இலக்கியப் பார்வை
அக்டோபர் 03,2010,03:13  IST

இளைய வாசகர்களே! இலக்கிய வாசனையை நுகர ஆரம்பித்து விட்டால், நாவல்களைப் படிப்பது போல் நமது ஆர்வம் மேலிடும்.  நீங்கள் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் போது, அதற்கு பதிலளிக்கவும் உதவும். நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்தப் பகுதியில்  சுருக்கமாகப் பார்க்கலாம்.

காப்பியங்கள்தெய்வத்தையோ <உயர்ந்த  மக்களையோ கதைத் தலைவர்களாகக் கொண்ட நீண்ட செய்யுள், காப்பியம் என்று அழைக்கப்படுகிறது.  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகியவை ம்பெருங்காப்பியங்கள் ஆகும். உதயண குமார காப்பியம்,நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியவை ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் "இரட்டைக் காப்பியங்கள்' என அழைக்கப்படுகின்றன. குண்டலகேசியும் நீலகேசியும் சமயப் பூசல் அடிப்படையில் தோன்றிய காப்பியங்கள் ஆகும். ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதலில் குறிப்பிட்டவர் மயிலைநாதர் (நன்னூல் உரையில்). ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற வழக்கினைத் தோற்றுவித்தவர் சி.வை. தாமோதரன் பிள்ளை.
மூன்று நகரங்களின் கதை   
 தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். இயற்றியவர் இளங்கோவடிகள். சிலம்பு+அதிகாரம்= சிலப்பதிகாரம். கதையில் வரும் திருப்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் கண்ணகி, பாண்டிமாதேவி ஆகியோரின் கால் சிலம்புகள் காரணமாக இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
 மலைவளம் காணச் சென்ற சேரன் செங்குட்டுவனிடம் குன்றக் குரவர்கள் கூறிய கண்ணகி பற்றிய செய்தி, அதைத் தொடர்ந்து புலவர் சாத்தனார் கூறிய கண்ணகியின் வரலாறு ஆகியவை தான் சிலப்பதிகாரம் தோன்றக் காரணமாகும். முத்தமிழ்க் காப்பியம்,  உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், குடி மக்கள் காப்பியம், மூன்று நகரங்களின் கதை என சிலப்பதிகாரத்திற்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
 இக்காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என 3 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 3 காண்டங்களும் 30 காதைகளாக (கதை தழுவிய செய்யுள் பகுதிக்கு காதை எனப் பெயர்) பிரிக்கப் பட்டுள்ளது. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்'( அரசியலில் தவறு செய்தால் தர்மமே எமனாகும்), "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்', ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்'என முப்பெரும் உண்மைகளைக் கூறுவதே சிலப்பதிகாரமாகும். பூம்புகாரில் இருந்த ஐவகை மன்றங்கள் (வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம்) பற்றியும், நாட்டிய அரங்கின் அமைப்பு, திரை அமைப்பு, விளக்கு ஒளி அமைப்பு பற்றியும், மாதவி ஆடிய 11 ஆடல்கள் 8 வகை வரிக் கூத்தை பற்றியும் இந்தக் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. இதை எழுதிய இளங்கோவடிகளின் காலம் கி.பி. 2ம் நூற்றாண்டு. "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு' எனப் பாராட்டியவர் மகாகவி பாரதியார்.
ஜோதிடர் பாடிய பாடல்
""யாதும் ஊரே யாவரும் கேளிர்!'' என்ற பாடல் வரியைத் தெரியாத யாரும் இருக்க முடியாது. அந்த வரிக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? "கணியன் பூங்குன்றனார்' என்னும் புலவர். புறநானூறு என்னும் நூலை இயற்றியவர் இவர். இந்த நூலில், 192வது பாடலாக இது இடம் பெற்றுள்ளது. பூங்குன்றம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு இப்பெயர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதுள்ள "மகிபாலன்பட்டி' என்ற ஊரே, அக்காலத்தில் பூங்குன்றம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். "கணியன்' என்றால் "காலத்தைக் கணித்துச் சொல்லும் பஞ்சாங்கக்காரர்' (ஜோதிடர்) என்று பொருள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement