காளைகட்டி: காடு, மலை ஏறி, இறங்கி மேலும் சுமார் 6 மைல் நடந்து அழகிய அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை சென்றடையலாம். மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் வதம் செய்வதைக் காண கைலாயத்திலிருந்து வந்த சிவபெருமான், அவருடைய வாகனமான காளையைக் கட்டிய இடமே காளைகட்டி என்று புராணங்கள் கூறுகின்றன.
அழுதாநதி: காளைக்கட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை சென்றடையலாம். இங்கு ஒரு இரவு தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மணிகண்டனால் தூக்கி எறியப்பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும்.
மறுநாள் அதிகாலையில் அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டம். பூஜைக்குப்பின் உணவருந்தி சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம்.
அங்கேயுள்ள கல்லிடும் குன்று என்னுமிடத்தில் அழுதையாற்றிலிருந்து எடுத்து வந்த கற்களைப் போட்டு சுவாமியை வணங்க வேண்டும்.
பின் யாத்திரையை தொடர்ந்து காடு, மலை ஏறி, இறங்கி உடும்பாறைக் கோட்டை இலவந்தோடு முதலிய இடங்களைக் கடந்து கரிவலம் தோடு என்ற இடத்தை அடையலாம். அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்துப் பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடக்க வேண்டும்.
கரிமலை: பின் கரிமலை அடிவாரத்தை அடையலாம். இந்த மலையின் மண் கருப்பாக இருப்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு யானைகள் மற்றும் கொடிய மிருகங்களின் தொல்லையும் அதிகம்.
இந்த மலையில் ஏறும்போது தங்கள் பிரம்மச்சரிய விரதத்தின் சக்தியை உணரலாம். மலை உச்சியில் கரிமலைநாதர் என்ற மூர்த்தியின் கசிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. விரதம் தவறிய பக்தர்களை தேவதைகள் இதற்குமேல் செல்ல விடுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த மலையின் உச்சியில் நீர்வற்றாத கிணறு ஒன்று உள்ளது. ஐயப்பன் தன் அம்பை எய்து இக்கிணற்றை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. இங்கு சிறிது ஓய்வெடுத்தப்பின் செங்குத்தான வழியில் இறங்க வேண்டும். சிறயானைவட்டம், பெரியானைவட்டம் என்ற யானைகள் தங்குமிடங்களை கடந்து காட்டில் பயணம் செய்து பம்பா நதியை அடையலாம்.
பம்பா நதி: எருமேலியிலிருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் பக்தர்களும் சாலக்காயம் வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக்கரையில் ஒன்று கூடுகின்றனர். சிறிது தூரத்தில் வேறு ஒரு நதி இதனுடன் கலக்கிறது. இந்த இடம் திரிவேணி என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீராடி நீண்டதூரம் நடந்து வந,த களைப்பைப் போக்கிக் கொள்ளலாம்.
பம்பையாற்றின் கரையில் ஓர் இரவு தங்கி, இரவில் ஆற்றில் பம்பாவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டு பின் உணவு தயார் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு ஐயப்பன்மார் சிலருடன் சேர்ந்து உணவருந்தலாம்.
பின்னர் பம்பையாற்றின் கரையிலுள்ள விநாயகர், ராமர், அனுமன், சக்தி கோயில்களில் வழிபட்டு, பந்தள மன்னர் பரம்பரையில் வந்தவர்களுக்கு காணிக்கை செலுத்தி, அவர்களிடம் விபூதி வாங்கி நெற்றியில் அணிந்து நீலிமலை ஏற துவங்கலாம்.