பூமியின் இருட்டில் மூச்சடைக்க வேண்டும். முத்து வேண்டும் என்றால் கடலில் மூழ்க வேண்டும். குழந்தை வேண்டும் என்றால் உயிர்த்துளை கிழிபட வேண்டும். நீ முழுமை பெற வேண்டுமென்றால், கல்லாலும் சொல்லாலும் அடிபட வேண்டும். உன்னை நான் புடம் போட வேண்டும்...'' இப்படி சொல்லுவாள் அம்மாக்காரி பிரத்யங்கரா.
எப்போதெல்லாம் நொறுங்குகிறேனோ, அப்போதெல்லாம் நெருங்குகிறேன் என் அம்மையை.... அவள் இருக்கும் போது வேறென்ன வேண்டும் எனக்கு?
- இன்னும் சொல்வேன்
ஆண்டாள் பிரியதர்ஷினி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement