கோட்டை அருங்காட்சியகம்

 


கோட்டை வளாகம் சென்னையின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் பறைசாற்றி நிற்கும் கம்பீரமான சின்னம். கோட்டைக்குள் அருங்காட்சியகம் இருப்பது பலருக்குத் தெரியாது. ஆனால், இந்த அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள  பொருட்கள் அரிதானவை.

கோட்டைக்குள் வடபுறத்தில் அருங்காட்சியகம் உள்ளது. துவக்கத்தில் கோட்டை அலுவலர்களின் பணியிடமாக இது இருந்தது. பின்னர் மெட்ராஸ் பேங்கின் முன்னோடி வங்கி இங்கு துவக்கப்பட்டது. பம்பாய் மற்றும் பெங்கால் வங்கியுடன் இணைந்து இம்பீரியல் வங்கி எனப் பெயர் மாற்றம் பெற்றது. தற்போது அதன் பெயர் ஸ்டேட் வங்கி.

18ம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது கி.பி., 1799ல் இங்கு கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. பின்னர் சுதந்திரத்துக்குப் பின் 1948ல் அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. இக்கட்டடத்தைச் சுற்றிலும் ஏராளமான பழங்கால பீரங்கிகள் நிறுவப்பட்டுள்ளன. யாருடைய பீரங்கி, எந்தப் போரில் பயன்படுத்தப்பட்டது என்ற  குறிப்புகளும் அருகே வைக்கப்பட்டுள்ளன.

உள்ளே இரண்டு தளங்களில் ஏராளமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய வெள்ளிப் பொருட்கள், பழங்கால வாள், கேடயம், சுருள்கத்தி, சீன, பிரெஞ்சு வீரர்களின் கவசங்கள், இந்தியர்களின் பழங்கால ஆயுதங்கள், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட விதவிதமான துப்பாக்கிகள்,  ஆளுநர்கள் மற்றும் வீரர்கள் அணிந்திருந்த உடைகள், நாணயங்கள், சென்னைப் படைப்பிரிவுக் கொடி, மாநகராட்சிக் கொடி, பீங்கான் பாத்திரங்கள், கவர்னர்களின் சிலைகள், முக்கியப்பிரமுகர்களின் கையெழுத்துப்பிரதி, சிறு பீரங்கிகள், குண்டுகள், எம்டன் கப்பலால் வீசப்பட்ட குண்டு, அப்போதைய  கோட்டையின் பல்வேறு பரிமாணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆங்கில உயரதிகாரிகளின் பிரம்மாண்ட ஓவியங்கள், 1800ம் ஆண்டுகளில் வரையப்பட்ட தமிழகத்தின் முக்கிய இடங்கள் பற்றிய ஏராளமான புகைப்படங்கள் என மிக அரிய கலைப்பொக்கிஷங்களின் களஞ்சியமாக கோட்டை அருங்காட்சியகம் திகழ்கிறது.

குறிப்பாக இதனுள் இருக்கும் ஓவியங்கள் அதி அற்புதமானவை. அக்காலத் தமிழகத்தின் பல்வேறு இடங்களும், இவ் ஓவியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அரிதான ஒன்றாகும். 


 

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :