மதராசப்பட்டினமும் பெண்ணியமும்

 


மதராசப்பட்டினத்து பெண்ணியம் பற்றி அறிந்து கொள்ள முற்படுமுன் அன்றைய தேவதாசிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது.
எந்த ஒரு நாட்டில் ஆண்டவனே நர்த்தன உருவில் தொழப்பட்டானோ அதே நாட்டில் இக்கலையின் தரம் குறைக்கப்பட்டு, இக்கலையில் ஈடுபட்டவர்கள் சமூகத்தின் இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள் சாதாரண பாலியல் தொழிலாளிகளாகப் பார்க்கப்பட்டதுதான் கொடூரம்.
சாதாரண வணிகர்களாக நம் நாட்டுக்குள் நுழைந்து, நம் உழைப்பை உறிஞ்சியதோடல்லாமல் தமது மதப்பிரசாரத்தையும் பரப்பத் தவறவில்லை அவர்கள். இங்கு புழக்கத்தில் இருந்த பல விஷயங்களை காட்டுமிராண்டித்தனமானவை என விமர்சித்ததோடல்லாமல் தேவதாசி முறையையும் அவர்கள் அதே கண்ணோட்டத்தில் பார்த்தனர்.
அப்போது, ஆங்கிலேயர்கள் முன் விசாரணைக்கு வந்த தேவதாசி வழக்குகள் கோயில்கள் சம்பந்தமாக இருந்ததால் அவர்களுக்கு அதே சமூகக் கட்டுப்பாட்டுக்கு உதவுவதாக அமைந்தன. கோயில்களையும் பழக்க வழக்கங்களையும் சார்ந்து இருப்பதால் இம்முறையை ஒழிப்பது கடினம் என இதனை எதிர்த்துப் போராடிய சீர்த்திருத்தவாதிகளிடம் ஆங்கிலேயர் கூறினர். இம்முறையை எதிர்த்துப் வாதாடிய முதல் இந்தியப் பெண்மணி டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டிதான்.
ஆனாலும், வாழும் வழி வேறு தெரியாததால் அன்றைய பல தேவதாசிகள் “தேவதாசிகள் ஒழிப்புமுறை’க்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்காக அவர்கள் தங்களுக்கென ஒரு சங்கமும் அமைத்துக் கொண்டு எதிர்த்தனர். “நாங்கள் நடனக் கலையையும் பாட்டுக் கலையையும் காப்பாற்றுவபர்கள். எங்களை ஒழித்துவிட்டால் இக்கலைகள் ஒழிந்துவிடும்’ என ஓலமிட்டனர். பின்னர் இந்த முறை ஒழிக்கப்பட்டாலும் பரதக்கலை காப்பாற்றப்பட்டதைக் குறிப்பிட்டாகவேண்டும்.
“த உமன்ஸ் இண்டியன் அசோசியேஷன்’ என்ற இயக்கம் மதராசப்பட்டினத்தில்தான் அன்னி பெசன்ட் அம்மையாரால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக துவக்கப்பட்ட பெண்ணுரிமைக்கான இந்த இயக்கத்தின் தலைவராக அன்னி பெசன்ட்டும், காரியதரிசியாக டோராதி ஜினராஜதாசாவும் செயல்பட்டனர். மாலதி பட்டவர்த்தன், அம்மு சுவாமிநாதன், தாதாபாய், அம்புஜம்மாள் உள்ளிட்டோர் இவர்களுக்கு உதவிகரமாக இருந்து செயல்பட்டார்கள்.
பெண்கள் நாட்டுநடப்புகளில் பெரும் பங்கு வகிப்பது, சமுதாயப் புத்துணர்ச்சியை உண்டாக்குவது, வயது வராத சிறு பெண்களின் விவாகத்தைத் தடுத்து நிறுத்துவது, பெண் கல்வியைப் பரப்புவது, விதவா விவாகத்தை சமூகத்தில் நிலை நாட்டுவதுமே இவ்வியக்கத்தின் நோக்கமாக இருந்தது. பெண்கள் ஆண்களுக்கு நிகராக நடத்தப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை அன்றைய செகரட்டரி ஆஃப் ஸ்டேட் மாண்டேகு பிரபுவுக்கு அளிக்க பெசன்ட் அம்மையார் அன்றே தயாராக இருந்தார்.
பெண்மையின் முக்கியத்துவத்தை நிலைநாட்டிவர்களில் குறிப்பிடத்தகவர் டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி. இந்தியாவின் முதல் மருத்துவப் பட்டம் பெற்றவர்; முதல் பெண் உறுப்பினராக தமிழக சட்டசபை, மேலவை உதவித் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக சமூக நல வாரியத்தின் முதல் தலைவி. இந்தியாவிலேயே முதல் பெண்கள் இயக்கமான இந்திய மாதர் சங்கத்தைத் தோற்றுவித்ததுடன் அதன் தலைவியாகக் கடைசி வரையிலும் இருந்து அரும்பணியாற்றினார்.
இங்கிலாந்தில் இவர் மேற்படிப்பு மேற்கொண்டிருந்த போது, பாரிசில் நடந்த உலக மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. இங்குதான் அவருக்கு மகளிர் நலம் குறித்து தீவிரமாக எண்ணுவதும் உறுதியாயிற்று. சட்ட மேலவை உறுப்பினராக இருந்தபோது இவர் ஆற்றிய பெரும்பணிகளில் முக்கியமானது தேவதாசி ஒழிப்பு திட்டம், பெண்கள் திருமண வயதை உயர்த்தும் சட்டம் முதலியவையாகும். 
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)